சூழலியல் போராளி தோழர் முகிலனைத் தாக்கிய மணற்கொள்ளை அரம்பர்களை உடனடியாக சிறையிலடைக்க வேண்டும்! தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட பெ. மணியரசன் வேண்டுகோள்!
சூழலியல் போராளி தோழர் முகிலனைத் தாக்கிய மணற்கொள்ளை அரம்பர்களை உடனடியாக சிறையிலடைக்க வேண்டும்! தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்!
அணுஉலை எதிர்ப்புப் போராளியும், மணல் கொள்ளை எதிர்ப்புப் போராளியுமான தோழர் முகிலன் அவர்கள், நேற்று (13.12.2016) முன்னிரவு மணல் கொள்ளையர்களின் அடியாட்களால் வழி மறிக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
அடிப்படையில் மனித உரிமைப் போராளியாக உள்ள முகிலன், தொடர்ந்து தாக்கப்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது.
கொள்ளைக் கும்பலாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மணல் கடத்தும் பெரும்புள்ளிகள் ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் அரவணைப்பில் உலா வருகின்றனர். ஆனால், நீதிமன்ற ஆணைகளைப் புறந்தள்ளிவிட்டு காவிரி மணலை வரைமுறையின்றிக் கொள்ளையடித்து வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கும் அநீதியையும் சட்ட விரோதக் கும்பலின் நடவடிக்கைகளையும் மக்கள் ஆதரவோடு தடுக்க முன்வரும் தோழர் முகிலன் தாக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன், 10.07.2016 அன்று கரூர் மாவட்டம் கடம்பன்குறிச்சி மணல் குவாரியைப் பார்க்க வந்த இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சித் தலைவர் தோழர் இரா. நல்லக்கண்ணு அவர்களை, இதே மணல் கொள்ளை கும்பல் வழிமறித்துத் தடுத்தது.
தமிழர் தேசிய முன்னணித் தலைவர் திரு. பழ. நெடுமாறன் அவர்களும், இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி தமிழ்நாடு துணைச் செயலாளர் தோழர் சி. மகேந்திரன் அவர்களும் கடம்பன்குறிச்சியிலிருந்து தோட்டக்குறிச்சிவரை உள்ள மணல் குவாரிகளைப் பார்வையிட வந்த போது, அவர்களையும் தடுத்தனர்.
தேனி மாவட்டம் பாசுகர், புதுக்கோட்டை சித்திரவேல், கடம்பன்குறிச்சி மனோ ஆகியோர் இந்த வன்முறைகளுக்குத் தலைமை தாங்குகிறார்கள் என்று அப்பொழுது பெயர் குறிக்கப்பட்டு புகார் கொடுத்திருக்கிறார்கள். மேற்கண்ட வன்முறை நிகழ்வுகளுக்கு யாரையும் காவல்துறை கைது செய்யவில்லை.
இந்தத் துணிச்சலில்தான், மணல் கொள்ளையர்களின் அரம்பர்கள் நேற்று (13.12.2016) மாலை கரூர் மாவட்டம் – வாங்கல் கிராமத்தில் மணல் கொள்ளை தொடர்பாக மண்டபம் ஒன்றில், கலந்தாய்வுக் கூட்டம் நடத்திவிட்டு காரில் புறப்பட்ட முகிலனையும் மற்றவர்களையும் வழிமறித்துத் தாக்கியுள்ளார்கள்.
தோழர் முகிலனின் சட்டை பனியனையெல்லாம் கிழித்து, அடித்து துன்புறுத்தும்போது, உடனிருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு பொது மக்கள் ஓடி வந்தவுடன் அந்த அரம்பர்கள் தப்பிச் சென்று விட்டார்கள்.
உடனடியாக மாவட்ட ஆட்சியர் இல்லம் சென்று, மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். பிறகு காவல்துறையினரிடமும் புகார் கொடுத்திருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர், மாவட்டத்தின் குடிமையியல் நீதிபதியும் ஆவார். அவர் உடனடியாகக் குற்றவாளிகளைக் கைது செய்ய காவல்துறைக்கு ஆணையிட வேண்டும்.
தமிழ்நாட்டின் நீதி, நிர்வாகம் அனைத்திற்கும் அப்பாற்பட்ட அதிகாரம் படைத்தவர்கள் போல் செயல்பட்டு வரும் மணல் கொள்ளைக் கும்பல் மீது நடவடிக்கை எடுத்திட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட வேண்டும்.
குறிப்பாக தோழர் முகிலனைத் தாக்கியோர் மீதும், அவரைத் தாக்கிட ஏவியோர் மீதும் வழக்குப் பதிவு செய்து உடனடியாக அந்த வன்முறைக் கும்பலை தளைப்படுத்தி சிறையிலடைக்க வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com
Leave a Comment