ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கேரள அரசின் எல்லை மறுஅளவீட்டு முயற்சி!தமிழ்நாட்டுப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் வஞ்சகத் திட்டம்! தமிழ்நாடு அரசு தூங்குகிறதா?

 கேரள அரசின் எல்லை மறுஅளவீட்டு முயற்சி!தமிழ்நாட்டுப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் வஞ்சகத் திட்டம்! தமிழ்நாடு அரசு தூங்குகிறதா?

=================================

தமிழத் தேசியப் பொதுச்செயலாளர்கி. வெங்கட்ராமன் கண்டனம்!

=================================

                                      

தமிழ்நாடு – கேரளம் ஆகிய இரு மாநிலங்களின் எல்லைக் கிராமங்களை கணிணி முறையில் ட்ரோன் மூலம் மறு அளவீடு செய்யும் திட்டத்தை கேரள அரசு 2022 நவம்பர் 1 முதல் செயல்படுத்தி வருகிறது. 


தமிழ்நாடு அரசோடு இணையாமல் கேரள மாநில அரசு இவ்வாறு தன்னிச்சையாக எல்லைப் பகுதிகளை அளவீடு செய்வது சட்டப் புறம்பானது ஆகும். 


ஏற்கெனவே, 1956ஆம் ஆண்டு மாநிலச்சீரமைப்பு நடந்தபோது, தமிழர் தாயகத்தின் பல பகுதிகள் அநீதியான முறையில் கேரளத்தோடு இணைக்கப்பட்டன. 


இதன் காரணமாக, முல்லைப் பெரியாறு, கண்ணகி கோயில் போன்ற சிக்கல்களில் தமிழ்நாடு சிக்க வைக்கப்பட்டுவிட்டது. 


ஆனால் அந்த எல்லையும் முழுமையாக அளவீடு செய்யப்பட்டு இறுதி செய்யப்படவில்லை. 


தமிழ்நாடு – கேரளா இடையேயுள்ள எல்லைப் பகுதியில் 230 கி.மீ தொலைவு மட்டுமே இரு மாநிலங்களின் கூட்டு அளவீடு (Joint Survey) முறையில் அளவிடப்பட்டுள்ளன. மீதமுள்ள 630 கி.மீ. எல்லைப் பகுதி அளவிடப்பட்டு இன்றுவரை இறுதி செய்யப்படவில்லை. கடந்த 56 ஆண்டுகளாக கேரளா அரசின் அடாவடிப் போக்கினால்தான் இந்தக் கூட்டு அளவீட்டுப் பணி நடைபெறவில்லை. 


இந்த தொளதொளப்பான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, கேரள வனத்துறை கேரளா ஃபாரஸ்ட்ரி என்பதைக் குறிக்கும் “KF ” என எழுத்துகள் பொறிக்கப்பட்ட எல்லைக் கற்களை தென்காசி, தேனி, குமரி, கோவை ஆகிய மாவட்டங்களுக்குள் திருட்டுத்தனமாக அவ்வப்போது நகர்த்தி வருகிறது. 


எடுத்துக்காட்டாக, கேரள – தமிழ்நாடு மாநிலங்கள் உருவாக்கப்பட்டதற்குப் பிறகு 1960 களில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையால் சீரமைக்கப்பட்ட செண்பகவல்லி தடுப்பணை – கால்வாய் எம்ஜிஆர் ஆட்சியில் கேரளாவின் எல்லைக்குள் இருப்பதாக தவறாக ஏற்கப்பட்டது. செண்பகவல்லி தடுப்பணையை தமிழ்நாடு பொதுப்பணித்துறை சீரமைத்தற்கும் அப்பகுதி தமிழ்நாட்டின் எல்லைக்குள் இருந்ததற்கும் இன்றைக்கும் கல்வெட்டுச் சான்றுகள் இருப்பதைப் பார்க்க முடியும். 


நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பகுதியில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவை ஆக்கிரமித்ததோடு, பெரும் எண்ணிக்கையில் மலையாளிகள் குடியேறிவிட்டனர். 


இவ்வாறு கேரள அரசும் மலையாளிகளும் தமிழ்நாட்டு எல்லைகளை அரித்து வருவதை தமிழ்நாடு அரசும் கண்டு கொள்வதில்லை. 


இந்நிலையில் கேரள அரசு இப்போது எல்லை நெடுகிலும் தன்னிச்சையாக மறுஅளவீடு செய்வது தமிழ்நாட்டு எல்லைக்குள் ஆக்கிரமிக்கும் உள்நோக்கத்தோடுதான் என ஐயப்பட இடமிருக்கிறது. 


இதில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய தமிழ்நாடு அரசு முதலில் கேரள அரசு தனது எல்லைக்குள்தான் அளவீடு செய்து கொள்கிறது என்று ஒருபக்கம் அறிவிப்பதும், என்ன நடக்கிறது எனப் பார்க்குமாறு தேனி மாவட்ட ஆட்சியருக்கு மறுபக்கம் அறிவுறுத்தல் வழங்கியிருப்பதும் முற்றிலும் பொறுப்பற்ற தன்மையாகும். 


தமிழ்நாடு அரசு இப்போதாவது விழித்துக் கொண்டு  கேரள அரசிடம் பேசி இந்த மறு அளவீட்டுத் திட்டத்ததை உடனடியாக நிறுத்த வேண்டும். இரு மாநில அரசுகளும் இணைந்து எல்லைப் பகுதியை அளவிட உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். 


=================================

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

=================================

பேச: 9443918095, புலனம் : +91 98419 49462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

=================================

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.