திருமுருகன் காந்தியின் “திராவிட”த் திரிபுவாதங்கள்! [ பகுதி – 5 ] க. அருணபாரதி
[ பகுதி – 5 ]திருமுருகன் காந்தியின் “திராவிட”த் திரிபுவாதங்கள்!
2009ஆம் ஆண்டுக்குப் பிறகு, தமிழ்த்தேசியப் பேரியக்கம் எதிர்கொண்ட போராட்டங்கள், வழக்குகள், ஒடுக்குமுறைகள் குறித்து சிலவற்றை பார்த்து வருகிறோம்.
“ஒன்றிய அரசை நோக்கிய கேள்விகளை 2009 இனப்படுகொலைக்கு பின் தமிழகத்தில் எழுந்த தமிழ்த்தேசிய உணர்வின் மையப்புள்ளியாக இருந்தது. இதன் காரணமாகவே காங்கிரஸ் உடனான கூட்டணியை திமுக முறித்துக் கொள்ளும் நிலை உருவானது. காங்கிரஸ் தனித்து விடப்பட்டதன் காரணம், தமிழ்நாட்டில் எழுந்த தமிழ்த்தேசிய உணர்வு நிலை. மாணவர் எழுச்சி போராட்டங்களில் எழுந்த “தமிழ்நாடு விடுதலை” எனும் முழக்கங்களை அடுத்த ஓரிரு வருடத்திற்குள்ளாக மடைமாற்றியது நாம் தமிழர் கட்சியின் சீமானும், உங்களது அதிதீவிர திராவிடர் எதிர்ப்பு ஒவ்வாமையும்” என்று எழுதுகிறார் மே பதினேழு இயக்கத் தோழர் கொண்டல்சாமி!
2013இல், பாலகன் பாலச்சந்திந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த ஒளிப்படம் வெளியாகி தமிழ்நாட்டில் மாணவர் போராட்டம் எழுச்சி பெற்றது. “தமிழ்நாடு விடுதலை” முழக்கம் அப்போராட்டத்தில் எழுந்ததாக மே பதினேழு இயக்கத் தோழர் கொண்டல்சாமி கூறுவது மிகையான கற்பனை! உண்மையில், அம்மாணவர் போராட்டத்தில் தமிழ்நாடு விடுதலை என்பது முழுக்கமாக எழுந்திருந்தால், இன்றைக்குத் தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலமே வேறுதிசையில் சென்றிருக்கும். ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை!
2013 - மாணவர் போராட்ட எழுச்சியின்போது, சென்னை கடற்கரையில் ஒன்றுகூடல் நடத்திய மே பதினேழு இயக்கம் என்ன கோரிக்கை வைத்தது? “ஐ.நா.வும் சர்வதேச சமூகமும் 2002ஆம் ஆண்டு தமிழீழத்திற்கு கொடுக்கப்பட்ட தன்னாட்சி அதிகாரத்தை மறுத்து, இனப்படுகொலை செய்த சிங்கள பேரினவாதத்தின் கீழ் வாழ தமிழர்களை வலியுறுத்தி வருகிறது. இந்த போக்கை கண்டித்து இனப்படுகொலை செய்த சிங்களவர்களுடன் வாழ முடியாது என்பதை அறிவித்து தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை கோரியும், தமிழீழத்திற்க்கு இடைக்கால நிர்வாக சபை அமைத்திட கோரியும் மாபெரும் ஒன்று கூடல்” என்றே அறிவித்தது. இதில் எங்கே “தமிழ்நாடு விடுதலை” முழக்கம் இருக்கிறது?
உண்மையில், தமிழீழ இனப்படுகொலைக் குற்றவாளிகளை கூண்டிலேற்று, தமிழீழத்துக்கா பொது வாக்கெடுப்பு ஆகிய இரு கோரிக்கைகளே 2013 மாணவர் போராட்டத்தின் முதன்மை முழக்கங்களாக இருந்தன. ஈழ விடுதலைக்கெதிரானதாகவும், இனப்படுகொலைக் குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருந்த அமெரிக்கத் தீர்மான எதிர்ப்பு என்றளவிலும், அத்தீர்மானத்தை ஆதரிக்குமாறு இந்திய அரசை வலியுறுத்தி வந்த தி.மு.க.வின் “டெசோ” குழு - இனத்துரோக நாடகம் அம்பலமாகி, தி.மு.க. - காங்கிரசு கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் அளவிற்கும்தான் அந்த மாணவர் போராட்டம் இட்டுச் சென்றது.
