ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழின மரபும் “திராவிட” அவதூறுகளும் - ம.செந்தமிழன்

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் சனவரி 2010 இதழில் வெளியான தொடர் கட்டுரை பகுதி -1 )

தமிழ்ச் சமூகம் உலகமயம் மற்றும் இந்தியம் ஆகிய ஏகாதிபத்திய ஒடுக்குமுறைகளுக்கு ஆட்பட்டிருக்கிறது. இந்த ஒடுக்குமுறைகளிலிருந்து மீள்வதற்குத் தமிழ்த் தேசிய விடுதலை ஒன்றே வழியாகவும் தீர்வாகவும் உள்ளது.

‘தமிழ்த் தேசியம்’ எனும் கருத்தியல், ஆரியப் படையெடுப்பிலிருந்து தன்னைத் தற்காத்துகொள்வதற்காக, மூவாயிரம் ஆண்டுகளாகவே அரசியல் கோட்பாடாக வலுப்பெற்று வந்துள்ளது. ஆயினும், ‘தமிழ்த் தேசியம்’, அரசியல் விடுதலைக்கான கருத்தியலாக முன்வைக்கப்படுவது 20ஆம் நூற்றாண்டில்தான். தமிழ்த் தேசிய விடுதலையை ஒரு தெளிவான அரசியல் கோட்பாடாக வடித்தெடுத்ததில் முதன்மைப் பங்களிப்பு, ‘தமிழ்த் தேசப் பொதுவுடைமை’க் கட்சிக்கும் ‘தமிழர் கண்ணோட்டம்’ இதழுக்கும் உண்டு.

இன்றைய அரசியல் களமே தமிழ்த் தேசிய அரசியல்தான் எனும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை உருவாகும் முன், 1990 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை பெரியார் திடலில் த.தே.பொ.க நடத்திய ‘தமிழ்த் தேசத் தன்னுரிமை மாநாடு’தான், தமிழ்த் தேசிய அரசியலில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது.

‘இந்தியாவிலிருந்து பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை தமிழ்த் தேசத்திற்கு வேண்டும்’ என்ற தீர்மானம் அம்மாநாட்டில் இயற்றப்பட்டது. த.தே.பொ.கவின் இந்த மாநாடு அப்போதைய சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. தில்லியில் நடைபெற்ற இந்திய ஒருமைப்பாட்டுக் குழுவில் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்த் தேசியம் எனும் கருத்தியல் தமிழக அரசியலின் தவிர்க்கவியலா அங்கமாகிவிட்டது. இந்நிலை உருவாக அடிப்படைக் காரணம், தமிழரின் இயல்புணர்வான இன உணர்வே ஆகும்.

த.தே.பொ,க உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களும், தமிழகமெங்கும் செயல்படும் சிறு சிறு தமிழ்த் தேசியக் குழுக்களும்தான் இந்நிலையைச் சாத்தியப்படுத்தியுள்ளன. மேலும், தமிழீழப் போராட்டம் தொடர்ந்து அளித்துவரும் இன உணர்வு உந்துவிசையும் இச்சூழலைத் தோற்றுவித்துள்ளது.

தமிழ்த் தேசியமே தீர்வு என்ற கருத்து நிறுவப்பட்ட இந்தக் காலத்திலும் சில அமைப்புகளும் கருத்தியலாளர்களும் தமிழ்த் தேசியத்தின் அரசியல் பாதையை அடைக்கத் துடிக்கும் போக்கு இன்று நிலவுகிறது. இக்கருத்தியலாளர்கள் தமிழ்த் தேசியத்தின் மீது எண்ணற்ற புகார்களை வீசுகின்றனர். ‘தமிழ்த் தேசியம் என்பதே தவறு; திராவிடம் என்பதே சரி’ என்பது அவற்றில் ஒன்று.

