ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மீட்ட உரிமையா? போட்ட பிச்சையா?


 மீட்ட உரிமையா? போட்ட பிச்சையா?

===============================

ஐயா பெ. மணியரசன்,

தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

===============================


தி.மு.க. தலைவர்களும் அமைச்சர்களும் பல்வேறு பிரிவு மக்களை இழிவுபடுத்தும் வகையில் அவ்வப்போது பேசி வருகின்றனர். 


சில மாதங்களுக்கு முன் ஆர்.எஸ். பாரதி தலித்துகளுக்குத் திராவிட இயக்கம் போட்ட பிச்சைதான் உச்சநீதிமன்றத்தில் முதல் முதலாகத் தலித் வரதராசனை நீதிபதியாக்கியது என்றார்.


இப்பொழுது அமைச்சர் பொன்முடி, பட்டியல் வகுப்பு மக்களைக் குறிப்பிட்டு ஒரு காலத்தில் நீங்கள் எல்லாம் பெரிய சாதியினரின் தெருவில் நடக்க முடியாது. பெரியார் போட்ட பிச்சைதான் உங்களையெல்லாம் அந்தத் தெருக்களில் நடக்க வைத்திருக்கிறது என்றார்.


அடுத்து பெண்களைப் பார்த்து, நீங்களெல்லாம் பஸ்ஸில் போகிறீர்கள் அல்லவா, - இங்கிருந்து கோயம்பேடு, கோயம்பேட்டில் இருந்து இங்கே - எல்லாம் ஓசி, ஓசி; தி.மு.க. அரசின் சாதனை என்றார்.


மக்களை இழிவுபடுத்தும் தி.மு.க. மேல்மட்டங்களின் இப் பேச்சுளைக் கண்டித்து ஊடகங்களில் புயல் வீசுகிறது!


நாம் இங்கு இவற்றைச் சுட்டிக் காட்டி இப்போது எழுதுவதற்குக் காரணம், தி.மு.க.வினரின் இப்படிப்பட்ட ஆணவங்களை, அதிகாரத் திமிரைக் கண்டிப்பதற்காக மட்டுமன்று, நம் இளையோரிடம் இப்படிப்பட்ட தீப் பண்புகள் தொற்றிக் கொள்ளக் கூடாது என்று எச்சரிப்பதற்காகவும் ஆகும்.


திருவள்ளுவப் பெருந்தகை எச்சரித்தார், 


“யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு!” 


இன்னொன்றும் கூறி எச்சரித்தார்.


“எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து.”


அடக்கத்துடன் நடந்து கொள்வது எல்லார்க்கும் தேவை. அதேவேளை, செல்வத்திலும் அதிகாரத்திலும் மேல் நிலையில் உள்ளவர்க்கு அவ்வடக்கம் மிகமிகத் தேவை என்று வலியுறுத்தினார்.


பெரியாரைத் தங்கள் ஆசானாக, வழிகாட்டியாகக் கொண்டவர்களுக்குத் திருக்குறள் ஒரு பொருட்டல்ல,  பின்பற்றத்தக்க நூலும் அல்ல!


தி.மு.க.வினர் ஒரு காலத்தில் திருக்குறளை, திருவள்ளுவரைப் போற்றியவர்கள்தாம். ஆனால் இப்பொழுது அவர்களின் வழிகாட்டியாக அண்ணா கூட இல்லை. “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்று கூறி தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தம்பிகளுக்கு அறிவுரை வழங்கியவர் அண்ணா.


அண்ணாவின் கருத்துகள், நிலைபாடுகள் சிலவற்றில் நமக்கு மாறுபாடு இருந்தாலும், திறனாய்வுகள் இருந்தாலும், அவரின் அடக்கம், மாற்றுக் கட்சியினரையும், மக்களையும் மதிக்கும் பண்பு போன்றவை மிகவும் சிறப்பானவை. 


இப்பொழுது, தி.மு.க.வினர் அண்ணாவை ஓரங்கட்டிவிட்டனர். பெரியார், கருணாநிதி, மு.க. ஸ்டாலின் ஆகியோர்தாம் தி.மு.க. அமைச்சர்களுக்கும், அடுத்த நிலைத் தலைவர்களுக்கும் தலைவர்கள் - வழிகாட்டிகள். மு.க. ஸ்டாலினுக்குப் பெரியாரும் கருணாநிதியும்தான் நடைமுறைத் தலைவர்கள். ஒரு சம்பிரதாயத் தலைவர்தான் அண்ணா!


