ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

திராவிடத் திணிப்பு: தமிழ்நாட்டைக் கலப்பின மாநிலமாக்கவே! - ஐயா பெ.மணியரசன்திராவிடத் திணிப்பு: 
தமிழ்நாட்டைக் கலப்பின மாநிலமாக்கவே!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்  

பேராயர் இராபர்ட் கால்டுவெல், “திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம்” ( A comparative Grammar of Dravidian or South Indian Family Languages) என்ற மொழியியல் நூல் எழுதியவர் என்பதைப் பலரும் அறிவர். ஆனால் அவர் சமற்கிருத வைதிக ஆரியப் புராணங்களைப் படித்து விட்டு, அவற்றைத் தொகுத்து “பாரதப் புராதனம்” என்ற நூலை எழுதியவர் என்பது பலருக்குத் தெரியாது. அதே கால்டுவெல் தொல்காப்பியம், மற்றும் சங்கத் தமிழ் நூல்கள் பலவற்றைப் படிக்காதவர் எனபதும் பலருக்குத் தெரியாது. அவர் சமற்கிருதம் கற்ற அளவிற்குத் தமிழ் கற்றதில்லை. அவர்தாம்  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதியவர்.

“திராவிட” என்ற மூல மொழியிலிருந்து (Proto Language) தமிழ் மொழி உருவானது என்று கற்பனைக் கயிறு திருத்தவர் தாம் காலடுவெல். அவருக்கு முன்பு ஆங்கிலேயே அதிகாரியாக இருந்து தமிழ் – ஆய்வு செய்த பிரான்சிஸ் ஒயிட் எல்லீசு (1777-1819) தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகள் சமற்கிருத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல. இவை தென்னிந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை; இவற்றின் தாய் தமிழ் மொழி என்று கூறினார். தென்னிந்திய மொழிக் குடும்பம் என்று நிலவியல் அடிப்படையில் இம்மொழிகளை வகைப்படுத்தினார். 

எல்லீசு இக்கருத்துகளை, 1816-ஆம் ஆண்டு வெளியான அலெக்சாண்டர் டங்கன் காம்பெல் எழுதி வெளியிட்ட தெலுங்கு மொழி இலக்கண நூலுக்கான முன்னுரையில் வெளியிட்டார்.

எல்லீசுக்கு முன்னோர்களான சர் வில்லியம் ஜோன்ஸ், தாமஸ் கோல் புரூக் போன்றவர்கள் தமிழ் உட்பட இந்திய மொழிகள் அனைத்தும் சமற்கிருத மொழிக் குடும்பதிலிருந்து பிறந்தவை என்று கூறி இருந்தனர். அதற்கு மாற்றாகக் ஆய்வுரை வழங்கிய எல்லீசை அவருக்குப் பின் 1850 களில் ஆய்வு செய்த கால்டுவெல் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

தமிழ் மொழிக்கு ஒரு மூலமொழி இருந்திருக்க வேண்டும்; அந்த மூல மொழி எது என்று தேடினேன்; சமற்கிருத  நூல்களான மனுதர்மத்திலும், குமாரில பட்டரின் தந்திரவார்த்திகாவிலும் கூறப்பட்ட “திராவிட” என்பதை எடுத்துக் கொண்டேன் என்கிறார்.

(Robert Caldvel: A comparative Grammar of the Dravidian or south Indian Family of Languages (ஆங்கிலம்) கவிதா சரண் பதிப்பகம், சென்னை (2008) பக்கம் 4,5). கால்டுவெல், தமது “கண்டுபிடிப்பிற்கு” அகச்சான்று – அதாவது தமிழ் மொழிச் சான்று எதுவும் காட்டவில்லை. ஆரிய சமற்கிருத நூலான மனுதர்மத்தில் சீரழிந்து  போன வடநாட்டு சமூகப் பிரிவினைக் குறிக்கும் பட்டியலில் உள்ள “திராவிட” என்ற சொல்லையும் தந்திர வார்த்திகாவில் உள்ள ஆந்திர  - திராவிட பாஷா என்ற சொல்லையும் எடுத்துக் கொண்டு கற்பனைக் கயிறு திரித்து திராவிட இனம் என்றும் திராவிட மொழி என்றும் பெயர் சூட்டிவிட்டார்.