ஆனால், இவர்கள் மேடைகளில் பேசும்போதெல்லாம், ‘தமிழருக்கு நாடு வேண்டும்; தனித் தமிழ்நாடு கேட்பதில் என்ன தவறு?’ என்றே பேசுகின்றனர். ஒரு இடத்திலும் ‘திராவிட நாடு வேண்டும்’ என்று பேசுவது இல்லை. ஏட்டில் எழுதும்போது மட்டுமே திராவிடம் வருகிறது. திராவிடம்தான் சரி; தமிழ் அல்லது தமிழர் தவறு என்றால், அதையே மேடைகளிலும் பேசலாமே! அதுதானே நேர்மை!

திராவிடம் என்பது இனத்தின் பெயரும் அல்ல மரபினத்தின் பெயரும் அல்ல என்பது மெய்ப்பிக்கப்பட்ட கோட்பாடு. மேலும், பேரா.த.செயராமன் இக்கோட் பாட்டைப் பல புதிய சான்றுகளுடன் தமிழர் கண்ணோட்டம் இதழில் தற்போது எழுதிவருகிறார். இது குறித்து, தமிழர் கண்ணோட்டம் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

திராவிடம் பேசுவோரும் தலித்தியம் பேசுவோரும், போலிப் பொதுவுடைமைவாதிகளும் தமிழர் மரபின் மீது சேறு பூசும் பணியைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். அவர்கள் வழக்கமாகப் பரப்பும் அவதூறுகளில் சில;

· தமிழ் மரபு ஏற்றத்தாழ்வுகள் மிக்கது.

· தமிழர் பண்பாடே பெண்ணடிமைத்தனமானது.

· தமிழர்கள் மூடநம்பிக்கையினர்.

· தமிழர்களுக்கெனத் தனிப் பண்பாடே இல்லை.

· தமிழ்ப் பண்பாடு சாதி ஒடுக்குமுறைகள் நிறைந்தது.

இந்தப் போலிக் குற்றச் சாட்டுகளுக்கு விளக்கம் அளிப்பது இன்றைய தேவையாக உள்ளது. ஏனெனில், சொந்த இனத்தையே இழிவுபடுத்திக் கொண்டு அதே இனத்துக்கு விடுதலையும் வேண்டும் எனக் கேட்பது தெரிந்தோ தெரியாமலோ இனவிடுதலைக்கு இழைக்கும் துரோகம் ஆகும்.

‘சொந்த இனமாக இருந்தாலும் அதை விமர்சனம் செய்வோம்’ என்ற அணுகுமுறை வரவேற்கத்தக்கது. ஆனால், அந்த விமர்சனங்களின் அடிப்படையில் உண்மை இருக்க வேண்டும்.

எந்த இனத்திலும் முற்போக்குக் கூறுகளும், பிற்போக்குக் கூறுகளும் இருக்கும். தமிழ் இனத்தில் பிற்போக்குக் கூறுகள் மட்டுமே மிகையாக உண்டு என வாதிடும் கருத்தியலாளர்கள், தமது கருத்துகளை இதுநாள் வரை ஆழமான ஆய்வுகளின் அடிப்படையில் வெளியிட்டதே இல்லை.

மானுடவியல், பண்பாட்டுப் பரிணாமம், சமூகப் பொருளாதாரம், சமூக உற்பத்தி முறை ஆகிய துறைகளின் ஒளியில்தான் ஒரு தேசிய இனத்தைத் திறனாய்வு செய்ய வேண்டும். தமிழ்ச் சமூகத்தின் மீது அவதூறுகள் பரப்பும் கருத்தியலாளர்கள், மேற்கண்ட துறைகள் சார்ந்த கோட்பாடுகளைத் தமது கட்டுரைகளில் பொருத்திக்காட்டுவதே இல்லை.

