கமல் போல் ஒருவன் - பொன்னுச்சாமி
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், அக்டோபர் 2009 இதழிலிருந்து)
கடந்தாண்டு நவம்பரில் நடிகர் சங்கத்தின் சார்பில் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கமல் கலந்து கொண்டார். அப்போது, “உரிமைகள் மறுக்கப்படும் போது அங்கே தீவிரவாதம் பிறந்தே தீரும்” என்கிற அதியற்புதமான கருத்தை வெளியிட்டார்.
அவருடைய அந்தக் கருத்துக்கு எழுந்த கரவோசை அந்த அரங்கை அதிரச் செய்தது. அதே கமல்தான் இப்போது இந்தியில் வெளியான ‘வெட்னஸ்டே’ என்கிற படத்தை தமிழில் ‘உன்னைப் போல் ஒருவன்’ என்ற பெயரில் ரீமேக் செய்திருக்கிறார்.
இந்தப் படத்தில், தீவிரவாதத்தை தீவிரவாதத்தால்தான் அழிக்க முடியும் என்று பாடம் எடுத்திருக்கிறார். அப்படியென்றால் மேடையில் கரவோசைகளுக்கு இடையே பேசிய பேச்சு!?
படத்திற்கு வருவோம்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் மூன்று தீவிரவாதிகளையும், அவர்களுக்கு ஆயுதம் விநியோகித்த வியாபாரியையும் சிறையில் இருந்து காப்பாற்றி வந்து குண்டு வைத்துக் கொல்கிறார், கமல். அதோடு, சம்பவாமி யுகே (யுகங்கள் தோறும் பிறப்பெடுப்போம்) என்று பாடி திரையரங்கில் இருந்து நம்மை கமல் வழியனுப்பி வைக்கிறார்.
மேலோட்டமாகப் பார்த்தால் இதில் எந்தச் சிக்கலும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், கமலில் பார்ப்பன, இந்துத்துவ முகம் இந்தப் படத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது.
குஜராத்தில் நடந்த பெஸ்ட் பேக்கரி சம்பவத்தில் மனைவியை இழந்ததால் அதற்குப் பழி வாங்கவே தீவிரவாதிகளாக மாறியதாக சொல்லும் ஒரு தீவிரவாதியிடம் ஒரு இந்து (அதுவும் ஆயுத வியாபாரி) சொல்கிறான், “உனக்குத்தான் மிச்சம் ரெண்டு மனைவி இருக்காங்களே” என்கிறான். பெஸ்ட் பேக்கிரி சம்பவத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை இதைவிட யாரும் கொச்சைப் படுத்திவிட முடியாது.
சென்னையில் நடந்த மீனம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர் சம்பவங்களை மறக்கலாமா என்று, இந்தப் படத்தில் கமல் அங்கலாய்கிறார். இதைத்தானே ஹிந்து ராம், துக்ளக் சோ, சுப்பிரமணியசுவாமி எல்லாம் சொல்கிறார்கள். அப்படியென்றால் கமலுக்கும், இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
இதைவிடக் கொடுமை பெஸ்ட் பேக்கிரி சம்பவம் நடந்தது, 2002-ம் ஆண்டு. கோவை குண்டு வெடிப்பு 1998. நான்காண்டுகளுக்கு முன்பு நடக்கப் போகும் சம்பவத்துக்கு முன்பே முஸ்லிம்கள் பழி வாங்கிவிட்டார்களா? தீவிரவாதிகளை அழித்தே ஆக வேண்டும் என்று வகுப்பு எடுக்கும் உன்னைப் போல் ஒருவன் கமல், தன்னுடைய விருமாண்டி படத்தில் தன் மனைவியைக் கொன்றவர்களை பழி வாங்கிய நாயகனுக்கு மரண தண்டனையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பரப்புரை செய்வார்.