கால்டுவெல் தமிழ் இனத்திற்கும் தமிழ் மொழிக்கும் இழிவு ஏற்படுத்தக் கூடிய வகையில் என்னென்ன தவறுகளைத் தமது ஒப்பிலக்கண நூலில் செய்துள்ளார் என்பதைப் பாவாணர் பட்டியல் இட்டுள்ளார். கால்டு வெல் தவறுகளைக் குறிப்பிட மிகவும் நாகரிமாக “கால்டுவெல் கண்காணியாரின் கடுஞ் சறுக்கல்கள்” என்று தலைப்பிட்டுள்ளார். (நூல்: தமிழ் வரலாறு, பக்கம் 26, 27)

1. சேர, சோழ, பாண்டியர்களை அரசர்கள் என்று அறியாமல், அந்தந்தப் பகுதி மக்களின் குடிப்பெயர் என்று கருதினார் கால்டுவெல்.
2. தமிழர் நாகரிகம் கொற்கையில் தொடங்கியது என்று கூறினார்.
3. தமிழரை (அவர்பாணியில் திராவிடரை) உயர் நாகரிகப்படுத்தியவர்கள் ஆரியர்கள் என்று கூறினார்.
ஆயிரத்திற்கு மேல் தமிழர்களுக்கு எண்ணத் தெரியாது. மருத்துவ நூல் தமிழில் இல்லை; மருத்துவர் இல்லை. வெளிநாட்டு வாணிகம் தமிழர்களுக்கு இல்லை. இலங்கையைத் தவிர வேறெந்த கடல் கடந்த நாட்டுடனும் தமிழர்களுக்குத் தொடர்பில்லை.
வானநூல் , கணியம், இலக்கணம் முதலியவை பற்றி தமிழர்களுக்குத் தெரியாது.
மனம், நினைவு, மனச்சான்று போன்றவற்றைக் குறிக்கத் தமிழில் சொற்கள் இல்லை,
4. தமிழ் நெடுங்கணக்கு (எழுத்து வகைகள்) சமற்கிருத நெடுங்கணக்கைத் தழுவியது; வடவெழுத்துகளுள் வேண்டியவற்றை மட்டும் தமிழர்கள் எடுத்துக் கொண்டனர்.
5. தமிழ்ப் பெயர்ச் சொல்லின் வேற்றுமை அமைப்பு முற்றிலும் சமற்கிருத வேற்றுமை அமைப்பைப் பின்பற்றியது.
6. தமிழில் சரியானபடி செயல்பாட்டு வினையே இல்லை.
7. அரசன், ஆயிரம், உலகம், கணியம், சேரன், சோழன், பாண்டியன், திரு, நாழி, மனம், மாதம் முதலியவை வட சொற்கள்.
மலையாளத்தை ஓரிடத்தில் தமிழின் கிளை மொழி (Oldest offshoot) என்கிறார். இன்னோர் இடத்தில் அது தமிழின் உடன் பிறப்பு மொழி (Sister dialect) என்கிறார்.

கால்டுவெல்லின் மேற்கண்ட ஏழு குறைபாடுகளும் உண்மைக்கு மாறானவை என்று பாவாணர் கூறுகிறார்.

இப்படிப்பட்ட கால்டுவெல்லைத்தான் தமிழர் வரலாற்று மீட்பின் தலைமைக் குருவாக தி.மு.க. கொண்டாடுகிறது. கி.மு, கி.பி என்பது போல் கா.மு., கா.பி. என்று கொண்டு வருகிறது தி.மு.க. ஆட்சி. கால்டுவெல்லுக்குப் பின் 150 ஆண்டுகளில் திராவிடத் தலைவர்கள் எழுதியவை, பேசியவை, இட ஒதுக்கீடு, மாநில சுயாட்சி, ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா, பணி ஓய்வு அதிகாரி பாலகிருட்டிணன் ஆகியோர் படைப்புகள் முதலியற்றைத் தொகுத்துத் “திராவிடக் களஞ்சியம்” என்ற தலைப்பில் நூல்களாகக் கொண்டு வரப் போவதாகத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 2.9.2021 அன்று சட்டப் பேரவையிலும், ஊடகங்களிலும் அறிவித்தார்.

காலடுவெல் மொழியியல் ஆய்வில் செய்த அதிகப் பிரசங்கித்தனம், அவர் வெளிப்படுத்திக் கொண்ட அறியாமை ஆகியவற்றைத் திராவிடவாத சிந்தனையாளர்கள் எப்போதும் வெளிப்படுத்துவது இல்லை. காரணம், தமிழின மறைப்பு, தமிழ் மொழி மறைப்பு ஆகியவற்றுக்குத் தேவைப்படும் திராவிடத் திரை நெய்து கொடுத்தவர் கால்டுவெல். எல்லாவற்றுக்கும் மேலாக, பிறந்த இன மறப்பிற்கும் மறுப்பிற்கும் “திராவிட இனம்” என்ற மேலைநாட்டு மது தயாரித்துக் கொடுத்தவர் அவர்.