இதேவேளை, தமிழர் மரபு, வரலாறு குறித்த ஆய்வுகளை மேற்க்கொள்ளும் அறிஞர்கள் கடுமையாக உழைத்துத் தம் கருதுகோள்களைக் கோட்பாடுகளாக நிறுவுகின்றனர். ஆனால், அவதூறு பரப்புவோர் தமது விருப்பங்களையும் அறியாமைகளையும் கருது கோள்களாக்குகின்றனர். கருதுகோள்களையே கோட்பாடுகள் போல் பேசுகின்றனர். இந்த இழிநிலையைத் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மாற்ற வேண்டும் என்ற நோக்கிலேயே இக்கட்டுரை எழுதப்படுகிறது.

தமிழர் நாகரிகம் உலகின் தொன்மையான நாகரிங்களில் ஒன்றாகும். தமிழர் மரபு, சமத்துவக் கருத்தியலை அடிப்படையாகக்கொண்டு இயங்கியதாகும். தமிழர் மரபில், சாதிகள் இல்லை; பெண்ணடிமைத்தனம் இல்லை. தமிழர் மரபு அறிவுசால் மரபு. தமிழர் மரபு, வர்க்க ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இயங்கிய மரபு. ஆரியப் பார்ப்பனிய மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடிய மரபு தமிழ் மரபு. இந்திய நிலப்பரப்பில், ஆரியத்திற்கு எதிராகக் கடந்த 4000 ஆண்டுகளாகப் போராடும் ஒரே இனம் தமிழ் இனம் மட்டுமே!

இந்த உண்மைகளைக் கொஞ்சமும் விளங்கிக் கொள்ளாமல், திராவிடம், தலித்தியம் பேசும் கருத்தியலாளர்கள், ‘தமிழ் மரபு - இந்துத்துவ மரபு. தமிழ்த் தேசியம் என்றாலே, சாதி ஆதிக்கம்தான்’ என்றெல்லாம் தம் மனம்போன போக்கில் பேசுகின்றனர். இவர்கள் அனைவரும் முன்வைக்கும் சான்றுகள் அனைத்துமே, தமிழர் மீது திணிக்கப்பட்ட பார்ப்பனிய கூறுகள்தான்.

தமிழ்ச் சமூகத்தின் மீது ஆரியம் நடத்திவரும் பண்பாட்டுப் படையெடுப்பின் விளைவாக, எண்ணற்ற இந்துத்துவக் கூறுகள் தமிழ்ச் சமூகத்தில் கலந்துவிட்டன. அவற்றை அடையாளம் கண்டு அப்புறப்படுத்துவதுதான் உண்மையான, நேர்மையான இனவிடுதலைப் பணி. ஆனால், தமிழ்த் தேசியத்தைக் குறை கூறுவோர், இந்துத்துவக் கழிவுகளைத் தமிழ்த் தேசியத்தின் மீது ஏற்றி இன்பம் காணுகின்றனர்.

சாதியம் தமிழ் மரபு அல்ல!

தமிழ் இனத்தின் பெருமைமிகு ஆவணங்களில் முகாமையானது தொல்காப்பியம். தமிழர் மெய்யியல் பற்றிய அடிப்படைப் புரிதல் அளிப்பது தொல்காப்பியம். தமிழர் மரபு என்ன என்பதை விளக்கும் ஆவணம் அது.

சாதிப் பாகுபாடு, சாதியம் ஆகிய ஆரிய ஒடுக்குமுறைக் கருத்தியல்கள் தொல்காப்பியத்தில் இல்லை. மாறாக, சமத்துவ சமூகமாகத் திகழ்ந்த இனக்குழு வாழ்க்கை முறை குறித்த பதிவுகளே அதில் நிறைந்திருக்கின்றன.

தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்தில், நிலவுடைமையின் விளைவான அரசு உருவாக்கம் நடைபெறத் தொடங்கியிருந்தது. ஆரியப் பார்ப்பனியக் கருத்தியல்களின் படையெடுப்பும் அக்காலத்தில் இருந்தது. ஆனால், தொல்காப்பியம் ஒடுக்குமுறையை ஒழித்த சமத்துவச் சமூகமாகத் தமிழர்கள் வாழ்வதற்கான கருத்துப் பதிவுகளையும் சமூகக் கட்டமைப்பு விதிகளையும் கொண்டுள்ளது.

