ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

முதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் திருக்கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரங்கள்! தெய்வத் தமிழ்ப் பேரவையினர் முயற்சி வெற்றி! பெ. மணியரசன், ஒருங்கிணைப்பாளர் தெய்வத் தமிழ்ப் பேரவை!

பழம் பெருமை மிக்க கடலூர் மாவட்ட விருத்தாசலம் எனப்படும் முதுகுன்றத்தில் விருத்தகிரீசுவரர் எனப்படும் பழமலைநாதர் திருக்கோயில் குடமுழுக்கு திருவள்ளுவராண்டு 2053, தைத்திங்கள் 24-ஆம் நாள் – 6.2.2022 அன்று சிறப்பாக நடந்தது. கருவறை, வேள்விச் சாலை, கோபுரக் கலசம் ஆகியவற்றில் தேவாரத் திருமுறைகளின் தமிழ் மந்திரம் ஓதப்பட்டது.

வடக்கே இருந்து வந்து தமிழ்நாட்டில் குடியேறிய ஆரிய பிராமணர்கள், தமிழர்களை சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று இழிவு படுத்தினார்கள். ஆரியப் பிராமணர்களை மண்ணுலகத் தேவர்கள் (பூசுரர்கள்) என்றார்கள். தமிழை நீச பாஷை என்றார்கள்; சமற்கிருதத்தைத் தேவபாஷை என்றார்கள்; தமிழர்களின் தெய்வங்கள், ஊர்கள், குழந்தைப் பெயர்கள் அனைத்திற்கும் சமற்கிருதத்தில் பெயர் சூட்டினார்கள்.

இவ்வாறான ஆரிய ஆதிக்கத் திரிபு வேலைகளால்தான் முதுகுன்றம் விருத்தாச்சலம் ஆனது. பழமலைநாதர் பெயர் விருத்தகிரீசுவரர் என்று மாற்றப்பட்டது. ஆரிய சூழ்ச்சியின் போர் உத்தி நேரடியாக எதிர்ப்பதன்று; அரவணைத்து அழிப்பது. இதைத் திருதராட்டிர ஆலிங்கனம் என்பார்கள் அவர்கள்.

திருமுதுகுன்றம் திருக்குடழுக்கைத் தமிழ் மந்திரங்கள் ஓதி நடத்த வேண்டும் என்று தெய்வத் தமிழப்பேரவையின் கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் பெரு முயற்சி எடுத்தனர்.

“அன்னைத் தமிழில் அர்ச்சனை” என்று அடுக்கு மொழிப் பெயர் சூட்டிய தி.மு.க. ஆட்சி அதைச் செயல்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை. சாதனைப் பட்டியலுக்கான சாகசச் சொல் வரிசையில் மட்டுமே அது அக்கறை காட்டும்.

கடந்த தை 10 – 23.1.2022 ஞாயிற்று கிழமை சென்னை வடபழனி முருகன் திருக்கோயில் குடமுழுக்கு நடந்தது. அப்போது கொரோனா முழு முடக்கம் செயல்பாட்டில் இருந்ததால் நாம் கவனம் செலுத்த முடியவில்லை. ஆனால் அதற்கு முன்பாகவே 12.1.2022 அன்று தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன், கருவூரார் வழி சிம்மம் சத்தியபாமா அம்மையார் முதலியோர் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களிடம் அளித்த கோரிக்கை மனுவில் வடபழனி முருகன் கோயில் குடமுழுக்கைத் தமிழ் வழியில் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். தமிழில் குடமுழுக்கு செய்வோம் என்று அமைச்சர் உறுதி அளித்தார். ஆனால் வடபழனி திருக்குடமுழுக்கு நடந்தவுடன் செய்தியாளர்கள் இந்து அறநிலையத் துறை அமைச்சரிடம் தமிழ் வழியில் குடமுழுக்கு நடந்ததா என்று கேட்டனர். அதற்கு அமைச்சர், ஆகமப்படி நடந்தது என்றார். தமிழ் வழியில் நடந்தது என்று அவர் சொல்லவில்லை. சமற்கிருத வழியில் மட்டும் நடந்ததை மறைப்பதற்காக தந்திரமாக ஆகமப்படி நடந்தது என்று கூறினார். சிவநெறிச் சான்றோர்களிடம் வடபழனி முருகன் கோயில் எந்த ஆகமப்படி கட்டப்பட்டது என்று கேட்டேன். அவர்கள் வடபழனி முருகன் கோயில் ஆகமக் கோயில் அல்ல என்றார்கள். சேகர்பாபு அவர்களுக்கே வெளிச்சம்! வடபழனி முருகன் கோயில் குடமுழுக்கில் கேள்வி கேட்பாரின்றி ஆரிய சமற்கிருதக் கொற்றம் அலம்பல் செய்திருக்கும்.

அதுபோல் முதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் கோயில் குடமுழுக்கு ஆகிவிடக் கூடாது என்பதற்காக, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்களும் தெய்வத் தமிழ்ப் பேரவைப் பொறுப்பாளர்களும் முன் கூட்டியே முயற்சி எடுத்து, தமிழ் மந்திரங்கள் ஓதி நடப்பதற்கான கோரிக்கையை இந்து அறநிலையத் துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தினர்.

தமிழ்த்தேசியப் பேரிக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பெண்ணாடம் தோழர் க.முருகன், தெய்வத் தமிழ்பேரவை செயற்குழு உறுபினர் சிதம்பரம் முனைவர் சுப்பிரமணிய சிவா ஆகியோர் இந்து சமய அறநிலையத் துறை கடலூர் மண்டல இணை ஆணையரிடம் தமிழ் வழியில் பழமலைநாதர் குடமுழுக்கை 6.2.2022 அன்று நடத்திடக் கோரி முன்கூட்டியே விண்ணப்பம் அளித்தனர்.