=======================================
தெலுங்கு, கன்னட, மலையாளிகள் ஏற்கிறார்களா?
=======================================

தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், துளுவர், தமிழர் எல்லோரும் ஒரே மரபினத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்  அந்த மரபினம் திராவிடர் என்றும் கால்டுவெல்லின் வரலாற்று வாரிசுகளாகப் பேசிவரும் திராவிடவாதிகளுக்கு நாம் விடுக்கும் அறைகூவல் (சவால்) இது தான்:

திராவிடம் என்ற பெயரில் ஓரினம், ஒரு மொழி, ஒரு தாயகம் இருந்ததற்கான வரலாற்றுச் சான்று தருவீர்களா? இதுவரை தந்ததுண்டா? இல்லை!

அடுத்து, தெலுங்கு, கன்னட, மலையாள தேசிய இனத்தவர்கள் தாங்களும் தமிழர்களும் திராவிட இனத்திலிருந்து பிரிந்தவர்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறார்களா? தாங்கள் திராவிடர் என்று ஒரு போதும் அவர்கள் சொல்லிக் கொள்வதில்லை.

நாமெல்லாம் ஓர் இனத்திலிருந்து பிரிந்தவர்கள் என்ற உளவியல் உணர்ச்சி அவர்களிடம் உண்டா? இல்லை.

திராவிட இன அரசியல் பிதாமகர்களான பெரியார், அண்ணா ஆகியோரைத் தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் தங்கள் தலைவர்களாக ஏற்றதுண்டா? அல்லது அவ்விருவர் காலத்தில் அம்மாநில மக்கள் தி.க., தி.மு.க. கிளைகளைத் தொடங்கியதுண்டா? இல்லை. அம்மாநிலங்களில் இருந்த அல்லது இருக்கின்ற, தி.மு.க. கிளைகள் அங்கு வாழும் தமிழர்களால் தொடங்கப்பட்டவை!
பெரியார், அண்ணா காலத்திலும், இப்பொழுதும் ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களில் திராவிடக் கருத்தியலை வளர்க்க உழைத்ததுண்டா? இல்லை! அல்லது உழைத்தோம் பயனில்லை என்றால் பொருந்தாத திராவிடக் கோட்பாட்டை வைத்திருக்கிறோமே என்ற தன்திறனாய்வு உண்டா? இல்லை. 

1956-இல் மொழி வழி மாநிலமாகத் தமிழ்நாடு அமைந்த பிறகு பெரியார், திராவிட நாடு என்ற இலட்சியத்தைக் கைவிட்டு, தமிழ்நாடு தமிழர்க்கே என்ற முழக்கத்தைக் கைக்கொண்டார் என்கிறீர்கள். அப்புறம் ஏன் திராவிடத்திற்கு இன்றும் வக்காலத்து வாங்குகிறீர்கள்?

ஒன்று “திராவிடர்க்கு” உண்மையாய் இருங்கள்; அல்லது தமிழர்க்கு உண்மையாய் இருங்கள்.

=============================
இனம் இயற்கையா? மனிதத் தேர்வா?
=============================

சாதி – மத மறுப்பு, கடவுள் – மூட நம்பிக்கை எதிர்ப்பு, பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு ஆகியவற்றைக் கொண்டது திராவிடர் இனம்; தமிழ் இனத்தை அப்படிச் சொல்ல முடியாது; எனவே இவற்றிற்குரிய திராவிட இனத்தை ஏற்கிறோம் என்று திராவிடவாதிகளில் ஒரு சாரார் கூறுகிறார்கள். மேலும் திராவிடர் என்பது மரபினம்; தமிழர் என்பது மரபினம் அன்று என்றும் கூறுகிறார்கள். 

இனம் (Race) என்பது இயற்கையின் படைப்பு. மனிதர்கள் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு அதில் இல்லை. எல்லா இனத்திலும் முற்போக்கு கருத்துகளும் உண்டு, பிற்போக்கு கருத்துகளும் உண்டு. அறிவியல் சார்ந்த கருத்துகளும் உண்டு; மூட நம்பிக்கைகளும் உண்டு. முற்போக்காக ஓர் இனத்தை முழுஅளவில் நாங்கள் படைத்துக் கொள்கிறோம் என்று யாராவது கூறினால் அது சமூக அறிவியல் அன்று.  மானிட வளர்ச்சிக் கோட்பாடும் அன்று.
தமிழர்களைப் பொறுத்தவரை, எமது மரபு இனமும் (Race), தேசிய இனமும் (Nationality) “தமிழர்” என்பதே.

