ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பேரெழுச்சியுடன் நடைபெற்ற “வள்ளலார் 200” - பெருவிழா!
 பேரெழுச்சியுடன் நடைபெற்ற “வள்ளலார் 200” - பெருவிழா!

========================

 

“தமிழர் மறுமலர்ச்சி மூலவர்” திருவருட்பிரகாச வள்ளலார் வருவுற்ற 200ஆம் ஆண்டைக் கொண்டாடும் வகையில் “வள்ளலார் பணியகம்” சார்பில், கடலூர் மாவட்டம் - காட்டுமன்னார்கோயில் நகரத்தில் “வள்ளலார் - 200” பெருவிழா பேரெழுச்சியுடன் நடைபெற்றது.

 

காட்டுமன்னார்கோயில் ஞான விநாயகர் தெருவிலுள்ள லலித திருமண மண்டபத்தில் 18.02.2023 சனிக்கிழமை காலை 6 மணியளவில் தொடங்கி நாள் முழுவதும் அருட்சோதிப் பேரணி, கோலாட்டம், கலை நிகழ்ச்சிகள், இலவச மரபு மருத்துவ முகாம், நூல் வெளியீடு, கருத்தரங்கம், இசையரங்கம், மல்லர் கம்பம், மாணவர் பரிசளிப்பு, ஆவணப்படம் திரையிடல், மாணவர் அரங்கம், அடுப்பில்லா சமையல் செயல் விளக்கம் என பன்முகத்தன்மையோடும், பேரெழுச்சியோடும் இந்நிகழ்வு நடைபெற்றது.

 

அருட்சோதிப் பேரணி

காலை 6 மணியளவில், காட்டுமன்னார்கோயில் - தயவுத்திரு. அருட்பா சிவ. நாகராசன் (வள்ளலார் பணியகம், சிதம்பரம்), திருவிளக்கேற்றி பெருவிழாவைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, காட்டுமன்னார்கோயில் வள்ளலார் வழிபாட்டு மன்றக் குழுவினர் அகவல் ஓதுதலை சிறப்புற நடத்தினர்.

 

காலை 7.30 மணியளவில், காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரிலுள்ள வள்ளலார் வழிபாட்டு மன்றத்திலிருந்து அருட்சோதிப் பேரணி தொடங்கியது. வள்ளலார் பணியக ஒருங்கிணைப்பாளர் தயவுத்திரு. க. இராசமாணிக்கம் அவர்கள் பேரணிக்குத் தலைமை தாங்கி உரையாற்றினார். தயவுத்திரு. வடலூர் ஆனந்தன் (சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், சன்னாநல்லூர்) அவர்கள் பேரணியைத் தொடங்கி வைத்தார். தஞ்சை மாவட்ட சன்மார்க்க சங்கக் கொள்கைப் பரப்புச் செயலாளர் தயவுத்திரு. வள்ளலார் பாலு,  தயவுத்திரு. சிவசிவ. ரங்கநாதன் (வள்ளலார் வழிபாட்டு மன்றம்) அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

 

கோலாட்டம்

பேரணியின் தொடக்கத்தில், ஆசான் இரா. எல்லாளன் தலைமையிலான சிதம்பரம் - தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளியின் மாணவர்கள் கோலாட்டம் நிகழ்த்தினர். பேரணியின் முன்பே கோலாட்டம் நடைபெற, அருட்சோதிப் பேரணி காட்டுமன்னார்கோயிலின் முதன்மை வீதிகளின் வழியாக, விழா நடைபெறும் லலித திருமண மண்டபத்தை அடைந்தது.

 

சன்மார்க்க கொடி கட்டுதல்

மண்டபத்தின் வாயில் அருகே, வள்ளலார் பணியகம் தஞ்சை ஒருங்கிணைப்பாளர் தயவுத்திரு. சுந்தர்ராசன் அவர்கள் சன்மார்க்கக் கொடி கட்டினார். வள்ளலார் அன்பர்களின் அருட்பெருஞ்சோதி மகா மந்திரம் விண்ணதிர ஒலித்தது.

 

மல்லர் கம்பம்

இதனைத் தொடர்ந்து, காலை 9.30 மணியளவில், சிதம்பரம் - தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளியின் மாணவர்கள் தமிழர்களின் வீரக்கலையான மல்லர் கம்பத்தை நிகழ்த்திக் காட்டியது பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.

 

“வள்ளலார் 200” மலர் மற்றும் நூல் வெளியீடு

இதனையடுத்து, “வள்ளலார் 200” பெருவிழாவையொட்டி உருவாக்கப்பட்டுள்ள விழா மலரை திரு. நா. வைகறை (தமிழ்க் கலை இலக்கியப் பேரவை) வெளியிட,   தயவுத்திரு. இராமு. தமிழ்ச்செல்வி (வள்ளலார் மன்றம், தெற்கு விருத்தாங்கன்) ஆகியோர் மலரை பெற்றுக் கொண்டனர். தயவுத்திரு. லெ. கோதண்டபாணி (தெய்வத் தமிழ்ப் பேரவை, சிதம்பரம்) முன்னிலை வகித்தார்.

