”ராஜபட்சே ஒரு பாசிஸ்ட் என புரிந்து கொள்ளாதவர் மார்க்சியர் அல்ல” - தி.க.சி. சிறப்புப் பேட்டி
”ராஜபட்சே ஒரு பாசிஸ்ட் என புரிந்து கொள்ளாதவர் மார்க்சியர் அல்ல” - தி.க.சி. சிறப்புப் பேட்டி.
அந்த மாலைப் பொழுது அவ்வளவு உற்சாகமும் உணர்ச்சிப் பெருக்கும் பெற்றதற்குக் காரணம் ஒரு மூத்த இளைஞர். அந்த மூத்த இளைஞர் தோழர் தி.க.சி. மூத்த படைப்பாளி, திறனாய்வாளர், கம்யூனிஸ்ட் ஆகிய சிறப்புகளுக்குரிய தோழர் தி.க. சிவசங்கரன் அவர்களை நெல்லை 24ணி, சுடலைமாடன் தெருவில் 12.09.09 மாலை சந்தித்தோம்.
பேராசிரியர் அறிவரசன், நெல்லைத் தோழர் கிருபானந்தன், நான் மூவரும் சந்தித்தோம்.
நமது தமிழர் கண்ணோட்டம் இதழைத் தொடர்ந்து படித்து உடனுக்குடன் அது குறித்துத் திறனாய்வு மற்றும் பாராட்டு மடல்கள் எழுதுவார். மற்றவர்களிடம் நல்ல செய்திகள் சிறிதளவு கண்டாலும் அவற்றைப் பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்தும் தி.க.சி.யின் குண இயல்பு பலரும் அறிந்ததே.
திடீர் சந்திப்பு இருதரப்பிலும் மகிழ்ச்சி ஊற்றெடுக்கச் செய்தது. அப்பொழுது அவருடன் உரையாடியதும் அதன் பிறகு 27.09.09 அன்று தொலைபேசியில் அவருடன் நீண்ட நேரம் பேசியதும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய செய்திகள்.
குடும்பத்தின் முன்னோர்கள் ஊர் நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அவர் தாத்தா சிவசங்கரன். நெல்லைக்கு வந்து தேங்காய்க்கடை வைத்திருந்தார். தாத்தா பெயர் பெயரனுக்கு வைக்கப்பட்டது. தந்தையார் கணபதியப்பன், தாயார் பர்வதத்தம்மாள். 30.09.1925-இல் பிறந்த தி.க.சி.க்கு இப்போது அகவை 85 நடக்கிறது.
ஐந்து அல்லது ஆறு வயதில் தாய் தந்தையரை இழந்து விட்ட திருநெல்வேலி கணபதியப்பன், சிவசங்கரன் தாத்தா - பாட்டியால் வளர்க்கப்பட்டார். தாயார் நூல்படிக்கும் பழக்கம் உள்ளவர் என்று கூறுவார்கள் என்கிறார் தி.க.சி.
அவர்கள் வீட்டருகில் இருந்த நூலகத்திற்குச் சென்று படிக்கும் பழக்கம் பன்னிரண்டு அகவையில் சிவசங்கரனுக்குத் தொடங்கியது.
நெல்லை மாவட்டத்தில் பிரபலமாக விளங்கிய காங்கிரஸ் தலைவர் கூத்தநயினார் வீடு இருந்த அதே தெருவில் தான் தி.க.சியின் வீடும் இருந்தது. அதனால் அவர் வீட்டில் நடைபெறும் இந்திய விடுதலைத் தொடர்பான நிகழ்ச்சிகள், செய்திகள் தி.க.சி.யின் இளம்பருவத்திலேயே அறிமுகமாயின. தி.க.சி.க்கு இந்திய விடுதலையின் மீது ஆர்வம் ஏற்பட்டது. ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்ச்சி வேர் கொண்டது. கூத்த நயினார் இல்லத்திற்குக் காந்தி வந்திருக்கிறார். அப்போது காந்தியைப் பார்த்ததை தி.க.சி. பெருமையாகக் கூறுகிறார்.
“நெல்லைக் காந்தி சதுக்கத்தில் காங்கிரஸ்த் தலைவர்கள் பலர் பேச்சை கேட்டிருக்கிறேன். நெல்லையில் நடந்த பெரியார் கூட்டங்களுக்கும் போயிருக்கிறேன். “சூத்திரன் என்றால் ஆத்திரங் கொண்டு அடி” என்று பெரியார் கூறியது ஈர்ப்பாக இருந்தது எனக்கு. அச்சொற்கள் என்மனதில் பதிந்தன” என்கிறார் தி.க.சி.