தொல்காப்பியம் திணை வாழ்வியலை வலியுறுத்துகிறது. திணைமக் கோட்பாடு என்ற விரிந்த தளத்தில், இந்த வாழ்வியல் ஒரு மெய்யியலாகவே இன்று உருவெடுக்கத் தொடங்கியுள்ளது. திணைமத்தின்படி, நால்வகை நிலங்கள் இயல்பானவை. பாலை இயல்புக்குப் புறம்பானது. ஆயினும் பாலையையும் சேர்த்து, ஐவகை நிலங்களிலும் வாழும் மாந்தருக்கான வாழ்வியலைப் பதிவு செய்கிறது தொல்காப்பியம். சமூகப் பிரிவினை என்ற அடிப்படையில், திணை வாழ்க்கை முறையே முதன்மைப் பிரிவினை ஆகும். தமிழ்ச் சமூகம்

சாதியத்தை வலியுறுத்துவது என்று குற்றம்சாட்டுவோர், இத் திணைமக் கோட்பாட்டில் என்ன பாகுபாடு உள்ளது என்பதை விளக்க வேண்டும். திணைமக் கோட்பாடு தவிர, தமிழ்ச் சமூகத்தின் ஒட்டுமொத்தமான சமூகப் பிரிவுகளாக,

• அரசர்

• அந்தணர்

• வேளாளர்

• வணிகர்

- ஆகிய நான்கு பிரிவுகளைத் தொல்காப்பியம் வகுக்கிறது. இந்த நான்கும் சாதிகள் இல்லை. மாறாக, தொழிற் பிரிவினைகள் ஆகும். அரசு உருவாக்கத்தின்போது, தொழிற்பிவினைகள் வர்க்கப் பாகுபாடுகளாக உருப்பெற்று வளர்வது இயல்பு. அந்த வகையில், தமிழர் நிலத்தில் அரசு உருவானபோது, ஏற்பட்ட தொழிற்பிரிவினகளே மேற்கண்ட நான்கும் ஆகும்.

இப்பிரிவினையில், தொல்காப்பியம் நான்கு பிரிவினருக்கும் உரிய கடமைகளையும் உரிமைகளையும் பகுத்துச் சொல்கிறது. இது பாகுபாடு அல்ல, வேலைப் பிரிவினை. இந்த வேலைப் பிரிவினையில் வர்க்க அடிப்படைகள் உள்ளன. அவை அரசு உருவாக்கத்தின் போது இயல்பாக எழும் அடிப்படைகள்.

தொல்காப்பியம், தமிழகத்தில் அரசு உருவாக்கம் அறிமுகமாகி வளர்ந்தபோது இயற்றப்பட்ட நூல் என்பதை அறிஞர் பலரும் சான்றுகளுடன் நிறுவியுள்ளனர். அரசு உருவாக்கம் மற்றும் இனக்குழு வாழ்க்கை முறை ஆகிய இரண்டும் எதிர் துருவங்களாகச் செயல்பட்டன.

சாதி, வர்க்க பேதம் அற்ற சமநிலைச் சமூகமே இனக்குழு வாழ்க்கை முறை ஆகும். தமிழர்கள் இந்த வாழ்க்கை முறையையே கடைபிடித்தனர். இந்திய நிலப்பரப்பில் தோன்றி வாழ்ந்துவரும் பிற இனச் சமூகங்கள் அனைத்தையும் விட, இனக்குழு வாழ்க்கைக்காகப் போராடிய இனம் தமிழ் இனம்தான். ஆரியப் பார்ப்பனியம், தமிழர் மீது நடத்திய போரின் அடிப்படையே, தமிழரின் இனக்குழு வாழ்க்கை முறையைச் சிதைத்து அரசு உருவாக்கம் செய்வதே ஆகும். சாணக்கியனின் அர்த்த சாஸ்திரம், இதைத்தான் போதித்தது.