இப்போராட்டத்தின் போது, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவராகப் படித்துக் கொண்டிருந்த தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் ஆ. குபேரன், அங்கு நடந்த மாணவர் போராட்டத்தில் அமெரிக்கத் தீர்மானத்தை அனைவர் முன்னிலையிலும் எரித்து, தமிழ்நாடு முழுவதும் அத் தீர்மானத்தை எரிக்கும் போராட்டம் நடைபெற வழிகாட்டினார். சென்னையில் எனது தலைமையில் நுங்கம்பாக்கம் இலயோலா கல்லூரி முன்பிருந்த சுடுகாட்டில், அமெரிக்கத் தீர்மானத்தை பாடையில் பேரணியாகக் கொண்டு போய் எரிக்கும் போராட்டம் பெரும் காவல்துறை கெடுபிடிகளுக்கிடையே நடந்தது. தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் பல ஊர்களிலும் இவ்வாறான தீர்மான எரிப்புப் போராட்டத்தை நடத்தினர்.
கடந்த 2011ஆம் ஆண்டே, தமிழினப்படுகொலையை நிகழ்த்திய இலங்கை அரசின் மீது அன்றைய தமிழ்நாடு அரசு பொருளாதாரத் தடையை அறிவித்து தீர்மானம் இயற்றியது. ஆயினும், அதை செயல்படுத்துகின்ற பொறிமைவு எதுவும் தமிழ்நாடு அரசிடம் இல்லை! இவ்வாறான நிலையில், தான் மாணவர் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வந்த சிங்களர்களை வெளியேற்றும் போராட்டத்தை அதிரடியாக முன்னெடுத்தது தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
2013இல் (16.03.2013) தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கு சுற்றுலாப் பயணியாக வந்த சிங்கள பௌத்த பிக்குவும், அவருடன் வந்த சிங்களர்களும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் மற்றும் நாம் தமிழர் கட்சித் தோழர்களால் வெளியேற்றப்பட்டனர். 12 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 147, 294, 323, 341 மற்றும் 506(2) போன்ற ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ததுடன், அவர்களை திருச்சி சிறையில் அடைத்தது. இப்போராட்டம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்போராட்டத்தைத் தொடர்ந்து, அடுத்த சில நாட்களில் திருச்சி – சென்னை உள்ளிட்ட இடங்களிலும் நாம் தமிழர் கட்சி, ம.தி.மு.க. உள்ளிட்ட அமைப்பினர் சிங்களர்களுக்கு எதிரானப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, 19.03.2013 அன்று இலங்கைத் தலைநகர் கொழும்பிலுள்ள இந்திய அரசின் தூதரகத்திற்கு முன்னால் சிங்கள இனவெறியர்களான புத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேநாளில், இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரிசு, தில்லியிலுள்ள இலங்கை அரசின் தூதர் இந்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது என்றார். இந்தியாவுடனான தனது நட்பை அழிப்பதற்காக நடந்த நடவடிக்கை இது என்று இலங்கை வெளியுறவுத் துறை அறிக்கை வெளியிட்டது. (“The Government of Sri Lanka whilst condemning such assaults carried out by extreme elements with vested interests in attempting to tarnish our friendly relations with India, is constrained to request Sri Lankan nationals to exercise caution when undertaking visits to the State of Tamil Nadu in India.”).
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிற்கு சிங்கள சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் (Travel Advisory) வெளியானது. கொழும்பு – சென்னை விமான சேவை பாதியாகக் குறைக்கப்பட்டது. இதன்பிறகு தான், தமிழ்நாட்டில் சிங்களப் பயணிகளின் சுற்றுலா குறைந்தது. தமிழ்நாட்டில் சிங்கள நிறுவனங்கள் முதலீடும் குறைந்தது. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், சிங்கள வீரர்கள் இடம்பெறக் கூடாது என தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இளைஞர் அமைப்பான தமிழக இளைஞர் முன்னணி சார்பில், கிரிக்கெட் மைதானத்தின் சுவற்றிலேயே சுவரொட்டி ஒட்டி எச்சரித்தோம். அதன்பிறகு, சென்னை அணியில் இடம்பெற்றிருந்து 2 சிங்கள வீரர்களை நீக்கினர். இவ்விரு செய்திகளும், 25.03.2013 நாளிட்ட “மாலை மலர்” ஏட்டில் வெளியானது.
இவ்வாறுதான், இலங்கை மீதான பொருளியல் தடை தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்தது. அதில் பங்காற்றிய அமைப்பாக தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்நின்றது!
