ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

திருமுருகன் காந்தியின் “திராவிட”த் திரிபுவாதங்கள்! [ பகுதி – 3 ] க.அருணபாரதி


 திருமுருகன் காந்தியின் “திராவிட”த் திரிபுவாதங்கள்!
[ பகுதி – 3 ]
க. அருணபாரதி

துணைப் பொதுச் செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
==================================
ஈழப்படுகொலையில் இந்திய ஆரிய அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கம் அம்பலப்படுத்தவில்லை என மே பதினேழு இயக்கத் தோழர் கொண்டல்சாமி குற்றம்சாட்டியிருந்தார். அவருக்கான பதிலைத் தான், ஆதாரங்களுடன் கடந்த பகுதிகளில் கண்டோம். இந்த மூன்றாம் பகுதியில் இன்னும் விரிவாகக் காண்போம்.
கடந்த 2008 நவம்பரில், தமிழீழத்தில் இன அழிப்புப் போர் தொடங்கியிருந்த போது, தில்லியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த புகழ்பெற்ற புலனாய்வு ஊடகமான “தெகல்கா” (www.tehelka.com) வார ஏடு, “The ‘Liberators’ Of Tamil Nadu” என்றொரு ஆங்கிலக் கட்டுரையை எழுதியது. விடுதலைப்புலிகள் தமிழீழம் கேட்பதைப் போலவே, தமிழ்நாட்டில் ஐயா பெ. மணியரசன் தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரியக்கம் (அப்போது தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி), இறையாண்மையுள்ள தமிழ்த்தேசக் குடியரசு கேட்கிறது என்று குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய அமைப்புகள் குறித்த ஒரு விரிவான கட்டுரையை அந்த ஆங்கில ஏடு வெளியிட்டது.
பெருமுதலாளிகள் தலைமையிலான ஆரிய பிராமணிய - இந்தி ஆதிக்க அரசே இந்திய அரசு என்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தெளிவான வரையறையை அப்படியே வெளியிட்ட அந்த ஏடு, இறையாண்மையுள்ள தமிழ்த்தேசக் குடியரசு அமைப்பதே தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இலக்கு என ஐயா மணியரசன் கூறியதையும் அப்படியே பதிவு செய்தது. (“India is a capitalist, Brahminist, and Hindi - dominant state, where other nationalities do not enjoy equal rights,” says P Maniarasan, general secretary of the Thanjavur-based Thamizh Thesa Pothuvudamai Katchi (TTPK). “Our goal is to establish a sovereign Tamil national republic. His group is active in about 20 districts and is mobilising the support of people from different sections. It has separate wings for students, youth and peasants”).
இந்தக் கட்டுரையை கொழும்பிலிருந்து வெளிவரும் ‘சிறீலங்கா கார்டியன்’ தனது இணையதளத்தில் முழுவதுமாக வெளியிட்டது (காண்க: http://www.srilankaguardian.org/.../liberators-of-tamil...). இந்திய அரசு குறித்தும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இலக்கு என்ன என்பது குறித்தும் ஓர் அனைத்திந்திய ஊடகத்தில் மிகவும் வெளிப்படையாக நாம் 2008லேயே பதிவு செய்திருக்கிறோம்.
2009 மே மாதமே, ஈழப்போருக்கு இந்திய அரசு நிதி வகையிலும், பயிற்சி வழங்கிய வகையிலும் பல்வேறு உதவிகள் புரிந்து நிற்கிறது என்பதை ஆதார ஆவணங்களோடு தமிழர் கண்ணோட்டம் இதழில் வெளியிட்டு அம்பலப்படுத்தினோம். (தமிழர் கண்ணோட்டம், 2009 மே இதழ், பக்கம் 10 – 13). “இந்தியாவே! தமிழின அழிப்புப் போரை நிறுத்து!” என்பதே அப்போதைய போர் நிறுத்தப் போராட்டங்களின் முழக்கமானது. அதன் தொடர்ச்சியாகவே, இன்றைக்கும் கூட “இந்திய அரசு இனப்பகை அரசு! தமிழர் இனமே நெஞ்சில் நிறுத்து!” என்ற முழுக்கத்தை, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும் இன்றளவும் ஒலித்து வருகிறோம். அந்தக் கொள்கைத் தெளிவை தமிழ் மக்களிடம் ஏற்படுத்தி, களத்தில் எதிரொலித்துக் கொண்டிருப்பது தமிழ்த்தேசியப் பேரியக்கம்தான்! இதற்கு, இந்திய அரசின் ஆவணங்களே கூட சான்றுகளாகத் திகழ்கின்றன!