ஆரியப் பார்ப்பனியம் தமிழருக்கு எதிராகத் தொடுத்த அனைத்துப் போர்களுமே, தமிழரது சமத்துவ-அறிவியல்பூர்வ வாழ்வியலை ஒழித்து, பாகுபாடுகளால் நிரம்பிய, அறிவியலுக்குப் புறம்பான வாழ்வியலைத் திணிப்பதையே அடிப்படையாகக் கொண்டவை ஆகும்.

4000 ஆண்டுகளுக்கு முன், சிந்துவெளியில் தமிழர் மீது தொடுத்த ஈவிரக்கமற்ற போரிலிருந்து இப்போது தமிழீழத்தின் மீது தொடுத்துள்ள போர் வரை ஆரியத்தின் நோக்கம் மேற்கண்ட அடிப்படையிலேயே அமைந்துள்ளது. சங்ககாலம் எனப்படும் காலம் ஏறத்தாழ ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் நீடித்ததாகும். முதற் சங்க காலத்தில், தமிழரது இனக்குழு வாழ்வியல் கூடுதலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகான, இடைச் சங்க காலத்தில் ஆரியப் பார்ப்பனியம் தமிழர் மீது பண்பாட்டுப் படையெடுப்பு நடத்தத் தொடங்கி, குறைந்தளவு வெற்றியும் பெற்ற காலம் ஆகும். இக் காலத்தில்தான், தமிழர் நிலப் பரப்பில் அரசு உருவாக்கம் வேகம் பெறத் தொடங்கியது. உலகெங்கும் பல உள்ள சமூகங்களில், இதேவிதமாக அரசுகள் உருவாகின. சமத்துவ மரபைக் கட்டிக் காக்கும் உயர் நாகரிக இனக்குழுக்கள் ஒருபுறமும், பாகுபாடுகளைத் திணித்து சுரண்டிக் கொழுக்கும் அயலார் மறுபுறமும் நின்று மோதிய வரலாறு உலகின் சமூகப் பரிணாமத்தின் விதியாக இருந்து வருகிறது.

மாயர்கள், ஐரோக்யாஸ் உள்ளிட்ட செழுமையான இனக் குழுக்களை ஒழித்துவிட்டுத்தான் அமெரிக்கப் பேரரசை ஐரோப்பிய வந்தேறிகள் கட்டியெழுப்பினர். இதே நிலைதான், தமிழருக்கும் ஆரியருக்கும் கடந்த 4000 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. தமிழர் மரபில் தோன்றிய பல சமூகங்கள் ஆரியத்துடன் கலந்து விட்ட அவலமும் அரங்கேறியுள்ளது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆகியவை இன்று தனித் தேசிய இனங்களாக இருந்தாலும், அவை தமிழின் வேரிலிருந்து பிரிந்தவையே. பிற்காலத்தில், இந்த இனங்கள் ஆரிய ஆதிக்கத்துடன் சமரசம் செய்துகொண்டன. இந்த இனங்களின் மொழிகளே, தனித்துவம் இன்றி சமஸ்கிருதக் கலப்புடன் இருப்பதைக் காணலாம்.

தமிழினம் மட்டுமே, இன்றுவரை இந்தியையும் சமஸ்கிருதத்தையும் எதிர்க்கிறது. இந்திக்கு எதிராகப் போர் நடத்தி, 400 பேருக்கும் அதிகமான தமிழர்கள் தம் இன்னுயிரை ஈந்து தமிழைக் காப்பாற்றினர். இந்தப் பெருமையும் ஆரியத்திற்கெதிரான போர்க்குணமும் வேறு எந்த இனத்துக்கும் இல்லை.

இந்தப் போர் தொடங்கிய காலத்தில் எழுதப்பட்டதுதான் தொல்காப்பியம். ஒருபுறம், தமிழரின் மரபு சார்ந்த சமத்துவ இனக்குழு வாழ்க்கை, மறுபுறம் பாகுபாடுகளுடன் கூடிய அரசு வாழ்க்கை என்ற வகையில் சமூக நிலை அமைந்தது.

