ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவிரி உரிமையைக் கைவிட திரைமறைவு சதி -கி.வெங்கட்ராமன்

தமிழகத்தின் காவிரி உரிமையைக் காவு கொடுப்பதற்குத் திரைமறைவு சதி வேலைகள் நடக்கின்றன. அண்மையில் நடைபெற்ற மூன்று நிகழ்வுகளை தொகுத்துப் பார்த்தால் இந்த ஐயத்திற்கான வலுவான அடிப்படை தெளிவாகும்.

1. கடந்த 28.7.09 அன்று தஞ்சையில் நடைபெற்ற ‘காவிரிக்குடும்பம்” கூட்டம். 2. திருவள்ளுவர் சிலை திறப்பு, சர்வக்ஞர் சிலை திறப்பு 3. 17.8.09 அன்று சென்னையில் நடந்த காவிரி மாநிலங்கள் மின் திட்டப் பேச்சு வார்த்தை ஆகிய மூன்று நிகழ்வுகளே அவை.

காவிரிக் குடும்பம் கூட்டம்
தமிழின உரிமைகளுக்கு எதிராகவே சிந்தித்து, செயல்பட்டுப் பழகிப்போன ‘இந்து” என்.ராம் ஏற்பாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்னால் உருவானது தான் “காவிரிக்குடும்பம்” என்ற அமைப்பு. இதன் ஒருங்கிணைப்பாளர் ஜனகராஜ் என்ற ஆய்வாளர். இவர் “சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்”தில் பணியாற்றுகிறவர். இதில் மன்னார்குடி ரெங்கநாதன் தலைமையில் அவர் கருத்துக்கு இசைவான சில “விவசாயிகள் சங்கங்கள்” தமிழகப் பேராளர்கள் என்ற பெயரில் இடம் பெற்றன. புட்டண்ணய்யா என்பவர் தலைமையில் ‘கர்நாடகத் தரப்பு” என்ற பெயரால் சில ‘விவசாயிகள் சங்கங்கள்” இடம்பெற்றன.

இது கர்நாடகத்திற்குச் சார்பாக நடந்து கொண்டு காவிரி நீர் உரிமையைப் கைவிடவும், கிடைத்ததைக் கையேந்திப் பெற்றுக் கொள்ளவும் தமிழ்நாட்டு உழவர்கள் ஒப்புக் கொண்டு விட்டார்கள் என்ற தோற்றம் காட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. தமிழக அரசு, குறிப்பாக முதலமைச்சர் கருணாநிதி எப்போதெல்லாம் காவிரி உரிமையைப் பலியிட விரும்புகிறாரோ அப்போதெல்லாம், அதற்கு காவிரிப் பாசன விவசாயிகள் ஒப்புதல் தந்துவிட்டதாகக் காட்டுவதற்கு இந்தக் காவிரிக்குடும்பத்தையும், மன்னார்குடி ரெங்கநாதனையும் பயன்படுத்திக் கொள்வது வாடிக்கை.

ஒவ்வொரு முறையும் இவ்வாறான முயற்சி நடக்கும் போதெல்லாம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தக்க முறையில் தலையிட்டு, எதிர்ப்பைக் காட்டி முடிந்தவரை இந்தத் துரோகத்தைத் தடுத்து வருகிறது. இந்த முறை 28.7.09 அன்று தஞ்சையில் நடைபெற்றது

“காவிரிக்குடும்பத்”தின் பன்னி ரெண்டாவது கூட்டம். இக்கூட்டத்தின் அடிப்படை நோக்கமே காவிரித் தீர்ப்பாயத்தின் (நடுவர் மன்றத்தின்) இறுதித் தீர்ப்புக்கு எதிரான உச்சநீதிமன்ற வழக்கைத் தமிழக அரசுத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துவது தான். இது மிகவும் ஆபத்தானது.