கடந்த 2014ஆம் ஆண்டு, ஆட்சியை விட்டு இறங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பு 14.05.2014 அன்று, இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கானத் தடையை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டது காங்கிரசு இந்திய ஆட்சி! ஆரியத்துவ பா.ச.க.வின் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, அத்தடையை நீக்க வேண்டுமென வைகோ உள்ளிட்டோர் அதற்கான தீர்ப்பாயத்தில் எதிர் வழக்காடினர். புலிகள் மீதான தடையை நீக்கக் கூடாதென இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு (அ.இ.அ.தி.மு.க. ஆட்சி) சார்பில் உள்துறை அமைச்சகமும், காவல்துறையும் வாதங்களை முன்வைத்து வாதாடியது. இவ்வாதங்களுக்குப் பிறகு, புலிகள் மீதான தடையை நீக்க முடியாதென அத்தீர்ப்பாயத்தின் நீதிபதி ஜி.பி. மிட்டல் 20.11.2014 அன்று தீர்ப்பளித்தார்.
புலிகள் மீதான தடையை நீக்கக் கோரும் இத்தீர்ப்பாயத்தின் வாதுரையின்போது, இந்திய அரசின் சார்பில், இந்திய உள்துறை அமைச்சகத்தின் Internal Security – I Division, Under secretary அதிகாரி நரேந்திர குமார் என்பவர் ஒரு வாதுரையை தாக்கல் செய்தார். அதில் தமிழ்நாட்டிலுள்ள தமிழீழ ஆதரவு அமைப்புகளின் விடுதலைப்புலிகள் ஆதரவுச் செயல்பாடுகளை தனது வாதுரையில் விரிவாகப் பட்டியலிடுகிறார். அதில், இந்திய அரசுக்கு எதிரானச் செயல்பாடுகள் எனக் குறிக்கப்பட்டவை பலவும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் செயல்பாடுகள் ஆகும்!
“தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமிழீழத்திற்காக மட்டுமல்ல, இந்தியாவிலும் தனிநாட்டுக்காகப் போராட வேண்டும்” என 2012ஆம் ஆண்டு, குடந்தையில் நடைபெற்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தமிழக இளைஞர் முன்னணியின் மாநாட்டில் ஐயா பெ. மணியரசன் அவர்கள் பேசியதைக் குறிப்பிட்டும் (பத்தி 86 - 21.11), “இந்திய நலன்களுக்கு எதிராக எதுவும் செய்யாத புலிகளை - தடை செய்யவே இந்திய அரசு அனைத்துலக அளவில் உதவி செய்தது; எனவே, தமிழீழ விடுதலையும், தமிழ்நாடு விடுதலையும்தான் அனைத்துலக அளவில் தமிழர்களுக்கான தீர்வு” என 2013இல் (28.01.2013), தஞ்சையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் பேசியதையும் (பத்தி 86 - 21.15) அவர் தனது வாதுரையில் ஆதாரங்களாகக் குறிப்பிடுகிறார். அது மட்டுமின்றி, கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம், “முள்ளிவாய்க்கால் முடிவல்ல – தொடக்கம்! இந்திய சிங்கள பகை முடிக்கும்” என்ற தலைப்பில் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வுகளை தமிழ்நாடு முழுவதும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தியதையும் அவ்வறிக்கையில் (பத்தி 86 - 21.22) குறிப்பிட்டுள்ளனர்.
