மூவேந்தர் கொற்றம் - 2010 பிப்ரவரி மாதத் தலையங்கம்

(இக்கட்டுரை தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2010 பிப்ரவரி மாத இதழின் தலையங்கமாகும்)
தமிழ் நாட்டில் சங்க காலத்திலிருந்து சாதிக்க முடியாத மூவேந்தர் ஒற்றுமையை நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள் சாதித்துவி;ட்டன. வேந்தர், இணைவேந்தர், துணை வேந்தர் மூவரும் ஒருமித்து ஒரு கூரையின் கீழ் செயல்படுகின்றனர்.

அப்பன் வேந்தர், மகன் இணை வேந்தர், மச்சான் துணை வேந்தர். மச்சான் கிடைக்கவில்லை எனில் வேந்தரின் கைத்தடிகளில் ஒன்று துணைவேந்தர். இக்கும்பல் வைத்ததுதான் சட்டம். நடுவண் அரசின் மற்றும் மாநில அரசுகளின் இட ஒதுக்கீடு சட்டம் இந்த நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களைக் கட்டுப்படுத்தாது. ஒரு மாணவர் எவ்வளவு மதிப்பெண் வாங்கியிருக்க வேண்டும், ஒரு வகுப்பில் எத்தனை மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம், ஒரு மாணவரிடம் எவ்வளவு கட்டணம் வாங்கலாம் என்று எந்த கட்டுத் திட்டமும் அரசுகள் விதிக்க முடியாது.

இவ்வாறு நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களை அவிழ்த்து விட்டது யார்? தில்லி உச்சநீதி மன்றம் தான். டி.எம்.ஏ.பாய் வழக்கில் 2002-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கியத் தீர்ப்புதான் எல்லாக் கட்டுதிட்டங்களையும் நீக்கியது. தன்நிதிக் கல்லூரிகள், தன்நீதிக் கல்லூரிகள் ஆயின.

இந்த நிகர்நிலைக் கம்பெனிகள் நீதிமன்றம் அவிழ்த்து விட்ட அடங்காப்பிடாரிகள ் என்று மட்டும் கருதிவிடக்கூடாது. “அவனன்றி அணுவும் அசையாது” என்பது ஆன்மீக மொழி. அரசியல்வாதியின்றி ஆகப் பெருங்கேடு எதுவும் வந்துவிடாது என்பது சனநாயக மொழி.

பல்கலைக் கழகங்களுக்கு ஏற்பிசைவு (அங்கீகாரம்) வழங்கப் பரிந்துரைக்கும் அமைப்பு பல்கலைக் கழக நல்கைக் குழு (UGC). அதை ஏற்று ஆணை பிறப்பிக்கும் அமைப்பு நடுவணரசின் மனிதவள அமைச்சகம்.

நடுவணரசின் மனித வளத்துறை அமைச்சகம் கடந்த 2006 ஆம் ஆண்டு பி.என். தாண்டன் தலைமையில் நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களை ஆய்வு செய்ய “ஆய்வு மற்றும் நடவடிக்கைக் குழுவை” அமர்த்தியது. அது இந்தியா முழுவதும் உள்ள 126 நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களை ஆய்வு செய்தது.

அக்குழு கடந்த சனவரி மூன்றாம் கிழமை தனது பரிந்துரையை மனித வள அமைச்சகத்திற்கு அளித்தது. அதில் 13 மாநிலங்களில் உள்ள 44 நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களில் நிர்வாகிகளின் குடும்பத்தினர்தாம் பெரிதும் ஆதிக்கம் செலுத்துகின்றனர் t;. அவற்றின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் செயல்பாடுகள் மோசமாக இருக்கின்றன என்று சுட்டிக் காட்டி அவற்றின் ஏற்பிசைவை நீக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

இந்த 44 அல்லாமல் வேறு 44 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் தங்கள் குறைபாடுகளை அடுத்த மூன்றாண்டுகளுக்குள் திருத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு திருத்திக் கொள்ளவில்லை எனில் அவற்றின் ஏற்பிசைவை நீக்க வேண்டும் என்று அக்குழு கூறியிருந்தது.

மொத்தமுள்ள 126 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் 88 நிறுவனங்களின் “தகுதி” இவ்வாறு வெளிச்சத்திற்கு வந்தது.

2004லிருந்து 2009 வரை ஆறு ஆண்டுகளில் மட்டும் 36 நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறார்கள். சோனியா - மன்மோகன் ஆட்சிக் காலத்தில்தான் புயல் வேகத்தில் இந்த ஊழல் நடந்துள்ளது.

