ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்நாட்டுத் தொழில், வணிகம், வேலை தமிழர்களுக்கே! வெளி மாநிலத்தவர் ஆக்கிரமிப்பைத் தடுப்போம்! வரும் 2026 சூன் மாதம்  திருச்சி ஜி.எஸ்.டி. அலுவலகம் முற்றுகை!தமிழ்த்தேசியப் பேரியக்க சிறப்புப் பொதுக்குழுவில் தீர்மானம்! 

தமிழ்நாட்டுத் தொழில், வணிகம், வேலை தமிழர்களுக்கே

வெளி மாநிலத்தவர் ஆக்கிரமிப்பைத் தடுப்போம்!

 வரும் 2026 சூன் மாதம்  திருச்சி ஜி.எஸ்.டி. அலுவலகம் முற்றுகை!

தமிழ்த்தேசியப் பேரியக்க சிறப்புப் பொதுக்குழுவில் தீர்மானம்!

 

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பத்தாவது சிறப்புப் பொதுக்குழுவின் முதல் கூட்டம், 2026 பிப்ரவரி 28 மற்றும் மார்ச்சு 1 ஆகிய இரு நாட்கள், கோபிச்செட்டிப்பாளையம்ரோட்டரி அரங்கத்தில் நடைபெற்றது. பேரியக்கத்தின் மூத்த பொதுக்குழுத் தோழர்கள் . காமராசு, இரா. முருகப்பெருமாள், மகளிர் ஆயம் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் செந்தமிழ்ச்செல்வி ஆகிய மூவரையும் கொண்ட தலைமைக்குழு, பொதுக்குழுவுக்குத் தலைமை தாங்கியது. பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

பேரியக்கப் பொருளாளர் தோழர் . ஆனந்தன், துணைத் தலைவர் தோழர் . முருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் தோழர் . அருணபாரதி, வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, தலைமைச் செயற்குழு தோழர்கள் ஈரோடு வெ. இளங்கோவன், நா. வைகறை, பழ. இராசேந்திரன், ஓசூர் கோ. மாரிமுத்து, குடந்தை . விடுதலைச்சுடர், பூதலூர் பி. தென்னவன், திருச்சி வே.. இலக்குவன், மூ.. கவித்துவன், கதிர்நிலவன், சென்னை வெற்றித்தமிழன், புதுச்சேரி இரா. வேல்சாமி, பெண்ணாடம் மா. மணிமாறன், . தீந்தமிழன், தோழர் செம்மலர், பொதுக்குழு தோழர்கள் மகளிர் ஆயம் தலைவர் தோழர் அருணா, பூதலூர் இரெ. கருணாநிதி, திருச்சி நா. இராசாரகுநாதன், சிதம்பரம் வேந்தன் சுரேசு, கோவை பாலகுமரன், குமாரபாளையம் நா. ஆறுமுகம், சேலம் இராசவேல்முருகன் வேதாரணியம் வெ. வரதராசன், போடி சுப்பிரமணியம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த தலைமைச் செயற்குழு, பொதுக்குழு தோழர்கள் பங்கேற்றனர். முன்னதாக, பேரியக்கத் தலைமைச் செயற்குழு தோழர் மூ.. கவித்துவன், பேரியக்கக் கொடியை ஏற்றினார். தோழர் நா. வைகறை, அண்மையில் மறைந்த ஆளுமைகளுக்கு இரங்கல் தெரிவித்து உரையாற்றினார்.

 

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன.

 

தீர்மானம் - 1

தமிழ்நாட்டுத் தொழில், வணிகம், வேலை தமிழர்களுக்கே

வெளி மாநிலத்தவர் ஆக்கிரமிப்பைத் தடுப்போம்

திருச்சி ஜி.எஸ்.டி. அலுவலகம் முற்றுகைப் போராட்டம்!

 

தமிழ்நாட்டில் உயர்கல்வி கற்றவர்களும், தொழிற்கல்வி கற்றவர்களும் சற்றொப்ப ஒரு கோடிப் பேர் உரிய வேலை இன்றியும், உரிய ஊதியமின்றியும் அல்லற்பட்டு அவதியுறுகின்றனர். அந்த வேலையும் கிடைக்காமல் அலைவோர் ஏராளம்!