செயலலிதாவைப் பின்பற்றுகிறார் ஸ்டாலின்


மு.க. ஸ்டாலின் பின்பற்றும் தலைவர்களில் வெளியில் சொல்லப்படாத ஒரு தலைவர் இருக்கிறார். அவர்தான் செயலலிதா! 


தலைவர் என்ற முறையில் தி.மு.க.விற்குள்ளும் முதலமைச்சர் என்ற முறையில் தி.மு.க. அமைச்சரவைக்குள்ளும் சனநாயகம் நீக்கி எதேச்சாதிகாரமாய்ச் செயல்படும் “கலையை” செயலலிதாவிடம் கற்றுக் கொண்டு, அதை அப்படியே கடைபிடித்து வருகிறார் ஸ்டாலின்!


“எனது அரசு”, “நான் ஆணையிட்டேன்”, “எனது திட்டம்” என அரசின் எல்லாச் செயல்பாடுகளையும் தனது தனிப்பட்ட அதிகாரத்தால் நடப்பவை போல் சித்தரித்துக் கொண்டுள்ளார் ஸ்டாலின். அமைச்சர்களும் ஒவ்வொரு நேர் காணலிலும், அறிக்கையிலும் முதலமைச்சரின் ஆணைப்படி இதைச் செய்கிறோம், அதைச் செய்கிறோம் என்றுதான் கூறுகிறார்கள். அப்படிக் கூறாவிட்டால் அவர்களின் பதவி நிலைக்காது போலிருக்கிறது. 


அமைச்சரவைக் கூட்டத்திலும், உயர் அதிகாரிகள் கூட்டத்திலும் முதலமைச்சர் செயலலிதா தனக்கு மட்டும் கைவைத்த நாற்காலி போடச் சொல்வார். மற்றவர்கள் கை இல்லாத நாற்காலிகளில்தாம் உட்கார்ந்திருப்பர். அதே நடைமுறையை இப்போது ஸ்டாலின் பின்பற்றுகிறார். 


இந்திய அரசமைப்புச் சட்டப்படி, அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்பு (Collective Responsibility) உடையது. சமமானவர்களில் முதலாம் அமைச்சர் முதலமைச்சர் (Chief Minister); மற்ற அமைச்சர்களுக்கு முதலமைச்சர் தனித்தனி துறைகளைப் பிரித்துக் கொடுப்பது ஒரு நிர்வாக ஏற்பாடே! ஓர் அமைச்சர் கூறும் கருத்து, எடுக்கும் நிலைபாடு, போடும் ஆணை, ஒட்டுமொத்த அமைச்சரவைக்கும் உரியதாகும். 


நமக்குத் தெரிந்து காமராசரோ, பக்தவச்சலமோ, அண்ணாவோ, கலைஞர் கருணாநிதியோ, எம்ஜியாரோ “எனது அரசு” என்று பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கவில்லை. நமது அரசு, காங்கிரசு அரசு, தி.மு.க. அரசு, அதி.மு.க. அரசு என்றுதான் பேசினார்கள். “எனது அரசு” என்று ஆணவமாகப் பேசியவர் செயலலிதாதான்! அது மட்டுமல்ல, மற்ற அமைச்சர்கள் “அம்மாவின் அரசு” என்று சொல்லும்படி ஆக்கியவர் செயலலிதாதான்!


இப்போது மு.க. ஸ்டாலின் எனது அரசு என்கிறார். மற்ற அமைச்சர்கள் தளபதியார் அரசு என்கின்றனர்.


பெரிய எதேச்சாதிகாரியாக அஇஅதி.மு.க. விலும், அரசு நடவடிக்கைகளிலும் செயல்பட்ட அதே செயலலிதா “மக்களால் நான், மக்களுக்காக நான்” என்று ஒரு முழக்கத்தை உருவாக்கித் தம்மை அலங்கரித்துக் கொண்டு சனநாயக வேடம் போட்டார். செயலலிதாவின் எதேச்சாதிகாரத்தைப் பின்பற்றும் ஸ்டாலின், தம்மைப் பற்றிக் கூறுவதற்கு “உங்களில் ஒருவன்” என்ற வசனத்தை உருவாக்கிக் கொண்டார். 


செயலலிதா, ஸ்டாலின் போன்றவர்களின் எதேச்சாதிகாரம் இட்லர், முசோலினி நடத்திய முற்றதிகாரம் (சர்வாதிகாரம்) போன்றதன்று. புதுதில்லி ஆதிக்கத்தற்கு உட்பட்ட, குறைந்த அளவு கங்காணி அதிகாரம் கொண்ட மாநில அரசின் முதலமைச்சர்கள் இவர்கள். இவர்கள் மக்களிடம் வாக்கு வாங்கித் தங்கள் அதிகாரத்தை நீட்டித்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளவர்கள். எனவே, அவர்கள் மக்களிடம் அதிகமாக சனநாயக வேடம் போடுவார்கள்.