 

இதனைத் தொடர்ந்து, வள்ளலார் ஆய்வாளர் முனைவர் வே. சுப்ரமணிய சிவா எழுதியுள்ள “அறிவியலாளர் வள்ளலார்” நூலின் அறிமுகம் நடைபெற்றது. தயவுத்திரு. தனலட்சுமி அம்மா (அருள்சோதி அன்ன ஆலயம், சென்னை) அவர்கள் நூலைப் பெற்றுக் கொண்டு உரையாற்றினார்.  தயவுத்திரு. இரா. ராஜ்மோகன் (சமரச சுத்த சன்மார்க்க சங்கம், உத்தமசோழகன்) ஆகியோர் நூல்படி பெற்றனர்.

 

வள்ளலார் வழி இலவச மருத்துவ முகாம்

வள்ளலார் பெருவிழா திடலில், காலை 9.30 மணியிலிருந்து 12.30 மணி வரை, வள்ளலார் வழி இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. தஞ்சை - அகத்தியர் மூலிகை மருத்துவச்சாலையின் சித்த மருத்துவர் தயவுத்திரு. தட்சிணாமூர்த்தி, மரபு மருத்துவர் ஜெ. பாலமுருகன் (கடலூர் - நியூரோ தெரப்பி, அக்குபஞ்சர், வர்மம்), மரபு மருத்துவர் பெ.த. செந்தில்குமார் (நியூரோ தெரப்பி, சிதம்பரம்) ஆகியோர் இம்மருத்துவ முகாமை வழிநடத்தினர்.

 

மருத்துவ முகாமை, காட்டுமன்னார்கோயில் வர்த்தகர் சங்கத் தலைவர் தயவுத்திரு. சீனிவாச நாராயணன் அவர்கள் தொடங்கி வைத்து வாழ்த்துரையாற்றினார். காட்டுமன்னார்கோயில் ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் ரோட். தயவுத்திரு. பாஸ்கர் அவர்கள் முன்னிலை வகித்தார். மருத்துவக் குழுவினரைப் பாராட்டி சிறப்பு செய்யப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் இதில் பங்கேற்று சிகிச்சை பெற்றதுடன் பலர் உடனுக்குடன் தீர்வுகளைப் பெற்றனர்.

 

ஆவணப்படம் திரையிடல்

இதனைத் தொடர்ந்து, சென்னை ஊடகவியலாளரும், திரை இயக்குநருமான தயவுத்திரு. தமிழ் சிலம்பரசன் அவர்கள் இயக்கி வெளியான “வள்ளலார் புரட்சி” ஆவணப்படம் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. முன்னதாக, இப்படம் குறித்து, இயக்குநர் தமிழ் சிலம்பரசன் அறிமுக உரையாற்றினார்.   

 

அடுப்பில்லா சமையல்

இதனையடுத்து, தயவுத்திரு. பொற்கொடி சித்ரா அவர்கள், அடுப்பில்லா சமையல் செயல்முறைகளை செய்துக் காட்டினார். தயவுத்திரு. எல்.இ. சோதிமணி அவர்கள் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

 

கலையரங்கம்

பிற்பகல் தயவுத்திரு. சாந்தியம்மா பாலசுப்ரமணியன் அவர்கள் (திருமானூர்) அருட்பா பாடல்கள் பாடி கலையரங்கத்தை தொடங்கி வைத்தார். காட்டுமன்னார்கோயில் கோகிலாம்பாள் சிலம்பப் பயிற்சிப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. மாணவர்களின் சிலம்பமும், சுருள் வீச்சும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

 

மதியம் 1.30 மணியளவில், “வள்ளலாரின் அறிவியல்” என்ற தலைப்பில், தயவுத்திரு. முனைவர் வே. சுப்பிரமணிய சிவா அவர்கள் கருத்துப்படங்களுடன் கருத்துரையாற்றினார்.

 

மாணவர் அரங்கம்

மதியம் 2 மணியளவில், “வள்ளலார் 200” பெருவிழாவையொட்டி பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியும், மாணவர்களின் உரையும் நடைபெற்றது. தயவுத்திரு. முத்தையா (புதுக்கோட்டை சன்மார்க்க சங்க மாவட்ட செயலாளர்), தயவுத்திரு. ப. வெங்கடாஜலபதி (முதுநிலை தலைமையாசிரியர் (ஒய்வு), காட்டுமன்னார்கோயில்) ஆகியோர் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர். முன்னதாக, மாணவர்களின் வள்ளலார் நெறி உறுதிமொழியேற்பு நடைபெற்றது. வள்ளலார் வேடமணிந்த மாணவர் குருபாலன் உறுதிமொழியை வாசிக்க, அதை மற்ற மாணவர்களும், மக்களும் எதிரொலித்தனர்.  

