ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பெருந்திரள் ஆர்ப்பாட்டம்! இயற்கை சார்ந்த மரபு வேளாண் உழவர், மரபு மேய்சல்காரர், சித்தமருத்துவர் ஆகியோர் பாதுப்புக் கொள்கை கோரி!

 


இயற்கை சார்ந்த மரபு வேளாண் உழவர்கள்,

மரபு மேய்ச்சல்காரர்கள்,

சித்த மருத்துவர்கள் பாதுகாப்புக் கொள்கை

 

 

 “நவீனம், “வளர்ச்சி என்ற பெயரால் நாட்டின் மீது திணிக்கப்பட்ட பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி போன்றவை உழவர்களைக் கடனாளியாக்கியது; மரபான கால்நடை வளர்ப்போரை வறுமையில் தள்ளியது; வேளாண்மையை விட்டே உழவர்கள் வெளியேறுவதும் கால்நடை வளர்ப்பிலிருந்தே இளையோர் வெளியேறுவதும் விரைவுபட்டு வருகிறது. நீர், நிலம், காற்று நஞ்சானது. உண்ணும் உணவும் அருந்தும் பாலும் நஞ்சு கலந்ததாக மாறியது.

 

வீரிய வித்துகள் என்ற பெயரால் உழவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒட்டுவிதைகள் வெள்ளத்தையோ, வறட்சியையோ, நோய்களையோ தாங்க முடியாத நோஞ்சான் பயிர்களையே உருவாக்கின.

 

அதிக பால்தரும் நவீனவகை மாடுகள் என்ற பெயரால் மக்கள் மீது திணிக்கப்பட்ட வெளிநாட்டு மாடுகள் தமிழ்நாட்டின் சுற்றுச் சூழலை, வெப்பநிலையைத் தாங்க முடியாத மாடுகளாக இருந்ததால் அவற்றைப் பாதுகாப்பதற்கும் அவற்றுக்குத் தீவனம் போடுவதற்கும் பலமடங்கு செலவாகியது. அவை நோய்த் தொற்றைத் தாங்க முடியாத வகையினங்களாக இருப்பதால் கால்நடை வளர்ப்போ பேரிழப்பைச் சந்திக்க வேண்டியதாயிற்று.

 

உழவர்களும் கால்நடை வளர்ப்போரும் கடனாளியானதுதான் கண்ட பலன்!

 

வேளாண்மையோடு ஒன்றிணைந்திருந்த கால்நடை மேய்ச்சல் தொழில் வேளாண்மையிலிருந்து பிரிக்கப்பட்டுவிட்டதால் ஆடுமாடுமேய்ச்சல் தொழில் நலிந்து போனது.

 

இவ்வாறு திணிக்கப்பட்ட வளர்ச்சிவாத பொருளியல் புவி வெப்பமாதலுக்கு வழிவகுத்தது. பல இயற்கைப் பேரிடர்களையும் உருவாக்கியது. பெருந்தொகையான மக்களையும் கால்நடைகளையும் பலிகொள்ளும் பெருந்தொற்று நோய்களையும் விளைவிக்கிறது.

 

இன்னொரு புறம், நவீனம் என்ற பெயரால் வரம்பின்றி புகுத்தப்பட்ட மேற்கத்திய அலோபதி மருத்துவம் ஒற்றை மருத்துவமாக வலியுறுத்தப்படுகிறது. மனித மருத்துவம், கால்நடை மருத்துவம் ஆகியவற்றில் பெருங்குழும தனியார் ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது.

 

இந்த மண்ணிற்கும் மக்களுக்கும் அவர்களது உடல்நிலை வாழ்முறை ஆகியவற்றிற்கும் நெருக்கமான சித்த மருத்துவம் உள்ளிட்ட மரபு-மருத்துவம் புறக்கணிக்கப்பட்டதால் மிகப்பெரிய மருத்துவ அறிவு வளம் மக்களுக்கு மறுக்கப்பட்டதோடு, கடும் நோய்களுக்கு குறைந்த செலவில் மருத்துவம் பெறும் வாய்ப்பும் மறுக்கப்பட்டது.