சிற்றதிகாரக் கேடர்கள்


“சிற்றதிகாரக் கேடர்கள்” என்ற சொற்கோவையை வள்ளலார் தமது பாடலில் பயன்படுத்தியுள்ளார். பெரிய அதிகாரம் இருக்காது; குறைவான அதிகாரம் இருக்கும்; பெரிய அதிகாரம் உள்ளவர்களுக்குக் கீழ் பணிபுரியும் சிறு அதிகாரம் இருக்கும். அப்படிப்பட்ட சிற்றதிகாரம் கொண்டவர்கள் மக்களிடம் கடுமையாகவும் கொடுமையாகவும் நடந்து கொள்வார்கள். மக்களையும் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களையும் தாக்குவார்கள். ஒரு புரிதலுக்காகப் பழைய காலத்தில் நிலவிய தேயிலைத் தோட்டக் கங்காணிகளின் சிற்றதிகாரத்தை எண்ணிப்பார்க்கலாம். 


அந்தக் கங்காணி மேலதிகாரிக்குக் கட்டுப்பட்டவர். அவரிடம் வளைந்து நெளிந்து பணிவாக நடந்து கொள்வார். ஆனால் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளிடம் ஏதாவது ஒரு குறை கண்டவிடத்து அவர்களைச் சாட்டையால் அடிப்பார். அவர் கையில் எப்போதும் சாட்டை இருக்கும். 


நம்முடைய காவல் நிலையங்களில் பெரிய அதிகாரிகளை விடக் கீழ்நிலையில் உள்ள அதிகாரிகளும், காவலர்களும் விசாரணைக்கு உள்ளானவர்களைக் கடுமையாகத் தாக்குவார்கள்.


அப்படித்தான் தி.மு.க., அதி.மு.க. அமைச்சர்கள் ஆளுநருக்கும் புதுதில்லிக்கும் கீழ்ப்பட்டவர்கள் - கட்டுப்பட்டவர்கள். அவர்களிடம் இவர்கள் பணிவாகவும் - சமயங்களில் அடிமைகளாகவும் நடந்து கொள்வார்கள். செயலலிதா, ஸ்டாலின் போன்ற முதலமைச்சர்களிடம் அடிமைபோல் நடந்து கொள்வார்கள். ஆனால் தங்கள் கட்சித் தொண்டர்களிடம், கீழ்நிலை அலுவலர்களிடம், மக்களிடம் எசமானர்கள் போல் அதிகாரம் செய்வார்கள். அத்து மீறிப் பேசுவார்கள். அப்படிப்பட்ட பேச்சுதான் அமைச்சர் பொன்முடி பேச்சு! பெரியசாதித் தெருவில் நீங்கள் எல்லாம் ஒரு காலத்தில் நுழைய முடியாது. பெரியார் போட்ட பிச்சையால் இப்போது நுழைகிறீர்கள் என்றார்.


“பெரியார் போட்ட பிச்சை” என்று சிற்றதிகாரத் திமிரோடு பேசி மக்களை இழிவு படுத்துவார்கள். 


“பிச்சை” என்றால் என்ன? பொருள் இல்லாதவர்கள், உணவில்லாதவர்கள், தானம் கேட்கும்போது, இரக்கம் கொண்டோர் இரப்போர்க்குத் தானம் அளிப்பதுதான் பிச்சை!


வர்ண - சாதி ஆதிக்கம் கொண்டோர் - பட்டியல் வகுப்பு மக்களின் உரிமையைப் பறித்தவர்கள் ஆவார்கள்! இயற்கையின் படைப்பில் மனிதர்கள் அனைவரும் சமம். அந்த இயற்கை நீதியை ஒரு பகுதி மக்களுக்கு மறுத்தவர்கள் - அவர்களை மேல் - கீழ் என்று ஒதுக்கியவர்கள் - அவர்களில் ஒரு சாராரைத் தீண்டத்தகாதவர்கள் என்று இழிவு படுத்தியவர்கள் - மனித நீதியைப் பறித்தவர்கள்; குற்றவாளிகள் ஆவார்கள்!


