ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

வேளாண்மை காக்க ஓ.என்.ஜி.சியை எதிர்த்துப்போராடிய பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை!அநீதித் தீர்ப்பு! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அறிக்கை!

வேளாண்மை காக்க ஓ.என்.ஜி.சியை எதிர்த்துப் போராடிய பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை!

அநீதித் தீர்ப்பு!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அறிக்கை!

 

காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிதாகப் பெட்ரோலியக் கிணறுகள் தோண்டக் கூடாது, மீத்தேன் எடுக்கக் கூடாது, காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று இயற்கை வேளாண்மை அறிஞர் ஐயா கோ. நம்மாழ்வார் அவர்கள் தொடங்கி வைத்த போராட்டத்தின் தொடர்ச்சியாகக் கடந்த 2015ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் கோட்டூர் வட்டம் – விக்கிரபாண்டியம் கிராமத்தில் புதிதாகத் தோண்டப்பட்ட பெட்ரோலியக் கிணற்றை எதிர்த்து அவ்வூரில் போராட்டம் நடத்தியதற்காகத் தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் திரு. பி.ஆர். பாண்டியன் அவர்களுக்கும், அவ்வூரின் முன்னாள் ஊராட்சித் தலைவர் திரு. செல்வராசு அவர்களுக்கும், 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 13 ஆயிரம் ரூபாய் தண்டத் தொகையும் விதித்து, திருவாரூர் மாவட்ட சிறப்பு அமர்வு நீதிமன்றம் நேற்று (06.12.2025) தீர்ப்பு வழங்கியிருப்பது அநீதியாகும்.

 

இப்போராட்டம் காவிரி வேளாண் மண்டலத்தை – பாதுகாத்து, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வுரிமைக் காப்பு நோக்கம் கொண்ட, பொது நலப் போராட்டம் ஆகும். இப்படிப்பட்ட போராட்டங்கள் பல ஆண்டுகளாக நடந்தன. ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். சிறைக்கும் அனுப்பப்பட்டனர். இன்றும் அது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடக்கின்றன.

 

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது மக்களின் போராட்ட அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில், திருவாரூர் மாவட்ட சிறப்பு அமர்வு மகிளா நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ், ஓ.என்.ஜி.சி. தரப்பு சாட்டிய குற்றச்சாட்டுகளை அப்படியே ஏற்று அனுமதியின்றி கூடியதற்கு 3 ஆண்டுகள், அனுமதியின்றி ஓ.என்.ஜி.சி. வளாகத்தில் நுழைந்ததற்கு 2 ஆண்டுகள், கொலை மிரட்டல் விடுத்தது என்ற குற்றச்சாட்டுக்கு 3 ஆண்டுகள், பொதுச் சொத்தை சேதப்படுத்தியதற்கு 5 ஆண்டுகள் என மொத்தம் 13 ஆண்டுகள் தொடர் சிறைத் தண்டனையும், 13 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.   

 

பல ஆண்டுகளாக டெல்டாவில் நடந்து வந்த மீத்தேன் எதிர்ப்பு – ஐட்ரோகார்பன் எதிர்ப்பு – புதிதாகப் பெட்ரோலியக் கிணறு தோண்ட எதிர்ப்பு எனப் பல போராட்டங்கள் பல அமைப்புகளால் நடத்தப்பட்டன. பல வழக்குகளில் காவல்துறை, விக்கிரபாண்டியம் வழக்கில் போடப்பட்ட  தண்டனைப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் போட்டது. ஆனால், எந்த நீதிமன்றமும் திருவாரூர் மாவட்ட சிறப்பு அமர்வு மகிளா நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் போல் இப்படிக் கொடூரமான தண்டனைகள் வழங்கவில்லை.

 

இந்திய அரசின் ஓ.என்.ஜி.சி. சார்பில் வாதிட்ட வழக்கறிஞரின் வாத வேண்டுகோள்களை திருவாரூர் மாவட்ட சிறப்பு அமர்வு மகிளா நீதிமன்ற நீதிபதி அப்படியே ஏற்று, அதைத் தீர்ப்பாக்கி விட்டார் போல் தெரிகிறது. இத்தீர்ப்பு தமிழ்நாட்டின் நீதித்துறையின் பெருமையில் கரும்புள்ளியாகும்.

 

நீதிமன்றமே நீதியைப் பலியிடக் கூடாது. இந்தியாவில் மிச்சம் மீதியாக இருப்பது நீதித்துறை தன்னாட்சிதான். அதற்கும் ஆபத்து வரக்கூடாது. இதுபற்றி சட்டத்துறை வல்லுநர்கள், வழக்கறிஞர்கள் – மனித உரிமைச் சிந்தனையாளர்கள் விவாதிப்பது நல்லது. எதிர்காலத்தில் நீதித்துறையில் இவ்வாறான பாதிப்புகள் ஏற்படாமல், நடுநிலையோடு நீதிநெறி நிலைநாட்டப்பட வேண்டும்.


===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

==============================



No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.