 

இன்று, ஐக்கிய நாடுகள் மன்ற துணை அமைப்புகளும் பொருளியல் மற்றும் மருத்துவ ஆய்வாளர்களும் அந்தந்த மண்ணின் மக்கள் தங்கள் மரபுகளுக்குத் திரும்ப வேண்டிய தேவையை உணர்த்தி வருகிறார்கள்.

 

இன்னொரு புறம், இரசாயன வேளாண்மை, சீமை வகைக் கால்நடை வளர்ப்பு, அலோபதி மருத்துவம் போன்றவற்றிற்கு அரசு அளித்துவரும் மானியங்களும் பலமடங்கு அதிகரித்து அரசுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்துகின்றன.

 

இந்த நிலையில், இயற்கை சார்ந்த தமிழர் மரபு வேளாண்மை, மேய்ச்சல் கால்நடை வளர்ப்பு, சித்த மருத்துவம் ஆகியவற்றை ஊக்கப்படுத்துவது மக்களின் தற்சார்பையும், தமிழ்நாட்டின் தற்சார்பையும் நிலைநிறுத்தப் பயன்படும். மக்களின் உடல்நலம் காப்பதற்கும் துணை செய்யும்.

 

இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இயற்கை சார்ந்த தமிழர் மரபு வேளாண்மை, மரபு கால்நடை மேய்ச்சல், சித்த மருத்துவம் ஆகிய மூன்றையும் பாதுகாத்து வளர்க்க ஒருங்கிணைந்த கொள்கை முடிவை (Integrated Policy Decision) தீர்மானித்து அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்

 

தமிழர் மரபு வேளாண்மையைப் பாதுகாத்து வளர்க்க உயிர்ம வேளாண்மைக் கொள்கை (Organic Farming Policy) அறிவித்து அதனைச் செயல்படுத்த உயிர்ம வேளாண்மை வாரியம் என்ற தற்சார்பான அமைப்பை நிறுவி அதற்கு உரிய அதிகாரத்தையும் நிதியையும் வழங்க வேண்டும். உயிர்ம வேளாண்மைக் கொள்கையின் உள்ளீடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து ஒரு மாதிரி கொள்கை வரைவை (Draft Policy) அரசுக்கு ஏற்கெனவே தமிழர் மரபு வேளாண்மைக் கூட்டியக்கம் வழியாக அளித்திருக்கிறோம் (நகல் இணைக்கப்பட்டுள்ளது).

 

உயிர்ம வேளாண்மைக் கொள்கை அரசின் ஆய்வில் இருப்பதாக அண்மையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் அதன் உள்ளீடுகள் பொதுவெளியில் வெளியிடப்பட்டு அதன் மீது உழவர்களின் கருத்துகளை அறியவேண்டும் என ஏற்கெனவே வேண்டுகோள் கடிதமும் கொடுத்திருக்கிறோம்.

 

உயிர்ம வேளாண்மைக் கொள்கையோடு ஒருங்கிணைந்த வகையில் மேய்ச்சல் தொழில் மற்றும் சித்த மருத்துவ மேம்பாடு குறித்த கொள்கைத் திட்டங்களும் அவற்றைச் செயல்படுத்துவதற்கான அரசுப் பொறி அமைவுகளும் உருவாக்கப்பட வேண்டும்.

 

தமிழ் மண்ணிற்கே உரிய மரபான விதைகளும் ஆடு-மாடு உள்ளிட்ட மரபு கால்நடை இனங்களும் மூலிகைகளும் வறழ்-புல்வெளிகளும் அழிவது மீட்க முடியாத பேரழிவாகிவிடும். அவற்றைப் பாதுகாத்து வளர்ப்பதுதான் தமிழ்நாட்டின் தற்சார்பை உறுதிப்படுத்தும்.

