ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

இந்தியத் தேர்தல் ஆணையமே! வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை வழங்காதே! 2025 திசம்பர் 16 அன்று ஒரே நாளில் - சென்னை மற்றும் திருச்சியில்மாபெரும் தமிழர் ஆர்ப்பாட்டம்!

இந்தியத் தேர்தல் ஆணையமே!

வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை வழங்காதே!

சிறப்புத் தீவிர சீராய்வை உடனே நிறுத்து!

தமிழர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்காதே!

2025 திசம்பர் 16 அன்று ஒரே நாளில்...

சென்னை மற்றும் திருச்சியில்

மாபெரும் தமிழர் ஆர்ப்பாட்டம்!

காலம் : தி.பி. 2058 கார்த்திகை 30 - 16.12.2025 செவ்வாய் காலை 10.30 மணிக்கு
 
அன்புடையீர்!

வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை
வழங்காதே!, சிறப்புத் தீவிர சீராய்வை உடனே நிறுத்து!, தமிழர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்காதே! ஆகிய முழக்கங்களோடு, வரும் 2025 திசம்பர் 16 அன்று ஒரே நாளில், சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் தலைமையிலும், திருச்சியில் காதி கிராப்ட் (தொடர்வண்டி சந்திப்பு) அருகில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை தலைமையிலும், மாபெரும் தமிழர் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.

உலகத் தமிழர்களின் தாயகம் எனப் போற்றப்படும்
தமிழ்நாட்டிலேயே, தமிழர்கள் அகதிகளாகமாறும்ஆபத்தின் விளிம்பில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு, தொழில் – வணிகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, நிலம் போன்ற உடைமைகள் பிடுங்கப்பட்டு, இறுதியாக வாக்குரிமையும் பறிக்கப்படும் ஆபத்து நம்மை நெருங்கி விட்டது!

இலட்சக்கணக்கான தமிழர்களுக்கு
வாக்குரிமையை மறுத்துவிட்டு, வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டில் குடியேறியுள்ள பீகாரிகள் உள்ளிட்ட இந்திக்காரர்களுக்கு வாக்குரிமை வழங்கி, அவர்களை தமிழ்நாட்டின் நிரந்தரக் குடிமக்களாக மாற்றும் சதித் திட்டத்தை, இந்தியத் தேர்தல் ஆணையம் "சிறப்புத் தீவிர சீராய்வு" (Special Intensive Revision – SIR) என்ற திட்டத்தின் வழியே செய்து கொண்டிருக்கிறது.

வரும்
2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, இந்தியத் தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வரும் இந்த சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வுத் திட்டம் (SIR), செயற்கையான முறையில் இந்திக்காரர்கள் உள்ளிட்ட அயல் மாநில வாக்காளர்களை தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் சேர்க்க உதவுகிறது. அதன்வழியே,தமிழ்நாட்டு அரசியலில் செயற்கையான குறுக்கீட்டையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும்.

பீகாரில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின்படி 42
இலட்சம் பேரும், அரியானாவில் 25 இலட்சம் பேரும் நம் கண் முன்னேயே வாக்காளர் பட்டியலிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அரியானாவின் 10 வாக்குச்சாவடிகளில், பிரேசிலை சேர்ந்த ஒரு நடிகையின் ஒரே புகைப்படத்தைக் கொண்டு போலியான முறையில் 22 வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட செய்தி, தேர்தல் ஆணையம் எந்தளவிற்கு சீரழிந்து கிடக்கிறது என்பதை முகத்தில் அடித்தாற்போல் உணர்த்தியது.

இசுலாமியர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், நலிந்த பிரிவினர் என பீகாரிலும், அரியானாவிலும் தகுதியான வாக்காளர்களை நீக்கியதன் மூலம் பா.ச.க.வுக்கு பணியாற்றிய தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டிலோ இலட்சக்கணக்கான தமிழர்களை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக பீகாரிகள் உள்ளிட்ட வெளிமாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதன் வழியாக அதே பணியை செய்து கொண்டிருக்கிறது.