தொல்காப்பியம், இந்த இரண்டு நிலைகளையுமே பதிவு செய்துள்ளது. அரசு உருவான, தமிழ் நிலப்பரப்பில் மேற்கண்ட நான்கு வகை தொழில் பிரிவுகளும் உருவாகின. இதைத்தான் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இந்த நான்கு பிரிவுகள் வேறு; ஆரியப் பார்ப்பனியத்தின் நால் வருணக் கோட்பாடு வேறு!

நால்வருணக் கோட்பாடு,

1. சமூகத்தை நான்கு வருணங்களாகப் பிரிக்கிறது

2. சாதிகளைப் பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கிறது

3. நான்கு வருணங்களுக்கிடையே உயர்வு தாழ்வு கற்பிக்கிறது

4. நான்கு வருணக் கோட்பாட்டை மீறுவோருக்குக் கடுமையான தணடனைகளை வலியுறுத்துகிறது 5. பார்ப்பனரை, சமூகத்தின் உயர்மட்ட அதிகாரத்தில் வைக்கிறது

தொல்காப்பிய நான்கு பிரிவுகள்,

1. சமூகத்தை சாதிகளாகப் பிரிக்கவில்லை. மாறாக, தொழில் பிரிவுகளாகப் பகுக்கிறது.

2. இத் தொழில் பிரிவுகள், பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படவில்லை.

3. நான்கு பிரிவுகளுக்கும் இடையே உயர்வு தாழ்வு கற்பிக்கப்படவில்லை.

4. நான்கு பிரிவுகளுக்கான விதிகள் என்று கறாரான வரையறைகள் இல்லை. தண்டனைகளும் இல்லை.

5. பார்ப்பனரை சமூக உயர்மட்ட அதிகாரத்தில் வைக்கவில்லை.

தமிழ்த் தேசிய அரசியலைக் குறைகூறும் திராவிட, தலித்தியவாதிகள் தம் வசதிக்காக, ‘தொல்காப்பியம் நான்கு சாதிகளை வலியுறுத்துகிறது’ என்கிறார்கள். இது அறியாமையா அல்லது உள்நோக்கமா என்பது அவரவர் மனச் சான்றுக்கே தெரியும்.

தொல்காப்பியம் இந்த நால்வகைப் பிரிவுகளை மட்டுமே குறிப்பிடவில்லை. அரசு உருவாக்கம் நிகழ்ந்த நிலப்பகுதியில் மட்டுமே இந்த நால்வகைப் பகுப்பு பொருந்தும். அரசு உருவாக்கம் நிகழாத அல்லது அரசக் கருத்தியலின் தாக்கம் குறைவான பகுதிகளில் வாழ்ந்த தமிழ்ச் சமூகங்களுக்கு ஐந்திணை வாழ்வியல் எனும் ‘திணைமக் கோட்பாட்டையே’ தொல்காப்பியம் வலியுறுத்தியது.

ஐவகை திணைகள், அந்தத் திணைகளில் வாழும் மாந்தர் என்ற அடிப்படையில்தான் திணைமக் கோட்பாடு வகுக்கப்பட்டது. ஐவகை நிலங்களில் வாழ்ந்த மாந்தரை வகைப்படுத்தும் தொல்காப்பியம், ஆண், பெண் ஆகிய இருபாலாரையும் சமமாகவே பதிவு செய்துள்ளது. மேலும், இந்த மாந்தருள், வர்க்க, சாதி பேதம் குறிப்பிடப்படவே இல்லை.

சான்றாகச் சிலவற்றைக் காண்போம்,

இந்தப் பகுப்புகளில் சாதி, வர்க்கம், பெண்ணடிமைத்தனம் எங்குள்ளது, ‘திராவிட / தலித்திய’ ஆய்வாளர்கள்தான் ‘கண்டறிந்து’ உரைக்க வேண்டும்.

