பொன்முடி - துரைமுருகன் - ஆர்.எஸ். பாரதி இழி பேச்சுகள் - ஈ.வெ.ரா. பாணி! கண்ணியத்துடன் – துணிவுடன் கருத்துகளைப் பகிர்வது தமிழர் மரபு! பெ. மணியரசன்
பொன்முடி - துரைமுருகன் - ஆர்.எஸ். பாரதி
இழி பேச்சுகள் - ஈ.வெ.ரா. பாணி!
கருத்துகளைப் பகிர்வது தமிழர் மரபு!
பெ. மணியரசன்
பெ. மணியரசன்,
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
================================
நாள்: 11.4.2025
மு. க. ஸ்டாலின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக உள்ள முனைவர் பொன்முடி அவர்கள், பெரியார் திராவிடர் கழகக் கூட்டத்தில் உரையாற்றியபோது, சைவம், வைணவம் ஆகிய தமிழர்களின் இரு சமயப்பிரிவுகளையும் படுகேவலமாக இழிவுபடுத்திப் பேசியது ஊடகங்களில் அப்படியே வெளிவந்தது. அதில் அவர், கடவுள் நம்பிக்கையுள்ளவர்களை பாலியல் தொழிலுடன் ஒப்பிட்டுப் பேசி நையாண்டி செய்தது அம்பலமாகி உள்ளது. இதற்குக் கடுமையான எதிர்ப்புகள் வந்தவுடன், மு.க. ஸ்டாலின் பொன்முடியைத் தி.மு.க. வின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி, திருச்சி சிவா அவர்களை அப்பொறுப்பில் அமர்த்தியுள்ளார்.
பாலியல் தொழிலாளியின் இல்லத்திற்குச் சென்ற ஓர் ஆண், கட்டண விவரம் விசாரித்ததாகவும், அதற்கு அந்தப் பெண், “சைவம் என்றால் பத்து ரூபாய், வைணவம் என்றால் ஐந்து ரூபாய்” என்று சொன்னார். தான் பாலுறவு கொள்ளும் இரு வடிவங்களைச் சொல்லி - அதனதன் கட்டணத்தைக் கூறினாள்” என்று சொற்களாலும் கைச் சைகைகளாலும் பொதுக்கூட்டத்தில் விளக்கிய பொன்முடி, இவ்வளவுதான் சைவம், வைணவம் என்ற சமயங்கள் என்று இழிவாகச் சிரித்துப் பேசுவது வெளியாகி உள்ளது.
இதே நேரத்தில், மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் மிக மூத்த அமைச்சராகவும், தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும் உள்ள துரைமுருகன், தி.மு.க. வை விமர்சித்த எதிர்க்கட்சியினருக்குப் பதிலடி கொடுக்கும்போது, “திமுகவினரை, நொண்டி, நொடம், கூன், குருடு என்று நினைக்கிறீர்களா? பதிலடி கொடுப்போம்” என்று நையாண்டியாகப் பேசியது அப்படியே ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
பொன்முடியும், துரைமுருகனும் மாணவப் பருவத்திலிருந்து திராவிடப் பாசறையில் பயிற்சி பெற்றவர்கள். ஈ.வெ.ரா. மற்றும் கருணாநிதியின் பக்தர்கள். பொன்முடி ஏற்கெனவே பெண்களை இழிவுபடுத்திப் பேசியதற்காகக் கண்டிக்கப்பட்டார்.
அதேபோல் துரைமுருகனும் பொது வெளியில் இழிவாகப் பேசியதற்காகக் கண்டிக்கப்பட்டவர். பட்டியல் வகுப்பு மக்களை இழிவுபடுத்திப் பேசியதற்காக தி.மு.க. வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஏற்கெனவே கண்டிக்கப்பட்டவர். அவர் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர் உச்சநீதிமன்ற நீதிபதியானது தி.மு.க. போட்ட பிச்சை என்று பேசி இழிவுபடுத்தினார்.
தி.மு.க. தலைவர்கள் இதுபோல் மக்களை இழிவுபடுத்தி, தங்களை அவர்களின் “நாட்டாமைகளாக”க் காட்டிக் கொள்வது தொடர்ந்து கொண்டே உள்ளன. காரணம் என்ன?
சுயமரியாதையை மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதாகப் பேர் பண்ணிக்கொண்டு, ஆணவத்தினால் மக்களின் சுயமரியாதையை இழிவுபடுத்துபவர்கள் ஈ.வெ.ரா. வாதிகள்!