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் திறப்பு விழாவில், ஐயா மணியரசன் அவர்கள் இந்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கு எதிராக மிகவும் ஆபத்தான வகையில் தாக்கிப் பேசினார் (P. Maniarasan (TDPK) in his speech was virulent in his attack on the Union and State Governments) என்கிறது, இந்திய உள்துறை அமைச்சக அறிக்கை! “இந்தியத் தலைமையமைச்சர் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றால், இந்தியா நம் நாடு அல்ல என்ற முடிவுக்கு தமிழர்கள் வர வேண்டும்” என ஐயா மணியரசன் பேசியதைத்தான் இவ்வறிக்கையில் குறிப்பிட்டனர். (பத்தி 86 - 21.25). தமிழ்த்தேசியப் பேரியக்கம் மட்டுமின்றி, தமிழீழ தேசியத் தலைவரை முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளையும் ஆபத்தானதாகக் குறிப்பிட்டு, தனது வாதுரையை அவர் தாக்கல் செய்திருந்தார்.
ஆரிய இனவெறி இந்திய அரசுக்கு எதிராக தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர்கள் ஐயா மணியரசன், கி. வெங்கட்ராமன் ஆகியோர் பேசுவதையும், போராட்டங்கள் நடத்திச் செயல்படுவதையும் எதிரியான இந்திய அரசு தெளிவாகவே உணர்ந்துள்ளதையே மேற்கொண்ட இந்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது. இவை மட்டுமின்றி, பேரியக்கம் மேற்கொண்ட போராட்டங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் எதிர்வினையாக நம் மீது போடப்பட்டுள்ள வழக்குகளின் பட்டியலையும், அதன் காரணமாக நம் கோரிக்கைகளில் ஏற்பட்டிருந்த சிறு முன்னேற்றங்களையும் பின்னர் வரும் பகுதிகளில் இன்னும் விரிவாகக் காணவிருக்கிறோம்.
தில்லி ஊடகங்களுக்கும், இந்திய அரசுக்கும் கூட தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் நோக்கம் குறித்தும், இந்திய அரசு குறித்த எமது வரையறுப்பு குறித்தும் இவ்வளவுத் தெளிவாகத் தெரியும்போது, தமிழ்நாட்டில் செயல்படும் மே பதினேழு தோழர்களுக்கு இதுபற்றியெல்லாம் ஒன்றும் தெரியவில்லை என்பது நம்பத்தகுந்ததாக இல்லை!
2009 ஈழப்படுகொலைக்குப் பிறகு அரசியல் தெளிவு பெற்று, அரசியல் களத்திற்கு வந்தவர்கள் என்ற மதிப்பில் - மே பதினேழு இயக்கத்துடன் தோழமை உறவுடனேயே தமிழ்த்தேசியப் பேரியக்கம் செயல்பட்டது. சென்னையில் மே பதினேழு இயக்கம் முன்னெடுத்த பல்வேறு போராட்டங்களில் பேரியக்கத் தலைவர்களும், தோழர்களும் அவ்வப்போது பங்கேற்று வந்தனர். பேரியக்கப் போராட்டங்களிலும் மே பதினேழு தோழர்களைப் பங்கேற்க அழைத்திருக்கிறோம்.
எனினும், இந்திய – தமிழ்நாடு அரசுகளுக்கு எதிராக பல்வேறு உரிமைச் சிக்கல்களில் முகாமையான போராட்டங்களை முன்னெடுத்த தமிழ்த்தேசியப் பேரியக்கம், எந்த வகை அடக்குமுறைகளையும் சந்திக்கவில்லை என்று கவலைப்படுகிறார் தோழர் கொண்டல்சாமி! பேரியக்கத்தின் போராட்டங்கள் குறித்து காண்பதற்கு முன்னர், 2014ஆம் ஆண்டு மே பதினேழு இயக்கத்தின் தேர்தல் நிலைப்பாட்டிலுள்ள தகிடுதத்தங்களை முதலில் காண்போம்.