 

கவியரங்கம்

இதனையடுத்து மதியம் 3 மணியளவில், திரைப்படப் பாடலாசிரியர் - பாவலர் கவிபாஸ்கர், பாவலர் முழுநிலவன், தோழர் ஆ. குபேரன் ஆகியோர் நிகழ்த்திய கவியரங்கம் எழுச்சியோடு நடைபெற்றது. கவிஞர் கவிபாஸ்கர் அவர்கள், வள்ளலாரின் உருவ வழிபாடு நிராகரிப்பை சொல்லி, ஒளி வழிபாட்டை வலியுறுத்திப் பாடும்போது, கலைஞர் கருணாநிதிக்கு கடலுக்குள் பேனா சிலை வைப்பதை எதிர்த்து விமர்சனமாக கவிதை வழங்கினார். அதை வீதியில் கேட்டுக் கொண்டு சென்ற திமுக பொறுப்பாளர் ஒருவர் வேகமாக மண்டபத்திற்குள் ஓடி வந்து, அத்துமீறி மேடையேறி கூச்சலிட்டார். “இனிமேல் இங்கு பேசக் கூடாது, கூட்டம் நடத்தக்கூடாது” என்று அராஜகமாகத் தடுத்து அடாவடி புரிந்தார். மற்றவர்கள் அவரை தடுக்கவே தள்ளுமுள்ளும் சலசலப்பும் ஏற்பட்டது. அதன்பின்னர், மற்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றன.

 

இன்னிசை அரங்கம்

மதியம் 3.45 மணியளவில், தயவுத்திரு. மழையூர் சதாசிவம் அவர்களின் குழுவினரின் திருவருட்பா இன்னிசை அரங்கம் இனிதே நடைபெற்றது. குழுவினருக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் துண்டு அணிவித்து சிறப்பு செய்தார்.

 

விருது வழங்கல்

மாலை 5 மணியளவில், வள்ளலார் நெறியில் தொண்டாற்றி வரும் - தயவுத்திரு. சண்முகம் (சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், நல்லூர்), தயவுத்திரு. பெ. தனசிங்கு (சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், உத்தமசோழகன்), தயவுத்திரு. கு. இராசதுரை (சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை, காட்டுமன்னார்கோயில்), தயவுத்திரு. சபை ராஜா (சிவசிவ குடில், காட்டுமன்னார்கோயில்) தயவுத்திரு கணேசன் ஆகியோர்க்கு “வள்ளலார் திருத்தொண்டர் விருது” வழங்கி சிறப்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு, முருகன்குடி - வேளாண் பொறியாளர் (ஓய்வு) தயவுத்திரு. தங்க. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமை தாங்கினார். தயவுத்திரு. கீழடி வாணன் அவர்கள் முன்னிலை வகித்தார். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் விருதுகளை முன்னின்று வழங்கினார்.

 

கருத்தரங்கம்

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் “காவி முதல் வெள்ளை வரை” என்ற தலைப்பில், ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட சன்மார்க்க சங்கக் கூட்டமைப்பின் தலைவர் தயவுத்திரு. “செந்நெறி” பா.தண்டபாணி அவர்களும், 'சன்மார்க்க பூம்பொழில்' தயவுத்திரு. சுப்ரமணியன் அவர்கள் “வள்ளலாரின் உயிரிரக்க மெய்யியல்” என்ற தலைப்பிலும், மகளிர் ஆயம் துணைத் தலைவர் தயவுத்திரு. க. செம்மலர் அவர்கள், “வள்ளலாரும் வேதாத்திரியாரும்” என்ற தலைப்பிலும் கருத்துரையாற்றினர். காட்டுமன்னார்கோயில் ஆசிரியர் தயவுத்திரு. புவனேசுவரி சேக்கிழார் முன்னிலை வகித்து உரையாற்றினார்.

 

நிறைவரங்கம்

“வள்ளலார் 200” - பெருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெற்ற நிறைவரங்கிற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தயவுத்திரு. கி. வெங்கட்ராமன் அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றினார்.  தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் தயவுத்திரு. பெ. மணியரசன் அவர்கள், பெருவிழாப் பேருரை நிகழ்த்தினார். நிறைவில், தயவுத்திரு. சிவ. அருளமுதன் (வள்ளலார் பணியகம்) நன்றியுரையாற்றினார்.

 

நிகழ்வில், தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த வள்ளலார் தொண்டர்களும், தமிழர் ஆன்மிக ஆர்வலர்களும் பெருந்திரளாகப் பங்கேற்றனர். தெய்வத் தமிழ்ப் பேரவையின் முகநூல் பக்கத்திலும், கண்ணோட்டம் மற்றும் ழகரம்360 வலையொளிகளிலும் முழுநாள் நிகழ்வுகளும் நேரலை செய்யப்பட்டன.


மேலும் படங்கள் காண

https://www.facebook.com/story.php?story_fbid=pfbid0299SJ1R9CwxYpHc1nDsf6wqPow6vvsxgBKMuaSEXPRzj5zCuiABaz7pEPBuCXFSYtl&id=100075829939648&mibextid=Nif5oz

 

================================

தெய்வத் தமிழ்ப் பேரவை

================================

முகநூல்: www.fb.com/theivathamizh

சுட்டுரை: www.twitter.com/TheivigaThamizh

பேச: 9841949462, 9443918095

================================

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.