ஆக,

1. அரசு உருவான நிலத்தில் நால்வகைத் தொழில் பிரிவினை

2. அரசு உருவாகாத, இனக்குழு வாழ்வியல் சமூகங்களில்

‘திணைமக் கோட்பாட்டின்’ அடிப்படையில் மாந்தர் பகுப்பு - என்பதே தமிழர் மரபாக இருந்தது. அரசு உருவாக்கமும் ஆரியப் பார்ப்பனியத்தின் படையெடுப்பின் விளைவே தவிர, தமிழர் மெய்யியலின் விளைவு அல்ல! ஆரியப் பார்ப்பனியத்துடன் மோதி, அரசு உருவாக்கத்தைத் தடுத்து நிறுத்துவதிலும் தமிழர் மரபு பெரும் போராட்டங்களைச் சந்தித்தே வந்துள்ளது.

தமிழ்த் தேசியத்தைக் குறை கூறுவோர், இதுவரை தமிழர் மரபு எது? ஆரியப் பார்ப்பனிய மரபு எது? என்று ஆய்வு செய்துள்ளனரா? ஆரியப் பார்ப்பனியம் வேறு, தமிழர் மரபு வேறு என்பதை விளக்கும் எண்ணற்ற ஆய்வுகள் தமிழகத்தில் வெளிவந்து கொண்டுள்ளன. அவ்வாய்வுகளைப் பற்றி, திராவிட, தலித்திய ‘கோட்பாட்டாளர்கள்’ என்ன கருத்தைக்கொண்டுள்ளனர்?

‘தமிழ் மரபும் ஆரியப் பார்ப்பனியமும் ஒன்றுதான்’ என்று கருதுகிறார்களா? அல்லது ‘தமிழருக்கென்று தனித்துவமான பண்பாடு, மரபு என்று எதுவும் இல்லை’ என்று கண்களை மூடிக்கொண்டு தடியைச் சுழற்றுகிறார்களா?

இந்தக் கேள்விகளுக்கு விடையும் விளக்கமும் கூறாமல், ‘தமிழ்த் தேசியம் சாதியத்தைத் தூக்கிப் பிடிக்கிறது; தமிழ்த் தேசியம் நிலக்கிழமை ஆதிக்கத்தை வலியுறுத்துகிறது; தமிழர் பண்பாடு ஆணாதிக்கப் பண்பாடு’ என்று அவதூறு பரப்புவது அறிவுடைமையல்ல!

திராவிடம் என்ற சொல், உற்பத்தி செய்யப்படாத காலத்திலேயே, ‘தமிழ்’ தமிழர்’ தமிழ்நாடு’ ஆகிய இன அடையாளச் சொற்கள் இருந்துவந்துள்ளன. அந்தத் ‘தமிழர்’ இயற்றிய நூல்தான் தொல்காப்பியம்.

‘தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு
அவ்வகை பிறவும் கருவென மொழிப’
-என்ற பாடலில்,

‘தெய்வம், உணவு, விலங்குகள், காடுகள், மாந்தர், பறவைகள், பறை (இசைக் கருவி), தொழில், இசை - ஆகியவையும் இவற்றுடன் தொடர்புடைய அனைத்தும் புவியின் கருப்பொருட்கள்தாம்’ என்றது தொல்காப்பியம். இதன்வழி, தெய்வம் என்பது மனிதருக்கு மேற்பட்டதல்ல; மரமும் மனிதரும் பறையும் தெய்வமும் சமமானவையே’ என்றது தொல்காப்பியம்! ‘தமிழர்’ தொல்காப்பியர் இயற்றிய ‘தமிழர்’ மரபு தத்துவம் இது. இந்த தமிழர் மரபைத்தான், ஆரியப் பார்ப்பனியம் இன்றும் எதிர்க்கிறது. வேதங்கள் எழுதப்படும் காலத்திற்கு முன்பே, கடவுள் மறுப்புத் தத்துவங்களை உருவாக்கிப் பரப்பியவர்கள் தமிழர்கள். அணுக் கோட்பாடு என்று இன்று பேசப்படும் அறிவியல் கோட்பாடு, தமிழரின் பணடைய அறிவுப் பங்களிப்புகளில் ஒன்று!