2014 தேர்தலில் மே 17 நிலைபாடு
-------------------------------------------
“2014 தேர்தலில் மதிமுகவின் நிலைப்பாட்டின் மீதான விமர்சனத்தை வைத்தே தேர்தலில் ஆதரவு தெரிவிக்க இயலாதென மே 17 இயக்கம் சொன்னது. ஆனால் மதிமுகவிற்காக பரப்புரை மேற்கொண்டதாக த.தே.பே சொல்கிறது. மதிமுக கட்சியினரே இதை ஏற்காத பொழுது, மே 17 பரப்புரை செய்ததற்கான ஆதாரத்தை வெளியிடுவது தோழர் அருணபாரதியின் பொறுப்பு. மதிமுகவிடமாவது இதற்கான ஆதாரத்தை பெற்று வெளியிட்டால் நல்லது” என்று எழுதியுள்ளார் தோழர் கொண்டல்சாமி! எனவே, இதுகுறித்துப் பார்ப்போம்.
2014 சனவரியில் பெரியாரை செருப்பால் அடிப்பேன் என வெளிப்படையாக அறிவித்தவர் பா.ச.க.வின் எச். இராசா! அதே ஆண்டு சென்னை தண்டையார்பேட்டையில் 17.05.2014 அன்று ம.தி.மு.க. நடத்திய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில், தன்னோடு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்தையும் மேடையில் ஏற்றியவர் ஐயா வைகோ!
அ்ப்போது நாடாளுமன்றத் தேர்தல் வந்தநிலையில், தி.மு.க. – அ.தி.மு.க. கட்சிகளே கூட தூக்கி சுமக்க மறுத்த கட்சியாக பா.ச.க. இருந்தது. குசராத்தில் இசுலாமியர்களை நரவேட்டையாடிய நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளர் என வெளிப்படையாக அறிவித்திருந்த அந்த பா.ச.க.வை தனது தோலில் போட்டுக் கொண்டு சுமந்தவர் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ! நடிகர் விசயகாந்தின் தே.மு.தி.க., மருத்துவர் இராமதாசின் பா.ம.க., டாக்டர் பாரிவேந்தரின் இந்திய சனநாயகக் கட்சி, மருத்துவர் கிருட்டிணசாமியின் புதிய தமிழகம் கட்சி, ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, தமிழருவி மணியனின் காந்திய மக்கள் இயக்கம் போன்றவை அப்போது பா.ச.க.வின் தேசிய சனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்தன.
வைகோவின் செல்லப்பிள்ளை போல் வளர்ந்த மே பதினேழு இயக்கம், அத்தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது எனக் கூடி ஆலோசித்தபோது நடந்தவற்றையெல்லாம் மே 17 இயக்கத்தின் தலைமைக் குழுவில் செயல்பட்டு, பின்னர் அதிலிருந்து வெளியேறிய தோழர் உமர் “நான் ஏன் மே பதினேழு இயக்க உறுப்பினரில்லை?” என்ற 424 பக்கங்களைக் கொண்ட ஆவணத்தில் விரிவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