ஏனெனில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தமிழகத்திற்குப் படுபாதகமானது; சட்ட விரோதமானது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது சரியானது. காவிரியில் கர்நாடகம் தமிழகத்திற்குத் திறந்து விட வேண்டிய நீரின் அளவு குறித்து 1924ஆம் ஆண்டு காவிரி ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருப்பதை விடவும் (389 டி.எம்.சி.), 1972ஆம் ஆண்டு நடுவண் அரசு நியமித்த உண்மை அறியும் குழுவின் அறிக்கையை விடவும் (378 டி.எம்.சி.), நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை விடவும் (215 டி.எம்.சி.) காவிரி நடுவர் மன்றம் வழங்கிய 192 டி.எம்.சி. என்பது மிகமிகக் குறைவானது.

இதிலும் சுற்றுச்சூழல் சேதத்துக்கு 10 டி.எம்.சி., கடலில் கலப்பதற்கு 4 டி.எம்.சி., கழிக்கப்பட்டு 178 டி.எம்.சி;. தான் தமிழகத்தின் பங்கு என அத்தீர்ப்பு அறிவித்தது. இது காரைக்காலுக்குத் தர வேண்டிய 7 டி.எம்.சியையும் உள்ளடக்கியது ஆகும். தவிரவும், நடுவர் மன்றம் தனக்கு விதிக்கப்பட்ட விசாரணை வரம்பை மீறி தீர்ப்புரைத்துள்ளதால் இறுதித்தீர்ப்பு சட்ட விரோதமானதாகும்.

இந்திய அரசு 1990ஆம் ஆண்டு காவிரித் தீர்ப்பாயத்தை அமைத்த போது அதன்முன் இரண்டு கேள்விகளை விசாரணைக்கு வைத்தது.

1. கர்நாடக அரசு ஹேமாவதி, இலட்சுமண தீர்த்தம், சுவர்ணவதி, கபினி ஆகிய காவிரியின் துணை ஆறுகளில் அணை கட்டியிருப்பது 1892 மற்றும் 1924ஆம் ஆண்டுகளின் காவிரி ஒப்பந்தத்தை மீறிய செயலா? இவ்வணைகள் கட்டியதால் தமிழகத்தின் காவிரிப் பாசன ஆயக்கட்டுதாரர்களின் பாசன உரிமை பாதிக்கப்பட்டுள்ளதா?

2. காவிரி நீரைப் பயன்படுத்துவது, பங்கிட்டுக் கொள்வது, கட்டுப்படுத்துவது தொடர்பானவற்றில் இந்த ஒப்பந்தங்கள் மீறப்பட்டுள்ளனவா? இது தான் காவிரி நடுவர் மன்றத்தின்(தீர்ப்பாயத்தின்) விசாரணை வரம்பு.

இந்தக் கேள்விகளுக்கான பதிலை காவிரி இறுதித் தீர்ப்பு தெளிவாகத் தெரிவிக்கவில்லை. மாறாக, விசாரணை வரம்பை மீறி, 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் இந்த இறுதித் தீர்ப்பின் மூலம் ரத்து செய்யப்படுகின்றன(Supersede) என அறிவித்தது. காவிரி ஒப்பந்தங்கள் செல்லுமா செல்லாதா என்பதோ அவை நீடிக்கலாமா, கூடாதா என்பதோ இம்மன்றத்தின் விசாரணைக்கு வைக்கப்படவில்லை. இந்நடுவர் மன்றத்தின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது அது.

