ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கார்த்திகை தீபத்தை இந்து – முசுலிம்கலகமாக மாற்றுகிறது பா.ச.க.!தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் – தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர்ஐயா பெ. மணியரசன் கண்டனம்!

கார்த்திகை தீபத்தை இந்து – முசுலிம்

கலகமாக மாற்றுகிறது பா.ச.க.!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் –

தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர்

ஐயா பெ. மணியரசன் கண்டனம்!

 

திருப்பரங்குன்றம்  மலையில் கடந்த ஆண்டு வரை வழக்கமாகக் கார்த்திகை தீபம் ஏற்றி வந்த உச்சிப் பிள்யைார் கோயில் பகுதியைக் கைவிட்டு, அந்த மலையில் உள்ள இசுலாமியத் தர்கா அருகில் இவ்வாண்டு 03.12.2025 அன்று தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்துத்துவா தீவிரவாத அமைப்புகளான பா.ச.க., இந்து முன்னணி உள்ளிட்டவை போராட்டம் நடத்தி வருகின்றன. எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள், அவசர ஆணைகள் பிறப்பித்து, உடனே தர்கா அருகில் தீபம் ஏற்றுங்கள் என்று கட்டளை இடுகிறார்.

 

இந்த திருப்பரங்குன்ற கார்த்திகை தீபம் ஏற்றும் சிக்கலை அப்பகுதி பக்தர்கள் யாரும் உருவாக்கவில்லை. இன்று (05.12.2025) இந்துத்துவா அமைப்புகள் திருப்பரங்குன்றத்தில் நடத்திய கடையடைப்பில் யாருமே கலந்து கொள்ளாததே இதற்கு சான்று! ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. பரிவாரங்கள் திட்டமிட்டு உருவாக்கியதாகும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலமான 1800களில் இருந்து திருப்பரங்குன்றம் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அதுதான் கோயிலில் இருந்து பார்த்தால் அனைவருக்கும் தெரியும் இடமாகும். மாறாக, இந்துத்துவா அமைப்பினர் கூறும் தீபத்தூண் என்பது, விளக்கு ஏதுமில்லாத காலத்தில் சாதாரண காலத்தில் விளக்கு எரிய வைக்கப் பயன்பட்ட இடமாகும் என அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். இப்போது, வழக்கத்திற்கு மாறாக, தர்கா அருகிலுள்ள தீபத்தூணில்தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்துத்துவாவாதிகள் திடீரென்று வாதிடுகிறார்கள்.

 

இவ்வாறான வாதம் வைக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. பரிவாரங்களிடம் தெய்வத் தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையிலும், ஒரு விடை கேட்கிறேன். திருமலை நாயக்கர் ஆட்சியின் படைத் தலைவர் இராமப்பையன் என்பவர்தாம் பழனிமலை முருகன் கோயில் பூசாரிகளாக இருந்த தமிழ் இனப் பண்டாரங்களை நீக்கிவிட்டு, தெலுங்கு பிராமணர்களை அர்ச்சகர்களாக அமர்த்தினார். அதிலிருந்துதான் பழனி முருகன் கோயிலில் பிராமணர்கள் அர்ச்சகர்களாகவும், தமிழர்கள் கருவறையைத் தீண்டத்தகாதவர்களாகவும் ஆக்கப்பட்டார்கள்.

 

இந்த அநீதியைச் சரி செய்ய தமிழர் தாயகமான தமிழ்நாட்டில், தமிழ்க் கடவுளான பழனி மலை முருகன் கருவறையில் பழையபடி தமிழ்ப் பண்டார வகுப்பினர் பூசகர்களாக – அர்ச்சகர்களாகச் செயல்பட ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. பரிவாரங்கள், அரசின் அனுமதியைக் கோருமா?

 

அவ்வளவு ஏன், தமிழ்நாட்டுக் கோயில்கள் அனைத்திலும் தமிழர்கள் பூசகர்களாகவும், தமிழ் அர்ச்சனை மொழியாகவும் இருந்தது. மீண்டும் இத்திருக்கோயில்களில் தகுதியுள்ள அனைத்துச் சாதியாரும் ஏற்கெனவே உள்ள சட்டப்படி அர்ச்சகர்கள் ஆவதை பா.ச.க. பரிவாரங்கள் ஏற்றுக் கொள்ளுமா?

 

நாங்கள் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில், தமிழ்நாட்டு அனைத்துத் திருக்கோயில்களிலும் தமிழ் கருவறை அர்ச்சனை மொழியாக்கப்பட வேண்டும் என்றும், தகுதியுள்ள அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க உள்ள அரசாணையை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்றும், போராடி வருகிறோம். ஆனால், மு.க. ஸ்டாலின் திராவிட மாடல் – இரட்டை வேட அரசு, ஆரிய ஆன்மிகத்திற்கு அடிபணிந்து, தமிழ் அர்ச்சனை – தமிழர் அர்ச்சகர் என்ற சட்டப்பூர்வ இரண்டு நீதிகளையும் மறுத்து, ஆரியத்தோடு "ஆமாம் சாமி" போட்டு வருகிறது. அர்ஜூன் சம்பத் போன்ற இந்துத்துவாவாதிகளை அழைத்து முதல் வரிசையில் அமர வைத்து, அரசு சார்பில் முருகன் மாநாடு நடத்துகிறது.