உப்புச்சத்தியாகிரகத்தை ஒட்டி நெல்லையில் நடத்த இயக்கங்கள், ஊர்வலங்கள் தி.க.சிக்கு அரசியல் அறிவை ஊட்டியவை ஆகும். “அச்சமில்லை - அச்சமில்லை - உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்ற பாரதியார் பாடலை உரத்துப் பாடிக் கொண்டு ஊர்வலத்திலும் சென்றார் தி.க.சி.
திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் இன்டர்மீடியட் படிக்கும் போது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் அறிமுகமாயின என்கிறார் தி.க.சி.
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு”
“சுதந்திரம் என்னசுக்கா மிளகா கிளியே
அக்கா வந்து வாங்கிக் கொடுக்க”
என்ற பாரதிதாசன் பாடல் வரிகள் அப்போதே நெஞ்சில் பதிந்தவை என்கிறார்.வல்லிக்கண்ணன் வீடு அடுத்த தெருவில் இருந்தது. வல்லிக்கண்ணன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளி வந்த கையெழுத்து ஏடான “இளந்தமிழர்” என்ற ஏட்டின் முகப்பு முத்திரைத் தொடராக “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்ற பாடல்வரிகள் இடம் பெற்றிருக்கும் என்று கூறுகிறார் தி.க.சி. வல்லிக்கண்ணன் இதழ்த் தொடர்பு, ராசு கிருஷ்ணசாமி நடத்திய நெல்லை வாலிபர் சங்கம், வடக்கு ரத வீதியில் தொ.மு.சி.ரகுநாதன் நடத்திய ஜவஹர் வாலிபர் சங்கம் ஆகியவற்றுடன் கொண்ட தொடர்பு ஒரே நேரத்தில் “இந்திய தேசியம் தமிழ்த் தேசியம் என்ற இருவகைக் கருத்துகளையும் என்னில் விதைத்தன” என்கிறார் தி.க.சி.
“கல்லூரியில் படிக்கும் போது ‘ஸ்டூடண்ட்’ என்ற ஆங்கில இதழைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் இயங்கிய அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் ஏடு. அவ்வேட்டைப் படித்து தான் கம்யூனிஸ்ட்டு ஆனேன்” என்று நினைவு கூர்கிறார்.
ஜனசக்தி இதழைப்படிக்கத் தொடங்கினேன். சோசலிச சோவியத் ஒன்றியத்தின் சாதனைகளைப் படித்தேன்.
“நெல்லையில் பாரதி மண்டபத்தைத் திறந்து வைத்து 1 மணி நேரம் ஜீவா பேசினார். அப்பேச்சு என்னை ஈர்த்தது... இப்படியாக நான் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தேன்” என்று நினைவு கூரும் தி.க.சி. 1948இல் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்ததாகக் குறிப்பிடுகிறார்.
“1948- ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அப்போது கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பி.டி.ரணதிவே நேரு ஏகாதிபத்தியத்தின் கையாள் என்றும் நேரு அரசாங்கத்தைத் தூக்கி எறிய வேண்டும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்து போராடத் தொடங்கியது. நேரு அரசாங்கம் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்தது. அத்தடை 1948 முதல் 1951 வரை நீடித்தது. அக்காலத்தில் தலைமறைவாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கும் தோழர்களுக்கும் கமுக்கத் கடிதங்களை கொண்டு போய் சேர்க்கும் பணியில் ஈடுபட்டேன்” என்கிறார் தி.க.சி.
ஏ.டி.தாமஸ் என்பவரின் தாம்ஸ்கோ வங்கியில் சென்னையில் பணியாற்றிய தி.க.சி. வங்கி ஊழியர் தொழிற்சங்கத்தில் செயல்பட்டார்.
கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் கவிஞர் தமிழ்ஒளியைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் பணியைச் சிறுதுகாலம் தி.க.சி. ஏற்றுச் செயல்பட்டதாகப் பெருமிதத்துடன் நினைவு கூர்கிறார் தி.க.சி.
விஜய பாஸ்கரனின் விடிவெள்ளி, சரஸ்வதி இதழ்களில் தி.க.சி. எழுதியுள்ளார். இதற்கிடையே தாம்ஸ்கோ வங்கியை கருமுத்து தியாகராசச் செட்டியார் வாங்கி மதுரை வங்கியுடன் இணைத்தார். தொழிற்சங்க இயக்கத்தில் பங்கு கொண்டதற்காகத் தண்டனை என்ற முறையில் தி.க.சியை மதுரைக்கும் பின்னர் கொச்சிக்கும் மாற்றினார்கள். “அம்மாற்றங்களைத் தொழிற்சங்க வேலைகளைப் பரந்து செய்வதற்குரிய வாய்ப்புகளாக ஆக்கிக் கொண்டேன்” என்கிறார் தி.க.சி.