எனவே நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு சட்ட விரோதமானது. இத்தீர்ப்பை எதிர்த்து த.தே.பொ.க.வும், தமிழக உழவர் முன்னணியும் போராட்டங்கள் நடத்தின. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, இத்தீர்ப்பை சட்ட விரோதமானது என அறிவிக்கச் செய்து, புதிய நடுவர் மன்றம் அமைக்க ஆணை கோர வேண்டும் என வலியுறுத்தின. அதுவரை இடைக்காலத் தீர்ப்பின்படி 205 டி.எம்.சி. தண்ணீர் பெற அதிகாரிகள் மட்டத்திலான, அதிகாரமுள்ள ஆணையம் அமைக்கப் பெற வேண்டும் எனக் கோரின. முதலில் தீர்ப்பை வரவேற்று, விழா கொண்டாடிய தமிழக அரசு, பிறகு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. வழக்கு நிலுவையில் உள்ளது.
தமிழகத்திற்கு மிகப் பாதிப்பான, கர்நாடகத்திற்கு மிகமிகச் சாதகமான இத்தீர்ப்பிலும் கர்நாடகம் நிறைவு அடையவில்லை. அம்மாநில அரசும் உச்சநீதிமன்றத்தை அணுகியது.

இந்நிலையில் கர்நாடகத்தின் அழுத்தத்திற்கேற்ப இன்னும் குறைத்துக் கொண்டு, எப்படியோ ஒரு புதிய ஒப்பந்தத்திற்கு வழியேற்படுத்துவது, அதற்கு வாய்ப்பாக உச்சநீதிமன்ற வழக்கைத் திரும்பப் பெற வைப்பது என்பதே காவிரிக் குடும்பத்தின் முயற்சி. தஞ்சைக் கூட்டத்திற்கு முன்பு பெங்களூரில் நடைபெற்ற காவிரிக் குடும்பக் கூட்டத்தில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஜனகராஜ் முன் வைத்த யோசனை இதனை உறுதி செய்கிறது.

இதன்படி தமிழகம் தனது பங்கை இறுதித் தீர்ப்பின் அளவிலிருந்து இன்னும் 19 டி.எம்.சி. குறைத்துக் கொண்டு 173 டி.எம்.சி. பெற்றுக் கொள்ள சம்மதிக்க வேண்டும். இது காரைக்காலுக்கு கொடுக்க வேண்டிய பங்கீட்டையும் சேர்த்தது. கர்நாடகத்திற்கு ஏற்கெனவே இறுதித் தீர்ப்பு அள்ளிக் கொடுத்த 270 டி.எம்.சி.க்கு மேல் இன்னும் 19 டி.எம்.சி. கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்பதும் ஜனகராஜ் யோசனை. வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே மையமான கோரிக்கை.

ஆயினும் இக்கூட்டம் நடப்பதற்கு சில நாள்களுக்கு முன்பாக காவிரிக் குடும்பத்தில் தமிழகத்திலிருந்து இடம் பெற்றிருந்த சில சங்கங்கள் அவ்வமைப்பிலிருந்து வெளியேறின. வழக்கைத் திரும்பப் பெற வைப்பதே இக்கூட்டங்களின் மைய நோக்கமாக உள்ளது. காவிரியில் தமிழக உரிமையைப் பலியிட புதிய புதிய கணக்குகள் முன் வைக்கப்படுகின்றன என்று இந்த விவசாயிகள் அமைப்புகள் குற்றம் சாட்டின. இக்குடும்பத்தில் இடம்பெற்றுள்ள கர்நாடகத் தரப்புத்
தலைவர் புட்டண்ணய்யா தமிழகத்திற்கு ஒரு சொட்டுக் காவிரி நீரும் தரமாட்டோம் என்று அறிக்கை கொடுத்துவிட்டு இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்பதன் உள்நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பின.