காஞ்சிபுரத்தில் பா.ச.க.வின் தேசிய சனநாயகக் கூட்டணி வேட்பாளராக இருந்த ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா அவர்களை, 01.04.2014 அன்று மாமல்லபுரம் சென்று சந்திக்கிறார் தோழர் திருமுருகன் காந்தி. அப்போது, அவரிடம் மல்லை சத்யா “பரப்புரை வாகனத்தில் ஏறி விட வேண்டியதுதானே?” என்கிறார். அதற்கு திருமுருகன் கூறுகிறார் : “எங்களோடு STRENGTH என்பது என்பது வேற தோழர். நாங்கள் நேரடி ஆதரவுப் பிரச்சாரம் பண்றத விட, எதிர் பிரச்சாரம் தான் எங்களோட STRENGTH. அதனால் நாங்க வந்து உங்களுக்கு எதிர் வேட்பாளர்களை அம்பலப்படுத்தும் வேலையை செய்யுறோம். அது மூலமா உங்களுக்குத்தான் ஓட்டு விழும். 2009-ல காரைக்குடியிலும், 2011-ல கடையநல்லூரிலும் அததான் பண்ணி இருந்தோம். இப்போ உங்களுக்கு ஆதரவாவும் நாங்கள் இதையே பண்ணிடுறோம்” என்றார் திருமுருகன் காந்தி. அப்போது, உடனிருந்த ம.தி.மு.க. தேர்தல் பணிப் பொறுப்பாளர் பாலவாக்கம் சோமு அவர்களிடம் மல்லை சத்யா, “மே பதினேழு தோழர்கள் நமக்காக பண்றாங்க, என்ன பணம் கேட்கறாங்களோ கொடுத்திடுங்க” என்கிறார். இவ்வாறு நடந்த நிகழ்வுகளை அப்படியே தோழர் உமர், தனது “நான் ஏன் மே பதினேழு இயக்க உறுப்பினரில்லை?” என்ற தனது ஆவணத்தில் (பக்கம் 37 – 38, பத்தி 87 – 88) பதிவு செய்திருக்கிறார்.
இதனையடுத்து, 2014 ஏப்ரல் 14 அன்று, மே பதினேழு இயக்கத் தோழர்கள் பன்னீர், விவேக், சபரி, மனோஜ், சுந்தரமூர்த்தி ஆகிய ஐந்து பேர் விருதுநகருக்குப் பரப்புரை மேற்கொள்ள சென்றனர். நேரடியாக மே பதினேழு என சொல்லிக் கொள்ளாமல் “கரிசல் வேங்கைகள்” என்ற புனைப் பெயரில் பரப்புரை மேற்கொண்டனர் (பத்தி 118). தேர்தல் பரப்புரைக்குச் சென்றால், மே பதினேழு இயக்கத்தின் பெயர் மக்களிடத்தில் அறிமுகமாக வாய்ப்புண்டு என்று கூறி தனது இயக்கத் தோழர்களை தேர்தல் பரப்புரைக்கு அழைத்துச் சென்ற தோழர் திருமுருகன் காந்தி, விருதுநகரில் வைகோவுக்காக “கரிசல் வேங்கைகள்” என்ற புனை பெயரில் பரப்புரை மேற்கொண்டதுதான் வேடிக்கை!
இவர்கள் விருதுநகரில் ம.தி.மு.க.வுக்காக மேற்கொள்ளும் பரப்புரையை யாரும் படம் எடுத்துவிடக் கூடாது என்பதிலும் கூட அவர்கள் மிகவும் கவனமாக இருந்துள்ளதை தோழர் உமரின் ஆவணம் தோலுரித்துக் காட்டிவிட்டது. (பக்கம் 67, பத்தி 150).
ஏப்ரல் 19 அன்று மே பதினேழு குழுவினர் பரப்புரை செய்து கொண்டிருந்தபோது, காங்கிரசின் மாணிக் தாக்கூரின் ஆதரவாளர்கள் வந்து தகராறு செய்து, நீங்கள் யாருக்காக பரப்புரை செய்கிறீர்கள் எனக் கேட்கிறார்கள். ம.தி.மு.க. பேரில் அனுமதி வாங்கி இருக்கிறோம், ம.தி.மு.க.விற்கு ஆதரவாகத்தான் நாங்கள் பிரச்சாரம் செய்கின்றோம் என்று மே பதினேழு தோழர்கள் பதில் கூறி தப்பிக்கிறார்கள். அந்த நிகழ்வில், ம.தி.மு.க. தோழர்கள் தங்களுக்கு ஆதரவாக உதவிக்கு வரவில்லையே என திருமுருகனே தோழர் உமரிடம் குறைபட்டுக் கொண்டிருக்கிறார் வேறு! (பக்கம் 58, பத்தி 133 – 134).