 

மரபான இயற்கை சார்ந்த வேளாண்மை வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு உணவளிக்க போதுமானதல்ல என்ற கற்பிதம் எவ்வளவு பொய்யானதோ அதே போல் மரபான மாட்டினங்கள் மக்கள் தொகைக்கு ஏற்ப பால்வளம் தராது என்று கருதுவதும் அறிவியலுக்குப் பொருந்தாத தவறான நம்பிக்கையாகும்.

 

மலைமாடு, புலிக்குளம், காங்கேயம், உம்பளச்சேரி, பர்கூர், ஆலம்பாடி போன்ற நாட்டின மாடுகளும் தோடா, பர்கூர் எருமை இனங்களும் மேச்சேரி, செவ்வாடு இராமநாதபுரம் வெள்ளை கச்சைக்கட்டிக்கருப்பு, வேம்பூர் உள்ளிட்ட செம்மறி ஆட்டினங்களும் கண்ணி, கொடி, சேலம்கருப்பு உள்ளிட்ட வெள்ளாட்டினங்களும் விரைவாக அருகி வருகின்றன. 2012 லிருந்து 2019க்குள் ஏழாண்டுகளில் 27% நாட்டினக் கால்நடைகள் குறைந்துவிட்டன என அரசின் புள்ளிவிபரம் கூறுகிறது.

 

இதற்கேற்ப, மேய்ச்சலில் ஈடுபடும் கிடைக்காரர்களின் எண்ணிக்கையும் சுருங்கி வருகிறது.

 

இந்நிலையில், மரபின ஆடு-மாடுகளையும் மேய்ச்சலில் ஈடுபடும் கிடைக்கார சமூகத்தையும் பாதுகாத்து வளர்க்க, தற்சார்பான மேய்ச்சல் சமூக மேம்பாட்டு நலவாரியம் (Pastoral Community Development Board) உருவாக்க வேண்டும்.

 

மேய்ச்சல் நிலங்களைபுறம்போக்கு, “தரிசுநிலம் (waste land) என வெள்ளையர் ஆட்சியில், - இந்த மண்ணின் திணைவாழ்க்கையை அறியாமல் - செய்த வகைப்பாடு, சுதந்திரம் பெற்ற பின்னும் தொடர்வது அவலமானதுமேய்க்கால் புறம்போக்கு என்று வகைப்படுத்தப்பட்டு உள்ள வறழ்-புல்வெளிகள் இந்த மண்ணின் உயிர் பன்மையத்தைப் பாதுகாத்துத் தரும் முக்கியமான நில வகையாகும்.

 

இந்த வறழ்-புல்வெளிகள் தொழில் பெருக்கத்தால் மிகையாக உமிழப்படும் கார்பனை உள்ளிழுத்து மண் கார்பனாக (soil carbon) மாற்றி புவி வெப்பமாதலைக் குறைப்பதற்கு (mitigate) பெரிதும் உதவுகின்றன என்பதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

முல்லை உள்ளிட்ட ஐந்திணை நிலங்களிலும் புள்வெளிகள் இருக்கின்றன. பாலை என்று தமிழ் மரபில் குறிக்கப்படும் வறழ்-புல்வெளிகளில் கூட நூறுக்கும் மேற்பட்ட பறவை வகைகள், நூறுக்கும் மேற்பட்ட அம் மண்ணிற்கே உரிய தாவர சிற்றுயிர்கள், அரிய வகை ஊர்வன, நஞ்சில்லாத மூலிகைத் தாவரங்கள், நத்தை, பச்சைத் தவளை, அட்டை உள்ளிட்ட மருத்துவ உயிரினங்கள் கொண்ட பன்மைய உயிரின நிலமாகும்.

 

எனவே, மேய்ச்சல் நிலங்களை புறம்போக்கு என வகைப்படுத்தி அரசு கட்டிடங்கள், தொழில்பேட்டைகள், மருத்துவ மனைகள், காடு வளர்ப்பு போன்ற பயன்பாடுகளுக்கு எடுத்துச் செல்வதை உடனடியாகக் கைவிட வேண்டும்.

