ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சனநாயகப் பயங்கரவாதம் - தமிழர் கண்ணோட்டம் 2010 சனவரி மாதத் தலையங்கம்

(இக்கட்டுரை தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்
2010 சனவரி மாத இதழின் தலையங்கமாகும்)
கட்சித் தலைவர்களை முதலாளிகளாகவும் முதலாளிகளைக் கட்சித் தலைவர்களாகவும் மாற்றியதுதான் இருபதாம் நூற்றாண்டு சனநாயகத்தின் இறுதிக்கால சாதனை. இதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக அரசியல்வாதிகள் அரம்பர்களாகவும் (ரவுடிகளாகவும்) அரம்பர்கள் அரசியல்வாதிகளாகவும் மாறினார்கள். இவற்றின் தாக்கத்தால் தங்கள் வாக்குச் சீட்டை ஏலம் விடும் தரகர்களாக வாக்காளர்களில் பலர் மாறினர்.

தேர்தல் கட்சிகளிடையே கருத்து மோதலுக்கு மாறாகக் கருவி மோதல் வளர்ந்தது. பணக்குவியலும் அரம்பர் கும்பலும் உள்ள கட்சி மட்டுமே தேர்தலில் கருதத்தக்க போட்டியாளராக நிற்க முடியும் என்ற நிலை உண்டானது.

தமிழ் நாட்டில் இவ்வாறான அரசியல் இழிவுகளைக் கொணர்ந்த கட்சிகள் தி.மு.க.வும் அ.இ.அ.தி.மு.க.வுமே! மற்ற தேர்தல் கட்சிகள் இப்போக்கிற்குத் துணை செய்தவை. இப்போக்கில் மு.க.அழகிரியின் அரசியல் நுழைவு ஒரு திருப்புமுனையை உண்டாக்கியது. அரம்பத்தனம் செய்வதில் பேர் பெற்ற அவர், தேர்தலில் வாக்காளர்களுக்குக் கையு+ட்டு கொடுக்கும் கலையில் புதிய பாடத்திட்டத்தையே உருவாக்கியுள்ளார்.

ஆளுங்கட்சி வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதை எதிர்க்கட்சியினர் தடுத்தபோது கிடாவிருந்து என்று வாக்காளர்களை வரவழைத்து பந்தி இலைக்குக் கீழே பணத்தாள்களை வைத்துக் கைமாற்றி விட்ட கலையை கண்டு பிடித்தவர் அழகிரி. அ.இ.அ.தி.மு.க வோ அல்லது மற்ற கட்சிகளோ வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்காத நேர்மைக் கட்சிகள் அல்ல. இப்பொழுது ஆளுங்கட்சியாக உள்ள தி.மு.க.விடம் உள்ள அளவுக்கு அதிகாரத்தில் இல்லாத அக்கட்சிகளிடம் பணம் இல்லை அவ்வளவே.

எதிர்க்கட்சிகளின் தேர்தல் பரப்புரையை அராஜகம் செய்து தடுக்கும் கலையிலும் அழகிரி மற்றவர்களை விட முன்னேறியுள்ளார். ஆனால் எதிர்க்கட்சி பரப்புரையைத் தடுக்கும் அரம்பத்தனத்தில் செயலலிதாதான் அழகிரிக்கு குரு. குருவைவிட ஒரு படி சீடர் முன்னேறியுள்ளார். செயலலிதா முதலமைச்சராக இருந்த போது சைதாப்பேட்டை இடைத்தேர்தலில் தி.மு.க. தலைவர்களை ஓட ஓட விரட்டியடித்து வேட்டி சட்டையை உருவச் செய்தவர் செயலலிதா. வாக்குச் சீட்டுகளை அ.இ.அ.தி.மு.க. அரம்பர்களே ஒட்டு மொத்தமாக முத்திரை குத்திப் போட்டுக் கொண்டனர்.