உரிமை பறிக்கப்பட்டவர்கள், உரிமை கோருகிறார்கள்; அதற்காகப் போராடுகிறார்கள். அவர்களின் உரிமைகளைப் பறித்த வர்ணங்களில், சாதிகளில் உள்ள நேர்மையாளர்கள், சமநீதி கோருவோர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குக் குரல் கொடுக்கிறார்கள்; போராடுகிறார்கள். இவர்களின் இச்செயல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இவர்கள் போட்ட பிச்சையா? இல்லை! பட்டியல் வகுப்பு மக்களுக்குரிய நீதி இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை! பறிக்கப்பட்ட உரிமைகளில் சிலவற்றை அவர்கள் மீட்டிருக்கிறார்கள். அவ்வளவே!


இந்தியா விடுதலை பெற்றதும், சனநாயக முறைத் தேர்தல் கொண்டு வந்ததும் காந்தி, நேரு, காமராசர் போட்ட பிச்சை என்றால் அமைச்சர் பொன்முடி ஏற்றுக் கொள்வாரா? 


மக்களிடம் வழிப்பறி செய்வதுபோல் பலவகைகளில் மறைமுகமாகவும் நேர்முகமாகவும் வரிவசூல் செய்கிறார்கள் ஆட்சியாளர்கள். அதிலிருந்துதான் பெண்களுக்குக் குறிப்பிட்ட நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லா பயணத்தை வழங்கிக் காட்சிகள் சோடிக்கிறார்கள். அது ஸ்டாலின் வீட்டுப் பணமா? பொன்முடி வீட்டுப் பணமா? நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களைவிடப் பல்லாயிரம் மடங்கு இலட்சம் மடங்கு அமைச்சர்கள் மக்களின் வரிப்பணத்தை அனுபவிக்கிறீர்கள். நீங்கள் இப்படிப் பேசலாமா?


மக்களில் ஊழல்வாதிகளை உருவாக்கும் உத்தி


அதிகாரத்தைப் பயன்படுத்தி நடத்தும் “ஊழல் வசூலில் புது நடைமுறையை உருவாக்கியவர் செயலலிதா. அதைக் கருணாநிதியும் அப்படியே பின்பற்றினார்.  


கையூட்டுப் பணத்தை ரொக்கமாகக் கையில் வாங்காமல், அரசாங்கத்திற்கு மறைமுகவரி வசூல் நடப்பதைப் போல் ஆக்கினார் செயலலிதா!


எடுத்துக்காட்டாக, பத்து கோடி ரூபாய்க்கு ஒரு வேலை ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டால், அதில் ஆளுங்கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்ட அமைச்சர், குறிப்பிட்ட வேலைக்குரிய துறை அமைச்சர், முதலமைச்சர் - அதே போல் அதிகாரிகள் வரிசை என்று அனைவருக்கும் குறிப்பிட்ட விகித விழுக்காடு வெட்டுத் தொகையை அந்த ஒப்பந்தக்காரர் அதிகாரிகள் வழியாகக் கொடுத்து விட வேண்டும்.


மணல் அள்ளுதல், மண் அள்ளுதல் உட்பட எல்லா வேலைகளுக்கும் வெட்டுத்தொகை வசூல் உண்டு. தனிநபர்கள் சொந்தமாகக் கட்டிடம் கட்டினால் சதுரஅடிக்கு இவ்வளவு ரூபாய் என்று வரிசைக் கிரமப்படி வெட்டுத்தொகை கொடுக்க வேண்டும். 


அங்கன்வாடி ஆயா வேலையிலிருந்து உயர் அதிகாரிகள், துணைவேந்தர்கள் வரை எல்லாப் பணியமர்த்தலுக்கும் வரையறுக்கப்பட்ட கையூட்டுத் தொகை உண்டு. 


முதல் முதலாக 1969-இல் முதலமைச்சாரான கலைஞர் கருணாநிதிக்கு இவ்வாறான மறைமுக ஊழல் வரிவசூல் முறை தெரியாமல் நேரடியாகத் தொகை வாங்கி அவரும் அவர் அமைச்சர்களும் ஊழல் வழக்குகளில் சிக்கிக் கொண்டார்கள். பின்னர் அவரும் செயலலிதா உருவாக்கிய அதே ஊழல் மாடலைக் கற்றுக் கொண்டார். அவர் மகன் ஸ்டாலினும் அதே மாடலைக் கடைபிடிக்கிறார்.  