அதே கமல்தான் உன்னைப்போல் ஒருவனில் பெஸ்ட் பேக்கரி சம்பவத்தில் மனைவியை இழந்தவன் ஒருவன் அதற்குப் பழி வாங்கக் கிளம்பினால் அவனைக் குண்டு வைத்துக் கொல்லலாம் என்கிறார். விருமாண்டிகளுக்கு ஒரு நியாயம்? அஃப்சல்களுக்கு ஒரு நியாயமா?
இன்னும் ஒருபடி மேலே போய், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர்கள் வெளிநாடுகளில் ஆயுதப்பயிற்சிப் பெற்றவர்கள் என்று இந்தப் படம் சொல்கிறது. இதை கமலால் நிரூபிக்க முடியுமா? மற்றொரு காட்சியில் அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவத்தில் அப்போதைய பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப்க்கு தொடர்பு இருக்கிறது என்று போகிற போக்கில் நகைச்சுவையாகச் சொல்லிவிட்டுச் செல்கிறார்.
இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை இருநாடுகளுக்கு இடையிலான போராகப் பார்க்கும் இந்தியனின் மூன்றாந்தர மனப்பான்மையைவிட இழிவான பார்வை இது.
சாதாரண மக்களின் பிரச்னையில் இருந்து மேல்தட்டுக்காரர் கமல் விலகி இருக்கிறார் என்பதற்கு இந்தப் படத்திலேயே மற்றொரு உதாரணம், சென்னை அண்ணாசாலை காவல் நிலையம் என்று காட்டப்படும் இடம். அப்படியொரு தூய்மையான, அமைதியான, ஒழுக்கமான காவல் நிலையம் இந்தியாவில் வேறு எங்கும் பார்க்க முடியாது.
அதிலும் அங்குள்ள சாதாரண போலீஸ்காரர்களில் இருந்து இன்ஸ்பெக்டர் வரை குப்பனுக்கும், சுப்பனுக்கும் பொறுப்பாக, அமைதியாக பதிலளிக்கிறார். விசாரணை என்றால் அமெரிக்க விமான நிலையத்திலும் என்ன நடக்கும் என்று தன் நண்பரும், நடிகருமான ஷாருக்கானை கமல் கேட்டிருந்தாலே தெரிந்திருக்கும்.
என்ன செய்ய.? இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் மழைக்குக் கூட பள்ளிக் கூடம் பக்கம் ஒதுங்காத காலத்திலேயே வெளிநாடுகளுக்குச் சென்று படித்து வந்தாலும் காவல்நிலையம் பக்கம் ஒதுங்க யோசிக்கும் பார்ப்பன பரம்பரையில் வந்தவர் தானே நம்முடைய உலக நாயகன். அவருக்கு எப்படி காவல் நிலையத்தின் அழுக்குகள் தெரியும்? படத்தின் ஆரம்பத்திலேயே ராஜ்கமல் தயாரிப்பு என்ற டைட்டில் கார்டில் தாமரை இலை வந்து போகிறது. தாமரை இலை எதன் அடையாளம்? சினிமா தயாரிப்புக்கும் தாமரைக்கும் என்ன சம்பந்தம்?
சாதிப் பெருமை பேசி, காலடி மண்ணைப் போற்றிப் பாடிய ‘தேவர்மகனை’ப் போல, நாத்திகம் பேசும் தீவிரவாதிகள் போலீஸ்காரரின் சிறு வயது மகளையும், மனைவியையும் வன்புணரும் ‘குருதிப் புனல்’ போல, ‘உன்னைப்போல் ஒருவனும்’ ஆஸ்கர் நாயகன் கமலின் அதியற்புதமான படைப்புகள் என்று போற்றப்படலாம்.
தேவர் மகனில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட இசைக்கலைஞனைக் கொண்டு ‘போற்றிப் பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே’ என்று மெட்டுப் போட வைத்தவர், இந்தக் கமல். தென் மாவட்டங்களில் (கமலுக்கு வாழ்க கோஷம் போடுகிறவனே ஆனாலும்) ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவன் இந்தப் பாட்டு வரிகளை ஏற்றுக் கொள்வானா?