==================================
திராவிடர்களின் தமிழர் பகை வன்முறைகள்
==================================
கர்நாடக, கேரள “திராவிட” மாநிலங்களில் கன்னடர்களும் மலையாளிகளும் தமிழர்களைத் தாக்குவது அதிகரித்து வருகிறது.

காவிரித் தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் என, எது தீர்ப்புக் கொடுத்தாலும் தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைத்தராமல் கர்நாடகத்தில் அம்மாநில அரசும் பல தரப்புக் கன்னடர்களும் தடுத்துத் தேக்கிக் கொள்கிறார்கள்.

1991 டிசம்பரில் கர்நாடகத்தில் காலம் காலமாக வாழ்ந்து வரும் ஏரளமானத் தமிழர்களை கன்னட வெறியர்கள் இனப்படுகொலை செய்தார்கள். தமிழர்களின் வீடுகள், நிறுவனங்கள் சூறையாடப்பட்டன, தீக்கிரையாக்கப்பட்டன. இரண்டு இலட்சம் கர்நாடகத் தமிழர்கள் ஏதிலிகளாகத் தமிழ்நாட்டிற்கு ஓடி வந்தார்கள்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் காவிரிச் சிக்கலை வைத்துத் தமிழர்களைத் தாக்குகிறார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னும் தமிழர்களைத் தாக்கி, மண்டியிடச் செய்து, காவிரி கர்நாடகத்துக்கே சொந்தம் என்று முழக்கமிட வலியுறுத்தி அதைக் காணொலி ஆக்கிக் கன்னடர்கள் வெளியிட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த கே.பி.என் நிறுவனத்தின் சொகுசுப் பேருந்துகளையும் இதரத் தமிழர்களின் சரக்குந்துகளையும் 200க்கும் மேற்பட்டவற்றை பெங்களூரில் கன்னடர்கள் எரித்துச் சாம்பலாக்கினார்கள். சற்றொப்ப இரண்டுமாதங்கள் தமிழக –கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை ஊர்தி போக்குவரத்துத் தடுக்கப்பட்டு மூடி கிடந்தது.

கர்நாடக அணைகளில் தண்ணீர் நிரம்பினாலும் கூட, தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைத் திறந்துவிட மறுக்கிறார்கள். வெள்ள காலங்களில் வெளியேறும் மிகை நீரும் மேட்டூர் அணைக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக 67.16 ஆ.மி.க. கொள்ளளவில் மேக்கேதாட்டில் அணைகட்டக் கர்நாடகம் முனைகிறது.

முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கின்ற நிலையில் அணை உடையப் போகிறது என்று கேரள சி.பி.எம்; காஙிகரசுக் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும் பீதி கிளப்பி, தமிழர்களுக்கு எதிரான இனவெறியைத் தூண்டிவிட்டன. 2011,2012 ஆண்டுகளில் தமிழ்நாட்டு எண் பொறித்த ஊர்திகளையும் தமிழர்களையும் தாக்கினார்கள் மலையாளிகள்! சென்னையைச் சேர்ந்த ஒரு தமிழன் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிக் கொன்றார்கள். ஐயப்ப சாமி கோயிலுக்குப் போன தமிழர்களைத் தாக்கினார்கள். கேரள நச்சுக் கழிவுகளைத் திட்டமிட்டுத் தமிழ்நாட்டிற்குள் கொண்டுவந்து கொட்டுகிறார்கள். தமிழ்நாட்டிற்குரிய கண்ணகி கோயில் நிலப்பகுதியை கேரளம் ஆக்கிரமித்து வைத்துள்ளது. கூடலூர் – பளியங்குடி வழியாகக் கண்ணகி கோயிலுக்குத் தமிழ்நாட்டு எல்லைகுள் தமிழ்நாடு அரசு சாலை அமைப்பதையும் தடுத்து வைத்திருகிறது கேரளம்.