ம.தி.மு.க.வுக்கு ஆதரவாக நாங்கள் பரப்புரையே செய்யவில்லை எனக் கூசாமல் கூறும், இதே மே பதினேழு இயக்கத் தோழர் கொண்டல்சாமி, பா.ச.க.வின் தேசிய சனநாயகக் கூட்டணியின் ம.தி.மு.க. வேட்பாளர் மல்லை சத்யாவுக்காக டேவிட் பெரியாருடன் இணைந்து, தனது மறைமலை நகர் பகுதியில் பரப்புரை மேற்கொண்டதையும் தோழர் உமர் தனது ஆவணத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறார். (பக்கம் 48, பத்தி 113).
பா.ச.க.வுக்கு எதிராக மே பதினேழின் முகநூல் பக்கத்தில் கூட பரப்புரை மேற்கொள்ளப்படவில்லையே என மே பதினேழு இயக்கத் தோழர் கார்த்திக் கணேசன் கேள்வி எழுப்பிய பிறகுதான், ஏப்ரல் 19 அன்று மாலை அவசர அவசரமாக இரண்டு மணி நேரம் நின்று, தியாகராயர் நகர் பேருந்து நிலையத்தில், துண்டறிக்கைகள் வழங்கிவிட்டு, அதன் படங்களை முகநூலில் பதிவு செய்துவிட்டு, பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரையைக் “கடமைக்கு” என முடித்துக் கொண்டனர் மே பதினேழு இயக்கத்தினர்!
மொத்தமாக 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, மே பதினேழு முன்னெடுத்த பரப்புரைப் பணிகளை பகுப்பாய்வு செய்திருந்த தோழர் உமர், அதில் 94% விழுக்காட்டுப் பணிகள் பா.ச.க.வின் தேசிய சனநாயகக் கூட்டணியிலிருந்த ம.தி.மு.க.வுக்கும், தலா 2% பணிகள் காங்கிரசு எதிர்ப்புப் பரப்புரைக்கும், பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரைக்கும், தலா 1% பணிகள் அகிலா அம்மாவுக்கும், தி.மு.க. கூட்டணியிலிருந்த மனித நேய மக்கள் கட்சிக்கும் செய்யப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்து அம்பலப்படுத்தினார். பா.ச.க. கூட்டணியிலிருந்த ம.தி.மு.க.வுக்கு ஏன் இவ்வளவு வலிந்து பரப்புரை செய்ய வேண்டும் என்பதையும், மே பதினேழு இயக்கத்திற்குள் அதற்காக நடந்த பல அதிர்ச்சிகர உண்மைகளையும் தோழர் உமரின் 424 பக்க நூலில் சான்றுகளோடு முன்வைத்திருக்கிறார். (தோழர் உமரின் அறிக்கையை முழுவதுமாகப் படிக்க : https://drive.google.com/.../0B_V-itJ3ck.../view...)
இவ்வாறு, இந்தியத் தேர்தல் சனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து – பா.ச.க. கூட்டணிக்கும், தி.மு.க. கூட்டணிக்கும் கூட மறைமுகப் பரப்புரைகள் வழியே துணை நின்ற அமைப்புதான் மே பதினேழு இயக்கம்! ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு கட்சிக்குப் பரப்புரை செய்து வரும் இவ்வியக்கத்தினர், எந்தத் தேர்தலிலும் யாருக்கும் ஓட்டுக் கேட்காத தமிழ்த்தேசியப் பேரியக்கத்தைப் பார்த்து, “போலித் தமிழ்த்தேசியம்” எனக் கூச்சலிடுவதுதான், வேடிக்கையிலும் வேடிக்கை!
