ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சிதம்பரம் மேம்பாலத்திற்கு மொழிப்போர் தியாகி இராசேந்திரன் பெயர் தமிழ்நாடு அரசுக்கு த.தே.பே. பாராட்டு!

சிதம்பரம் மேம்பாலத்திற்கு மொழிப்போர் தியாகி இராசேந்திரன் பெயர் தமிழ்நாடு அரசுக்கு த.தே.பே. பாராட்டு! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
சிதம்பரம் தொடர்வண்டி மேம்பாலத்திற்கு மொழிப்போர் ஈகி (தியாகி) இராசேந்திரன் பெயர் சூட்ட வேண்டும் என கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தமிழ்த்தேசியப் பேரியக்கமும், சிதம்பரம் தமிழ்க் காப்பணியும் இன்னும் பல தமிழ் உணர்வாளர்களும் வலியுறுத்தி வந்தோம்.
 
இந்திய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து 1965இல் நடைபெற்ற தமிழ் மொழிக் காப்புப் போராட்டத்தில், இப்போது மேம்பாலம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில்தான் மாணவர் தியாகி இராசேந்திரன், 1965 சனவரி 27 அன்று துப்பாக்கிச் சூட்டில் உயிரீகம் செய்தார்.
 
எனவே, அந்த இடத்தில் அமைந்துள்ள தொடர்வண்டி மேம்பாலத்திற்கும், இதையொட்டியுள்ள சிவபுரிச் சாலைக்கும் மொழிப்போர் ஈகி இராசேந்திரன் பெயர் சூட்ட வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கமும், பிற தமிழ் இன மொழி உணர்வாளர்களும் தொடர் போராட்டங்களும், இயக்கங்களும் நடத்தி வந்தோம்.
 
இந்நிலையில், காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. முருகுமாறன் நேற்று (12.01.2018) தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொடர்வண்டி மேம்பாலத்திற்கு மொழிப்போர் ஈகி இராசேந்திரன் பெயர் சூட்ட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளை உடனடியாக ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சிதம்பரம் தொடர்வண்டி மேம்பாலத்திற்கு மொழிப்போர் ஈகி இராசேந்திரன் பெயர் சூட்ட ஒத்துக்கொண்டார்.
 
இதற்கான முயற்சியை மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறனுக்கும், ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கும் எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறென்.
 
வரும் மொழிப்போர் வீரவணக்க நாளுக்கு முன்னதாக இம்மேம்பாலத்திற்கு மொழிப்போர் ஈகி இராசேந்திரன் பெயர் வைக்க அனைத்து நடவடிக்கைகளையும், மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 
இதுமட்டுமின்றி, வரலாற்றுச் சிறப்புமிக்க 1938 மற்றும் 1965 மொழிப் போராட்டங்களின் வரலாற்றை பள்ளி - கல்லூரி பாடப் புத்தகங்களில் இடம்பெறச் செய்ய வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.