ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

திராவிட மாடல் ஆட்சியில் அக்ரகார மாடல் குடமுழுக்குகள்!

 


திராவிட மாடல் ஆட்சியில் அக்ரகார மாடல் குடமுழுக்குகள்!

====================================

தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர்

பெ. மணியரசன் அறிக்கை!

====================================


இன்று (06.07.2022) புகழ்பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு, திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில் குடமுழுக்கு உட்பட பல திருக்கோயில்களில் திருக் குடமுழுக்குகள் நடந்துள்ளன.


மேற்கண்ட இரு கோயில் குடமுழுக்கின்போது, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை 31.01.2020 அன்றும், 19.08.2021 அன்றும் வழங்கிய தீர்ப்பின்படி கருவறை, வேள்விச்சாலை (யாக சாலை), கோபுரக் கலசம் ஆகிய மூன்று இடங்களிலும் தமிழ் ஓதுவார்களைக் கொண்டு, தமிழ் மந்திரங்களை ஓதி வழிபாட்டை நடத்த வேண்டும்; சமற்கிருதத்திற்கும் தமிழுக்கும் சரிபாதி நேரங்களாகப் பிரித்து, மந்திரங்கள் ஓத வேண்டும்; கோயில் கலசத்தில் தமிழ் ஓதுவார்கள் தமிழ் மந்திரம் சொல்வதுடன், கலசங்களில் புனித நீரும் ஊற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து 23.06.2022 அன்றே, சமயபுரம் மாரியம்மன் கோயில் இந்து சம அறநிலையத்துறை இணை ஆணையர்க்கும், 24.06.2022 அன்றே உறையூர் வெக்காளி அம்மன் கோயில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்க்கும் தெய்வத் தமிழ்ப் பேரவையின் திருச்சி ஒருங்கிணைப்பாளர் திரு. வே.பூ. இராமராசு மற்றும் நிர்வாகிகளுடன் நேரில் சென்று வேண்டுகோள் மனுக் கொடுத்துள்ளார்கள். 


அதன்பிறகு, 04.07.2022 அன்று சமயபுரம் கோயிலில் குடமுழுக்குக்கான வேள்விச்சாலை மற்ற ஏற்பாடுகள் குறித்து மேற்படி இராமராசு அவர்களும், மற்ற நிர்வாகிகளும் பார்க்கச் சென்றபோது, யாக சாலையில் சிறப்பு மேடை அமைத்து அதன் மீது சுமார் ஏழு பிராமண அர்ச்சகர்கள் சமற்கிருதத்தில் மந்திரம் சொல்லிக் கொண்டிருந்ததையும், அந்த மேடைக்குக் கீழே தரையில் ஒரு துணிவிரிப்பின் மீது அகவை முதிர்ந்த தமிழ் ஓதுவார் ஒருவர் உட்கார்ந்திருந்ததையும் பார்த்துள்ளார்கள். 


உடனே இணை ஆணையர் கல்யாணி அம்மா அவர்களை தெய்வத் தமிழ்ப் பேரவை நிர்வாகிகள் சந்தித்து, மேற்படிப் பாகுபாட்டையும், ஒருவகையான தமிழ்த் தீண்டாமை பற்றியும் முறையிட்டிருக்கிறார்கள். அவற்றை சரி செய்வோம் என்று இணை ஆணையர் கூறியுள்ளார்.


மறுநாள் (05.07.2022) மாலை சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குள் சென்று பார்த்தபோது, பிராமண பூசாரிகள் மேடையில் அமர்ந்திருக்கும் யாக சாலைக்கு வெளியே தரையில் துணிவிரிப்பில் நான்கைந்து ஓதுவார்கள், பிராமண பூசாரிகள் அனுமதிக்கும் நேரத்தில் அவ்வப்போது தமிழ் மந்திரங்கள் பாடியுள்ளார்கள். 


மேற்படி இணை ஆணையரிடம் இந்தப் பாகுபாடு குறித்து தெய்வத் தமிழ்ப் பேரவையினர் வே.பூ. இராமராசு, வே.க. இலக்குவன், நா. இராசாரகுநாதன், இனியன், கிருஷ்ணமூர்த்தி, அ. இராசகுமார், இரஜினி, கி. குபேரன் ஆகியோர் புகார் தெரிவித்துள்ளனர். 


அதற்கு இணை ஆணையர், “நாங்கள் அப்படி தனியே உட்காரச் சொல்லவில்லை; அவர்களாகப் போய் உட்கார்ந்துள்ளார்கள்” என்று கூறியுள்ளார். ஆனால், அந்தத் தமிழ் ஓதுவார்களுக்குத் தனியே மேடை அமைத்துத் தரவில்லை என்ற உண்மையை அம்மையாரால் மறுக்க முடியவில்லை. 


அடுத்து, மேற்படி தெய்வத் தமிழ்ப் பேரவையினர், “நாளை (06.07.2022) காலை நடைபெறும் குடமுழுக்கில், கோபுரக் கலசத்தில் புனித நீர் ஊற்றி மந்திரம் சொல்லும்போது, பிராமண பூசகர்களின் எண்ணிக்கைக்குச் சமமாக, தமிழ் ஓதுவார்களையும் அனுமதித்து அவர்களும் கலசங்களில் புனித நீர் ஊற்றி, தமிழ் மந்திரம் ஓதிட அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். 


அதற்கு இணை ஆணையர் அவர்கள், கோபுரத்தில் ஓதுவார் ஒருவரைத்தான் ஏற்றுவோம்; பிராமண அர்ச்சகர்களின் எண்ணிக்கைக்குச் சமமான எண்ணிக்கையில் ஏற்ற முடியாது; அடுத்து, அந்த ஒருவரும் தமிழ் மந்திரம் கோபுரத்தில் ஓதலாம், ஆனால் அவர் கோபுரக் கலசத்தில் புனித நீர் ஊற்ற அனுமதிக்க முடியாது” என்று கூறியுள்ளார். 


