ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்காக சார்க்கண்ட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட 860 பெண் தொழிலாளர்களை வெளியேற்றுக!

 டாடா எலக்ட்ரானிக்ஸ்  நிறுவனத்திற்காக சார்க்கண்ட்டிலிருந்து 

அழைத்து வரப்பட்ட 860 பெண் தொழிலாளர்களை வெளியேற்றுக! 

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியாளரிடம் தமிழ்த் தேசியப் பேரியக்கம் கோரிக்கை 

====================================================================-



கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம்  கூத்தனப்பள்ளி டாடா எலக்ட்ரானிக்  நிறுவனத்தில் வேலைக்காக தனி தொடர் வண்டியில் சார்க்கண்ட்டிலிருந்து 860 பெண் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர்


தமிழ்நாட்டில் படித்த இளையோர் ஏராளமானோர் வேலைக்காக காத்திருக்கும் போது அவர்களை புறக்கணித்து விட்டு வெளிமாநிலத்தவரை வேலைக்கு அழைத்து வந்தது தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்பத்தியது 


இந்த நிலையில் 7.10.2022 அன்று டாடா எலக்ட்ரானிக்ஸ் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகளை சந்தித்து நமது கண்டனத்தை  தமிழ்த் தேசியப் பேரியக்க தோழர்கள் பதிவுசெய்தனர்.


இப் பேச்சு வார்த்தையில் தமிழ்த்தேசியப் பேரியக்க  தலைமைச்செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையில், தோழர்கள் வனமூர்த்தி, ஜோக்கின், சுரேஷ் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர் 


பேச்சுவார்த்தையில் வெளிமாநிலத்திலிருந்து வேலைக்கு ஆட்கள் எடுக்கக் கூடாது, சார்க்கண்ட்டிலிருந்து எடுத்துவந்த பெண் தொழிலாளர்களை திருப்பி அனுப்ப வேண்டும் 21 வயது என்பதை தளர்த்த வேண்டும், பெண்கள் மட்டும் என்பதை தளர்த்தி ஆண்களும்  சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும், என்ற கோரிக்கைகள் நமது தரப்பில் வைக்கப்பட்டது. 


டாடா எலக்ட்ரானிக்ஸ் தரப்பில் தலைமை மனிதவள மேம்பாட்டு தலைமை அதிகாரி ரஞ்சன் சட்டோத்பத்தியாயா மற்றும்  மனிதவள மேம்பாட்டு மேலாளர்கள் ஜெயசங்கர் மற்றும் காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டார்கள். நாம் விளக்கி கூறிய பின் இனிமேல் வெளி மாநிலத்திலிருந்து ஆட்களை எடுக்க மாட்டோம் என்றும் சார்க்கண்ட்டிலிருந்து  அழைத்து வரப்பட்டவர்கள் மலைவாழ் மக்கள், பரிதாபத்துக்குரியவர்கள் ஆகவே அவர்களை திருப்பி அனுப்ப முடியாது என்றும் கூறினர்.


இந்தப்பின்னணியில்  இன்று (10 .10 .2022) கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து சார்க்கண்ட்டிலிருந்து வேலைக்கு எடுத்துவரப்பட்டவர்களை திருப்பி அனுப்ப வேண்டும், மண்ணின் மக்களுக்கே வேலை வழங்க டாட்டா நிறுவனத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 


அம்மனுவில் கூறப்பட்டியிருப்பதாவது


“கிருட்டிணகிரி மாவட்டம் ஓசூர் அருகிலுள்ள கெலமங்கலத்தில் செயல்பட்டு வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் தனியார் நிறுவனத்தில் பணியாற்ற சார்க்கண்ட் மாநிலத்திலிருந்து சிறப்புத் தொடர்வண்டி வழியே 860 இளம் பெண்கள் கொண்டு வரப்பட்டனர் என்ற செய்தி அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. 


மனித வளம் நிறைந்துள்ள தமிழ்நாட்டில், ஏராளமான ஆண்களும், பெண்களும் படித்துவிட்டு உரியப் படிப்புக்கேற்ற வேலையின்றி வாடும் அவல நிலையில், தமிழ்நாட்டிலேயே செயல்படும் இத்தனியார் நிறுவனம், தமிழர்களைப் புறக்கணித்துவிட்டு வெளி மாநிலங்களிலிருந்து வேலைக்கு இளம் பெண்களை சிறப்புத் தொடர்வண்டி வழியே அழைத்து வந்துள்ளது கண்டிக்கத்தக்கது.