வேலைக்காக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் சென்ற வாக்காளர்களை பட்டியலில் இணைப்பது இந்த சீராய்வுத் திட்டத்தின்நோக்கமாக(Point No: 7, Election Commission of India Order No: 23/ERS/2025 dated 24.06.2025) இந்தியத் தேர்தல் ஆணையம் குறிப்பிடுகிறது. இதன் வழியாக, இந்த "சிறப்புத் தீவிர சீராய்வு" (Special Intensive Revision – SIR) திட்டம், வெளி மாநிலங்களிலிருந்து வேலைக்காக தமிழ்நாட்டில் குடியேறியவர்களை தமிழ்நாட்டுப் பட்டியலில் இணைப்பதையே நிறைவேற்றப் போகிறது.

தமிழ்நாடு – இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் (https://www.elections.tn.gov.in), சீராய்வு படிவத்தை எப்படி நிரப்புவது எனக் குறிப்பிடுவதற்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விளக்க ஆவணத்தில் (காண்க: https://www.elections.tn.gov.in/SIR2026/SIR_EF_ENGLISH.pdf) தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் ஒருவர் இணைந்திடத் தேவையான 13 ஆவணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில்
13ஆவது ஆவணம் - பீகாரின் 2025ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியல்!அதாவது, பீகாரி ஒருவர் தனது சொந்த மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால், அவர் அதை சுட்டிக்காட்டி அங்கிருக்கும் பட்டியலிலிருந்து தன்னை நீக்கிக் கொண்டு, தமிழ்நாட்டு பட்டியலில் தன்னை சேர்த்துக் கொள்ள விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடு வெளிப்படையாக ஏற்படுத்தித் தரப்படுகிறது.

தமிழ்நாட்டில் பீகாரிகள் மட்டுமின்றி, உ.பி., அரியானா, ம.பி.,
சார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு இந்தி மாநிலங்களைச் சேர்ந்த சற்றொப்ப 1 கோடிக்கும் மேற்பட்டோர் குடியேறியுள்ள நிலையில், அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட்டால், தமிழ்நாட்டு அரசியலைத் தீர்மானிக்கும் ஆற்றலாக அவர்கள் வலுப் பெறுவார்கள். தமிழ்நாட்டையே நிரந்தர வசிப்படமாகக் கொண்டு இங்கேயே நிலைபெற அவர்கள் அதிகாரம் பெறுவார்கள்.

அதன்பிறகு, அரசு நிர்வாகம், கல்வி, வேலை வாய்ப்புத் தேர்வு அனைத்திலும் இந்தியைத் திணிப்பது தீவிரமாக நடக்கும்.
ஏற்கெனவே உள்ள ஆங்கிலத்தோடு, இந்தியும் சேர்ந்து கொண்டு தமிழர்களை சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கி விடும்!

தமிழர்கள் தங்கள் வாக்குரிமையை உறுதி செய்து கொள்ள வேண்டுமெனில், தேர்தல் ஆணையம் கொடுக்கும் SIR படிவத்தை உடனே நிரப்பித் தர வேண்டுமாம்.
அதிலோ, 2002ஆம் ஆண்டு வாக்களித்த விவரங்களையோ, அவரது இல்லத்தினர் வாக்களித்த விவரங்களையோ இணையதளத்தில் பெயரைப் போட்டுப் பார்த்து, நாமே தேடித் தர வேண்டுமாம். தேர்தல் அலுவலர்கள் செய்ய வேண்டிய அலுவலகப் பணிகளை, வாக்காளரே செய்ய வேண்டும் என நிர்பந்தித்து, வாக்காளர்கள் அதை சரியாக நிரப்பித் தரவில்லை என்ற போலிக் காரணத்தைக் கூறி, தமிழர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவது தான் இதன்வழியே நடக்கப் போகிறது.

"சிறப்புத் தீவிர சீராய்வு" திட்டத்தை
எதிர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் ஆளும் தி.மு.க.வோ, அத்திட்டத்தை நிறைவேற்ற தனது மாநில அரசு அதிகாரிகளை வழங்க மாட்டோம் என உறதியாக நின்று அறிவிக்காமல், அத்திட்டத்தை நிறைவேற்றும் களப்பணியாளனாக நின்று கொண்டு, பா..கவுக்கு அடிமை சேகவம் புரிகிறது. அ.தி.மு.க.வோ நேரடியாகவே பா.ச.க. அடிமையாக சீரழிந்து கிடக்கிறது.