தமிழ்நாட்டு அரசுப் பொறுப்பில் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு, விலைக்கு மின்சாரம் தரமறுக்கிறது கேரள அரசு. மின்னாக்கியை (ஜெனரேட்டரை)ப் பயன்படுத்தித்தான் தமிழ்நாடு அவ்வளவு பெரிய அணையையும் அலுவலகங்களையும் பல பத்தாண்டுகளாக நிர்வகிக்கிறது.

ஆந்திரம், தமிழ்நாட்டிற்குரிய பாலாறு, தென்பெண்ணை ஆறுகளில் அணைகள் கட்டி சொட்டு நீரும் வராமல் தடுத்துவிட்டது. தமிழ்நாடு அரசு பணம் செலுத்தி சென்னைக் குடிநீருக்குக் கிருஷ்ணா ஆற்றிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டது. ஓர் ஆண்டில் கூட ஒப்பந்தப்படி 12 ஆ.மி.க. (T.M.C.) தண்ணீரை ஆந்திரம் சென்னைக்குத் திறந்துவிட்டதில்லை. பேருந்தில் பயணம் செய்த தமிழர்கள் 18 பேரை ஆந்திரக் காவல் துறையினர் கடத்திச் சென்று, அம்மணப்படுத்தி, கைகால்களைக் கட்டி, உறுப்புகளை அறுத்து, சித்திரவதை செய்து சுட்டுக்கொன்ற செய்தி அனைவருக்கும் தெரியும்.


====================
திராவிடத் தீவிரம்
====================
இன்னும் எத்தனை எத்தனையோ வன்கொடுமைகளைத் தமிழர்களுக்கு எதிராக ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலங்கள் அரங்கேற்றுகின்றன. அவர்களும் தமிழர்களும் ஒரே இனம் என்ற திராவிட இனக் கொள்கையைத் தி.க.வும் தி.மு.க.வும் கடைபிடித்து, தமிழ்நாட்டுத் தமிழர்களைத் தமிழினத் தற்காப்பு உணர்வற்ற ஏமாளிகள் ஆக்குகின்றன தமிழர் இழப்புகளுக்கு ஆளகிறார்கள்.

இப்பொழுது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதிலிருந்து திராவிட இனவாதத்தைத் தீவிரபடுத்தியுள்ளார். முதலமைச்சர் பதவி உறுதி மொழி ஏற்றவுடன் “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், திராவிட இனத்தவன்” என்று தன்னை வெளிபடுத்தினார். தமிழ்நாட்டு முன்னேற்றத்தைத் “திராவிட மாடல்” என்றார். அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கும் போது அவருக்குத் “திராவிடச் சிறுத்தை”  என்று சிறப்பு அடைமொழி கொடுத்தார். இப்போது தமிழ்நூல்கள் தொகுப்பிற்குத் “திராவிடக் களஞ்சியம்” என்று பெயர் சூட்டுகிறார்.

திராவிடர் கழகத்தை விஞ்சும் அளவிற்கு இப்போது மு.க.ஸ்டாலின் திராவிட இனத்திணிப்பில் தீவிரம் காட்டுவது ஏன்?

தமிழ்நாடு என்பது தமிழர்களுக்கான மொழிவழித் தேசிய இனத்தாயகம். அவ்வாறான தேசிய இனத் தாயக அடிப்படையில்தான் தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள், மராட்டியர்கள், குசராத்தியர்கள், வங்காளிகள், பஞ்சாபியர்கள் எனப் பல இனத்தவர்க்கும் தனித் தனி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதற்காக இம்மாநிலங்களில் பிற மொழி பேசும் மக்களும் பிற தேசிய இனமக்களும் வாழவே மாட்டார்கள், வாழவே கூடாது என்ற வரையறை எதுவும் இல்லை. 
    
வரலாற்றுப் போக்கில் பல்வேறு காரணங்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன் வெளியிலிருந்து வந்து குடியேறிய மக்கள் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு சம உரிமை உண்டு. ஆனால் அந்தச் சிறுபான்மையினர்க்காக, அம்மாநிலத்துக்குரிய வரலாற்று வழிப்பட்ட மண்ணின் மக்கள் தங்கள் இனப்பெயரை மறைத்துக் கொள்வது என்பதோ, தங்கள் தாய்மொழியை, முன் நிறுத்தக் கூடாது என்பதோ எந்த மாநிலத்திலும் இல்லை. மரபு வழியில் மண்ணுக்குரிய இனத்தின் பெயரை -  அதன் மாநிலத்திற்கு  வைக்கக் கூடாது என்றும் கூற முடியாது. 

