ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்நாடு நாள் – நவம்பர் 1 (2022) - சென்னையில் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி

 தமிழ்நாடு நாள் – நவம்பர் 1 (2022)

===========================================

தமிழ்நாடெங்கும் ஒரு வாரம் கடைபிடிக்க வேண்டும்! சென்னையில் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி

===========================================

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

பெ. மணியரசன் வேண்டுகோள்! 

===========================================

 

இனம், மொழி அடிப்படையில் தமிழர்களின் தாயகம் இந்திய அரசால் சட்டப்படி வடிவமைக்கப்பட்ட நாள் 1956 நவம்பர் – 1ஆம் நாள்! இதுவே தமிழ்நாடு நாள்! 


தி.மு.க. ஆட்சி இந்த உண்மையை மறைத்து தனது வாக்குவங்கி வணிக அரசியலுக்காக சூலை 18 தான் தமிழ்நாடு நாள் என்று கடந்தாண்டு அறிவித்தது. அப்போதே அதை நாம் எதிர்த்தோம்; ஏற்கவில்லை! 


தி.மு.க., 1967இல் ஆட்சிக்கு வந்த பின், தமிழர்களின் நெடுநாள் கோரிக்கையும், சங்கரலிங்கனார் உயிரீகம் செய்து வலியுறுத்திய கோரிக்கையுமான “தமிழ்நாடு” பெயர் மாற்றக் கோரிக்கையை சட்ட நடைமுறை வழியில் செயல்படுத்துவதற்காக, அன்றைய முதலமைச்சர் அண்ணா 1967 சூலை 18 அன்று சட்டப்பேரவையில் “தமிழ்நாடு” பெயர் மாற்றுமாறு இந்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார். அனைத்துக் கட்சியினரும் ஆதரித்து அத்தீர்மானத்தை நிறைவேற்றினர். 


இந்திய அரசு 1968 திசம்பர் மாதம்தான் தமிழ்நாட்டின் கோரிக்கையை நாடாளுமன்றத்தில் வைத்து, விவாதித்து ஏற்றுக் கொண்டது. 1969 தொடக்கத்தில் அது செயலுக்கு வந்தது. தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் நாளில் 14.01.1969 அன்று முதலமைச்சர் அண்ணா, தமிழ்நாடு சட்டப்பேரவை முன், “தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்” என்ற பெயர்ப் பலகையைத் திறந்து, தமிழ்நாடு பெயரை அலுவல் முறைப்படித் தொடங்கி வைத்தார். 


இந்த வரிசைகளில் எது தமிழ்நாடு நாள்? தி.மு.க. ஆட்சி 1967 சூலைஇல் நிறைவேற்றிய தீர்மான நாளா? இந்திய அரசு நாடாளுமன்றத்தின் வழி ஏற்றுக் கொண்ட நாளா? அதற்குக் குடியரசுத் தலைவர் கையொப்பம் இட்ட நாளா? இம்மூன்றில் எந்த நாளும் தமிழ்நாடு நாள் ஆகாது! 


தமிழர் தாயகம் இந்திய அரசமைப்புப்படி பிறந்த நாளே தமிழ்நாடு நாள்! பிள்ளைக்குப் பிறந்த நாள், அது தாயிடம் இருந்து வெளிவந்த நாளா? பெயர் சூட்டிய நாளா? 


வரலாற்று வழியில் பார்த்தால், “தமிழ்நாடு” என்ற பெயரும், “தமிழகம்” என்ற பெயரும் பரிபாடல், புறநானூறு, அகநானூறு போன்ற சங்ககால இலக்கியங்களிலும் நிறையப் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் தமிழர் இனம்; தமிழர்களின் தாயகம் தமிழ்நாடு என்ற பெயர்த் தொடர்ச்சி தமிழர்களுக்கே உரியது!


தமிழர்கள் அயல் இனத்தார்க்கு அடிமைகள் ஆக்கப்பட்டபின் அந்த அயல் இனத்தார் நமது தாயகத்திற்கு அவரவர் விருப்பப்படி பெயர் சூட்டினார்கள். வெள்ளையர்கள் மெட்ராஸ் ஸ்டேட் என்றார்கள். இந்திக்காரர்கள் தமிழ் இன மறைப்பு நோக்கத்தில், வெள்ளையன் வைத்த மெட்ராசையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, அதை மாற்றித் தமிழ்நாடு என்று வைக்க மறுத்தனர். இந்திக்காரர்கள் மொழி இனத் தாயக மாநிலங்களை உருவாக்கவும் மறுத்தனர். பல்வேறு இன மக்கள் போராடிப் பெற்றவைதாம் மொழி இன மாநில அமைப்புகள்! 


ஆங்கிலேயர், இந்திக்காரர்கள் போன்றே வேறொரு வகையில் அயல் இனச் சிந்தனை கொண்டவர்கள் தமிழர்களைத் திராவிடர்கள் என்றனர். அவர்களின் திராவிடக் கவர்ச்சி வசனங்களையும் மீறி, தமிழ் இன – மொழி உணர்வு இயல்பூக்கமாகத் தமிழர்களிடம் இருந்ததால் அவர்களும் “தமிழர்” என்ற இனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், திராவிடத் திணிப்பைத் தொடர்ந்து கொண்டே உள்ளார்கள். தமிழ்நாடு நாளிலும் அதைத் திணிக்கிறார்கள். 


