அதிகாரப் போட்டிக்காக மாணவர்களின் கல்வியை பாழாக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என். இரவி!கி. வெங்கட்ராமன் கண்டனம்!
அதிகாரப் போட்டிக்காக மாணவர்களின் கல்வியை
பாழாக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என். இரவி!
கி. வெங்கட்ராமன்
தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர்
கி. வெங்கட்ராமன் கண்டனம்!
=========================================
ஆளுநரின் அத்துமீறலுக்குக் கடிவாளம் போட்டு, அண்மையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்காமல், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். இரவி, வரும் ஏப்ரல் 25 அன்று, பல்கலைக்கழகத் துணை வேந்தர்களின் கூட்டத்தைக் கூட்டி இருப்பதும், அதில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் பங்கேற்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கல்விக்கான பல்கலைக்கழகத்தை அதிகாரப் போட்டிக் களமாக மாற்றி, தமிழ்நாட்டு மாணவர்களின் படிப்பைப பாழாக்குவது அப்பட்டமான மனிதப் பகைச் செயலாகும்!
தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை அறிவித்து, தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய சட்ட முன்வடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்த்தானது, அரசமைப்புச் சட்ட உறுப்பு 200க்கு எதிரானது; கூட்டாட்சி முறைமைக்குப் பொருத்தமற்றது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புரைத்தது. ஆளுநர் ஆர்.என். இரவியின் செயல் தனது பதவிக்கான விருப்பதிகாரத்தை தன் சொந்த விருப்பு வெறுப்புக்கும், தான் பின்பற்றும் தத்துவத்திற்கும் ஏற்ப வளைத்ததாகும் என்றும் உச்ச நீதிமன்றம் சாடியது.
உச்ச நீதிமன்றம் உறுப்பு 142இன் படியான தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, பல்கலைக்கழக வேந்தர் பதவி தொடர்பான 10 சட்ட முன்வரைவுகளை ஆளுநர் கையெழுத்திட்டு நிறைவேறியதாகக் கருத வேண்டும் என்று தீர்ப்புரைத்து விட்டது. அதன் பொருள், இனி ஆளுநர் பல்கலைக்கழக வேந்தர் இல்லையென உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு விட்டது என்பதாகும்!
இதற்கென்று தனி சட்டம் இயற்றி அறிவிப்பதென்பது சட்ட சடங்கே தவிர, அதற்கு மேல் ஒன்றுமில்லை! தமிழ்நாடு அரசும், அந்த 10 மசோதாக்கள் சட்டமாக இயற்றப்பட்டதாக அரசிதழில் அறிவித்துவிட்டது.
ஆரியத்துவ நெறியைத் தவிர, அரசமைப்புச் சட்ட நெறிமுறை எதற்கும் தான் கட்டுப்பட்டவர் அல்ல என்பதை பலமுறை வெளிப்படுத்தியிருக்கிற ஆளுநர் ஆர்.என். இரவி, இப்போது உச்ச நீதிமன்றம் தலையில் குட்டிய பிறகும் திருந்துவதாகத் தெரியவில்லை!
ஆர்.என். இரவியின் சட்டமீறலுக்கு குடியரசுத் துணைத் தலைவர் தங்கர் வலுசேர்க்கிறார். அவரும் தனது அரசமைப்புச் சட்ட பொறுப்பிலிருந்து மீறுவதைப் பற்றிச் சற்றும் கவலைப்படவில்லை.
தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களைத் தனது அதிகாரப் போட்டிக் களமாக ஆளுநர் மாற்றுவதால், யார் ஆணைக்குக் கட்டுப்படுவது என அறியாமல் துணைவேந்தர்கள் இக்கட்டில் வைக்கப்படுகிறார்கள். ஏற்கெனவே நிதி நெருக்கடி, ஊழல் முறைகேடுகள் போன்றவற்றால், நிலைகுலைந்துள்ள பல்கலைக்கழகங்கள் முற்றிலும் செயலற்றுப் போவதற்கே ஆளுநரின் இந்தச் சட்டமீறல் இட்டுச் செல்லும்.
பல்கலைக்கழகம் மற்றும் அவற்றில் இணைந்துள்ள கல்லூரி மாணவர்களின் கல்வி பாழாவதைப் பற்றி, சற்றும் கவலைப்படாமல், பாதிக்கப்படுவது பெரிதும் தமிழ்நாட்டு மாணவர்கள் தானே என்ற வன்மத்தோடு ஆர்.என். இரவி நடந்து கொள்கிறார். ஏற்கெனவே பட்டமளிப்பு விழாவுக்கு நாள் கொடுக்காமல், ஆண்டுக்கணக்கில் காலம் தாழ்த்தி பல்லாயிரக் கணக்கான மாணவர்கள், உரிய காலத்தில் பட்டச் சான்றிதழ் பெற முடியாமல், அதனால் வெளிநாட்டுப் பணி வாய்ப்பையும், மேல் படிப்பு வாய்ப்பையும் இழந்ததையும், பற்றி கொஞ்சமும் கருதிப் பார்க்காமல் கடந்து சென்றவர்தான் ஆர்.என். இரவி!
சட்டப்புறம்பாக ஆளுநர் ஆர்.என். இரவி கூட்டியுள்ள கூட்டத்தை, பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு, சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஆளுநரின் இந்தச் சட்டமீறலுக்கு எதிரான அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆளுநர் ஆர்.என். இரவி அப்பட்டமான இந்தச் சட்டமீறல் கூட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்துகிறேன்.
================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================
Leave a Comment