ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

இந்திக்காரர்களுக்கு அவரவர் மாநிலங்களில் வேலை உறுதி செய்து சட்டமியற்றிய பா.ச.க.வுக்கு, புதுச்சேரி தமிழர் உரிமை முழக்கம் மட்டும் கசக்கிறதா?

 இந்திக்காரர்களுக்கு அவரவர் மாநிலங்களில் வேலை உறுதி செய்து சட்டமியற்றிய பா.ச.க.வுக்கு,  புதுச்சேரி தமிழர் உரிமை முழக்கம் மட்டும் கசக்கிறதா?

==============================================

தமிழ்த்தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளர்

தோழர் இரா. வேல்சாமி அறிக்கை! 

==============================================



==========


புதுச்சேரி – காரைக்கால் தமிழர்கள், தமிழர் கடைகளிலேயே பொருட்கள் வாங்க வேண்டும், தமிழரிடமே தொழில் – வணிகம் செய்ய வேண்டும், மார்வாடி குசராத்திக் கடைகளைப் புறக்கணிக்க வேண்டுமென வலியுறுத்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கடந்த வாரம் புதுச்சேரி முழுக்க சுவரொட்டி ஒட்டியிருந்தோம். 


இந்நிலையில், பா.ச.க. இளைஞரணி செயலாளர் அஸ்வின் குமார் என்பவர், கட்சியில் தனக்கு முக்கியத்துவம் வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, இச்சுவரொட்டி தங்களை புண்படுத்துகிறது என்றும், பிரிவினைவாதம் என்றும், இச்சுவரொட்டியை வெளியிட்டவர்களை கைது செய்ய வேண்டுமென்றும் நாளேடுகளில் அறிக்கை வெளியிட்டுள்ளார். 


புதுச்சேரியும், காரைக்கால் ஆகியவை வரலாற்றுக் காலம் தொட்டே தமிழருக்கு உரிமையான தாய்நிலங்களாகும். இங்கு தமிழர்களே பெரும்பான்மையாக உள்ளனர். தமிழே ஆட்சி மொழியாக உள்ளது. 


இந்தியத் துணை கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழி தேசிய இனங்களுக்கு, அவரவர்க்குத் தனி மாநிலங்கள் அமைக்கப்பட்டுள்ளதன் அடிப்படை காரணம், அவர்களின் வரலாற்றுவழித் தாயகத்தில் அவர்களுடைய கல்வி, தொழில், வணிகம் ஆகியவை சிறந்து விளங்க வேண்டுமென்பதற்காகவே! உலகம் முழுவதும் மொழி இன அடிப்படையில் தான் தேசங்கள் அமைந்துள்ளன. அரசு நிர்வாகம் நடக்கிறது.


தங்களது தாயகத்தின் தனித்தன்மையைக் காக்க - தேசிய இனத்தின் வாழ்வாதார உரிமைகளான கல்வி, தொழில், வணிகம், வேலை வாய்ப்பு, பண்பாடு ஆகிய அனைத்தையும் தற்காத்துக் கொள்ள இந்த மக்களுக்கு அடிப்படை உரிமை உண்டு. அந்த அடிப்படையில் தான் மராட்டிய வேலை மராட்டியர்களுக்கு என்று 1968இல் மராட்டியத்தில் சட்டம் இயற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1984இல் கர்நாடகத்தில் சட்டம் இயற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து குஜராத்திலும் மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் படிப்படியாக சட்டம் இயற்றப்பட்டுள்ளன. இன்று பா.ச.க. ஆட்சி செய்து கொண்டுள்ள இராசசுதான் மாநிலத்திலும், சார்கண்ட் மாநிலத்திலும், மத்திய பிரதேசத்திலும் வேலை வாய்ப்பில் அந்தந்த மண்ணின் மக்களுக்கே உரிமை உண்டு என சட்டம் இயற்றி இருக்கிறார்கள்.

இப்படி வடமாநிலங்களில் – இந்திக்காரர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க சட்டம் இயற்றியுள்ள பா.ச.க., தமிழர்களின் தாயகமான புதுச்சேரி - காரைக்காலின் தொழில் - வணிகம் வேலை தமிழருக்கே என்ற முழக்கத்தை பிரிவினைவாதம் என்பதும், தேசத் துரோகம் என்பதும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது!


புதுச்சேரியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு அத்தனை மொத்த வணிகமும் - சில்லறை வணிகமும் தமிழர்களிடம்தான் இருந்தது. இன்று மொத்த வணிகம் அனைத்தும் பறிபோய்விட்டது. மார்வாடி, குசராத்திகள், மலையாளிகள், தெலுங்கர்கள் என அயல் இனத்தார் அவற்றைப் பறித்துக் கொண்டார்கள். சில்லறை வணிகத்திலும் நுழைந்து தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்குள் வலைப்பின்னல் ஏற்படுத்திக் கொண்டு, தமிழர்களின் கடைகளை புறக்கணித்து, சிதைத்து, கைப்பற்றி ஆக்கிரமிப்பு செய்து வருகிறார்கள். தமிழர்களின் தொழில் உரிமையை - வணிக உரிமையை நசுக்கியுள்ளனர். இவ்வாறு,  மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டதன் அடிப்படை நோக்கமே இவ்வெளி மாநிலத்தவரால் திட்டமிட்டு சிதைக்கப்படுகிறது. 


புதுச்சேரி – காரைக்கால் தமிழர்கள், இதனை உணர்ந்து கொண்டு, தமிழர்களின் கடைகளிலேயே பொருட்கள் வாங்க வேண்டும், வெளி மாநிலத்தவர்களின் கடைகளை – நிறுவனங்களைப் புறக்கணிக்க வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் அமைதியான முறையில் தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறது. 


தமிழர் கடைகளிலேயே தமிழர்கள் வணிகம் செய்ய வேண்டும் எனக் கோருவது, தற்காப்பு முழக்கமே தவிர – யாரையும் புண்படுத்துவதல்ல என்பது அனைவருக்கும் தெரியும். ஆக்கிரமிப்பாளர்கள் புண்படுவார்கள் என்பதற்காக மண்ணின் மக்களின் உரிமைக் கோரிக்கைகளை புறந்தள்ள முடியாது. 


புதுச்சேரி – காரைக்கால் தொழில் – வணிகம் – வேலை தமிழருக்கே என புதுச்சேரி அரசு சட்டமியற்றி, வெளியாரால் பறிக்கப்பட்டுள்ள இவ்வுரிமைகளை தமிழருக்கே வழங்கி, புதுச்சேரியின் தனித்தன்மையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான போராட்டத்தைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து முன்னெடுக்கும்! உரிமை உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் இதற்கு ஆதரவு தர வேண்டும் என்று இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன். 


=================================

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

=================================

பேச: 9443918095, புலனம் : +91 98419 49462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.