இந்நிலையில் தஞ்சையில் ஒரு தனியார் விடுதியில் சூலை 28 அன்று காவிரிக் குடும்பக் கூட்டம் நடைபெற்ற போது, அவ்விடுதிக்கு வெளியே தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. தமிழ்நாட்டின் காவிரி உரிமையை பலியிட நடக்கும் சதிக்கூட்டம் என்பதை விளக்கி நகரமெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. கூட்டத்தின் உள்ளே புகுந்து தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தெ.காசிநாதன் எதிர்ப்புக் குரல் எழுப்பினார். மீண்டும் கர்நாடகத்தில் பேசுவதாக கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

சிலை திறப்பு விழாக்கள்

அடுத்து நாம் கவனிக்க வேண்டிய நிகழ்வு சிலை திறப்பு விழாக்கள். பெங்களூரில் அல்சூர் எரிக்கரையில் கடந்த 13 ஆண்டுகளாகக் கோணிப்பையில் மூடி வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலை 9.8.09 அன்று திறந்து வைக்கப்பட்டது.

கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூர் தமிழ்ச் சங்கம் அம்மாநில அரசின் இசைவோடு கட்டிய அச்சிலை, திறப்பு விழாவுக்கு நாள் எல்லாம் அறிவிக்கப்பட்ட நிலையில், கன்னட வெறி அமைப்புகளின் எதிர்ப்பால் கடைசி நேரத்தில் விழா நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது கர்நாடக முதலமைச்சர் பதவிக்கு வந்துள்ள எடியூரப்பா சிகிச்சைக்காக சென்னைக்கு வந்த நேரத்தில் தமிழக முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்து இது குறித்துப் பேசினார்.

இதற்கு முன்பே சில ஆண்டுகளுக்கு முன் கர்நாடகத்திலிருந்து ஒரு யோசனை தெரிவிக்கப்பட்டது. கன்னடக் கவிஞர் சர்வக்ஞர் என்பவரது சிலையை சென்னையில் திறப்பதற்கு ஏற்றுக் கொண்டால், பெங்களூர் திருவள்ளுவர் சிலையைத் திறக்க கர்நாடக அரசு ஒத்துக் கொள்ளும் என்பதே அந்த ஏற்பாடு.

பிணைக் கைதி விடுதலைக்கு சில நிபந்தனையை ஏற்பது போல, இதுவரை இல்லாத ஒருவர் சிலையை சென்னையில் நிறுவ தமிழக அரசு ஒத்துக் கொண்டது. ஆசான் திருவள்ளுவரையும், தமிழினத்தையும் இழிவுபடுத்தும் செயல் இது. இழிவுபடுத்தும் இந்நிபந்தனையை ஏற்று, பெங்களூர் திருவள்ளுவர் சிலையைத் திறப்பதைவிட, அச்சிலை கோணிப்பைக்குள் முடங்கிக் கிடப்பதே மேல் என தமிழின உணர்வாளர்கள் கூறியதைத் தி.மு.க. அரசு ஏற்கவில்லை.

மாறாக இந்த இனஇழிவையே சாதனையாகப் பறைசாற்றியது. இதன்படி 9.8.09 அன்று பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடந்தது. 13.8.09 அன்று சென்னையில் சர்வக்ஞர் சிலை திறப்பு விழா நடந்தது. இரு விழாக்களிலும் இரண்டு முதலமைச்சர்களும் பங்கு பெற்றனர்.

சிலை திறப்புகள் மூலம் இரு மாநிலங்களுக்குமிடையே நல்லிணக்கம் மலர்ந்து விட்டதாக இரண்டு முதலமைச்சர்களும் அறிவித்தனர். சென்னை விழாவில் பேசிய எடியூரப்பா தன்னை ‘தம்பி’ என்றும், கலைஞரை ‘அண்ணன்’ என்றும் வர்ணித்தார். சில மாதங்களுக்கு முன்பு ஒகேனக்கல் சிக்கலை ஒட்டி எடியூரப்பாவை ‘இடையூறப்பா’ எனக் கேலி பேசிய கருணாநிதி, அவ்விழாவில் ‘இணைக்கம் ஏற்படுத்திய தம்பி’ எனப் புகழ்ந்து பேசினார்.