 

மேய்ச்சல் நிலங்களை உள்ளூர் சமூகத்தின் பங்களிப்போடு பாதுகாக்க வேண்டும் என 2020-21ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலமேம்பாட்டுத் திட்டம் (TN Land Development Plan 2020-21) அறிவித்திருந்தாலும் அது பின்பற்றப்படுவதில்லை.

 

இதற்கு மேலும் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களை வேறுவகைப் பயன்பாட்டுக்கு திருப்பிவிடக் கூடாது என 2011 ஆம் ஆண்டு மிக விரிவான ஆய்வுக்குப் பிறகு தீர்ப்புரைத்த உச்ச நீதி மன்றம் (Jagpal Singh Vs State of Punjab-Civil appeal No. 1132/2011), அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை இதுகுறித்து உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் கூறியது.

 

அதேபோல் இரமேஷ்பாய் வீராபாய் - எதிர் - குசராத் மாநில அரசு என்ற வழக்கில் 2021 லும் இதேபோன்ற தடைத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. இது எதுவும் செயலாவதில்லை. மாறாக மீறப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனைக்காக தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ள இடம் செட்டிகுளம், மேநாடு கிராமத்தைச் சேர்ந்த மேய்க்கால் புறம்போக்கு நிலமாகும். அதே போல், மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கும் மேய்ச்சல் நிலங்களே எடுக்கப்படுகின்றன.

 

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும், அரசின் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களும், தமிழ்நாடு காகித ஆலைக்கான மரம் வளர்ப்பு, காற்றாலைகள், சூரிய ஆற்றல் மின் உற்பத்தி போன்றவற்றிற்காக எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

 

தமிழ்நாடு அரசு மேய்ச்சல் நிலத்தை இவ்வாறு பிற பயன்பாட்டிற்கு மாற்றுவதை உடனடியாக கைவிட்டு வேறு தனியார் நிலங்களை அவர்கள் இசைவுப்படி கையகப்படுத்தும் திட்டத்திற்கு மாற வேண்டும். மேய்ச்சல் நிலங்களை உள்ளாட்சி மன்றங்கள் வழியாக உள்ளூர் மக்களின் ஒத்துழைப்போடு பாதுகாத்து வளர்க்க உறுதியான திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்து செயல்படுத்த வேண்டும்.

 

உயிர் பன்மைய சட்டப்படி (Bio-diversity Act) ஊராட்சி அளவில் உள்ளூர் உயிர்பன்மைய மேலாண்மை குழுக்களை (Local Bio-diversity Management Committee) உண்மையான பொருளுள்ள வகையில் நிறுவி அவற்றின் பொறுப்பில் அந்தந்தப் பகுதியின் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை ஒப்படைத்துப் பாதுகாக்க வேண்டும். அப் புல்வெளியில் உள்ள பல்லுயிரிகளை ஆவணப்படுத்த வேண்டும்.

 

புல்வெளிகள் சூழல் அமைவின் இன்றியமையாத பகுதி என வரையறுக்க வேண்டும். வனப்பாதுகாப்புச் சட்டம் போல் வனத்திற்கு வெளியில் உள்ள புல்வெளிகளையும் பாதுகாப்பதற்குத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்.

 

 

காடுகளில் மேய்ச்சலுக்காக ஆடுமாடுகள் நுழைவதைத் தடைசெய்து அறிவிக்கப்பட்டுள்ள வனத்துறையின் தடையாணை சுற்றறிக்கையைத் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும்.

 

கிடை ஆடுகள்-மாடுகள் மேய்ச்சலுக்குள்ள வழித்தடங்களைப் பாதுகாத்துத் தர வேண்டும். மேய்ச்சல் வழித்தடங்களில் குறுக்கிடும் நெடுஞ்சாலைகளைக் கடப்பதற்கு கீழ்நிலை வழித்தடம் (underground pathway) ஏற்படுத்த வேண்டும்.

 

நெடுஞ்சாலைகளில் ஆடு-மாடுகளை ஓட்டிச் செல்லும்போது ஏற்படும் விபத்து இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் கிடை ஆடு-மாடுகளுக்கு காப்பீட்டுத் திட்டம் உருவாக்கித் தரவேண்டும்.

