ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பதவி – பணம் – விளம்பரம் மூன்றுக்கும்ஆசைப்படாத இலட்சியத் தலைவர் ஐயா இரா. நல்லக்கண்ணு அவர்களுக்கு வீரவணக்கம்! - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் இரங்கல்!

பதவி – பணம் – விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத இலட்சியத் தலைவர்

ஐயா இரா. நல்லக்கண்ணு அவர்களுக்கு வீரவணக்கம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 

ஐயா பெ. மணியரசன் இரங்கல்!

 

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர் ஐயா இரா. நல்லக்கண்ணு அவர்கள், 101 அகவையில் காலமாகி இருந்தாலும் (25.02.2026), அவர் மறைவு ஒரு பேரிழப்பாகவே தமிழர் நெஞ்சங்களில் தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது.

 

இளமையிலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறைக்குச் சென்ற நல்லக்கண்ணு ஐயா அவர்கள், மனித சமத்துவத்திற்காக மார்க்சிய இலட்சியத்தை ஏந்தி, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் செயல்பட்டவர். பற்பல போராட்டங்களில் பங்கேற்று, சிறைக்குச் சென்றவர்.

 

அரசியல் என்றாலே, தனிநபர் ஆதாயம் பெறுவதற்கான ஒரு துறை என்று, சீரழிந்து போன தமிழ்நாட்டில், பதவி – பணம் – விளம்பரம் மூன்றுக்கும் இச்சைப்படாமல், ஏற்றுக் கொண்ட பொதுவுடைமை இலட்சியத்திற்குத் தம்மை ஒப்புக் கொடுத்தவர்.    

 

தமிழ்த்தேசியப் பேரியக்கம் நேற்று (25.02.2026) மாலை, தஞ்சை மாவட்டம் – பூதலூர் ஒன்றியம் - புதுக்குடியில் நடத்திய தமிழ்த்தேசிய நாள் – சிறப்புப் பொதுக்கூட்டத்தில், முதல் நிகழ்வாக ஐயா நல்லக்கண்ணு அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினோம். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் எழுந்து நின்று அமைதி வணக்கம் செலுத்தினர்.

 

தமிழ்ச் சமூகத்தின் பொருளியல் சார்ந்த வர்க்க ஒடுக்குமுறையும் கூடாது, பிறப்பால் சுமத்தப்படும் வர்ணசாதி ஆதிக்க ஒடுக்குமுறையும் கூடாது என்ற நிலையில், போராட்டங்கள் நடத்தியவர் ஐயா நல்லக்கண்ணு!  அடர்த்தியான பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்திருந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கு உண்மையாகத் தம்மை ஒப்புக் கொடுத்தவர்.

 

தமிழ்நாட்டில் அரசியல் பின்புலத்தோடு நடைபெறும் மணல் கொள்ளைகளைத் தடுக்க,  கூட்டமைப்பு உருவாக்கிப் போராடியவர். மாற்றுக் கருத்து உடையோரைப் பகைவராகக் கருதாமல் பண்போடு பழகக்கூடியவர். ஈகம், நேர்மை, மனிதநேயம் போன்ற மாண்புமிகு குணங்களைக் கொண்ட இலட்சிய மனிதராக வாழ்ந்ததால்தான், தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சியினராலும், அனைத்துப் பிரிவு மக்களாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மாபெரும் சான்றோராக ஐயா நல்லக்கண்ணு மதிக்கப்படுகிறார்.

 

நான் சி.பி.எம். கட்சியில் செயல்பட்டபோது, சி.பி.ஐ உடன் இணைந்து நடத்தியப் போராட்டம் ஒன்றில், கைதாகி மண்டபத்தில் இருக்கும்போதுதான், ஐயா நல்லக்கண்ணு அவர்களுடன் நேரடி பழக்கமும், தோழமையும் ஏற்பட்டது. தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மாத இதழான தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழை தொடர்ந்து அவர்களுக்கு அஞ்சலில் அனுப்பி வந்தோம். படித்துவிட்டு, தொலைப்பேசியில் அழைத்து பாராட்ட வேண்டியதைப் பாராட்டிச் சொல்வார். மாற்றுக் கருத்து சொல்ல வேண்டிய இடத்தில் மாற்றுக் கருத்து சொல்வார்.

 

"ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்" என்று நம்முடைய புறநானூற்றில் பழங்காலச் சான்றோர்களைக் குறிப்பிடுவர். அதற்கான நிகழ்கால சான்றாக வாழ்ந்தவர் ஐயா நல்லக்கண்ணு அவர்கள்!

 

ஐயா இரா. நல்லக்கண்ணு அவர்களின் உடல் மறைந்தாலும், அவரின் ஈகமும், பண்பும், ஆற்றலும் இளையோருக்கு என்றும் வழிகாட்டும்!

 

ஐயா நல்லக்கண்ணு அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கத்தையும், அவரின் இழப்பால் துயருரும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களுக்கும், அவரது குடும்பத்தினர்க்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்!


================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

================================


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.