திருச்செந்தூரில் 19.12.2009 இல் நடந்த இடைத் தேர்தலில் சைதாப் பேட்டையை விஞ்சும் அளவுக்கு அரம்பத்தனங்களை அரங்கேற்றச் செய்தார் அழகிரி. அத் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க.வினரைப் பரப்புரை செய்ய விடாமல் இடையு+று செய்தது, அவர்கள் வாக்காளர்களுக்குக் கையு+ட்டு கொடு;க்க முடியாமல் வன்முறை ஏவித் தடுத்தது, அ.இ.அ.தி.மு.க.வினரை அவர்கள் தங்கியிருந்த இடங்களில் புகுந்து தாக்கிப் படுகாயப்படுத்தியது போன்ற அராஜகங்கள் அன்றாடம் நடந்தன.

அழகிரி சூத்திரம் அதே நாளில் நடந்த வந்தவாசி இடைத் தேர்தலிலும் மற்ற தி.மு.க. தலைவர்களால் செயல்படுத்தப்பட்டது. அராஜகத்தில் மட்டுமல்ல கையு+ட்டு கொடுப்பதிலும் புதிய முறையை வந்தவாசியில் தி.மு.க.வினர் செயல்படுத்திக் காட்டினர். வேட்டி சட்டை ஒரு மது பாட்டில் இவற்றுடன் பணத்தாள்கள் வைத்து ஆண் வாக்காளர்களுக்கு வழங்கியதைப் படம் பிடித்துத் தொலைக்காட்சிகள் காட்டின. இதுபோன்ற கவனிப்பு பெண்களுக்கும் நடந்தது.

அரசின் நிர்வாகப் பிரிவு கட்சி சார்பற்றது என்று சட்டத்திலிருந்தாலும் நடைமுறையில் ஆளுங்கட்சியின் ஏவல் அமைப்பாகவே உள்ளது. குறிப்பாகக் காவல் துறை ஆளுங்கட்சியின் கைத்தடியாகவே செயல்படுகிறது. மக்களுக்கான கொள்கையும் போராட்டமும் இல்லாமல் அரசியல் நடத்தலாம். ஆனால் பணவலிவும் அரம்பர்கள் வலிவும் இல்லாமல் அரசியல் நடத்த முடியாது என்ற நிலையை இக்கட்சிகள் உண்டாக்கி உள்ளன.

இந்த ஊழல் மற்றும் அரம்பத்தன அரசியல் மக்கள் மனநிலையைத் தலைகீழாக மாற்றியுள்ளது. அரசிடமிருந்து இலவசங்களையும் கட்சிகளிடமிருந்து கையு+ட்டையும் எதிர்பார்க்கும் தன்முயற்சியற்ற, தன் மதிப்பற்ற மனநிலைக்கு மக்களில் பலர் மாற்றப்பட்டுள்ளனர்;.

இவ்வாறான, வெறும் நுகர்வு மனப்பான்மை கொண்ட மக்கள் உருவாவதைத்தான் உலகமயம் விரும்புகிறது. இவ்வாறு மக்கள் மனதை மாசுபடுத்துவதற்காகவே கட்சிகளுக்குக் கோடி கோடியாய் பணத்தைக் கொட்டிக் கொடுக்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள். அரசியல் தலைவர்களை முதலாளிகளாக்கி விடுகின்றன அந்நிறுவனங்கள்.

ஒரு கோடி ரூபாய் கையு+ட்டு, சில்லறைக் காசு என்ற அளவுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் இலஞ்சத்தின் அளவை மிகவும் அதிகப்படுத்திவி;ட்டன. இதனால் தேர்தல் கட்சிகள் குறிப்பாக அக்கட்சிகளின் தலைவர்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்குப் பணத்திமிங்கிலங்களாகி விட்டனர். இந்தப் பணமலையிலிருந்து ஒரு சிறு பகுதியை அதாவது பத்து கோடி ரூபாயை எடுத்து ஒரு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்குச் செலவு செய்வது மிக எளிதாகிவிடுகிறது. இந்தத் தொகையை கட்சித் தலைமையிலிருந்து எடுக்க வேண்டும் என்ற தேவை கூட இல்லை. கட்சியினால் பலன் பெறக்கூடிய இடைத்தட்டுப் புள்ளிகளே இச்செலவைச் செய்யக் கூடிய வாய்ப்பும் உள்ளது.