 

உழவர்களுக்கும் ஆடு-மாடு மேய்ச்சல் காரர்களுக்கும் குறைந்த பட்ச வருவாய் உறுதித் திட்டம் அறிவித்துச் செயல்படுத்த வேண்டும்.

 

கிடை போடுவதற்காக ஆடு-மாடுகளை ஊர்ஊராக ஓட்டிச் செல்லும் மேய்ச்சல் சமூகத்தைச் சோ்ந்த மாணவர்கள் அவரவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் தங்கியிருக்கும் காலங்களில் பக்கத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் படிப்பை இடையீடு இல்லாமல் தொடர்வதற்கு இணக்கமான ஏற்பாடுகளை அரசு செய்து தரவேண்டும்.

 

அரசு கால்நடைத்துறையில், மேய்ச்சல் சமூகத்திற்கான தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும். கால் மருத்துவ படிப்பில் ஆடு – மாடு மேய்க்கும் கிடைக்காரர்களின் மரபு அறிவையும் ஆவணப்படுத்தி இணைத்துக் கொள்ளவேண்டும்.

 

அரசு நலிந்த பிரிவினருக்கு இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் வெளி மாநில ஆடுகளை அனுமதிக்கக் கூடாது. தெலுங்கானாவில் உள்ளது போல் வீட்டுக்கு ஒரு செம்மறி ஆடு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும். புல்வெளிப் பாதுகாப்பிலும், செம்மறி ஆடு வளர்ப்பிலும் கிராமப்புற மகளிர் குழுக்களை ஈடுபடுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வீட்டுக்கு ஒரு மாடு வழங்கும் திட்டத்தில் நாட்டு மாடுகளுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்.

 

மேய்ச்சல் ஆடு-மாடுகளுக்கு உதவும் வகையில் நடமாடும் மருத்துவ மனை (Mobile Medical Unit) உருவாக்க வேண்டும்.

 

பொது நீர்நிலைகளில் மீன் குத்தொகை விடுகிற முறை ஒரு வகையில் மக்களுக்கு உரிய பொது நீர் ஆதாரங்களை தனியார் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு செல்வதோடு, அந்தக் குளம் குட்டைகளில் மீன் வளர்ப்புக்காக இடப்படும் இரசாயனத் தீவனங்கள் நீர் நிலைகளை நஞ்சாக்குகின்றன. எனவே, பொது நீர்நிலைகளை மீன் குத்தொகைக்கு விடுவதை முற்றிலும் கைவிட வேண்டும். அவரவர் தனியார் நிலங்களில் வெட்டப்படும் குளங்களுக்கு வேண்டுமானால் மீன்வளர்ப்புக்கான ஊக்கத் திட்டங்களைச் செயல்படுத்தலாம்.

 

 

உயிர்ம வேளாண்மை, மரபு கால்நடை மேய்ச்சல் ஆகியவற்றோடு ஒருங்கிணைந்த வகையில் சித்த மருத்துவத்தைப் பாதுகாத்து வளர்க்க துல்லியமான கொள்கை அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும். நஞ்சில்லா உணவுக்கு அடிப்படையான இயற்கை சார்ந்த மரபு வேளாண்மைதான் நஞ்சில்லாத மூலிகை கிடைப்பதற்கும் மருத்துவ குணம் கொண்ட உயிரினங்களைப் பாதுகாப்பதற்கும் அடிப்படையாக அமையும் என்பதை உணர்ந்து இக்கொள்கைத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

 

சித்த மருத்துவத்தை பாதுகாத்து வளர்க்க தற்சார்பான சித்த மருத்துவ வாரியம் (Siddha Development Board) நிறுவப்படவேண்டும். மாவட்டந்தோறும் சித்த மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட வேண்டும். செங்கல்பட்டு சித்த மருத்துவ உயராய்வு நிறுவனத்துக்கு திருமூலர் பெயர்சூட்டுவதோடு, தமிழர்களின் உயிர்காப்புக் கலையான ஓகக் கலையை (Yoga) சித்த மருத்துவத்தோடு ஒருங்கிணைந்த உடலியல் மருத்துவமாகக் கற்பிக்க வேண்டும்.