அதே வேளை தொடர்ந்து வெளி மாநிலங்களில் இருந்து அயல் இனத்தவர்கள் அன்றாடம் வந்து குவிந்து தமிழ்த் தேசிய இனத்தின் தாயகமான தமிழ்நாட்டை ஆக்கிரமிக்க ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. மொழி வழி தேசிய இனத் தாயகமாகத் தமிழர்களுக்குத் தமிழ்நாடு வரையறுக்கப்பட்ட 1956 நவம்பர் 1க்கு பிறகு தமிழ்நாட்டில் குடியேறிய அனைவரும் அயலார் என்றும் அவர்கள் வெளியேற்றப்பட வேண்டியவர்கள் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை எழுப்பிவருகிறது.   

தெலுங்கு, கன்னடம், மராத்தி, உருது, செளராட்டிரம் முதலிய மொழிகளைப் பேசும் மக்கள் பலநூறு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். அவர்களை நாம் அயலாராகக் கருதவில்லை. மண்ணின் மக்களே. அதே வேளை தமிழே இங்கு கல்வி மொழி, ஆட்சி மொழி; தமிழர்களின் மரபுவழித் தாயகம் தமிழ்நாடு!

கர்நாடகத்தில் தமிழர் நிறுவனங்களில் கன்னடத்துடன் தமிழிலும் நிறுவனப் பெயர் எழுதபட்டிருந்தால் அப்பலகைகளை அடித்து உடைக்கிறார்கள் கன்னட வெறியர்கள். தமிழில் இசை நிகழ்ச்சி நடந்தால் மேடை ஏறித் தாக்குகிறார்கள்.  தமிழ்நாட்டில் அப்படியெல்லாம் நடப்பதில்லை. நடக்கக் கூடாது.

ஆனால் தமிழின அடையாளத்தையே மறைக்க தி.க.வும், தி.மு.க.வும் முனைவது சரியா? திராவிடத்திணிப்பு ஏன்?இப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின்  திராவிடத் திணிப்பில் தீவிரம் காட்டுவது ஏன்?

ஐயா அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் 175-ஆம் ஆண்டு விழாவை ஒட்டி அவர் நினைவைப் போற்றும் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் “தமிழன், திராவிடம்” என்ற இரண்டு சொற்கள் இல்லாமல் யாரும் அரசியல் நடத்த முடியாது என்று முன்னுரை கொடுத்தார். திராவிடம் என்பதை அனைவர்க்கும் பொதுவான இனமாகவோ – பண்பாகவோ திணிப்பதை ஏற்க முடியாது.

அயோத்திதாசர் தொடக்கத்தில் திராவிட என்ற சொல்லைப் பயன்படித்தினார். பின்னர் அச்சொல்லைக் கைவிட்டு, தமிழன் என்பதையே பயன்படுத்தினார். மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் (1881) தமிழர் என்று அனைவரையும் பதியச் சொன்னார். தமிழன் என்ற பெயரில் ஏடு நடத்தினார்.

அயோத்திதாசரைப் போற்றுவதைக் கூட ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி ஸ்டாலின், திராவிடத்தைத் திணிப்பது சரியன்று.

தமிழிக்கும் தமிழினத்திற்கும் பாடுபட்ட அயோத்திதாசர், மனோன்மணியம் சுந்தரனார் போன்றவர்கள் கூட திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். காரணம் அப்போது ஆட்சியாளர்களால் திராவிடர் என்ற சொல் பிரபலப்படுத்தப்பட்டிருந்ததாகும்.

“திராவிட” என்ற சொல் எப்போது பிரபலம் ஆனது. விசயநகரத் தெலுங்கு மன்னர்களின் ஆட்சி தமிழ்நாட்டில் நடந்த போது! அதிலும் குறிப்பாகத் தெலுங்கு பிராமணர்கள் “திராவிட” என்ற சொல்லைக் கூடுதலாகத் திணித்தார்கள். அப்பொழுதுதான் தாயுமானவர் முதல் முதலாகத் தமிழ் இலக்கியத்தில் “திராவிட” என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.

ஐரோப்பிய மொழியியல் ஆய்வாளர்கள், ஆரிய பிராமணர்கள் கொடுத்த “திராவிட” என்கிற இன – மொழிப் பெயரை அப்படியே ஏற்றுக்கொண்டனர்.
  
நம்முடைய தமிழ்ச்சான்றோர்களும்,  அறிஞர்களும் திராவிட, திராவிடர் என்ற சொற்களைப் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் பயன்படுத்தினார்கள். தெலுங்கர்களின் – பிராமணர்களின் மேலாதிக்கச் செல்வாக்கால் – வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி நம் சான்றோர்கள் திராவிடத்தைப் பயன்படுத்தினார்கள்.

