ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சென்னையில் ஐ.ஐ.டி.அக்கரகாரம்! திராவிடத்தின் தீரம் எங்கே?


 சென்னையில் ஐ.ஐ.டி.அக்கரகாரம்!

திராவிடத்தின் தீரம் எங்கே? 


பெ.மணியரசன் 

தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்

=================================================================


“சாதி அடிப்படையில் வழங்கப்படும் இட ஒதுக்கீடுகள்தாம், தமிழ்நாட்டில் சாதிப்பிளவுகளை அதிகப்படுத்தியுள்ளன; சாதிச் சண்டைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன; சாதிகளுக்குப் புத்துயிர் ஊட்டி வருகின்றன” என்று ஆரியத்துவா மேட்டுக்குடி அறிவாளிகள் பேசியும் எழுதியும் வருகின்றனர். இக் குற்றச் சாட்டை உண்மை என்று நம்பும் ஏமாளிகள் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் வகுப்புகளில் உள்ளனர். 


தமிழ்ச் சமுதாயத்தில் இக்காலத்தில் சாதி உணர்ச்சி தீவிரப்பட்டதற்கும், சாதி அமைப்புகள், சாதிக் கட்சிகள் வளர்ந்ததற்கும் முதன்மையான காரணம் திமுக, அதிமுக கட்சிகளின் சாதி வாக்கு வங்கி அரசியல்; இரண்டாவதாக இக்கழகங்களால் புத்தாக்கம் செய்யப்பட்ட சாதி அடையாளங்களைத் தீவிரப்படுத்திப் பரப்பிக் கொள்ள வாய்ப்பை சமூகமயமாகிப்போன தகவல் தொழில் நுட்பம் வழங்குவது!



ஐஐடி போன்ற உயர் தொழில் நுட்பக் கல்லூரிகள், ஒன்றிய அரசின் பல்கலைக் கழகங்கள், உயர்நிலை மருத்துவக் கல்லூரிகள்-மருத்துவ மனைகள் போன்றவற்றில் மாணவர் சேர்க்கை, பேராசிரியர் சேர்க்கை, மருத்துவர் சேர்க்கை முதலியவற்றில் இட ஒதுக்கீடு கிடையாது. அதே போல் உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் நீதிபதிகள் பணி அமர்த்தத்திலும் வகுப்புவாரி இட ஒதுக்கீடு இல்லை. எனவே, இவையெல்லாம் 21-ஆம் நூற்றாண்டின் அக்ரகாரங்களாகப் புத்தெழுச்சி பெற்றுள்ளன. இவற்றில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் வகுப்பார், பழங்குடிகள் ஆகியோருக்கு சட்டப்படி உள்ள இடஒதுக்கீடுகள் வழங்கப்படவில்லை. 


நம்மைப் போன்றவர்கள் இப்போது நிலவுகின்ற அக்கரகார ஆதிக்கத்தைத் திறனாய்வு செய்யும் போதெல்லாம், அவர்கள் நம்மைப் பிராமண துவேஷிகள், சாதி வெறியர்கள் என்று கண்டனம் செய்வார்கள். இதோ “இந்து தமிழ்” நாளேடு அக்கரகார ஆதிக்கத்தைத் திறனாய்வு செய்து 12.12.2022 இதழில் ஆசிரிய உரை எழுதியுள்ளது. 


சென்னை ஐ.ஐ.டி. யில் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் உதவிப் பேராசிரியர்கள் ஆகியோரின் மொத்தப் பணியிடங்கள் 596. இதில் இதர  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 62 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இந்திய அரசு பிற்படுத்தப்பட்டோர்க்கு 27 விடுக்காடு இட ஒதுக்கீடு சட்டம் இயற்றியுள்ளது. இது மிகவும் குறைவு என்பது ஒரு செய்தி. ஆனால் 27 விழுக்காடாவது கொடுக்கப்பட்டிருக்கிறதா? இல்லை. வெறும் 62 பேர் (10 விழுக்காடு) மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பணியில் உள்ளனர். இருபத்தேழு விழுக்காடு கொடுத்திருந்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 160 பேர் பணியில் இருந்திருப்பார்கள். 


இந்திய அரசுப் பணிகளில் பட்டியல் வகுப்பார்க்கு 15 விழுக்காடு. தமிழ்நாட்டில் உள்ள சட்டப்படி, மக்கள்தொகை விகிதப்படி 18 விழுக்காடு கொடுக்க வேண்டும். இப்போதுள்ள 15 விழுக்காட்டுப்படி 89 பேர் வேலையில் இருக்க வேண்டும். ஆனால், லேலையில் உள்ள பட்டியல் வகுப்பார் வெறும் 16 பேர் மட்டுமே! அதேபோல்  பழங்குடியினர்க்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்படி 45 பேர் பணியில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இப்போது மொத்தமுள்ள 596 பேரில் 3 பேர் மட்டுமே பழங்குடியினர்.  


இந்த விவரத்தை வெளியிட்டு “இந்திய அரசமைப்பு வழங்கியுள்ள இட ஒதுக்கீட்டை நிராகரிப்பது இயற்கை நீதிக்கு எதிரானது. அதை உணர்ந்து ஐ.ஐ.டி. கள் செயல்பட வேண்டும். இந்த விஷயத்தில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு” என்று ஆசிரியவுரையை முடித்துள்ளது “இந்து தமிழ்” நாளேடு!


இந்த அளவுக்கு “இந்து தமிழ்” நாளேடு ஆசிரியவுரை தீட்டியுள்ளது பாராட்டுக்குரியது. மொத்தமுள்ள பேராசிரியர்கள் 596 பேரில் 515 பேர் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்கிறது இந்து தமிழ் நாளேடு. இதில் 90 விழுக்காடு பிராமணர்களாகத்தானே இருப்பர்! அவர்களும் பலமாநிலங்களைச் சேர்நை்தவர்கள். பட்டியல், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைத்தது 596-இல் 81 இடங்களே.


“இந்த விஷயத்தில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு” என்று இந்து தமிழ் கூறுகிறது. இந்த “விஷத்”தை, அதாவது சமூக நீதி மறுப்பைத் திணித்ததே மத்திய பாசக அரசு தான் என்று வரலாற்று உண்மையை இன்றைய இளையோர் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறான அக்கரகார ஆக்கிரமிப்பைத் தடுக்கும் கொள்கை காங்கிரசுக்கும் இல்லை. இந்தச் சமூக அநீதியைத் தட்டிக் கேட்கும் அக்கறையோ, தடுத்து நிறுத்தும் ஆற்றலோ திராவிட மாடலுக்கு இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. 


“உலகத்துக்கே சமூக நீதியைக் கத்துக் கொடுத்த வாத்தியார்கள் நாங்கள்தான்” என்று சவடால் அடிக்க மட்டுமே ஸ்டாலினுக்குத் தெரிகிறது. 


தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை, ‘இனநீதி இல்லாத போது அங்கு சமூக நீதியும் இருக்காது; வர்க்க நீதியும் இருக்காது. ஆதிக்க இனத்தின் அநீதி மட்டுமே கோலோச்சும்’ என்பதே. தமிழ்த்தேசியம் முன்வைக்கும் தமிழ்த்தேச இறையாண்மை மீட்பின் பிரிக்க முடியாத கூறுகள் சமூக நீதியும், வர்க்க நீதியும் ஆகும். 


===========================================================

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

============================

பேச: 9443918095, புலனம் : +91 98419 49462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.