இனிக்க இனிக்கப் பேசினாலும் எடியூரப்பா காரியத்தில் மட்டும் கண்ணாக இருந்தார். காவிரி, ஒகேனக்கல் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்றார். இதில் தான் அவரது நயவஞ்சகம் ஒளிந்து கொண்டிருக்கிறது.

ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தில் கர்நாடகத்துடன் பேசுவதற்கு என்ன இருக்கிறது? ஒகேனக்கல் இருப்பது கர்நாடகத்திலிருந்து 17 கிலோ மீட்டர் இப்பால் தமிழக எல்லைக்குள். அங்கு ஓடுகிற தண்ணீர் தமிழகத்திற்கு உரியது. அதில் குடிநீர்த்திட்டம் செயல்படுத்துவதற்கு கர்நாடகத்தின் ஒப்புதல் பெறத் தேவையில்லை.

எனவே இது குறித்து கர்நாடகத்துடன் பேசுவதற்கு எதுவும் இல்லை. ‘ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் குறித்துப் பேசலாம்’ என்று சொல்வதன் மூலம் இத்திட்டத்தைத் தகராறுக்குரிய ஒன்றாக (Disputed Project) நிலைநிறுத்துகிறார் எடியூரப்பா.

ஏற்கெனவே இவரது அரசு ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்திற்குக் கடன்நிதி வழங்கும் ஜப்பான் வங்கியிடம் அதிகாரப்பூர்வமான எதிர்ப்புக் கடிதம் கொடுத்து விட்டது. இதே எடியூரப்பா தான் ஒகேனக்கல் “மாரி கொட்டாய்” பகுதி வரை அத்துமீறி வந்து “ஒகேனக்கல் மலையும், மண்ணும், அங்கு ஓடிவரும் காவிரி நீரும் எங்களதே” என்று கன்னட வெறிக் கூச்சல் போட்டவர் என்பது நினைவு கொள்ளத்தக்கது.

அதே போல் ‘காவிரி குறித்துப் பேசலாம்’ என்று கூறுவதும் கர்நாடகத்தின் வழக்கமான நயவஞ்சக உத்தி என்பதை வரலாறு மெய்ப்பிக்கிறது. புதிய புதிய நீர் நிலைகளை உருவாக்கி, அவற்றில் மொத்தக் காவிரி நீரையும் தேக்கி வைக்கும் சட்ட விரோதச் செயலுக்கு கால அவகாசம் பெற்றுக் கொள்ளும் உத்தியே அது. விழாவுக்கு முன்பு எடியூரப்பா சென்ற இடம் சென்னை ‘இந்து’ ஏட்டு அலுவலகம். அங்கு ‘காவிரிக்குடும்ப’ சூத்திரதாரி என்.ராமைச் சந்தித்து விட்டுதான் எடியூரப்பா வந்தார்.

“இறுதித் தீர்ப்புக்குப் பிறகும் காவிரி நீர்ப் பங்கீடு குறித்து பேச வேண்டும் என்கிறீர்களே” எனச் செய்தியாளர்கள் கேட்டனர். “இத்தீர்ப்பு குறித்து கர்நாடகத்தின் நிலைப்பாடு நீங்கள் அறிந்தது தான். எல்லாவற்றையும் பேசித் தீர்த்துக் கொள்வது தான் சிறந்த வழி. அதற்கான இணைக்க சூழலை ஏற்படுத்தவே விரும்புகிறோம்” என்றார் எடியூரப்பா.

இதன் பொருள் என்ன? இறுதித் தீர்ப்புக்கும் குறைவாக ஏதேனும் பேச வேண்டும் என்பது தானே! எடியூரப்பாவின் இந்த விருப்பத்தை செயல்படுத்தும் முயற்சிதான் காவிரிக்குடும்பத்தின் கூட்டம்.