பா.
.க.வுக்கு தொடர்ந்து பெரும்பான்மைத் தமிழர்கள் வாக்களிக்க மறுக்கும் நிலையில், இந்திக்காரர்களைத் தமிழ்நாட்டு வாக்காளர்களாக்கி, தமிழ்நாட்டிற்குள்ளேயே பா.ச.க.வுக்கான வாக்கு வங்கியை உருவாக்கிடவே இத்திட்டத்தை முனைப்போடு செயல்படுத்துகிறார்கள். அசாம், திரிபுரா, மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் மண்ணின் மக்களை விட அதிகளவில் இந்திக்காரர்களைப் படிப்படியாகத் திட்டமிட்டுக் குடியமர்த்தி, செயற்கையான வாக்கு வங்கியை உருவாக்கியதன் வழியே,அங்கெல்லாம் பா.ச.க. – காங்கிரசு போன்ற இந்தித் தலைமை கொண்ட கட்சிகளின் ஆட்சி இப்போது நடக்கிறது.

ஆரியத்துவாபா..க.வுக்கு அடிமை வேலை புரியும் திராவிடக் கட்சிகள், ஏற்கெனவே தமிழ்நாட்டில் இந்திக்காரர்களுக்கு வாக்காளர் அட்டை – குடும்ப அட்டை – ஆதார் அட்டை போன்றவற்றை வழங்கி, இந்திய அரசின் தமிழின அழிப்புத் திட்டத்திற்கு துணை போனவைதாம்! இப்போதும் கூட, தமிழர்களை ஏமாற்றுவதற்காக பா.ச.க. எதிர்ப்பு வேடம் போடும் தி.மு.க. போன்ற கட்சிகள், மழைக்காலத்தில் இத்திட்டத்தை நடத்தலாமா என சொத்தைக் காரணத்தைக் கூறிக் கொண்டிருக்கிறதே தவிர, தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்து இந்திக்காரர்களிடம் தரப் போகிறார்கள் என்ற உண்மையான காரணத்தை வெளிப்படையாக எடுத்துக் கூறும் துணிவற்றக் கோழைகளாகவே இருக்கின்றனர். எனவே, இந்தத் திராவிடக் கட்சிகளை நம்பி ஒரு பயனும் இல்லை!

எனவே, தமிழர்கள் விழிப்போடு இத்திட்டத்தை
எதிர்த்துக் களம் கண்டு, பேரெழுச்சியை உருவாக்க வேண்டுமென என அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

கோரிக்கைகள்!
 
இந்தியத் தேர்தல் ஆணையமே!

1. சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வுத் திட்டத்தை உடனே நிறுத்து!

2. வெளி மாநிலத்தவர்க்கு தமிழ்நாட்டில் வாக்காளர் அட்டை
வழங்காதே!

தமிழ்நாடு அரசே!

3.
வெளிமாநிலத்தவர்க்கு குடும்ப அட்டை – ஆதார் அட்டை வழங்காதே!

மொழிவழி
மாநிலம்உருவான1956க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறிய வெளி மாநிலத்தவரை வெளியேற்று!

4. நாகாலாந்து, மிசோரம்,
அருணாச்சலப்பிரதேசம், மணிப்பூரில் உள்ளதைப் போல் தமிழ்நாட்டிற்குள் வெளிமாநிலத்தவர் உள்நுழைந்திட, உள்நுழைவு அனுமதிச் சீட்டு (Inner Line Permit – ILP) முறையைக் கொண்டு வா!

5. தமிழர்களுக்கே தமிழ்நாட்டு
வேலைகளை உறுதி செய்திட உடனே சட்டமியற்று!


சென்னையிலும், திருச்சியிலும் நடைபெறும் இப்போராட்டங்களில், தமிழின உணர்வாளர்களும், தமிழ் மக்களும் பெருந்திரளாகப் பங்கேற்க வரும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்! வாருங்கள் தமிழர்களே!

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.