 

இப்போது திருப்பரங்குன்றத்தில் கூட, அங்கிருக்கும் சிக்கந்தர் தர்காவுக்கு ஆடு, கோழிகளை நேர்ந்து விடுதலும், அங்கு இறைச்சிகளை சமைத்து உண்ணுதலும் மத நல்லிணக்கத்தோடு, மிக இயல்பாக ஆண்டாண்டு காலமாக நடந்தேறி வந்த நிலையில், திடீரென கடந்த 2025 பிப்ரவரியில் காவல்துறையினர் ஆடு, கோழியினைக் கொண்டு செல்வதற்கு அனுமதி மறுத்த பிறகுதான், இந்துத்துவா அமைப்பினர் அந்தச் சிக்கலுக்குள் நுழைந்தனர். தி.மு.க. அரசின் நடவடிக்கையால் ஊக்கம் பெற்ற இந்துத்துவா அமைப்பினர், இப்போது இச்சிக்கலில் இன்னும் தலையிட்டு, அடாவடி செய்ய நுழைந்துள்ளனர்.

 

இப்போதாவது, இந்து – முசுலிம் கலவரம் வரக் கூடாது என்ற நோக்கத்தில், தர்கா அருகே தீபம் ஏற்றத் தடை போட்டதற்கு தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டுகள்!

 

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், இந்தப் பதவிக்கு வருமுன் பா.ச.க. – ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளில் இருந்தவர். ஆனால், அவர் நீதிபதி பதவிக்கு வந்த பின் நடுநிலையோடு, செயல்பட வேண்டியது நீதி தேவதையின் கட்டளை! அதை நீதிபதி சுவாமிநாதன் மீறக் கூடாது. வலுக்கட்டாயமாக 04.12.2025 இரவு 7 மணிக்குள் திருப்பரங்குன்றம் தர்கா அருகே கார்த்திகை தீபம் ஏற்றுங்கள் என்று கட்டளையிட்டு, அதற்குப் பாதுகாவலர்களாக இந்திய அரசுக் காவல்துறையை இறக்கிவிட்டது, நீதிக்குப் புறம்பானது மட்டுமல்ல, தமிழ்நாட்டு அரசிடம் மிச்சம் மீதி உள்ள சட்டம் ஒழுங்கு காப்பு அதிகாரத்தையும் பிடுங்கி இந்திய அரசிடம் ஒப்படைக்கும் அடாவடி செயலாகும். நீதிமன்ற அவமதிப்பு என இப்போது கூறும், இதே ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள், தமிழில் குடமுழுக்கு நடத்திட அவர் பணியாற்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பலமுறை தீர்ப்பளித்தும்கூட, இதே திருப்பரங்குன்றத்தில் நடந்த குடமுழுக்கில் அதை திராவிட மாடல் அரசு நிறைவேற்றவில்லையே, அது நீதிமன்ற அவமதிப்பாகுமே எனக் கேள்வி கேட்டாரா? கேட்கவில்லை!

 

கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் ஏற்றுவதுதான் கார்த்திகை தீபம் என்பதே மக்களின் நம்பிக்கை! கார்த்திகை நட்சத்திரம் 3.12.2025 அன்று இரவுடன் முடிந்து விட்டது. கார்த்திகை நட்சத்திரம் இல்லாத 4.12.2025 இரவு தர்கா அருகே கார்த்திகை தீபம் ஏற்றுங்கள் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கட்டளையிடுவது, நீதி நெறியா? ஆன்மிக ஒழுக்கமா? ஜி.ஆர். சுவாமிநாதன் சிந்திக்க வேண்டும்.

 

தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தவுடன் வேறு வழியில்லாமல் இவ்வழக்கை வரும் செவ்வாய்க்கிழமைக்கு (09.12.2025) ஒத்தி வைத்துள்ளார் ஜி.ஆர். சுவாமிநாதன்!

 

முருக வழிபாடு செய்யும் இந்துத் தமிழர்களும், அல்லா வழிபாடு செய்யும் முசுலிம் தமிழர்களும் மேற்படி இருமதத் தீவிரவாத அமைப்புகளின் தூண்டுதலுக்குப் பலியாகாமல் – ஒரு தமிழ்த் தாய் வயிற்றுத் தமிழர்களாய், அவரவர் வழிபாடு அவரவர் உரிமை என்ற பக்குவத்தோடு, இணக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 


===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

============================== 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.