தமிழகத்திற்கு எதிரான எடியூரப்பாவின் இந்த நயவஞ்சக நச்சுரைக்கு தமிழக முதலமைச்சர் மறுப்பேதும் சொல்லவில்லை. பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்வதற்கான சுமூக நிலை ஏற்பட்டுள்ளது என்பதாகவே வளைத்து வளைத்து கருணாநிதியும் பேசினார். ஆட்டக்களத்தில் எதிரெதிராக நிற்கும் இரண்டு அணிகளும் ஒரே இடத்தில் ‘கோல்’ போடும் விசித்திரமான கால்பந்தாட்டமாக காவிரிச் சிக்கல் உள்ளது. தமிழ்நாட்டு உரிமைக்காகப் பேச எந்த அரசும் இல்லை. ‘இணக்கம்’ பற்றி எடியூரப்பா பேசிக் கொண்டிருக்கும் போதே அவரது அரசின் பாசன அமைச்சரும், அதிகாரிகளும் கர்நாடக அணைகள் நிரம்பினால் தான் உபரிநீரைத் தமிழகத்திற்கு விட முடியும் என்று அறிக்கை விடுகின்றார்கள். வழிந்து வரும் நீரை ஏந்திக் கொள்ளும் வடிகாலாகவே தமிழகம் திகழ்கிறது. மின்திட்டப் பேச்சுவார்த்தை சென்னை செய்தியாளர்களிடம் இன்னொன்றையும் சொன்னார் எடியூரப்பா.

“கர்நாடகத்தில் மேற்கொள்ள வேண்டிய சிவசமுத்திரம் நீர் மின்சாரத் திட்டத்திற்கு தமிழக அரசு எழுப்பியுள்ள ஆட்சேபணையை விலக்கிக் கொள்ள வேண்டும். அத்திட்டத்தை உச்சநீதிமன்றக் காவிரி வழக்கிலிருந்து வெளியே எடுத்து விட அனுமதிக்க வேண்டும்” என்பதே அது. இதையே கருணாநிதியிடமும் வலியுறுத்தினார். இந்த சூழ்நிலையில் காவிரி மாநில மின்திட்டப் பேச்சுவார்த்தை 17.8.09 அன்று சென்னையில் நடைபெற்றது.

இந்திய அரசின் தேசிய நீர்மின் கழகம் காவிரி நீரைக் கொண்டு கர்நாடகத்தில் சிவ சமுத்திரம் மின் திட்டம் மூலம் 270 மெகாவாட், மேகதாது மின்திட்டம் மூலம் 400 மெ.வா., தமிழ்நாட்டில் ராதிமணல் திட்டம் மூலம் 360 மெ.வா., ஒகேனக்கல் திட்டம் மூலம் 120 மெ.வா., மின்சாரம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இவற்றுள் சிவசமுத்திரம் மின்திட்ட வரைவு மட்டும் கிட்டத்தட்ட நிறைவு நிலையில் உள்ளது.

இத்திட்டத்திற்கு இந்திய அரசு தொடர்பான அனைத்துத் துறைகளின் இசைவும் வழங்கப்பட்டுவிட்டது. பிற திட்டங்களின் வரைவெல்லாம் தொடக்க நிலையில் உள்ளன. சிவசமுத்திரம் திட்டத்தைத் தம் பொறுப்பில் நிறைவேற்ற விரும்பும் கர்நாடக அரசு, இது குறித்து எதிர்ப்பைத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரியது.