இவற்றையெல்லாம், பொத்தாம் பொதுவாக ‘பழம் பெருமை’ பேசுவதற்காக நாம் கூறவில்லை. இவை அனைத்திற்கும் சான்றுகள் உள்ளன. இவை தொடர்பான கட்டுரைகளை முனைவர்.க.நெடுஞ்செழியன், பாமயன் உள்ளிட்ட அறிஞர்கள் தமிழர் கண்ணோட்டம் இதழிலும் பிற தளங்களிலும் தொடர்ந்து எழுதி வருகின்றனர்.

‘அறிவியல் என்றாலே அது ஐரோப்பியர் கண்டுபிடிப்பு’ என்ற மூடநம்பிக்கை திராவிடம் பேசும் பலருக்கு உள்ளது. தமிழரின் அறிவியல் மரபைப் பற்றி இவ்வகையினர் ஒருபோதும் பேசுவதில்லை. பகுத்தறிவுவாதம் என்ற பெயரால் மேற்கத்தியமயத்தை இவர்கள் முன் வைக்கிறார்கள்.

தமிழர் மரபைக் கேலி செய்வது, தமிழ்த் தேசியத்தை அவதூறுகளால் அசிங்கப்படுத்த முயல்வது ஆகியவற்றைத் தொடர்ந்து செய்யும் ‘திராவிட’ இயக்கம்’ தமது தேசிய இனக் கொள்கை என்ன என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். ‘திராவிடம் தான் தமது தேசிய இனம்’ என்றால், இனி இந்தக் கருத்தியலாளர்கள், ‘தமிழ், தமிழர், தமிழருக்கு நாடு’ என்று பேசாமல் இருப்பார்களா? ‘திராவிடம், திராவிடர், திராவிட நாடு வேண்டும்’ என்று மட்டும் வெளிப்படையாகப் பேசுவார்களா? எழுதுவார்களா? தமது இயக்கத்தின் கொள்கை இதுதான் என அறிவிப்பார்களா? திராவிட தேசியம்தான் சரியானது என்றால், அந்தத் திராவிட நாடு எது? அதன் எல்லை என்ன? என்று விளக்குவார்களா?

- இது போன்ற கேள்விகள் எழுகின்றன.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, அதன் செயல்பாடுகள் ஆகியவற்றை விமர்சிப்பது வேறு, தமிழ்த் தேசியம், தமிழர் மரபு ஆகிய கோட்பாடுகளை, மெய்யியலை விமர்சிப்பது வேறு. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியில் உறுப்பினராவது தமிழரின் அடிப்படைத் தகுதி அல்ல. ஆனால், தமிழ்த் தேசியம் என்றால் என்ன? அதன் மரபும் பெருமையும் என்ன? என்று புரிந்துகொண்டு செயல்படுவது தமிழக அரசியலில் அடிப்படைத் தேவை.

இந்தக் கட்டுரைத் தொடருக்கு மறுப்புரை எழுதும் ‘கோட்பாட்டாளர்கள்’, கோட்பாட்டளவில் மட்டும் எழுதுவது இன நலனுக்கு நல்லது, அதைவிடுத்து, ‘யார் என்ன நிறத்தில் வேட்டி கட்டினால் நன்றாக இருக்கும்’ என்பது போன்ற இலவச ஆலோசனைகளை வழங்கும் விதத்தில் பதில் எழுதினால், அதனால் யாருக்கும் எந்த நன்மையும் விளையப்போவதில்லை!

(கட்டுரையின் இரண்டாம் பாகம் விரைவில் வலையேற்றப்படும்)
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் சனவரி 2010 இதழில் வெளியான தொடர் கட்டுரை பகுதி -1 )

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.