“தமிழ்நாடு நாள்” என்பதை ம.பொ.சி. மற்றும் தமிழ் உணர்வாளர்கள் நவம்பர் 1 என்று கடைபிடித்தார்கள். 1990களில் வெகுமக்கள் இயக்கமாக – கருத்தாக நவம்பர் 1ஐ தமிழ்நாடு நாள் என்று பரவச் செய்தது, ஐயா அருணாச்சலம் (ஆனாரூனா) அவர்களின் தமிழ்ச் சான்றோர் பேரவை. அப்போதிருந்தே தமிழ்த்தேசியப் பேரியக்கம் நவம்பர் 1ஐத் தமிழ்நாடு நாளாகக் கடைபிடித்து வருகிறது. 


கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த மு.க. ஸ்டாலின் திராவிடத் திணிப்பிற்காக – “திராவிட மாடல்“ என்ற ஒரு சொற்கோவையைப் பரப்பி வருகிறார். இதன் சாரம் தமிழின மறைப்புதான். அத்திட்டத்தின் ஒரு பகுதிதான் – தமிழ்நாடு நாள் நவம்பர் 1 அல்ல, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சூலை 18 தான் என்ற ஸ்டாலின் அறிவிப்பு! 


நவம்பர் 1 – தமிழ்நாடு நாள் என்றால், சங்க காலத்திலிருந்து தமிழர்கள் வாழ்ந்துவந்த தாயகம் நினைவுக்கு வரும். சங்க இலக்கியங்கள் நினைவுக்கு வரும். சேர, சோழ, பாண்டிய பேரரசர்கள் நினைவுக்கு வருவார்கள். தமிழ்நாட்டு எல்லைகளை மீட்கப் போராடிய போராளிகள் நினைவுக்கு வருவார்கள்; தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த ஆந்திரத்தின் சித்தூர் மாவட்டம், கேரளத்தின் தேவிக்குளம் பீர்மேடு, கர்நாடகத்தின் கோலார் தங்கவயல் போன்ற பல பகுதிகளை திராவிடச் “சகோதரர்களான” தெலுங்கர்கள் – மலையாளிகள் – கன்னடர்கள் பறித்துக் கொண்டார்களே என்ற ஆவேசம் வரும்; தமிழின உணர்ச்சி ஊறும்!


இவற்றையெல்லாம் மறைத்து மடைமாற்றத்தான் சூலை 18! இது தி.மு.க.வை நினைவுபடுத்தும்; திராவிடத்தை நினைவுபடுத்தும். திமு.க.வின் சாதனைப் பட்டியலை நினைவுபடுத்தும். திராவிடவாதிகள் இப்படிப்பட்ட உளவியல் போரை பல வடிவங்களில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவற்றுள் ஒன்றுதான் – தமிழ்நாடு சட்டப்படி வடிவமைக்கப்பட்ட நாள் முதன்மை அன்று; அதற்குப் பெயர் சூட்டத் தீர்மானம் நிறைவேற்றி தில்லி எசமானர்களைக் கேட்டுக் கொண்ட நாளே, “தமிழ்நாடு நாள்“ என்னும் சூழ்ச்சி! 


கலைஞர் கொண்டு வந்த தைப் புத்தாண்டு அறிவிப்பை, பின்னர் வந்த அ.தி.மு.க. முதலைமைச்சர் செயலலிதா நீக்கிவிட்டு, ஆரியக்கதையையொட்டிய சித்திரைப் புத்தாண்டையே தமிழ்ப் புத்தாண்டு என மாற்றினார். அதை நீக்கிட, கடந்த இரண்டாண்டுகளாக எந்த முயற்சியும் மேற்கொள்ளாத “திராவிட மாடல்” ஆட்சி, நவம்பர் 1 - தமிழ்நாடு நாளை மாற்றுவதில் மட்டும் அவ்வளவு முனைப்பு காட்டுகிறது எனும்போதே, இவர்களின் ஆரிய ஆதரவு தமிழ் இன மறைப்பு சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள முடியும்! 


வரும் நவம்பர் 1 (2022) தமிழ்நாடு நாளை தாயக நாளாக மட்டுமின்றி, இந்தித் திணிப்பு எதிர்ப்பு நாளாகவும் கடைபிடிக்க நாம் தமிழர் கட்சி முடிவு செய்திருக்கிறது. மிகப்பெரிய இந்தி எதிர்ப்புப் பேரணி 1.11.2022 செவ்வாய் பிற்பகல் 3 மணிக்கு சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டரங்கிலிருந்து புறப்படுகிறது. தமிழ்த்தேசியப் பேரியக்கம், தமிழ்த்தேசியத் தன்னுரிமைக் கட்சி, தமிழர் நலம் பேரியக்கம், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம், மருது மக்கள் இயக்கம், வனவேங்கைகள் கட்சி ஆகியவை கலந்து கொள்கின்றன. தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் நான் பங்கேற்கிறேன். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்.


இப்பேரணியில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும், தமிழின உணர்வாளர்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும். 


தமிழ்த்தேசியப் பேரியக்க அமைப்புகள், நவம்பர் 1 முதல் 7ஆம் நாள் வரை, தமிழ்நாடு நாளை அங்கங்கே கடைபிடித்து மக்களிடையே தமிழ்த்தேசியக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். 


குறிப்பாகத் தமிழ்நாட்டை ஆக்கிரமிக்கும் இந்திக்காரர்களையும் – வெளி மாநிலத்தவர்களையும் வெளியேற்றுவது குறித்த தேவையை மக்களிடம் பேசுங்கள்! இந்தித் திணிப்பை முறியடிக்கக் களம் கண்டாக வேண்டும் என்ற செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்! 


தோழமையுள்ள,

பெ. மணியரசன்,

தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்


=================================

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

=================================

பேச: 9443918095, புலனம் : +91 98419 49462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

=================================No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.