தி.மு.க. ஆட்சியின் மாநில சுயாட்சி தீர்மானம் வெற்று ஆரவாரமே! கி. வெங்கட்ராமன் அறிக்கை!
தி.மு.க. ஆட்சியின் மாநில சுயாட்சி தீர்மானம்
வெற்று ஆரவாரமே!
கி. வெங்கட்ராமன்
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
கி. வெங்கட்ராமன் அறிக்கை!
=====================================
மாநில சுயாட்சி குறித்து முக்கியமான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்மொழியப் போகிறார் என்ற அறிவிப்பு பல நாட்களுக்கு முன்பாகவே வந்து, பெரிய எதிர்பார்ப்போடு மக்கள் காத்திருந்த நிலையில், ஏமாற்றம் அளிக்கும் தீர்மானத்தையே மு.க. ஸ்டாலின் முன்மொழிந்து, அதையே சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாட்டு மக்களை எளிதில் ஏமாற்றிவிடலாம், அவர்கள் அரசியல் ஏமாளிகள் என தி.மு.க. தலைமை கருதுவதையே இத்தீர்மானம் எடுத்துக்காட்டுகிறது.
கருணாநிதி ஆட்சியில் 1971 லேயே மாநில உரிமைக்காக இராசமன்னார் குழு அமைத்தது குறித்து தம்பட்டம் அடித்துக் கொள்ளும் முதலமைச்சர், அதனைச் செயல்படுத்த என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என உறுதியாகச் சொல்லமுடியவில்லை.
இராசமன்னார் குழு அறிக்கையை முன்வைத்துத் தீர்மானம் நிறைவேற்றிய பின்னர்தான், எம்ஜிஆர் ஆட்சியை அரசமைப்பு உறுப்பு 356-இன்படி கலைப்பதற்கு இந்திராகாந்தி அரசை வலியுறுத்தினார் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி.
மாநிலங்களின் காவல் துறை அதிகாரத்தை முற்றிலும் பறித்து மாநில அரசுக்குச் சொல்லாமலேயே புலனாய்வு செய்வதற்கும், மாவட்ட நீதிமன்றங்களை மாநில அரசின் இசைவு கேட்காமலேயே என்.ஐ.ஏ. நீதிமன்றங்களாக மாற்றுவதற்கும் வழிசெய்யும் என்.ஐ.ஏ. சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்த கட்சிதான் தி.மு.க.!
இன்று, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு பற்றி தீர்மான உரையின்போது, குறைபட்டுக் கொள்ளும் மு.க. ஸ்டாலினது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான், இன்றுள்ள வடிவிலேயே ஜி.எஸ்.டி. வரிமுறையை ஆதரித்து வாக்களித்தனர் என்பதை அரசியல் அறிவுள்ளவர்கள் மறந்துவிட மாட்டார்கள்.
தீர்மானத்தை முன்மொழிந்து பேசியபோதுகூட ஆளுநர் பதவி கூடாது என்றோ, இராசமன்னார் குழு பரிந்துரைத்தவாறு ஆட்சிக் கலைப்பு உறுப்பு 356 நீக்கப்படவேண்டுமென்றோ, இந்திய அரசு மும்மொழிக் கொள்கையை ஒரு நிர்வாக ஆணையாகப் பிறப்பித்து, அதனைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்த மறுத்தால் ஆட்சியைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை நிறுவலாம் எனக் கூறும் உறுப்பு 365 - ஐ நீக்க வேண்டும் என்றோ, மு.க. ஸ்டாலின் பேசவில்லை. மோடி அரசின் கல்விக்கொள்கையைப் பள்ளிக் கல்வியிலும் பல்கலைக்கழகத்திலும் செயல்படுத்திக்கொண்டே, கல்வி அதிகாரம் மாநிலத்துக்கு மீண்டும் வரவேண்டும் என்று கூறுவது ஏமாற்றுவித்தை.
ஏற்கெனவே, இராசமன்னார் குழு அறிக்கை, அதன்மீது சட்ட மேலவையில் ம.பொ.சி. முன்வைத்த கூர்மையான திருத்தங்கள், இந்திய அரசு அமர்த்திய சர்க்காரியா ஆணைய அறிக்கை, நீதிபதி பூன்ஞ் குழு அறிக்கை என அடுக்கடுக்கான ஆவணங்கள் இருக்கும்போது, மாநிலத் தன்னாட்சிக்கான குறிப்பான கோரிக்கைளை வலியுறுத்தாமல், இன்னொரு ஆய்வுக்குழுவை அமர்த்தியிருக்கிறார்கள்.
ஆறு மாதத்தில் இடைக்கால அறிக்கை, இரண்டு ஆண்டுகளில் இறுதி அறிக்கை என்பதெல்லாம் இன்று தமிழ்நாட்டு இளையோரிடையே எழுந்து வரும் இன உரிமை உணர்வைத் திசைதிருப்பும் வெற்று முயற்சியே தவிர வேறொன்றுமில்லை.
இராசமன்னார் குழு அறிக்கைக்குப் பிறகும், தங்கள் பதவித் தேவைக்கு ஏற்ப இந்திய ஆட்சியாளர்களின் இன உரிமைப் பறிப்பில் துணைபோனவர்கள்தான் தி.மு.க.வினர். அந்தப்போக்கு, இனியும் தொடராது என்பதற்கு எந்த உறுதியும் இல்லை.
இப்போது ஆரவாரத்தோடு பேசுகிற நாடாளுமன்றத் தொகுதி சீரமைப்பு குறித்த தீர்மானமும் இருக்கிற நிலை தொடர வேண்டும் என்று கூறியதே தவிர, தெளிவான மாற்றுத் திட்டம் எதையும் சொல்லவில்லை. ஏனெனில், காங்கிரசு உள்ளிட்ட இந்தி மாநிலக் கட்சிகள் வருத்தப்படக் கூடாது என்பதற்குத்தான்.
தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க. அரசின் கண்துடைப்புத் தீர்மானங்களில் மயங்கிவிடாமல், தமிழின உரிமைக்கும், முழுமையான கூட்டரசுக்கும் உறுதியாகக் குரல் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================
Leave a Comment