 

தமிழில் உள்ள சித்த மருத்துவ நூல்கள் அனைத்தையும் சித்த மருத்துவப் பாடத்திட்டத்தில் சேர்த்து அக் கல்வியை மேம்படுத்த வேண்டும்.

 

 

மரபாக சித்த மருத்துவத்திலும் மருந்தில்லா மருத்துவத்திலும் ஈடுபட்டுள்ள மரபு மருத்துவர்களை முறைப்படுத்தி அங்கீகரிக்க வேண்டும்.

 

உயிர்ம வேளாண்மை விளை பொருட்களையும் மரபு கால்நடை துணை பொருள்களையும் மூலிகை மருந்துப் பொருட்களையும் சந்தைப்படுத்துவதற்கு சிறப்பு ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.

 

அரசின் ரேசன் கடைகள், மருத்துவ மனைகள், மாணவர் விடுதிகள் போன்றவற்றில் இயற்கை சார்ந்த மரபு வேளாண்மை விளை பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இதற்குரிய வேளாண் விளை பொருட்களைச் சிறப்பு விலை கொடுத்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.

 

ரேசன் கடைகளில் ரசாயணம் கலந்த செயற்கையான செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.

 

அரசின் ஆவின் நிறுவனத்தில் நாட்டின பால் மற்றும் பால் பொருட்கள் விற்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். நாட்டின எருமை, பசு மாடுகளின் பாலுக்கு சிறப்பு விலை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டும். மேய்ச்சல் ஆடுமாடுகள் இயற்கையான தீவனங்களை எடுத்துக் கொள்வதால் புரதச் சத்தில் மிகுந்தவை என்பதை விளக்கி நாட்டின ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி விற்பனையை ஊக்கப்படுத்த சிறப்புத் திட்டங்களை அரசு அறிவிக்க வேண்டும்.

 

கிடைமாடு-ஆடு இனங்களின் சாணத்தை எருவாகவும், ஊதுபத்தி, கொசுவத்தி, சாண எரிவாயு இடுபொருள் போன்ற மதிப்புக் கூட்டுப் பொருட்களாகவும் மேம்படுத்தி விற்பனை செய்ய அரசு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

 

மரபு வேளாண்மை விளை பொருட்களையும் நாட்டின கால்நடைகளின் துணைப் பொருட்களையும் பயன்படுத்தி மருந்துப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்யும் சிறுதொழில் முனைவோருக்கு ஊக்கத் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்.

 

மரபு வேளாண்மை, நாட்டின கால்நடை வளர்ப்பு, சித்த மருத்துவம் ஆகியவை பள்ளி, கல்லூரிப் பாடத்திட்டங்களில் இடம்பெற வேண்டும்.

 

உயிர்ம வேளாண்மையில் விளையும் மூலிகைத் தாவரங்கள் அவ்வேளாண்மையின் ஊடாக வளரும் மருத்துவ உயிரினங்கள் ஆகியவற்றைச் சந்தைப்படுத்துதல், மதிப்புக் கூட்டி விற்பனை செய்தல் போன்றவற்றிற்கும், அதே போன்று நாட்டின மேய்ச்சல் கால்நடை வளர்ப்போர் அவற்றில் கிடைக்கும் மருத்துவ குணம் கொண்ட துணைப் பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப் படுத்துவதற்கும் ஊராட்சி ஒன்றிய அளவில் தொடர் பயிற்சி அளிக்கப்பட்டு, சந்தைப் படுத்துவதற்கான ஊக்கத்திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.

 

தமிழ்நாடு அரசு வேளாண்துறை, கால்நடைத்துறை, நல்வாழ்வுத் துறை உள்ளிட்ட பல துறைகளின் ஒருங்கிணைந்த கொள்கைத் திட்டமாக இவற்றை வடிவமைத்து விரைவில் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.



No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.