அதேபோல், இன்று காலை சமயபுரம் மாரியம்மன் கோயில் குடமுழுக்கில் ஓதுவார் ஒருவர் மட்டுமே கோபுரத்தில் நின்று தமிழ் மந்திரம் ஓத அனுமகிக்கப்பட்டுள்ளார். கலசத்தில் புனித நீர் ஊற்ற அவரை அனுமதிக்கவில்லை. 


அதேபோல், இன்று (06.07.2022) திருச்சி உறையூர் வெக்காளி அம்மன் குடமுழுக்கில், தமிழ் ஓதுவார் ஒருவரை மட்டுமே கோபுரத்தில் நின்று தமிழ் மந்திரம் பாட அனுமதித்துள்ளனர். அவரைக் கலசத்தில் புனித நீர் ஊற்ற அனுமதிக்கவில்லை. ஆனால், பிராமண பூசகர்கள் ஆறு ஏழு பேர் கோபுரத்தில் நின்று சமற்கிருதம் பாடி புனித நீரூற்றி உள்ளனர். 


வெக்காளியம்மன் கோயில் உதவி ஆணையரிடம் – உயர் நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த வலியுறுத்தி, 2022 சூலை 4, 5 ஆகிய நாட்களில் தெய்வத் தமிழ்ப் பேரவையினர் வலியறுத்தியும் பயனில்லை. 


சமயபுரம் மாரியம்மன் கோயில் மற்றும் உறையூர் வெக்காளியம்மன் கோயில் குடமுழுக்கு நிகழ்வுகளில், உயர் நீதிமன்றத் தீர்ப்பு செயல்படுத்தப்படவில்லை. சமற்கிருதத்திற்கும், பிராமண அர்ச்சகர்களுக்கும் அளிக்கப்படும் அதே அளவு வாய்ப்புகள் - தமிழுக்கும் தமிழ் மந்திர ஓதுவார்க்கும் தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நடக்காமல் தமிழும் தமிழரும் புறக்கணிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டுள்ளனர். 


தமிழுக்கும் தமிழின ஓதுவார்களுக்கும் இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த அநீதியைத் தடுத்து நிறுத்தி – உயர் நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தும்படி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. சேகர்பாபு அவர்களுக்கும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு. குமரகுருபரன் அவர்களுக்கும் 04.07.2022 முன் இரவில் புலனத்தின் வழியாக நான் கோரிக்கை வைத்தேன். எந்தப் பலனும் இல்லை! 


அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தமிழுக்கு எதிராகச் செயல்படுகிறார் என்று நான் உறுதியாக ஐயுறுகிறேன். கொரோனா முடக்க காலத்தில் கடந்த 23.02.2022 அன்று நடந்த சென்னை வடபழனி முருகன் கோயில் குடமுழுக்கு முழுக்க முழுக்க சேகர்பாபுவின் நேரடி மேற்பார்வையில் நடந்தது. அங்கு தமிழையும், தமிழ் ஓதுவார்களையும் முழுமையாகப் புறக்கணித்து, சமற்கிருதத்தில் பிராமண அர்ச்சகர்களைக் கொண்டு குடமுழுக்கை நடத்தினார். எனவே, அமைச்சரின் தமிழ் – தமிழர் புறக்கணிப்பை அவரின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் கடைபிடிப்பது இயல்பே! 


ஆனால், தமிழர்களை ஏமாற்றுவதற்காகத் தி.மு.க. ஆட்சி, “அன்னைத் தமிழில் அர்ச்சனை” என்று சொல்லிக் கொள்கிறது. இந்து சமய அறநிலையத்துறை 04.07.2022 அன்று வெளியிட்ட அறிக்கை, 05.07.2022 அன்று நாளேடுகளில் வந்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் 47 முதன்மைக் கோயில்களில் தமிழ்வழி அர்ச்சனை நடைபெறுவதாகச் சாதனை வர்ணனை செய்துள்ளது. 


மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில், பழனி முருகன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில் போன்ற இலட்சக்கணக்கான பக்தர்கள் அன்றாடம் வரும் 47 திருக்கோயில்களில் கடந்த ஓராண்டாக தமிழ் வழிபாட்டிற்குப் பதிவு செய்த பக்தர்களின் எண்ணிக்கை வெறும் 1,500 என்று அந்த அறிக்கை கூறும்போதே அதன் சாதனைப் பதாகைக் கிழிந்து தொங்குகிறது. 


முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின், “திராவிட மாடல்” ஆட்சியில் அக்ரகார மாடல் குடமுழுக்குகளும் வழிபாடுகளும் தாம் நடக்கும் என்பது தெரிகிறது. 


தமிழ் வழிபாட்டுரிமை, அனைத்துச் சாதியினர் அர்ச்சகராதல் போன்ற ஆன்மிக உரிமைகளுக்கு அங்கங்கே மக்கள் அறப்போராட்டம் நடத்தினால்தான், நம் தாய் மொழி உரிமையையும் தமிழர் உரிமையையும் நிலைநாட்ட முடியும். 


தெய்வத் தமிழ்ப் பேரவை தமிழ் வழிபாட்டுரிமைக்காக, அனைத்துச் சாதியினர் அர்ச்சகர் ஆவதற்காகத் தொடர்ந்து போராடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


================================ 

தெய்வத் தமிழ்ப் பேரவை

================================ 

முகநூல்: www.fb.com/theivathamizh

சுட்டுரை: www.twitter.com/TheivigaThamizh

பேச: 9841949462, 9443918095

================================

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.