நுகர்வுப் பண்டங்களுக்கு வாடிக்கையாளர்களை உருவாக்க இலவசங்கள் வழங்குவதுபோல் வாக்காளர்களை வாடிக்கையாளர்களாக்குவதற்கு தேர்தல் கட்சிகள் கையு+ட்டுகள் வழங்குவதுடன் ஆட்சியைப் பிடித்தால் இலவசங்களும் வழங்குகின்றன.

அனைத்து உரிமைகளும் உள்ள குடிமக்களை, வெறும் வாக்காளர்களாக மாற்றிய தேர்தல் சனநாயகம், இப்பொழுது அவர்களைக் கட்சிகளின் வாடிக்கையாளர்களாக மாற்றிவிட்டது. வாடிக்கையாளர்களைப் பிடிக்கும் போட்டியில் அடிதடி நடத்த அரம்பர்களையும் உருவாக்கிவிட்டது. உலகமய முதலாளியம் தன்னை உரித்து வைத்தது போல் அரசியல் கட்சிகளை உருவாக்கி வருகிறது.

கட்சிகளின் வாடிக்கையாளர்களாகிப் போன மக்கள் ஏதாவது ஒரு கோரிக்கைக்குப் போராட நேர்ந்தால் அரசியல் அரம்பர்கள் அம்மக்களைத் தாக்கவும் செய்வார்கள். அப்போது மக்கள் அச்சத்திற்கு ஆளாவார்களேயன்றி எதிர்த்தாக்குதல் நடத்தும் போர்க்குணம் பெற்றிருக்க மாட்டார்கள்.

தேர்தலில் போட்டியிடாத புரட்சிகர அமைப்புகள் மக்களுக்காக ஆட்சியை எதிர்த்துப் போராடினாலோ அல்லது அநீதியாளர்களை எதிர்த்துப் போராடினாலோ அப்போராட்டத்தை அரம்பர்களைக் கொண்டு வன்முறையால் வீழ்த்தும் போக்கு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு உருவாகிவரும் அராஜக – அரம்பத்தன அரசியலை எதிர்கொள்ளாமல் புரட்சிகர அமைப்புகள் தங்கள் இயக்கங்களை நடத்த முடியாது.

புரட்சிகரத் தமிழ்த் தேசியம் மக்கள் திரள் போராட்டங்களை நடத்தும் அதே வேளை தன்னையும் தனது போராட்ட ஆற்றலையும் பாதுகாத்துக் கொள்ள அரம்பர்களை எதிர்கொள்ளும் போராளிகளையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அரம்பர்களை மோதி வீழ்த்த வல்ல தமிழ்த் தேசிய அமைப்பின் மீதுதான் மக்களுக்கு நம்பிக்கையும் அதனால் பாதுகாப்பு உணர்வும் ஏற்படும்.. தமிழ்த் தேசியத்திற்கான போராளிகள் மக்களிடமிருந்தே கிடைப்பார்கள்.

தேர்தலில் பங்கெடுக்காத புரட்சிகரத் தமிழ்த் தேசியம், தேர்தலில் நடைபெறும் பண விளையாட்டு, அரம்பர் வன்முறை போன்றவை தன்னை பாதிக்காது என்று கருதக் கூடாது. ஒட்டு மொத்த மக்களைத் தேர்தல் காலத்தில் மட்டுமின்றி மற்ற காலங்களிலும் பாதிக்கக் கூடிய தீங்குகள் அவை.

மக்களிடையேயுள்ள முன்னேறிய, போர்க்குணம் மிக்க ஒரு வடிவமே புரட்சிகரத் தமிழ்த் தேசிய அமைப்பு. புரட்சி என்பதற்குரிய எல்லாப் பொருளிலும் தமிழ்த் தேசியம் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.