 

தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசின் தொழில் நிறுவனங்கள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள், அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், சரக்குசேவை வரி, வருமான வரி உள்ளிட்ட வரி வசூல் அலுவலகங்கள், தொடர்வண்டித்துறை எனப் பல துறைகளிலும் 60 விழுக்காடு – 80 விழுக்காடு என இந்திக்காரர்களும், வெளி மாநிலத்தவர்களும் வேலை பார்க்கிறார்கள்.

 

தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசின் பல்கலைக்கழகம், ..டி. போன்ற உயர் நிறுவனங்களில் 90 விழுக்காட்டினர் வட மாநிலத்தவர்கள் மற்றும் பிற மாநிலத்தவர்கள் வேலை பார்க்கிறார்கள்; படிக்கிறார்கள்.

 

அன்னையின் மடியிலேயே அனாதை ஆகிப்போன குழந்தையைப் போல், தமிழ்த் தாயின் மடியில்தமிழ்நாட்டின் மண்ணிலேயே தமிழர்கள் அனாதைகள் ஆகி விட்டார்கள்.

 

இதற்காகவா 1950களில் மொழி மற்றும் இனவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன? 1956 நவம்பர் 1இல் தமிழர் தாயகமாகத் தமிழ்நாடு அமைக்கப்பட்டது?

 

தமிழ்நாட்டில் நிலவுகின்ற தமிழர்க்கெதிரான இந்த அநீதியைப் போக்கப் போவதாக 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்குறுதி அளித்தது தி.மு..! அப்போது அது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தி.மு.. ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டில் தனியார் துறையில் தமிழர்களுக்கு 75 விழுக்காடு வேலை என்று ஒதுக்கீடு செய்து வழங்குவோம் என்று உறுதி கூறியது. ஆனால், தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடித்தபின் அந்த வாக்குறுதியை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை தி.மு..!

 

இதற்கு முன் நடந்த .தி.மு.. ஆட்சி, எப்படி வெளி மாநிலத்தவர்களுக்குத் தமிழ்நாட்டை வேட்டைக்காடாக அனுமதித்ததோ, அதை மேலும் அதிகப்படுத்தியது தி.மு.. ஆட்சி!

 

தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு மற்றும் வடநாட்டு முதலாளிகளை யார் அதிகமாக அழைத்து வந்தது என்பதில்தான் .தி.மு..வுக்கும், தி.மு..வுக்கும் போட்டி!

 

தமிழ்நாட்டிற்குள் அன்றாடம் இலட்சக்கணக்கில், வடநாட்டுத் தொழிலாளிகள் வந்து குவிகிறார்கள். அவர்கள் வாக்காளர்களாகவும் ஆகிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டில் செல்லுபடியாகும் குடும்ப அட்டை பெறுகிறார்கள்.

 

ஏற்கெனவே தமிழ்நாட்டு வணிகத்தில் ஏற்றுமதி உட்பட வடநாட்டு மார்வாரிகளும், குசராத்திகளும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

 

இந்த நிலை தொடர்ந்தால் தமிழ்நாடுதமிழர்களின் தாயகமாக இல்லாமல்இன்னொரு இந்தி மாநிலமாக மாறும் பேராபத்து நம்முன் உள்ளது. இந்த ஆபத்தைத் தடுக்கப் பின்வரும் கோரிக்கைகளுடன் வெளியாரைத் தடுக்கும் முற்றுகைப் போராட்டத்தை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வரும் சூன் முதல் வாரம் திருச்சி சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) அலுவலகம் முன் நடத்தவுள்ளது.

 

கோரிக்கைகள்

தமிழ்நாடு அரசே! இந்திய அரசே!

 

1. தமிழ்நாடு அரசின் தொழிற்சாலைகள்அலுவலகங்கள் அனைத்திலும் 100 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.

 

2. தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் அனைத்திலும் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்க வேண்டும்.

 

3. தமிழ்நாட்டின் தனியார் துறையில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்க வேண்டும்.

 

4. வெள்ளம்போல் அன்றாடம் தமிழ்நாட்டில் குடியேறும் வெளி மாநிலத்தவர்களைத் தடுக்க, நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம், மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் உள்ளதுபோல் தமிழ்நாடு அரசுக்கு வெளி மாநிலத்தவர் உள்நுழையும் அனுமதி (Inner Line Permit – ILP) வழங்கும் அதிகாரம் வழங்க வேண்டும்.