2013 – மாணவர் போராட்ட எழுச்சியின்போது, ஆளும் காங்கிரசுடனான தனது உறவைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில், தி.மு.க. ஒரு நாடாமாடியது. இலங்கையில் நடந்தது தமிழினப்படுகொலை என்ற ஒற்றை வரித் தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டுமெனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. காங்கிரசு நேரடியாக இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிவிடக் கூடாது என்பதற்காக அன்றைய நாடாளுமன்ற சபாநாயகர் மீராக்குமார் தலைமையில் நாடாளுமன்ற அனைத்துக்கட்சிக் குழுவைக் கூட்டியது. அதில், இந்தியத்தேசிய வெறிக் கட்சிகளும், வடக்கத்திய கட்சிகளும் இணைந்து இத்தீர்மானம் தேவையற்றது என ஒரே குரலில் கூறினர். ஆரிய இந்தியமும், திராவிடத் தி.மு.க.வும் ஒரே நேரத்தில் அம்பலமானது!
இவ்வாறான சூழலில்தான், அதுவரை ஆரிய இந்தியக் கட்சிகளான காங்கிரசு – பா.ச.க.வோடு மாறிமாறிக் கூட்டணி கொண்டிருந்த தி.மு.க. – அ.தி.மு.க. திராவிடக் கட்சிகள் 2014இல் அவர்களோடு கூட்டணி காணாமல் ஒதுங்கி நின்றன.
மாணவர் போராட்டத்தின் பின்னணியில் தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய எழுச்சி வராமல் போனதற்குக் காரணம் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் “அதிதீவிர திராவிடர் எதிர்ப்பு ஒவ்வாமை”தான் என இப்போது குறைபட்டுக் கொள்ளும் மே பதினேழு இயக்கம், அப்போது என்ன செய்து கொண்டிருந்தது? அந்தச் சூழலில், ஆரிய இனவெறிக் கட்சியாக உள்ள பா.ச.க.வை தன் தோளில் போட்டு தமிழ்நாடு முழுக்கக் கொண்டு சென்று சுமந்து நின்ற மே பதினேழு இயக்கத்தின் “தோழமை” அமைப்பான ம.தி.மு.க.வுக்கு “மறைமுக”மாக வாக்கு கேட்டுப் பரப்புரை செய்து கொண்டிருந்தது!
“இப்போது, திராவிட இயக்கத்தை அழித்துவிடலாம் என நினைத்து கொண்டு தேசிய உணர்வாளர்கள் சிலர் தமிழ்த்தேசியம் பேசிக் கொண்டு புறப்பட்டுள்ளனர். இதைத் தடுக்க அ.தி.மு.க, தி.மு.க. இணைந்து செயல்பட வேண்டும். இங்கு பொது எதிரியை கால் ஊன்ற விடக்கூடாது. இந்த மனப்பான்மையை அதிமுக, திமுக இரு கட்சிகளின் தலைமைகளும், தொண்டர்களும் யோசியுங்கள். நான் இதை எந்த சுயநலத்தோடு சொல்லவில்லை” என்று பேசினார் ஐயா வைகோ. (காண்க: தமிழ் இந்து திசை, 10.12.2014, https://www.hindutamil.in/news/tamilnadu/24317-.html).
இவ்வாறு, ஒருபக்கம், ஆரியக் கட்சிகளான காங்கிரசு – பா.ச.கவை தமிழ்நாட்டில் கொண்டு வந்து நிலைப்படுத்துவது, இன்னொருபக்கம் திராவிடக் கட்சிகள் வீழ்ந்து விடாமல் பாதுகாப்பது என “திறம்பட” செயல்பட்ட ம.தி.மு.க.தான் இன்று வரை மே பதினேழு இயக்கத்தின் “தோழமை” இயக்கமாகத் திகழ்கிறது. 2014 தேர்தலுக்குப் பிறகு, தி.மு.க. – அ.தி.மு.க. ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளும், காங்கிரசு – பா.ச.க. என ஆரியவெறிக் கட்சிகளை தன் தோளில் மாறிமாறி சுமக்கும், தொன்றுதொட்ட திராவிட வழக்கத்திற்கு வந்தார்கள்.
“தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் “அதிதீவிர திராவிடர் எதிர்ப்பு ஒவ்வாமை” எனக் குறிப்பிட்டு - கவலைப்படுகிறதே மே பதினேழு இயக்கம், அது திராவிடத்தின் இந்த இரட்டை நிலைப்பாடுகளால் எழுந்த ஒவ்வாமையே!
( தொடரும் )
==============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==============================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===============================
Leave a Comment