வரலாற்றுக் காலம் தொட்டே தமிழ்நாட்டில் கல்வியறிவு மிகுந்திருந்த நிலையில், இங்கு சாதாரணமாகவே எல்லோர் வீட்டுப் பெண்களும் குறைந்தது ஒரு பட்டமாவது வாங்கியுள்ளனர். பன்னிரெண்டாம் வகுப்போடு பெண்களை படிப்பிலிருந்து வெளியேற்றும் வடமாநிலத்தவர்கள் போல், தமிழ்நாட்டில் நிலைமை இல்லை. எனவே, தமிழ்நாட்டில் எல்லோர் வீட்டிலும் ஒரு பட்டமாவது பெற்ற பெண்களே மிகுந்துள்ளனர்.


இந்நிலையில், தமிழ்நாட்டுப் பெண்களை வேலையில் அமர்த்துவதிலிருந்து தவிர்ப்பதற்காகவே - வெறும் பன்னிரெண்டாம் வகுப்புப் படித்த பெண்கள் மட்டுமே தங்களுக்கு வேண்டுமென டாடா நிறுவனத்தினர் ஆளெடு த்துள்ளனர். எனவேதான், தமிழ்நாட்டுப் பெண்களை பணியமர்த்தாமல்

படிப்பறிவு குறைவாக உள்ள சார்க்கண்ட் மாநிலித்திலிருந்து பெண்களை கொண்டு வந்துள்ளனர். இதனை தமிழ்நாடு அரசு கண்டும் காணாமலும் இருக்கக் கூடாது.


டாடா வெளிப்படையாகவே, 18 வயதிலிருந்து 21 வயது வரை உள்ள இளம்பெண்களே வேண்டும் என்றும், பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மேல் படித்திருக்கக் கூடாது என்றும் நிறுவனத்தினர் வேலைக்கு ஆளெடுப்பதே சட்டப்படி தவறானதாகும். இதற்கான அறிவியல் காரணம் எதனையும் டாடா நிறுவனம் முன்வைக்கவில்லை. குறைந்தபட்சம் 12ஆம் வகுப்புப் படித்திருப்பவர்கள் வேண்டுமெனவும், 18 வயதிற்கு மேலுள்ளவர்கள் வேண்டுமெனவும் தான் ஆளெடுத்திருக்க வேண்டும். எனவே, சட்டவிரோத அறிவிப்பின் வழியே வடமாநிலப் பெண்களை டாடா நிறுவனத்தினர் தமிழ்நாட்டில் பணியமர்த்தியதே தவறானதாகும். இவர்களை படிப்படியாக வெளியேற்ற வேண்டும்.


தற்போது ஆட்சியிலுள்ள தி.மு.க, தனது 2021 சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டு வேலைகள் தமிழருக்கே என சட்டம் கொண்டு வருவோம் என அறிவித்துள்ளது. தமிழ்நாட்டுப் பணிகளில் தமிழ் ஆண்களும், பெண்களுமே பணியமர்த்தப்பட வேண்டுமென கொள்கையளவில் ஏற்றுள்ளது. அதுவே, தமிழ் மக்களின் விருப்பமும் ஆகும்.


எனவே, தாங்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் வழியே, டாடா நிறுவனத்தினர் கூறும் குறைந்தபட்ச தகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டு இளம் பெண்களின் பட்டியலை கேட்டுப் பெற்று, அப்பட்டியலின்படி தமிழ்நாட்டுப் பெண்களையே டாடா நிறுவனத் தொழிற்சாலையில் பணியாற்றச் செய்ய வேண்டும் என்றும், இனிமேல் வெளி மாநிலத்தவரை பணியமர்த்த மாட்டோம் என டாடா நிறுவனத்தினரிடம், தாங்கள் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் பெற வேண்டும் என்றும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்”.


இந்நிகழ்வில் ஓசூர் தமிழ்த்தேசியப் பேரியக்க செயலாளர் தோழர் சோக்கிம், தோழர்கள் சுப்பிரமணி, ஹேம்நாத், ஸ்டாலின், தமிழக உழவர் முன்னணி தோழர்கள் சுரேசு, லெட்சுமணன், யூகேசு, சிவராசு, தங்கராசு, மணியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்


=================================

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

=================================

பேச: 9443918095, புலனம் : 9841949462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.