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஏ.சம்பந்த மூர்த்தி சோவியத்நாடு இதழில் ஆசிரியர் பொறுப்பேற்றார். அவ்விதழில் ஸ்டாலின் பரிசு பெற்ற “வசந்தகாலத்திலே” என்ற புதினத்தையும் மாக்சிம் கார்க்கியின் “எது நாகரிகம்” என்ற நூலையும் தமிழாக்கம் செய்தார். “மார்க்சின் இல்வாழ்க்கை” என்ற நூலைத் தமிழில் சொந்தமாக எழுதினார். 1965 முதல் 1989 வரை சோவியத் நாடு இதழின் ஆசிரியர் குழுவில் திகழ்ந்த ஒளியுமிழும் எழுத்தாளர் பட்டியலில் ஒருவராக தி.க.சி.யும் இருந்தார். அவர்களுள் ஏ.சம்பந்தமூர்த்தி, தொ.மு.சி. ரகுநாதன், விஜய பாஸ்கரன், மாஜினி, கே.சி.எஸ். அருணாசலம் ஆகியோர் இருந்தனர்.
“சோவியத் செய்திகளும் கருத்துகளும்” என்ற தமிழ்ச் செய்தி ஏட்டுக்கு ஆசிரியராகவும் இருந்தார் தி.க.சி. இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் இலக்கிய ஏடான தாமரைக்கு 1965 முதல் 1972 செப்டம்பர் வரை முதன்மை ஆசிரியராக இருந்தார். “கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் தமிழகச் செயலாளராக இருந்த தோழர் எம்.கல்யாணசுந்தரம், தாமரை ஏட்டை நடத்த முழுஉரிமை அளித்தார்” என்று பெருமையுடன் கூறுகிறார் தி.க.சி.
“எனக்கு முழு உரிமை இருந்ததால் தான் தாமரையில் பலவகைக் கருத்துகளுக்கும் இடம் கொடுக்க முடிந்தது. இளம் எழுத்தாளர்கள் பலர்க்கு வாய்ப்புக் கொடுத்து ஊக்குவிக்க முடிந்தது” என்கிறார். இது நாடறிந்த உண்மை.
“ஆராய்ச்சி அறிஞர் நா.வானமாமலை தாம் எனக்கு வழிகாட்டி, ஆசான் எல்லாம். அவரிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டேன்”.
“கலை இலக்கியத் துறையைக் கம்யூனிஸ்ட்கள் எப்படி அணுக வேண்டும் என்பதற்கு ஜீவா காட்டிய பாதைதான் சிறந்தது. கலை இலக்கியத் துறையில் ஓர் ஐக்கிய முன்னணி தேவை. ஏகாதிபத்திய எதிர்ப்பு - நிலக்கிழமை எதிர்ப்பு - ஏகபோக எதிர்ப்பு என்ற விரிந்த தளத்தில் மக்கள் பக்கம் நின்று கலை இலக்கியப் பணி செய்ய வேண்டும்” என்கிறார் தி.க.சி.
தி.க.சி.யின் திறனாய்வு நூல்களுக்காக 2000 ஆண்டில் சாகித்திய அகாதமி விருது கொடுத்தது.
உங்கள் அரசியல் வாழ்வில் மறக்க முடியாத வகையில் உங்களைப் பாதித்த நிகழ்வுகள் எவை என்று கேட்ட போது பளிச்சென்று சொன்னார்:
“இரண்டு, ஒன்று சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி. இன்னொன்று ஈழவிடுதலை இயக்கத்தின் வீழ்ச்சி!”
தி.க.சி. மேலும் தொடர்ந்தார்: “உண்மையான மார்க்சிய லெனினியவாதி என்பவர் ஈழவிடுதலையை ஆதரிக்க வேண்டும். அது ஓரு அமிலச் சோதனை(Acid Test)!” இன்னும் சூடாக ஒரு வினாவைத் தூக்கிப் போட்டார்.
