ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஜி-20 தலைவர் மோடி! பேனைப் பெருமாள் ஆக்குகிறது ஆரியம்!


 ஜி-20 தலைவர் மோடி!

பேனைப் பெருமாள் ஆக்குகிறது ஆரியம்!

பெ. மணியரசன்

தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம் 

=================================================================

எதிரும் புதிருமான இருபது நாடுகளைக் கொண்ட பன்னாட்டுக் கூட்டமைப்பு ஜி-20 (Group-20). சாரத்தில் இது பன்னாட்டுப் பெரு முதலாளிகளின் கூட்டமைப்பு. 1. அர்ச்சென்டினா, 2. ஆஸ்த்திரேலியா, 3. பிரேசில், 4. கனடா, 5. சீனா, 6 பிரான்சு, 7. செர்மனி, 8. இந்தியா. 9. இந்தோனேசியா, 10. இத்தாலி, 11. சப்பான், 12. மெக்சிகோ, 13. இரசியா, 14. சௌதி அரேபியா, 15. தென்னாப்பிரிக்கா, 16. தென்கொரியா, 17. துருக்கி, 18. பிரிட்டன், (UK), 19. அமெரிக்க ஐக்கிய நாடுகள் (US). 20. ஐரோப்பிய ஒன்றியம் (EU).


இக்கூட்டமைப்பு 1999 செப்டம்பர் 26-இல் நிறுவப்பட்டது. இதற்கு முன் இது ஜி-7 என்று ஏழு பெரும் பொருளியல் ஆதிக்க நாடுகளைக் கொண்டிருந்தது. 


இந்த ஜி-20 -இன் தலைவர் என்பவர் இந்த 19 நாடுகளில் ஒன்றின் ஆட்சித்தலைவர். இவர் சுழற்சி முறையில் – வரிசை முறையில் – வருபவர். இவரின் பதவிக்காலம் ஓராண்டுதான்.


 இந்தியா 2023-ஆம் ஆண்டிற்கான தலைவர். 2022–ஆம் ஆண்டிற்கான தலைவர் இந்தோனேசியா! 2024-இல் பிரேசில் தலைமை தாங்கும்.


இப்படியான ஒரு ஏற்பாட்டின்படி, இதன் ஓராண்டுத் தலைவர் ஆனவர் மோடி! இருபது நாடுகள் வாக்களித்து ஐந்தாண்டுகளுக்கான தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி-20-இன் தலைவர் போல் பீற்றிக் கொள்கிறார் மோடி!


இதற்காக மோடியைப் பாராட்டுவதற்கு அண்மையில் புதுதில்லியில் ஓர் அனைத்துக் கட்சி சிறப்புக் கூட்டத்தை இந்திய அரசு கூட்டியிருந்தது. இந்த ஓராண்டில் 200 இடங்களில் இதுபோல் சிறப்புப் பாராட்டுக் கூட்டங்கள் நடத்தப் போகிறதாம் மோடி அரசு! மக்களின் வரிப்பணம் பாசக மோடியின் விளம்பரத்திற்கு வீணடிக்கப்படுகிறது. 


பணக்கார நாடுகளின் கூட்டமைப்பாக 1973-இல் தொடங்கியது ஜி-5 கூட்டமைப்பு. இதில் அமெரிக்கா, பிரிட்டன், மேற்கு செர்மனி, பிரான்சு, சப்பான் ஆகிய நாடுகள் இருந்தன. முக்கியமாக சோவியத் ஒன்றியம், சீனா முதலிய கம்யூனிஸ்ட்டு நாடுகளுக்கு எதிராக - சந்தைப் பொருளாதார வேட்டைக்காக - இது தொடங்கப்பட்டது. இதுவே ஜி-7 ஆகி, ஜி-8 ஆகி இப்போது ஜி-20 ஆகியிருக்கிறது. 


இப்போது இந்த ஜி-20 இல் உள்ள இரசியா - அமெரிக்காவின் நேட்டோ கூட்டணியை எதிர்த்து உக்ரைனில் கொடிய அழிப்புப் போர் நடத்திக் கொண்டிருக்கிறது. இரசியாவுக்கு எதிரான பொருளியல் தடையை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, செர்மன் போன்ற ஜி-20 உறுப்பு நாடுகள் கடைபிடிக்கின்றன. இரசியாவுக்கும் அமெரிக்க நேட்டோ நாடுகளுக்கும் இடையே அணுப்போர் வருமோ என்ற பேரச்சம் நிலவுகிறது. சீனாவுக்கும் மேற்படி நாடுகளுக்கும் இடையே பொருளியல் வேட்டை, அரசியல் ஆதிக்கம் ஆகியவற்றில் சண்டை நடந்து கொண்டுள்ளது. இந்தியாவும் சீனாவும் எல்லையில் எதிர்எதிரே போர்க்கோலம் பூண்டு நிற்கின்றன. சீனாவுக்கும் அமெரிக்கா, பிரிட்டன், செர்மனி, பிரான்சு, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் இடையே உலகப் பொருளியல் வேட்டையில் கடும் போட்டி!


இவை அனைத்தும் ஜி-20 இல் உறுப்பு நாடுகள்! இந்த மாய்மாலக் கூட்டணிக்கு ஆரிய மாயைத் தலைவர் மோடி ஓராண்டுக்குத் தலைவர்! விடிஞ்சுடும்: வழக்கம் போல், ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாள் ஆக்கிக் கொண்டிருக்கிறது ஆரியம்! 


================================

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

=================================

பேச: 9443918095, புலனம் : +91 98419 49462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.