 

5. மார்வாடிகள் மற்றும் வெளி மாநிலத்து வணிகர்களுக்கு உள்ளாட்சி உரிமம் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் எந்த அனுமதியும் அளிக்கக்கூடாது.

 

6. தமிழ்நாட்டுத் தொழில் முனைவோரை பெரும்பான்மை பங்குதாரராக சேர்க்காத எந்த வெளிநாட்டுவெளி மாநில தொழில் முனைவோரையும் தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது!

 

இக்கோரிக்கைகளை முன்வைத்து, வரும் சூன் மாதம், திருச்சி ஜி.எஸ்.டி. வரி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவதென்றும், தமிழ்நாட்டைத் தமிழர் தாயகமாகக் காக்கதமிழர்களின் வாழ்வுரிமையை மீட்கவெளியார் வெள்ளத்தைத் தடுக்கும் இப்போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்க வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இச்சிறப்புப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது!

 

தீர்மானம் - 2

தமிழ்த்தேசியம் காக்க நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பீர்!

 

ஒரு சமூகத்திற்கு அதன் இனம், மொழி, வரலாறு, சமூக ஒழுங்கு ஆகியவற்றை சமகாலத்தில் பாதுகாக்கக்கூடியது அரசியல்! ஆனால், அந்த அரசியல் தமிழ்நாட்டில் சீரழிந்து கிடக்கிறது. இலட்சியம், நேர்மை, ஒழுக்கம் எவையும் அரசியலுக்குத் தேவையில்லை என்ற நிலை இருக்கிறது.

 

இவை மட்டுமின்றி, தமிழினத்தின் அடையாளத்தை, தமிழ் மொழியின் வளர்ச்சியை சீர்குலைக்கக் கூடிய வகையில், இந்தியன் - இந்தியத்தேசியம் என்ற வடவர் ஆதிக்க அரசியலும், திராவிட இனம் என்ற அண்டை அயல் இனத்தார் ஆதிக்க அரசியலும் தமிழர்களை தங்கள் இனத்திற்கே எதிரானவர்களாக மாற்றிச் சிதைத்துள்ளது.

 

இந்நிலையில், தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி நம்முடைய தமிழினம், தமிழர் தாயகம், தமிழர் வரலாறு, தமிழீழத் தமிழர் வீரம்ஈகம் ஆகியவற்றை முதன்மைப்படுத்தி, செந்தமிழன் சீமான் தலைமையில் செயல்பட்டு வருகிறது.

 

தமிழ்த்தேசியப் பேரியக்கம், தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு முழு அதிகாரம் இல்லை என்ற நிலையிலும், இந்திய அரசுக்குக் கீழ்பட்ட ஒன்றாக இருக்கிறது என்ற நிலையிலும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணித்து வந்தது.

 

தமிழ்த்தேசியப் பேரியக்கம், தமிழினத்தின் இறையாண்மை மீட்பு என்ற அடிப்படை இலட்சியத்திற்கு மக்கள் எழுச்சிப் போராட்டங்களே இறுதித் தீர்வாக முடியும் என்பதில், இப்போதும் மாற்றமில்லை! தேர்தலில் போட்டியிடுவதில்லை, எந்தக் கட்சியோடும் தேர்தல் கூட்டணி வைப்பதில்லை என்பதை தொடர்ந்து உறுதி செய்கிறது.

 

அதேவேளை, இறையாண்மை மீட்பு இலட்சியம் நிறைவேறும் வரை வாக்களிப்பைப் புறக்கணிக்க முடியாது என்ற நிலையில், வாக்களிப்பில் பங்கேற்பது என தீர்மானிக்கிறது.

 

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், ஆரியத்துவ இந்தியத் தேசியத்திற்கும், திராவிடத்துவத் திரிபுகளுக்கும் எதிராக தமிழ்த்தேசியம் என்ற கோட்பாட்டை முன்னிறுத்தி, தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பதென முடிவு செய்கிறது. தமிழ்நாட்டு மக்கள், நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் வேண்டுகோள் வைக்கிறது!

 

தீர்மானம் - 3

கொங்கு மண்டலத்தின் பொருளியலை மீட்டெடுக்க 

ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெற வேண்டும்!