 ஆரிய-பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடினார் பெரியார்; ஆரிய ஆதிக்கத்தின் மீது அடி விழுந்தது. அந்த நன்றிக் கடனுக்காக, நம்முடைய பாவேந்தர் போன்றோர் தமிழையும் தமிழ் இனத்தவரையும்  பெரியார் இழிவு படுத்தியதையெல்லாம் தாங்கிக் கொண்டார்கள். பெரியார் தாசனாகப் பாவேந்தர் விளங்கினார். அதே வேளை தமிழுக்கு அமுதென்று பேர், தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று பாடினார்.

தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழைப் படிக்காதே, ஆங்கிலத்தைப் படி என்று பெரியார் ஆவேசப் பரப்புரை செய்த போது கூடப் பாவேந்தர் “நூலைப்படி; சங்கத் தமிழ் நூலைப்படி; காலை இரவு பொருள்படும்படி சங்கத் தமிழ் நூலைப்படி” என்று பாடினார்.

தமது பாக்களில் திராவிடன், திராவிட நாடு என்று எழுதிய பாவேந்தர் பின்னர் மறுபதிப்புகளில் அவற்றைத் தமிழன், தமிழ்நாடு என்று மாற்றினார். இதுபற்றி பாவேந்தர் ஆய்வாளர் காலஞ்சென்ற முனைவர் இளவரசு அவர்களும் குறிப்பிட்டுள்ளார்.

அயோத்திதாசரும் பாவேந்தரும் “திராவிடர்” என்று முழுமையாகக் கடைசிவரைக் கூறவில்லை. அவர்கள் தமிழ், தமிழர் என்ற களத்தில்தான் செயல்பட்டார்கள். இந்த இடத்தில் இன்னொரு கருத்தையும் சொல்லிவிடுவது நல்லது. நம்முடைய அயோத்திதாசரும், பாவேந்தரும் “திராவிடர்” என்ற இனம் பற்றி மெய்யாகவே கூறியிருந்தாலும் அதை நீக்கிவிட்டுதான் நாம் அவர்களைப் பின்பற்ற வேண்டும்.   

இதுதான் தமிழ் அறிவுத் தேடல் மரபு. அயோத்திதாசரும் பாவேந்தரும் அந்த அறிவுத் தேடல் மரபை நமக்கு அடையாளம் காட்டியுள்ளார்கள்.

===============================
திராவிடத் திணிப்பு வேகம் பிடிப்பதேன்?
===============================

அண்மைக் காலமாகத் தமிழின உணர்ச்சி தமிழ்நாட்டு இளையோரிடமும் பெரியோரிடமும் வளர்ந்து வருகிறது. தமிழ்த் தேசியம் வளர்ந்து வருகிறது. இந்தத் தமிழின உணர்ச்சி வளர்ச்சி வேகத்தைத் தடுத்து மடைமாற்றத் திராவிட உணர்ச்சியை செயற்கையாகத் தூண்டுகிறார்கள்.

அடுத்து, தமிழ்நாடு தமிழர்களின் தாயகம் என்று இருப்பதைக் கலப்பு இன மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற தொலை நோக்குத் திட்டம் கொண்டுள்ளார்கள்.

கலப்பின மாநிலம் என்பதை நேரடியாகச் சொன்னால் திராவிடக் கட்சிகளில் இருக்கின்ற தமிழர்களே அதை எதிர்ப்பார்கள் என்பதற்காக, ஆரிய எதிர்ப்புக்கு உரியது திராவிடமே என்று சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். இந்த உத்தி ஏற்கெனவே பெரியாரால் சொல்லப்பட்டதுதான்.

ஆரிய-பிராமணப்-சமற்கிருத ஆதிக்க எதிர்ப்பை 2000 ஆண்டுகளாக தொடர்ந்து வள்ளலார் காலம் – மறைமலையடிகள் காலம் வரை கடைபிடித்து வந்தது தமிழினம். அதற்கான சான்றுகள் ஏராளம். அப்படி தமிழ் முன்னோர்களால் ஆரிய எதிர்ப்பிற்கு பக்குவப் படுத்தப்பட்ட மண்ணில்தான் பெரியாரின் ஆரிய எதிர்ப்பு வளர முடிந்தது அதே வேளை அவர் உரிமை கொண்டாடிய ஆந்திர, கர்நாடக, கேரள திராவிட மாநிலங்களில் ஆரிய பார்ப்பணிய சமற்கிருத எதிர்ப்பு வெகு மக்கள் இயக்கமாக உருவாகவில்லை.  

தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், தமிழர்கள் ஆகியோரை ஒருங்கிணைக்க திராவிடம் இனம் என்ற வரையறை தேவை என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே, இன்னொரு பக்கம் பார்ப்பனர்களை எதிர்க்கத் தமிழினம் பொருத்தமில்லை, திராவிட இனமே சரியானது என்று பெரியார் கூறினார். இதோ அவர் கூற்று:
“திராவிட சமுதாயம் என்று நம்மைக் கூறிக் கொள்ளவே கஷ்டமாயிருக்கும் போது, தமிழர் என்று எல்லோரையும் ஒற்றுமையாக்க முயற்சி எடுத்தால் கஷ்டங்கள் அதிகமாகும்.  இங்கேயே பாருங்கள் கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், தோழர் அண்ணாதுரை தமிழர். இனி எங்களுக்குள் ஆயிரம் சாதிப்பிரிவுகள். எனவே திராவிட  சமுதாயத்தின் அங்கத்தினர்கள் நாம், நம் நாடு திராவிட நாடு என்று வரையறுத்துக் கொள்வதில் இவர்களுக்கு ஆட்சேபனை இருக்காது” என்று ஒரு பொதுக் கூட்டத்தில்  பெரியார் பேசினார்.     (பெரியார் ஈ.வெ.ரா, சிந்தனைகள் -1, பதிப்பாசிரியர், வே.ஆனைமுத்து. 1974 பக் 543-550).

தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழரல்லாத மற்ற இனத்தவர்களுக்கும் உரிய பொதுச் சொல்லாகத்தான் பெரியார் திராவிடத்தைத் தேர்வு செய்தார். அதன்பிறகு தமிழர் என்றால் “என் தாய் மொழியும் தமிழ் என்று கூறிக் கொண்டு பார்ப்பனர்களும் வந்து சேர்ந்து கொள்வதைத் தடுக்கத் திராவிடர் என்ற இனப் பெயரைப் பயன்படுத்துகிறேன் என்று கூறினார்.

தெலுங்கர், கன்னடர், மலையாளி, தமிழர் ஆகிய மூன்று இனத்தார்க்கும் பொதுச் சொல் திராவிடர் என்று கால்டுவெல் பாணியைப் பின்பறிப் பெரியார் கூறினார்.

இப்போதும் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு இருக்கும் தமிழர் என்ற தனி அடையாளத்தை – தாயக உரிமையை நீக்க, தெலுங்கர், கன்னடர், மலையாளி போன்ற பிற இனங்களையும் இணைத்து, கலப்பின மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றவே முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட இனம் குறித்துத் தீவிரமாகப் பேசிவருகிறார்.

தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோர் முறையே ஆந்திரம், தெலங்கானா, கர்நாடக, கேரள மாநிலங்களில் தங்களின் இயற்கையான இனப்பெயரில் வாழ்வார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தமிழர்கள் மட்டும் தங்களின் இயற்கையான இனப்பெயரை மறந்துவிட்டு, மறைத்துவிட்டு, திராவிடர் என்ற பெயரில் அடையாளப்பட வேண்டும் என்பதுதான் இப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்கும் திராவிட முனைப்பு. இதைப் புரிந்து கொண்டு தமிழர்கள் தங்களின் இனப்பெயரை, இழந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும்.
அதே வேளை, பல நூறு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு வாழும் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிற மொழி பேசும் மக்களைத் தமிழர்களாகிய நாம் அயலாராகக் கருதவில்லை, கருதக்கூடாது. சம உரிமை உள்ள மக்களாகவே கருதுகிறோம். அவர்களும் தமிழர்களின் இனப்பெயரை மாற்றும் “திராவிட” முயற்சிகளுக்கு ஆதரவளிக்கக்கூடாது. ஓர் இன மக்களுக்கு அந்த இன முன்னோர்கள்தான் இனப்பெயரை சூட்டுவர், கால்டுவெல் போன்ற வெளியார் தமிழர்களுக்கு இனப் பெயர் சூட்ட முடியாது. கால்டுவெல்லை பயன்படுத்தித் தமிழின அடையாளத்தை மறைத்தும் மறுத்தும் சூதாடுகின்ற திராவிட அரசியலை ஏற்க முடியாது.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.