இவர்கள் தங்கள் ஊழலை இயல்பான ஒன்று போல் காட்டும் உளவியல் உத்திகளைக் கையாள்வார்கள். இலவச எருமைமாடு வழங்குவது போன்ற பல இலவசங்களை வழங்குவார்கள். சில இலவசங்கள் எல்லாருக்கும் கிடைக்காது. குறிப்பிட்ட எண்ணிக்கை என்று அளவு வைத்திருப்பார்கள் அவ்வாறான திட்டங்களை அமைச்சர், மாவட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் போன்றோர் பரிந்துரைப்பவர்களுக்கே அதிகாரிகள் வழங்குவர். வாக்களிக்கக் கையூட்டுத் தரும் திட்டத்தையும் செயல்படுத்துகிறார்கள். அரசு வழங்கும் சில கட்டணமில்லாத் திட்டங்களைப் பெற ஆளுங்கட்சியினரின் தயவை மக்கள் நாடுகிறார்கள். வேறு பலவழிகளில் மக்களையும் ஊழல் பழக்கங்களுக்குப் பழக்கிவிடுகிறார்கள்.


இப்படிப்பட்ட மனநிலைக்கு உள்ளான மக்களிடம் - அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரின் ஊழல் செயல்கள், நடக்கக்கூடாத அநீதியாக, ஒழுக்கக் கேடாக, மனப்பதைப்பையும் மனவெறுப்பையும் ஏற்படுத்தாது. “இதெல்லாம் சாதாரணமப்பா” என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள்.


இவ்வளவையும் நாம் சொல்வதற்குக் காரணம், நாம் இதையெல்லாம் கண்டுபிடித்துவிட்டோம் என்று பெருமைப்படுவதற்காக அல்ல. “நோய்நாடி, நோய் முதல்நாடியுள்ளாம்”. அது தேவை. ஆனால் அது போதாது. “அது தணிக்கும் வாய் நாட வேண்டும்”.


தமிழ்த்தேசிய இலட்சியத்தை ஏந்துவோர், மேற்கண்ட ஊழல் அரசியலுக்கு மாற்றாக, எதேச்சாதிகாரத்-தலைவர் அரசியலுக்கு மாற்றாக, இலட்சிய அரசியலை - ஊழலற்ற - சனநாயக அரசியலை வெகுமக்களிடையே வளர்க்கத் தங்களை அணியப்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட இலட்சிய அரசியலுக்கான முன்மாதிரி வடிவங்களாகத் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்; பண்படுத்திக்  கொள்ள வேண்டும். அரசியல் என்றாலே தேர்தலில் போட்டியிடும் அரசியல்தான் என்று சுருக்கிக் கொள்ளக் கூடாது.  அரசின் இயக்கம் பற்றிய திட்டங்கள் செயல்பாடுகள் அனைத்தும் அரசியலே! தமிழ்த்தேச இறையாண்மை மீட்பு என்பதும் அரசியலே! இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தைத் தாம் எழுதுவதற்கு மூன்று காரணங்களைக் கூறுகிறார். அவற்றுள் முதல் காரணம் “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்பதாகும். “அரசு நடத்துவதில் தவறு செய்தால், குற்றம் செய்தால் அவர்களை அறம் தண்டிக்கும்” என்பது இதன் பொருள். 


உரிமை அரசியல் – இலட்சிய அரசியல் – எங்கிருந்தோ வராது. நாம் அப்படிப்பட்ட அமைப்பை உருவாக்க வேண்டும். அதற்கான இயக்கம்தான் தமிழ்த்தேசியப் பேரியக்கம்! 


இளம் ஆண்களும் பெண்களும் இவ்வாறான ஒழுக்கத்தை - நேர்மையை - சனநாயகத்தைத் தங்கள் வாழ்வியலாக்கிக் கொள்ள வேண்டும். வெகுமக்களில் எல்லோரையும் இவ்வாறு சரியான பண்புக்கு மாற்றிவிட வேண்டும் என்பது தேவைதான். அது இயலாமற் போகலாம். குறிப்பிட்ட அளவுக்கு வெகுமக்கள் இவ்வாறான நேர்மைக்காக - சனநாயத்திற்காக வெகுண்டெழுந்தால் ஊழல் மற்றும் எதேச்சாதிகார நோய்க்குத் தீர்வு கிடைக்கும். அக் குறிப்பிட்ட அளவு வெகு மக்களை அணியப்படுத்தும் களவடிவங்களாக, களச் செயல்பாட்டாளர்களாக இளையோர் முன்வர வேண்டும். அவர்களின் இயக்கமாகத் தமித்தேசியப் பேரியக்கம் ஆக வேண்டும். இவ்வழியில் இறையாண்மை இலட்சியத்திற்கும் வெற்றி கிடைக்கும். 


=================================

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

=================================

பேச: 9443918095, புலனம் : 9841949462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

=================================

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.