 

ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் முதுகெலும்பாக விளங்கும் நெசவு, பின்னலாடை மற்றும் சிறு - குறுந்தொழில்கள் ஜி.எஸ்.டி (GST) வரி விதிப்பால் மிகக்கடும் நலிவைச் சந்தித்து வருவதை தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இச்சிறப்புப் பொதுக்குழு கவலையோடு சுட்டிக்காட்டுகிறது. இப்பகுதியில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நடந்து வந்த தமிழர்களின் பாரம்பரியத் தொழில்கள் முடக்கப்பட்டு, வெளி மாநிலத்தவர் மிகை எண்ணிக்கையில் குடியேறி வருகின்றனர்.

 

எனவே, கொங்கு மண்டலத் தொழில்களை அழிவிலிருந்து மீட்க உடனடியாக ஜி.எஸ்.டி. வரி முறையை நீக்க வேண்டும் என்றும், இப்பகுதியின் சூழலுக்கு இசைவான, மண்ணின் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கக்கூடிய பாரம்பரியத் தொழில்களை மீட்டெடுத்து ஊக்குவிக்கத் தேவையான சிறப்புத் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

 

மண்ணின் வளங்களைச் சுரண்டி, நச்சுக்கழிவுகளால் நிலத்தடி நீரையும் விளைநிலங்களையும் பாழாக்கும் 'சிப்காட்' (SIPCOT) போன்ற பெரும் தொழிற்சாலைத் திட்டங்களை, தமிழ்நாட்டில் கோபி பகுதி உள்ளிட்ட ஏராளமான பகுதிகளின் விளை நிலஙகளில் திணிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோருகிறோம். நீர்நிலைகளைப் பாதுகாப்பதும், வேளாண்மையையும் சூழலியலையும் சிதைக்காத தொழிற்சாலைகளை உருவாக்குவதுமே இப்பகுதியின் நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். பெருநிறுவனங்களின் இலாபத்திற்காக இயற்கை வளங்களை தாரைவார்க்காமல், நீர் ஆதாரங்களைப் பாதுகாத்து, தமிழ் மக்களின் வேலைவாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்யும் வகையில் தொழில் கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும் எனத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இப்பத்தாவது சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் வலியுறுத்துகிறது!

 

தீர்மானம் - 4

ஈரான் அதிபர் கொமேனியைக் கொன்றுள்ள 

வடஅமெரிக்கக் காட்டுமிராண்டித்தனத்தை இந்திய அரசு கண்டிக்க வேண்டும்!

 

ஈரான் அதிபர் கொமேனியை, வட அமெரிக்கஇசுரேல் இராணுவத்தின் கூட்டுப் படைகள் குண்டு வீசிக் காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபட்டிருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து ஈரான் மீது கொடுந்தாக்குதல் நடத்தி, அந்நாட்டை அழித்துஆக்கிரமிக்க அமெரிக்கஇசுரேல் படைகள் களமிறங்கியுள்ளனர்.

 

இந்திய அரசு, இத்தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதுடன், போர் நிறுத்தம் கோர வேண்டும். அத்தோடு, அமெரிக்கஇசுரேல் கூட்டணியில் இணையும் முயற்சியைக் கைவிட வேண்டும். வளைகுடா நாட்டை போர் ஆபத்து சூழ்ந்துள்ள நிலையில், அங்குள்ள தமிழர்களை மீட்க தமிழ்நாடு அரசு அவசர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

 

ஈரானின் மீதான இராணுவத் தாக்குதல்கள் மற்றும் வெனிசுவேலா நாட்டு அதிபரைச் சர்வதேச விதிகளை மீறிக் கைது செய்யும் நடவடிக்கைகள் ஆகியவை அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் மட்டுமல்லாது, உலகெங்கிலும் உள்ள வளரும் நாடுகளின் இறையாண்மையை நசுக்கி, தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் அமெரிக்காவின் கொடுங்கோன்மைப் போக்கைப் பறைசாற்றுகிறது

 

.நா. சபையின் நெறிமுறைகளைக் காலில் போட்டு மிதித்து, தங்களுக்குப் பணியாத நாடுகளின் பொருளாதாரத்தையும், அரசியல் நிலைத்தன்மையையும் சீர்குலைக்கும் அமெரிக்காவின் இந்த ஏகாதிபத்திய வெறிப் போக்கு உலக அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. 18 – 19ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற காலனியாதிக்கச் சூழலுக்குள், உலக நாடுகளை மீண்டும் தள்ளி விட்டுள்ளது.