இந்தியில் வெளியான துரோகால் படத்தை குருதிப் புனல் என்று ரீமேக் செய்திருந்தார், கமல். உன்னைப் போல் ஒருவனில் முஸ்லிம் தீவிரவாதிகள் என்றால், குறுதிப் புனலில் விடுதலை புலிகள்! (நவம்பர் ஒன்றாம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் கமல் சொன்னது: உரிமைகள் மறுக்கப்படும் போது தீவிரவாதம் பிறந்தே தீரும்”)
குருதிப் புனலில் தீவிரவாதிகள் என்று காட்டப்படுபவர்கள் போலீஸ்காரர்கள் வீட்டுப் பெண்களை வன்புணர்கிறார்கள். வன்புணரும் இழிச் செயலில் ஈடுபடுபவர்கள் போலீசும், ராணுவமும்தான் என்று சாதாரண மக்களுக்கும் தெரிந்த உண்மை பாவம் நமது உலக நாயகனுக்குத் தெரியாது.
கமல் இந்தப் படத்தில் உதிர்த்த முத்துகளில் மிகவும் உன்னதமானது: “மும்பையில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு தமிழ்நாட்டில் எவனும் கவலைப்படுவதில்லை” என்று வேதனைப்படுவார், கமல். படத்தின் அத்தனை அபத்தங்களையும் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விடும் இந்தக் கருத்துக்கு விளக்கம் அளித்து ஒரு தனிக் கட்டுரையே எழுதலாம். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் எல்லாரும் தொண்டைத் தண்ணீர் வற்ற கத்தியும் கதறியும் பார்த்தோம். ஆனால் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொன் றொழிக்கப்பட்டார்கள். ஒரே நாளில் இருபது ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இன அழிப்புக்குள்ளானார்கள். அதை எல்லாம் மறந்து விட்டு கமல் இப்படி பேசுகிறார்.
“பல்லாயிரம் தமிழர்கள் பச்சைப் படுகொலையான போது பம்பாய்க்காரன் பல்குத்திக் கொண்டிருந்தானா?” என்று கேட்க கமலுக்கு வாய்வரவில்லை.குஜராத் பூகம்பம் நடந்த போதும், கார்கில் போரின் போதும் பாதிக்கப்பட்டவர்களின் துயரில் தமிழ்நாட்டு மக்கள் தான் இந்தியாவின் பிற எந்த மாநிலத்தவரைக் காட்டிலும் அதிகமாகவே பங்கெடுத்தவர்கள். அதற்குக் கிடைத்த பரிசுதான் 2009 மே 17 என்பது நமக்குத் தெரியும். பாவம், கமலுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க நியாயம் இல்லை.
கமல் வெளியே தனக்கென உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம் உண்மையாக இருந்திருந்தால், தமிழ்நாட்டில் இன்றைக்கும் தேர்தலில் நிற்க முடியாமல், வாயில் மலம் திணிக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றி ஒரு படமாவது எடுத்திருப்பார். நாகையிலும், ராமநாதபுரத்திலும் (அவர் பிறந்த ஊருதான்) அன்றாடம் அடித்து விரட்டப்படும் நம் மீனவர்களின் துயரைப் படம் பிடித்துக் காட்டியிருப்பார். அல்லது, போராளிகள் வீட்டுப் பெண்களை போலீஸ்காரர்கள் வன்புணர்ந்த கொடூரங்களை கேட்டுப் படம் எடுத்திருப்பார். ஆக, நான் பூணூல் அணியாதவன் என்று சொல்லி ஊரை ஏமாற்றும், இந்தியப் பார்ப்பன மனநிலையில் உழன்று கொண்டிருக்கும் கமலிடம் இருந்து இன்னும் இப்படிப்பட்ட படைப்புகளே வரும். நாம்தான் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இடதுசாரி பார்ப்பனியம் போல் இது நாத்திகப் பார்பனியம்!
சம்பவாமி யுகே யுகே.
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், அக்டோபர் 2009 இதழிலிருந்து)
Leave a Comment