குடமுழுக்கு நடைபெறும் 6.2.2022க்கு முன் ஒருவார காலம் முதுகுன்றம் பழமலைநாதர் கோயிலுக்கு பெண்ணாடம் தோழர்கள் க.முருகன், மணிமாறன், வேல்முருகன் ஆகியோர் அன்றாடம் சென்று அத்திருக்கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு செயல் அலுவலர் திரு.முத்துராசா அவர்களிடம் வேண்டுகோள் வைத்து வந்தனர்.
திரு முத்துராசா அவர்களும் மற்ற மேல் அதிகாரிகளும் தமிழ், சமற்கிருதம் இரண்டிலும் வேள்விச்சாலை, கருவறை, கோபுரக் கலசம் ஆகிய இடங்களில் மந்திரங்கள் ஓதி குடமுழுக்கு சிறப்புப் பூசைகள் நடைபெற ஏற்பாடுகள் செய்தனர். ஆனால் பலநூறு ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த பிராமணர்களுக்கு தமிழ் ஓதுவார்கள் தமிழ் மந்திரம் சொல்வது எரிச்சல் ஊட்டியது. இடையூறுகள் செய்தார்கள். அவற்றையெல்லாம் தெய்வத் தமிழ்ப்பேரவை சார்பில் தமிழ் மந்திரம் ஓதிய ஆன்மிகர்களும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினரும் பொறுமையாக எதிர்கொண்டு தமிழ் மந்திரங்கள் அரங்கேறச் செய்தனர்.

பழமலைநாதர் கோபுரக் கலசத்தில் முனைவர் சுப்பிரமணிய சிவா; ஓதுவார்கள் பூங்குடி சந்திரசேகர், சிதம்பரம் கோதண்டபாணி ஆகியோர் தேவாரம் மற்றும் திருமறைகளிலிருந்து தமிழ் மந்திரப் போற்றிகளை ஓதினார்கள். அங்கிருந்த பிராமண அர்ச்சகர் சிலர் கடுகடுத்தனர். அதை எல்லாம் சட்டை செய்யாமல் சுப்பிரமணிய சிவா தமிழ் மந்திரங்களைச் சொன்னார். பக்கத்தில் பெண்ணாடம் தோழர் க.முருகன் பாதுகாப்பாக நின்று கொண்டார்.

அடுத்து பழமலைநாதர் உடன் உறை பழமலைநாத நாயகியர் விருத்தாம்பிகை, பாலாம்பிகை திருக்கோபுரக் கலசத்திலும் தமிழ் ஓதுவார்கள் தமிழ் மந்திரம் ஓதினார்கள். தமிழ் ஓதுவார்கள் பலரைப் பல ஊர்களிலிருந்து அறநிலையத் துறை அதிகாரிகள் வரவழைத்திருந்தனர். திருக்கோயில் தளமெங்கும் தமிழ் ஓதுவார்கள் பல நூறு பேர் தேவாரத், திருமுறைகள் பாடினர். குழுமிச் சூழ்ந்து நின்ற மக்கள் “தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று செந்தமிழில் முழங்கினர்.

ஆன்மிகத்தில் முதலில் ஆதிக்கம் செலுத்தித்தான் ஆரியப் பிராமணர்கள் பின்னர் அரசிலும், சமூகத்திலும் ஆதிக்கம் செலுத்தினார்கள். எனவே, ஆரிய பிராமண – சமற்கிருத ஆதிக்கத்திலிருந்து தமிழர்களை விடுவிக்க, முதலில் சிவநெறி, திருமால் நெறி, நாட்டுப்புறத் தெய்வக் கோயில்களில் – தமிழர் ஆன்மிக மீட்சியைக் கொண்டுவர தமிழின உணர்வாளர்களும், தமிழ்த் தேசியர்களும் கவனம் செலுத்தி மாற்றங்களை உருவாக்க வேண்டும்.

ஏற்கெனவே தஞ்சைப் பெருவுடையார் கோயில் (2020), கரூர் பசுபதீசுவரர் கோயில், விராலிமலை முருகன் கோயில் முதலிய அறநிலையத் துறைக் கோயில் குடமுழுக்குகளில் சமற்கிருத ஆதிக்கத்தில் குறுக்கிட்டு தமிழ் மந்திரம் ஓதச் செய்தோம். திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் திருக்கோயில் உள்ளிட்ட தமிழ்நாட்டின்  பல்வேறு திருக்கோயில்களில் தமிழ் மந்திரம் ஓதி கருவறைப் பூசை செய்ய ஏற்பாடுகள் செய்து தமிழ் வழிபாட்டை ஊக்குவித்தோம்.

தமிழ் மொழி, இன உணர்வாளர்கள்  இந்நிகழ்வுகளைப் பாரட்டுவதுடன் நின்று விடாமல் அங்கங்கே தமிழ் வழிபாட்டை முன்னின்று செய்து, தமிழை ஆன்மிகத்தில் ஆளச் செய்ய வேண்டும் என்று தெய்வத் தமிழ்ப்பேரவை சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

 ================================
தெய்வத் தமிழ்ப் பேரவை
================================
முகநூல்: www.fb.com/theivathamizh
சுட்டுரை: www.twitter.com/TheivigaThamizh
பேச: 9841949462, 9443918095
================================

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.