 

ஈரான் மற்றும் வெனிசுவேலா நாடுகள் மீதான அமெரிக்காவின் இந்த தாக்குதல்கள், அந்நாடுகளின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதையும், தனது கைப்பாவை ஆட்சியை அங்கு நிறுவுவதையுமே நோக்கமாகக் கொண்டுள்ளன. ஒரு நாட்டின் உள்நாட்டு அரசியலிலும், வெளியுறவுக் கொள்கையிலும் தலையிட அமெரிக்காவிற்கு எவ்விதத் தார்மீக உரிமையும் இல்லை என்பதை இக்கூட்டம் உரக்கச் சொல்கிறது. எனவே, அமெரிக்காவின் இந்தப் புதிய காலனியாதிக்கப் போக்கினை உலக நாடுகள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என்றும், ஒடுக்கப்படும் நாடுகளின் இறையாண்மை உரிமையை உறுதிப்படுத்தப் பன்னாட்டுச் சமூகம் முன்வர வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இப்பத்தாவது சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் வலியுறுத்துகிறது!

 

தீர்மானம் – 5

புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதி வழங்க வேண்டும்!

 

இந்திய ஒன்றியத்தின் நேரடி ஆட்சியின் கீழ் இருக்கும் புதுச்சேரி ஒன்றியப் பகுதி, நீண்டகாலமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசைக் கொண்டிருந்தாலும், அதன் அதிகாரங்கள் அனைத்தும் இந்திய அரசால் அமர்த்தப்படும் துணைநிலை ஆளுநரின் கைகளிலேயே குவிந்து கிடக்கின்றன. இது மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது மட்டுமல்லாமல், புதுச்சேரி மக்களின் அரசியல் உரிமையைப் பறிக்கும் கொடுஞ்செயலுமாகும்.

 

நிதி ஒதுக்கீடு, வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அரசுப் பணியாளர் நியமனம் என அனைத்திற்கும் டெல்லியின் அனுமதியை எதிர்பார்க்க வேண்டிய சூழல் புதுச்சேரியைப் பெரிதும் முடக்கியுள்ளது. எனவே, புதுச்சேரி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான மற்றும் சனநாயகத் தேவையாக இருக்கக்கூடிய புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி முழுமையாக வழங்கப்பட வேண்டும் என இச்சிறப்புப் பொதுக்குழுக்கூட்டம் வலியுறுத்துகிறது.

 

புதுச்சேரியை விட குறைந்த மக்கள் தொகைநிதி ஆதாரம் கொண்ட பல மாநிலங்களுக்கு மாநிலத் தகுதி வழங்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரிக்கு மட்டும் அது தொடர்ந்து மறுக்கப்படுவதற்கு இந்திய அரசின் தமிழினப் பாகுபாட்டு அணுகுமுறையே முதன்மைக் காரணம்!

 

எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவைக்கே முழுமையான அதிகாரம் இருக்க வேண்டும் என்ற சனநாயக உரிமையை ஏற்று, புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதி வழங்கப்படுவதன் மூலம் மட்டுமே, தமிழ் மக்களின் மொழி, பண்பாடு மற்றும் பொருளாதார உரிமைகளைப் புதுச்சேரி மக்களே தற்காத்துக் கொள்ள முடியும். எனவே, இந்திய ஒன்றிய அரசு காலங்கடத்தாமல் புதுச்சேரியைத் தனி மாநிலமாக அறிவிக்கத் தேவையான அரசியல் சட்டத் திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், அதன் மூலம் புதுச்சேரி மக்களின் அரசியல் விழைவை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இந்தப் பத்தாவது சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் இந்திய அரசை வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் - 6

சத்தியமங்கலம் பேருந்து நிலையத்திற்கு 'மொழிப்போர் ஈகி முத்து' பெயர் சூட்டி

அவருக்கு மணிமண்டபம் எழுப்ப வேண்டும்!

 

உலகத்திலேயே தாய்மொழி காக்க தமிழினம் போல் வேறேந்த இனமும் ஈகம் செய்திருக்கவில்லை. ஆனால், தமிழ் மொழியும், தமிழினமும் அதற்கான முழுப் பலனை அடையவில்லை. இன்னும், தமிழ் மொழி ஆட்சிமொழியாக, கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, நீதிமன்ற மொழியாக இல்லை!