சென்னை தலைமைச் செயலகத்தில் ஆகஸ்ட் 17இல் நடைபெற்ற இந்தக் கூட்டத்திலும் கர்நாடகத்தின் எரிசக்தித்துறைச் செயலாளர் கே.ஜெய்ராஜ் இதனையே வலியுறுத்தினார். கர்நாடக அரசின் இந்நிலைப்பாட்டுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. இந்திய அரசின் மின்கழகக் கட்டுப்பாட்டில் இந்நீர்மின் உற்பத்தி நடந்தால், அதில் பிற தென் மாநிலங்களுக்கு பங்கு போகும். தம் பொறுப்பில் அத்திட்டம் விடப்படுமானால் அங்கு உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் கர்நாடகத்திற்கே கிடைக்கும். இரண்டாவதாக, கர்நாடகத்தின் பொறுப்பில் இது போய்விட்டால் அதில் கிருஷ்ணராஜ சாகருக்குக் கீழே, மேட்டூருக்கு மேலே நீர் தேக்கிக் கொள்ள இன்னொரு வாய்ப்பு கர்நாடகத்திற்குக் கிடைக்கிறது. அது முழுவதும் கர்நாடக மாநிலக் கட்டுப்பாட்டில் இருந்தால், நாளை நீர்க் கொள்ளளவைக் கூட்டிக் கொண்டே போகலாம்.

ஏற்கெனவே ஒப்பந்தத்தை மீறி ஹேமாவதி, ஹேரங்கி, சுவர்ணாவதி, லெட்சுமணதீர்த்தம், கபினி அணைகளைச் சட்ட விரோதமாக கட்டிய மாநிலம் தானே கர்நாடகம்? சிவசமுத்திரம் மின் திட்டத்திற்காக காவிரி நீரைத் தேக்கிக் கொள்ள அனுமதித்தால் தமிழகத்திற்கு வழிந்து வரும் உபரி நீர் கிடைப்பதும் குறையும்.

நடுவர்மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக சிவசமுத்திரத்தில் கூடுதல் தண்ணீர் எடுக்க மாட்டோம் என்று கர்நாடக அதிகாரி ஜெய்ராஜ் உறுதியெல்லாம் கூறினார். அதே நேரம், அத்திட்டம் தங்கள் கட்டுப்பாட்டில் வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கர்நாடகத்தின் வழக்கமான சூழ்ச்சிப் பேச்சுதான் இது. நடுவண் அரசின் தேசிய நீர்மின் கழகம் சார்பில் 4 திட்டங்களும் நிறைவேற்றப்படுமானால் தமிழகத்திற்கு மறுப்பேதும் இல்லை என்று தமிழ்நாட்டின் சார்பில் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பொதுப்பணித்துறைச் செயலாளர் இராமசுந்தரம் கூறினார்.

இந்த நிலையைத் தெளிவுபடுத்தி தமிழக முதலமைச்சர் ஏற்கெனவே இந்தியப் பிரதமருக்குக் கடிதம் அனுப்பியதாகவும் தெரிவித்தார். சட்ட நிலைமை எதுவாக இருப்பினும், கர்நாடகத் திட்டங்களும், தமிழகத் திட்டங்ளும் சமநிலையில் வைத்துப் பார்க்கத் தக்கன அல்ல. ஏனெனில் ராசிமணலில் நீர் மின்சாரம் உற்பத்தி செய்வதோ, ஒகேனக்கலில் உற்பத்தி செய்வதோ தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் காவிரி நீரிலிருந்துதான். இது கடைமடை மாநிலம். ஆனால், சிவசமுத்திரம், மேகதாதுவில் மின்சாரம் உற்பத்தி செய்வது தமிழகத்திற்கு தண்ணீர் வருவதற்கு முன்னால் நடப்பதாகும். அங்கு தேக்குவது தான் சிக்கலுக்கு உரியதாகும்.

இந்நிலையில் ராசிமணல், ஒகேனக்கல் நீர் மின்திட்டங்களுக்கு கர்நாடகத்தின் அனுமதி பெற வேண்டும் என்பது நியாயத்தின் பாற்பட்டதல்ல. இந்திய அரசு கட்டுப்பாட்டில் சார்பில் சிவசமுத்திரம், மேகதாது இருந்தால் தமிழகத்திற்குப் பாதிப்பு வராது என்பது உறுதி இல்லை. ஏனெனில் இந்திய அரசு காவிரிச்சிக்கலில் நடுவு நிலையில் நடந்து கொள்ளவில்லை என்பது தான் வரலாறு.

தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, முதலமைச்சரின் நிலைபாட்டை நியாயப்படுத்தி விட முடியாது. இப்போது சொல்லப்படுகிற நீர்மின் திட்டங்கள் சில ஆண்டுகளுக்குப் பிறகே செயலுக்கு வர முடியும். அதற்குள் புதிய காவிரி நடுவர் மன்றம் அமைத்து, இறுதித் தீர்ப்பு பெற வழிகாண வேண்டும். அதுவரை முன்னுரிமை என்ற அடிப்படையிலாவது நெய்வேலி மின்சாரத்தை முழுவதுமாகத் தமிழகத்திற்குப் பெற வேண்டும்.

காவிரிச் சிக்கல் தீர்வதற்கு முன்பாக கர்நாடக நீர் மின் திட்டங்களுக்கு இசைவு அளித்தால், காவிரி நீர் கிடைப்பது குறையும். உச்சநீதிமன்ற வழக்கு சீர்குலையும். தமிழ்நாட்டுக்குப் பெரும் பாதிப்பை அது ஏற்படுத்தி விடும். காவிரியைக் காக்க விழிப்புணர்வு தேவை தமிழக நீர் மின்திட்டங்களைத் துருப்புச் சீட்டாக வைத்து சிவசமுத்திரம், மேகதாதுத் திட்டங்களுக்கு இசைவு பெறுவது, ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி, பெங்க;ருக்குக் கூடுதல் குடிநீர் பெற இசைவைப் பெறுவது, திருவள்ளுவர் சிலை மூடப்பட்டுக் கிடப்பதைத் துருப்பாக பயன்படு்த்தி, தொடர்பேதுமற்ற சர்வக்ஞர் சிலையை சென்னையில் திறக்க வைப்பது என்ற கர்நாடகத்தின் திட்டங்களுக்கு முதலமைச்சர் கருணாநிதி இணங்கிக் கொண்டே போகிறார்.

இறுதியில் பார்த்தால் இது தமிழகத்தின் காவிரி உரிமையைப் பலியிடும் முயற்சி. இதற்கு காவிரிப் பாசன உழவர்களும் ஒப்புதல் தந்து விட்டார்கள் என்று நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் காட்டுவதற்குக் காவிரிக் குடும்பம். காவிரிப்பாசனப் பகுதியில் விழிப்புணர்வுள்ள, வலுமிக்க உழவர் இயக்கம் இல்லாததும், தமிழகத் தேர்தல் கட்சிகளிடையே காவிரி உரிமை பற்றி அக்கறையோ, தன்னம்பிக்கையோ இல்லாத நிலையும் அரசின் முயற்சிக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.

தமிழின உணர்வாளர்களும், உரிமை உணர்ச்சி உள்ள உழவரியக்க முன்னோடிகளும் இதில் தீவிர கவனம் செலுத்தினால் இந்த நிலையை விரைவில் மாற்ற முடியும். காவிரி உரிமையை வலியுறுத்தி தமிழ்த் தேசிய முன்னணி நடத்திய கல்லணை-நெய்வேலி நடைப்பயணம் கட்சிகடந்து உழவர்களின் -தமிழர்களின் ஆதரவைப் பெற்றது, ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தையொட்டி எழுந்த எழுச்சி ஆகியவை நமது நம்பிக்கைக்கு சான்று கூறும் ஆதாரங்கள் ஆகும்.

எனவே காவிரி உரிமையைக் கைவிட மீண்டும் ஒரு முயற்சி, திரைமறைவுச் சதி வேலை நடக்கிறது என்பதை உணர்ந்து உணர்வாளர்களும், உழவர்களும் அணி திரள வேண்டும். இச்சதிச் செயல்களை முறியடிக்க வேண்டும்.

நன்றி: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், செப்டம்பர் 09 இதழ்

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.