“தமிழ்நாடு விடுதலை தான் உண்மையான தமிழ்த்தேசியம்” எனக் கூறும் “உண்மையான தமிழ்த்தேசியவாதிகளான” - மே பதினேழு இயக்கமோ, அவரது “திராவிட”க் கூட்டாளிகளான ஆசிரியர் கி. வீரமணி (தி.க.), பேரா. சுப.வீ. (திராவிட இயக்கத் தமிழர் பேரவை), கொளத்தூர் மணி (தி.வி.க.), கோவை இராமகிருட்டிணன் (த.பெ.தி.க.), வாலாசா வல்லவன் (ம.பெ.பொ.க.), குடந்தை அரசன் (விடுதலைத் தமிழ்ப் புலிகள்), கே.எம். செரீப் (தமிழக மக்கள் சனநாயகக் கட்சி) போன்ற அமைப்புகளோகூட, இதுவரை “தமிழ்நாடு விடுதலை” என்பதை தங்கள் கட்சித் திட்டத்தில் அல்லது கொள்கை அறிக்கையில் வெளிப்படையாக பகிரங்கமாக அறிவிக்கவில்லையே, ஏன் என நாம், கடந்த பதிவில் கேட்ட கேள்விக்கும்கூட இதுவரை இவர்களிடத்தில் பதிலில்லை!
பெரியாரின் தனித்தமிழ்நாடு கொள்கையை, அவரைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் - “உண்மைத் தமிழ்த்தேசியவாதிகள்” எனத் தங்களைத் தாங்களே கூறிக் கொள்ளும் “திராவிட”க் கூட்டமே பகிரங்கமாக முன்வைக்காமல், இந்தியத் தேர்தல் சனநாயகத்தில் நம்பிக்கை வைத்து - ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சிக்கு மாறிமாறிப் பரப்புரை செய்து கொண்டுவரும் தோழர் திருமுருகன் காந்தி, “போலித் தமிழ்த்தேசியம்” எனக் கூறுவது தங்களுக்குத் தானே தெளிவாகப் பொருந்தும் என்றுகூட சிந்திக்காமல் இருப்பதைப் பார்க்கும்போது, பரிதாபமே மேலிடுகிறது.
1990 பிப்ரவரி 25 - தமிழ்த்தேசியத் தன்னுரிமை மாநாட்டிலிருந்து இன்றுவரை இறையாண்மையுள்ள தமிழ்த்தேசக் குடியரசு அமைக்கப்பட வேண்டும் என்ற இலட்சியத்தை வெளிப்படையாக முன்வைத்து, ஆரிய இனவெறி இந்திய அரசின் ஏகாதிபத்தியத்தை மேலோங்கச் செய்யும் காங்கிரசு – பா.ச.க. – சி.பி.எம். கட்சிகளையும், அவற்றுக்குத் துணைபோகும் தி.மு.க. – அ.இ.அ.தி.மு.க. திராவிடக் கட்சிகளையும் எதிர்த்தும், தமிழ்நாட்டுத் தமிழர்களின் அரசியல் உரிமைக்காகவும் வாழ்வுரிமைக்காகவும் தொடர்ச்சியான களப் போராட்டங்களையும், அதன் காரணமாக வழக்குகள் – சிறை என பல்வேறு ஒடுக்குமுறைகளையும் சந்தித்தபோதும், பல்வேறு வெற்றிகளையும் ஈட்டிய அமைப்பு - தமிழ்த்தேசியப் பேரியக்கம்தான்!
இறையாண்மை மீட்பு என்ற இலட்சியத்துடனான தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் செயல்பாடுகள் மட்டும் இவர்களுக்கு எட்டிக்காயாகக் கசக்கிறதாம்! ஆனால், இந்தியத் தேர்தல் சனநாயகம் மட்டும் இவர்களுக்கு இனிக்கிறதாம்! இதோ, அடுத்தடுத்த பதிவுகளில் பேரியக்கத்தின் களச் செயல்பாடுகள் குறித்து முழுமையான விரிவான தகவல்களை இனி காண்போம்!
(தொடரும்)
==============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==============================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===============================

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.