“ராஜபட்சேயை ஒரு பாசிஸ்ட்டு என்று புரிந்து கொள்ளாத ஒருவர் எப்படி மார்க்சியராகவோ, லெனினியராகவோ இருக்க முடியும்?” “இந்தச் சிக்கலில் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் நிலைபாடு சரியானது. அதற்காக நான் பெருமைப்படுகிறேன். மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சி நிலைபாடு தவறானது”.
“பிரபாகரனுக்கு முன் பிரபாகரனுக்குப் பின் என்று சி.பி.எம். இப்பொழுது பேசுகிறது. இது ஒரு சமாளிப்பு தான். ஈழத்தமிழர் துயரத்தின் பால் தமிழகத்தில் வெகுமக்கள் கொண்டுள்ள அக்கறையின் நிர்பந்தத்தால் அக்கட்சி இந்த சமாளிப்பைச் செய்ய வேண்டியுள்ளது. அக்கட்சி சரியான நிலைக்கு வர வேண்டும்.”
தமிழ்த்தேசியம் குறித்துத் தங்கள் கருத்து என்ன என்று கேட்டதற்குப் பின்வருமாறு கூறினார்.
“தமிழ்த் தேசியத்தை நான் ஆதரிக்கிறேன். நான் ஒரே நேரத்தில் தமிழனாகவும் இருக்கிறேன். உலகக் குடிமகனாகவும் இருக்கிறேன். மண்μக்கேற்ற மார்க்சியம் என்பதே சரி”.
மார்க்சியத் தத்துவத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கருதுகிறீர்கள்?
“ஓளி மிகுந்ததாக இருக்கும். நான் 1942-லிருந்து பொதுவுடைமையாளனாக இருக்கிறேன். பொதுவுடைமை சக்திகள் ஐக்கியப்பட வேண்டும். நீங்கள் தமிழ்த்தேசியம் பேசுவது சரி. அதே வேளை அனைத்திந்தியப் பொதுவுடைமை இயக்கங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அமைப்புகளுக்கு வெளியே உள்ள பொதுவுடைமை அறிவாளிகளையும் அரவணைக்க வேண்டும். அமைப்புகளுக்கு வெளியே சீரழிந்து போன முன்னாள் மார்க்சியர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
“மாவோ சொன்ன நூற்றுக்கணக்கான பூக்கள் பூத்துக்குலுங்கட்டும், ஆயிரக் கணக்கான சிந்தனைகள் முட்டி மோதட்டும் என்ற கருத்து எனக்கு மிகவும் பிடித்த கருத்து”.
அரசியலில் தாங்கள் யாரை எதிர்க்க வேண்டும் என்கிறீர்கள்?
“காங்கிரசையும் பா.ச.க. வையும் எதிர்க்க வேண்டும். இந்த நிலைப்பாட்டில் ஓர் ஐக்கிய முன்னணி கட்ட வேண்டும். “உண்மையான கம்யூனிஸ்ட்டு என்பவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவராகத்தான் இருக்க வேண்டும். ஊடகம் - வணிகம் - வேளாண்மை போன்றவற்றில் அமெரிக்க ஏகாதிபத்தியம் பச்சையாக வரவில்லை. முக்காடு போட்டுக் கொண்டு வருகிறது.
“ஈழச்சிக்கல் முடிந்து விட்டது என்று கருணாநிதி சொல்வது கூட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கருத்து தான்”
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக்கு உங்கள் அறிவுரை வேண்டும்.
“நடுத்தர வர்க்கத்தை வென்றெடுக்க வேண்டும். இளைஞர்களைத் திரட்ட வேண்டும். ஐக்கிய முன்னணி ஒன்றைக் கட்ட வேண்டும். யாரோடும் கூட்டு சேர்வதில்லை என்று ஒதுங்கிய குழுவாதப் போக்கும்(Sectarianism) கூடாது. வரைமுறையற்றுக் கூட்டுச் சேரும் வலதுசாரிப் போக்கும் கூடாது. அனைத்து வகையான முற்போக்கு, சனநாயக சக்திகளையும் ஒன்றிணைக்க வேண்டும்.”
நேரில் பேசிய போதும், தொலைபேசியில் பேசிய போதும் முடிக்க முடியாமல் முடித்துக் கொண்டோம். இத்தனைக்கும் அவர் இதய நோயாளி. தோழர் தி.க.சி., மக்கள் பக்கம் நிற்கும் மாபெரும் மார்க்சியர். மார்க்சியம், அரசியல், புரட்சி என்று பேசினால் இளமை திரும்பி உற்சாகமாகி விடுகிறார். நம்மையும் உற்சாகப்படுத்தி விடுகிறார்.
- பெ. மணியரசன்
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/ Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment