H
தம் 74 ஆம் அகவையில் இரண்டாவது குழந்தைக்குத் தாயாகி இருக்கிறார் பாவலர் இலரா.மோகன். வங்கிப் பணியில் பணக்கணக்குப் பார்த்தவர் வாழ்க்கைப் பணியில் விடுதலைக் கணக்கு போட்டதன் விளைவு இந்நூல்கள். எந்தப் பணி என்றாலும் செய்நேர்த்தி இவரது சிறப்புக் கூறு. அதனால்தான் இவரது முதல் நூலான 'தமிழரின் வேர்களைத் தேடி ஒரு புறநானூற்றுப் பயணம்' கண்டம் தாண்டிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
பன்முகத்தன்மையின் இன்னொரு பெயர் இலரா.மோகன்...
களத்தில் நின்று தொண்டை வறள முழக்கமடும்போது இவர் போராளி!
அரங்கில் ஏறி செவிக்கு விருந்து படைக்கும் போது இவர் பேச்சாளர்!
"அடிடா அடிடா தமிழ்ப் பறையை" பாடலின் மூலம் இனவுறக்கம் கலைத்த போது இவர் பாடலாசிரியர்! நெருப்பில் நனைத்த சொற்களை ஏந்தித் தமிழரின் வேர்களைத் தேடிய போது இவர் பாவலர்!
இதோ... வரலாற்றுப் பாதைகளில் கல்லும் முள்ளும் இடறி அறிவுப் புதையலை அள்ளி வந்திருக்கிறாரே... இப்போது இவர் கட்டுரையாளர்!
8 ஆளுமைகள் குறித்த கட்டுரைகளும் 2 நூல்கள் குறித்த கட்டுரைகளும் தொன்மை குறித்த ஒரு கட்டுரையும் உள்ளுறையாக அமைந்து இனவிழிப்பு ஊட்டுகின்றன. இன்னும் குறிப்பாகச் சொன்னால் , எல்லாளன், அதியன்-ஔவை, தோழர்.இலரா, பூம்புகார், இராசராச சோழன், சிங்காரவேலர், வ உ சிதம்பரனார், பாவாணர், தமிழ் இலக்கிய வரலாறு, வடமொழி வரலாறு, ஆகிய உள்ளீடுகளில் கவித்துவம் போர்த்திய தலைப்புகள் அழகு சேர்க்கின்றன..
முதல் கட்டுரை எல்லாளன் குறித்தது. எல்லாளன் சிங்களத்தில் இலரா. இலராவை எழுதும் இலரா. அவர் இனப்பெருமை நாட்டியவர். இவர் இனப்பெருமிதம் ஊட்டியவர். என்னே... வரலாற்று இயைபு!
எல்லாளனைக் கைக்கொள்ள முயன்ற ஆரியம், கன்று கொல்லப்பட்டதற்குக் கழுவாயாகத் தங்கப்பசு செய்து காட்டில் விட வற்புறுத்தியது. எல்லாளன் மறுத்துவிட்டார். மீசையில் மண் ஒட்டாத ஆரியம், எல்லாளனுக்கு மனுநீதி என்ற பட்டம் கொடுத்து அவர் இயற்பெயரையே வரலாற்று மறைப்பு செய்தது. கொட்டிக்கிழங்கை அகழ்ந்தெடுப்பது போல் வேரோடு பிடுங்கிப் பொய்மைச் சேற்றை உதறி வரலாற்று மீட்பு செய்த பாவலரின் திறம் குறித்து நான் பேசப் போவதில்லை. அதைத் தாண்டி மனம் வீழ வேறு இருக்கிறது. அது அவரது நடை. அதில் ஒன்று இதோ-
"அப்போது எல்லாளனுக்கு 30 அகவை. ஆரூரின் ஆழித்தேராய் இலங்கை நோக்கி நகர்ந்தது எல்லாளனின் கடற்படை.."
அடடா... களத்திற்கு ஏற்ற பொருத்தமான. உவமை!
அதுபோல, மரணத்திலும் மாளாத எல்லாளவீரத்தை,
"இரத்தச் சேற்றிலே இதுவரை இன்பம் கண்ட துட்டகைமுனுவைத் தூயவீரனின் மரணம் சுழற்றிப் போட்டது."" - பாவலரின் துயர்சொற்களைக் கண்ணுற்ற கண்கள் கண்டிப்பாகக் கலங்கும்.
"எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே" கட்டுரையில் அதியனின் வீரத்தோடு ஒளவையின் ஈரமும் பேசப்படுகிறது. மக்கள்பாவலர் இன்குலாப், தம் ''ஒளவை' நாடகத்தில் ஐந்து ஔவையாரைக் காட்டுவார். அதில் சங்க கால ஔவையாரைச் சித்திரமாக வரைந்திருக்கிறார் பாவலர் இலரா.மோகன்.
"ஔவை ...காவி பூண்ட சாமி அல்லள். இளமை ததும்பும் பாவை ! ஆடலும் பாடலும் வல்ல அரிவை!" - என்று மக்கள் பாவலரின் கருத்துக்கு அரண் செய்கிறது விடுதலைப் பாவலரின் தூவல்.
அதியன், அதியமான் என அறியப்பட்ட வள்ளல் சிறுபாணாற்றுப்படையில் அதிகன் எனச் சுட்டப்படுகிறான்
"கமழ் பூஞ் சாரல் கவினிய நெல்லி
அமிழ்து விளைதீம்கனி ஒளவைக்கு ஈந்த,
உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்,
அரவக்கடல் தானை, அதிகனும்; கரவாது"
(சிறுபாணாற்றுப்படை),
இதை அறிந்த பாவலர் , "அதியன், கொடை ஈரத்திலும் படை வீரத்திலும் அதிகன்" எனத் தமிழோடு விளையாடி அதியனின் வீரத்தைத் பறைசாற்றுகிறார்.
"புலி கிடந்து உறங்கிய குழிவயிறு" - தொல்தாய்களின் மறம் பேசுகிறது.. நிறைவில் இலராவை ஈன்றதாயின் உரம் பேசுகிறது.
"ஒருநாள் பக்கத்து வீட்டுப்பெண் ஒருத்தி கேட்டாள் -
"காவிரி ஆத்தா... எங்க உம் மகன் இலரா..?"
வீடு தங்காத மகனைத் தாக்கும் ஏளனத்தைத் தாங்காத அந்தத் தாய்க்கிழவி,
"ம்...அவனா... எங்காவது போராட்டத்தில் நிப்பான்... போய்ப் பாரு"
நெற்றியடியாய்க் கொடுத்த பதிலால் நெஞ்சு நிமிர்த்தினாள் காவேரிக் கிழவி."
-இதைப் படிக்கும் போதே தொல்குடித் தாயின் தொடர்ச்சியை அறிய முடிகிறது. அது மட்டுமா அந்தத் தாயின் மரணத் தருவாயிலும் தோழர் இலரா பொதுமை பேசும் களத்தில் நின்றார் என்ற சேதி சிலிர்ப்பையும் நமக்குத் தருகிறது..
" காலம் நகர்ந்தது அடுத்த ஆண்டு அந்த வீரக்காவேரி விழுந்தாள். மரணப்படுக்கையிலே! உணவு உண்ண முடியாமல் இளைத்து அவள் குழிவயிறு மட்டும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. பால் ஊற்ற வருவான் தான் பால் கொடுத்த மகனென்று துடித்திருந்த கடைசி நொடிகள் அவை.
அந்தக் குகை வயிற்றுப் புலியோ மயிலாடுதுறை வேளாண்தொழிலாளர் போராட்டத்தில் முழங்கிக் கொண்டிருந்தது."
- கண்களில் ஈரம் இன்றி இந்த வரிகளைக் கடக்க இயலவில்லை. இத்தகைய மரபுதான் பாவலர் இலரா.மோகன், மருத்துவர் பாரதிச்செல்வன் என்னும் மண்ணுக்கான போராளிகளைப் பெற்றுத் தந்திருக்கிறது.
பூம்புகாரின் தொன்மை குறித்து இறும்பூது கொள்ளும் பாவலரின் கட்டுரைவன்மையில்-
"மாடங்களின் உச்சியில் மழை தோயும்.மேகம் உரசி மேனி சிவக்கும்."
என்னும் அழகு ததும்பும் காட்சி நம்மை ஏக்கம் கொள்ளச் செய்கின்றன.
சிந்தனைச் சிற்பியை இவரது தூவல் செதுக்கிய விதம் அலாதியானது. தடை விதிக்கப்பட்ட புத்தகங்களைக் கப்பல்கள் மூலம் வரவழைத்துப் பாண்டிச்சேரி நண்பர்கள் வழியே கருவாட்டுக் கூடைக்குள்ளும் பூக்கூடைக்குள்ளும் பதுக்கி வந்து சிங்காரவேலர் படித்த செய்தியை,
"எப்போதும் கரை உடைக்கத் துடித்த கடல் சிங்காரவேலர். அரசியல் அறிவியல் அரங்கில் பல பட்டாம்பூச்சிகள் அடிமைக் கூட்டைக் கிழித்துப் புதுமைச் சிறகடித்த புத்தக காலம்" -என்று பாவலர் படைத்த உவமை நயம் சிறப்பு.
இன்னோர் இடத்தில், வெள்ளையனை எதிர்த்துச் சிங்காரவேலர் தம் வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டதைக் " கருப்பு அங்கியை நெருப்பிலிட்டுக் கொளுத்தினார்" என முரண்எழுத்தால் எழுச்சியூட்டுகிறார்
சிங்காரவேலனாரின் தனித்தன்மைகளைக் கட்டுரையில் தொகுத்துத் தந்துள்ளார்.
சிங்காரவேலருக்குத் தான் எத்தனை முதன்மை?
இந்தியாவில் முதல் மேநாள் கொண்டாடியவர் !
இந்தியாவில் பொதுவுடமைக் கட்சியின் முதல் மாநாடு நடத்தியவர் !
இந்தியாவிலேயே முதல் நாத்திக மாநாட்டை நடத்தியவர்!
இந்தியாவில் முதல் தொழிற்சங்கத்தைத் தொடங்கியவர்!
தோழர்களே! என்று இந்தியாவில் முதன்முதலில் முழங்கியவர் !
நண்பகல் உணவுத்திட்டத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர்!
அம்பேத்கருக்கு முன் மிகப்பெரிய தனியார் நூலகத்தை முதன் மதலில் கொண்டவர்!
அந்த நூலகத்தைப் பற்றி , பாவலர் குறிப்பிடுவது தனிச்சிறப்பு.
"புறநானூற்றுத் தொண்டைமானின் ஆயுதங்களாய் அழகாக அடுக்கி வைக்கப்பட்டவை அல்ல. அதியமானின் ஆயுதங்களாய்ப் பயன்பாட்டால் பழசாகிப் போனவை" படிக்கப்பட்ட புத்தகங்களையும் ஆயுதங்களையும் ஒன்றாகப் பார்க்கும் பாவலரின் பார்வை புதிதானது மட்டுமன்று; பொருட்செறிவானதும் கூட.
நூலின் பல இடங்களில் தமக்கென முயலா நோன்தாளாகிப் பிறர்க்கென முயலுநரின் தன்னிழப்பை உணர்ச்சியோடு பதிவு செய்திருக்கிறார் பாவலர்.
""சாவதற்கு முன்னால் சுதந்திரத்தைக் காணக் கொடுத்து வைக்காமலே போகிறேனே" என்ற வ.உ.சி.யின் ஏக்கமும் "நிறுத்துகிறேன்... நிறுத்தத்தான் போகிறேன்" என்ற பாவாணரின் வருத்தமும் இனத்தின் இதயத்தை உலுக்குவன. இவையன்றி எமது பாவாணர் தமிழ் மன்ற மேடைகளில் பாவலர் பந்திவைத்த பாவாணரின் நூல்கள் குறித்த திறனாய்வுகள் இந்நூலுக்கு அரண்களாகி நிற்கின்றன.
இந்நூலில் வாழும் கட்டுரைகளை அம்புகள் என்கிறார் பாவலர். ஞெலிகோல்கள் என்கிறேன் நான். அம்பு பகைமையை மட்டும் குறி பார்க்கும்; ஞெலிகோலோ இனத்தைக் குளிரச் செய்யும்; எதிரியை எரிக்கும்.
படைக்கலன் படைத்த பவழவிழா நாயகனை வாழ்த்தி வணங்குகிறேன்.
விடுதலை வேட்கையுடன்
- த.ரெ. தமிழ்மணி
27-12- 2025
*அம்பறாத் தூணியில் ஞெலிகோல்கள்*
Leave a Comment