 

1938லும், 1965லும் இந்தித் திணிப்புக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் தமிழ்த்தேசிய எழுச்சியான மொழிப்போரின் வரலாற்றையும், அதில் உயிரீகம் செய்த ஈகியரின் ஈக வரலாற்றையும் அடுத்தடுத்த தலைமுறையினர்க்குக் கடத்த வேண்டியது கட்டாயம்! அந்த வகையில்தான், குடந்தையில் மொழிப்போர் ஈகி தாளமுத்துவின் பெயரை, மாநகராட்சியின் புதிய வணிக வளாகத்துக்கு சூட்ட வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து கோரியது. தற்போது இக்கோரிக்கையை ஏற்று, மாநகராட்சி வணிக வளாகத்துக்கு மொழிப்போர் ஈகி தாளமுத்துவின் பெயரைச் சூட்டியுள்ள குடந்தை மாநகராட்சியின் ஆணையர், மேயர், துணை மேயர், சட்டப் பேரவை உறுப்பினர் உள்ளிட்டோருக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது!

 

அதேபோல், 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்த்தேசிய எழுச்சியான - இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது, தமிழ் மொழி காக்கத் தன் இன்னுயிரைத் ஈகம் செய்த ஈகி சத்தியமங்கலம் முத்து அவர்களின் அரும்பணியைப் போற்றுவது நம் வரலாற்றுக் கடமை!

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, 5ஆம் வகுப்பு மட்டுமே படித்திருந்தாலும், தாய்த் தமிழின் மீதான பற்றினால், 1965 மொழிப்போரின் போது, தனது 22-வது அகவையிலேயே தமிழ் மொழி காக்க – 11.02.1965 அன்று சத்தியமங்கலத்தில் தீக்குளித்து உயிரீகம் செய்தார்.

 

எனவே, சத்தியமங்கலம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு மொழிப்போர் ஈகி சத்தியமங்கலம் முத்துவின் பெயரைச் சூட்ட வேண்டும் என்றும், அவரது வரலாற்றை அடுத்த தலைமுறையினர்க்குக் கடத்த ஒரு நினைவு மண்டத்தை அமைக்க வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம், தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!

 

தீர்மானம் - 7

கொடிவேரி அணைக்கட்டிய வேட்டுவ செயங்கொண்ட 

சோழ கொங்காள்வன் அரசருக்கு மார்பளவுச் சிலை வேண்டும்!

 

ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கொடிவேரி அணைக்கட்டு, சுமார் 850 ஆண்டுகளுக்கு முன்பு (கி.பி. 1125 வாக்கில்) குறுநில மன்னரான உராளி செம்ப வேட்டுவ செயங்கொண்ட சோழ கொங்காள்வன் என்ற தமிழ் குறுநில மன்னரால் கட்டப்பட்டது. பாறைகளைச் செதுக்கி, சுண்ணாம்பு அல்லது சாந்து பயன்படுத்தாமல், கற்களை ஒன்றோடொன்று பிணைக்கும் 'இடைப்பூட்டு' (Interlocking) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த அணைக்கட்டை அவர் உருவாக்கியுள்ளார். இவ்வளவு பெரிய பொறியியல் அதிசயத்தைச் செய்த அந்தத் தமிழ் மன்னரின் வரலாறு இன்று சிதைந்து, சுற்றுலாப் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் தெரியாத நிலையில் இருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.

 

எனவே, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இந்தப் பத்தாவது சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம், கொடிவேரி அணைக்கட்டு வளாகத்தில், அந்த அணைக்கட்டைக் கட்டிய மன்னரான உராளி செம்ப வேட்டுவ செயங்கொண்ட சோழ கொங்காள்வனுக்கு, அங்கொரு கம்பீரமான மார்பளவு வெண்கலச் சிலையையும், அவர் அணைக்கட்டிய விதம் மற்றும் வரலாற்று ஆதாரங்களை விளக்கும் கல்வெட்டுக் குறிப்பினையும் (Information Board) நிறுவ வேண்டும் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது. இதன் மூலம் தமிழர்களின் நீர் மேலாண்மை அறிவை உலகிற்குப் பறைசாற்றுவதோடு, அந்தப் பெருமைக்குரிய மன்னருக்குத் தமிழ் சமூகம் செய்யும் நன்றிக்கடனாகவும் இது அமையும் என வலியுறுத்துகிறோம்!

 

================================

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

================================

பேச: 9443918095, புலனம் : 9841949462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

================================

 

 

 

 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.