மக்களைப் பல்வேறு வடிவங்களில் இழிவுபடுத்தி, அவர்களை மீட்க வந்த நாட்டாமைகளாகக் காட்டிக் கொண்டவர்கள் ஈ.வெ.ரா. வும் கருணாநிதியும்! அவர்களின் கொச்சைச் சொற்களை ரசித்துக் கேட்டுக்கேட்டுப் பழக்கப்பட்ட பொன்முடி, துரைமுருகன், ஆர். எஸ். பாரதி போன்றோர் தங்களின் தலைவர்களின் பாணியில் பேசி பெருமைப்பட்ட பழக்கத்தினால் வந்து விழுந்த இழிசொற்கள் இவை!
“கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி, கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்” என்பவை ஈ.வெ.ரா. வின் பொன்மோழிகள்! அவற்றைத் தமிழ்நாடெங்கும் அவரின் தொண்டர்கள் எழுதி வைத்துள்ளார்கள்.
“குச்சுக்காரியைத் தேவதாசி என்று புகழ்வது போல” என்று ஓர் உவமை கூறியவர் ஈ.வெ.ரா. தி.மு.க. தலைவர் அண்ணாவையே “தாசிமகன்” என்று 1952-இல் அண்ணாவின் சொந்த ஊரான காஞ்சியில் போய் பொதுக்கூட்டத்தில் பேசியவர் ஈ.வெ.ரா! அந்தப் பாணியில்தான், பொன்முடியும், திருநீறு பூசிக்கொள்வதையும் நெற்றியில் நாமம் போட்டுக் கொள்வதையும் பாலியல் தொழிலாளி கொள்ளும் இரு வடிவ உடலுறவு வகைகளுடன் ஒப்பிட்டு இழிவுபடுத்தியுள்ளார்.
இந்துமதம் பற்றிப் பேசிய கருணாநிதி, “இந்து என்றால் திருடன் என்று பொருள்” என்றார். இவ்வாறு அவர் கொச்சைப்படுத்தியது இளமைக்காலத்தில் அல்ல, அவரின் முதுமைக்காலத்தில்.
நமக்கான படிப்பினை:
கடவுள் ஏற்பும் - கடவுள் மறுப்பும் ஒருவரின் அடிப்படைக் கருத்துரிமை! அந்தந்தக் கருத்துகளைக் கண்ணியமாகப் பரப்புரை செய்ய அனைவர்க்கும் உரிமை உண்டு! ஆனால், இவ்விரண்டில் எதையும் இழிவுபடுத்தி கொச்சைப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை.
கடவுள் மறுப்பை அறிவியல் சார்ந்த இயங்கியல் வழியாக வெளிப்படுத்திய காரல் மார்க்சோ அல்லது லெனினோ, அவர்களின் வழிவந்தோரோ எங்கேயும் கடவுள் வழிபாட்டை, ஈ.வெ.ரா வையும் அவருடைய அமைப்பைச் சேர்ந்தவர்களையும் போல் இழிவுபடுத்தி, கொச்சைப்படுத்திப் பேசியது இல்லை - எழுதியதில்லை. தமிழ்நாட்டிலும் கம்யூனிஸ்ட்டுகள் அந்தப் பண்பைக் கடைபிடிக்கின்றனர்.
பண்பாடு, பக்குவம் இரண்டையும் சீரழித்த ஈ.வெ.ரா. வகையாறாக்கள்தான், தமிழ்நாட்டில் ஆன்மிகத்தை - ஆன்மிகர்களைக் கொச்சையாகப் பேசி குதூகலிக்கும் “பகுத்தறிவுப் பகலவன்கள்!”
தமிழ்நாட்டில் கடவுள் மறுப்பு - மூடநம்பிக்கை எதிர்ப்பு - பிராமணிய ஆதிக்க எதிர்ப்பு போன்றவற்றை முன்வைக்கும் இளந் தமிழர்கள், எந்த நிலையிலும் அடுத்தவரை இழிவுபடுத்தாமல், ஆணவத்தின் உச்சிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டு மக்களுக்குக் கட்டளை இடும் எசமானர்களாகத் தங்களைக் கருதிக் கொள்ளாமல், மக்களில் தானும் ஒருவன் என்ற பண்பாட்டுடன், தன்னடக்கத்துடன் அதே வேளை நெஞ்சுரத்துடன் கருத்துகளைச் சொல்லுங்கள், எழுதுங்கள்!
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================
Leave a Comment