சிறிதும் வெட்கமில்லாமல் மனிதவள அமைச்சர் கபில் சிபல், நிகர்நிலைக் கம்பெனிகள் பக்கம் கையைக் காட்டி விட்டு, நீதிமான் வேடம் போடுகிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரின் நிழலுக்குக் கீழ்தானே, இலட்சக்கணக்கான மாணவர்களிடம் பணவேட்டை நடந்து, அவர்களுக்குத் தரக் குறைவான கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

இந்தக் கல்வி ஊழல் குறித்து கருணாநிதி போர்க்குரல் எழுப்ப முடியாது. காரணம் அவர் காங்கிரசோடு சேர்ந்து கை நனைப்பவர். செயலலிதா ஏன் போராட்டம் நடத்தக் கூடாது? அவர் கூட்டுச் சேராமல் தனிக் காட்டு ராணியாகக் கை நனைப்பவர். அத்துடன் காங்கிரஸ் கூட்டணி கை கூடுமா என்று கால நேரம் பார்த்துக் கொண்டிருப்பவர்.

இந்த நிகர் நிலைக் கம்பெனிகள் முதலில் தன்நிதிக் கல்லூரிகளாகத்தான் தொடங்கின. அப்போது மட்டும் மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைத்ததா? உள் கட்டுமான வசதிகள் போதிய அளவு இருந்தனவா? இல்லை.

இந்நிறுவனங்களுக்குத் தடையில்லாச் சான்றிதழ் வழங்கியவை மாநில அரசுகள்தான். தகுதி நீக்கப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்தவை பதினேழு நிறுவனங்கள்.

இந்நிறுவனங்களின் உள்கட்டுமானங்களைச் சரிபார்த்து தடையில்லாச் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் தமிழக அரசிடம் தானே உள்ளது. தி.மு.க. ஆட்சியாளர்கள் ஊழலற்றுச் செயல்பட்டிருந்தால் அவர்கள் ஆட்சிக் காலத்தில் அனுமதி பெற்ற நிறுவனங்களைத் தகுதி நீக்கம் செய்யும் நிலையே வந்திருக்காது. தி.மு.க.வின் நடுவண் அமைச்சர் ஜெகத் ரட்சகனின் பாரத் நிகர் நிலைப் பல்கலைக் கழகமும் தகுதி நீக்கப்பட்டியலில் இருக்கிறது. தி.மு.க.வின் தோழர் ஆசிரியர் வீரமணி அவர்களின் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமும் தகுதி நீக்கப் பட்டியலில் இருக்கிறது.

தன்நிதிக் கல்லூரிகளுக்கும் நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களுக்கும் மாணவர்கள் ஏன் ஓடுகிறார்கள்? அவர்களை அங்கு விரட்டுவதே அரசுதான்!

அரசு சொந்தமாகப் புதியபுதிய கல்லூரிகளைக் கட்டுவதில்லை. இருக்கின்ற கல்லூரிகளிலும் புதியபுதிய துறைகளையும் மேற்படிப்பையும் தொடங்குவதில்லை. புதியபுதிய பல்கலைக் கழகங்களைத் தொடங்குவதில்லை.

தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள பல்கலைக் கழகங்களுக்குத் தன்னாட்சி என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய்தான். பல்கலைக் கழக ஆட்சிக் குழுக்களில் அரசுப் பிரதிநிதிகளே பெரும்பான்மையாக அடைத்துக் கொண்டுள்ளார்கள். தற்சார்பாக எந்த முடிவையும் ஆட்சிக் குழு எடுக்க முடியாது.

அடுத்து, துணைவேந்தர்கள் எப்படி அமர்த்தப்படுகிறார்கள்? இப்பொழுது ஒரு துணைவேந்தர் பதவியின் விலை முப்பது கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது.

சட்டப்பேரவை உறுப்பினர் பதவியோ, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியோ, கொடுக்க முடியாதவர்களுக்குத் துணைவேந்தர் பதவி தரப்படுகிறது.

தமிழ்நாட்டில் இந்த அளவு கல்வியின் தரத்தைச் சீரழித்தது தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தாம்!

ஒரு நாட்டில் அரசியல் தலைமை ஒழுக்கமாகவும் நேர்மையாகவும் இருந்தால் அந்த நாட்டில் மற்றதெல்லாம் அதே போல் அமையும்.

உச்சநீதி மன்றத்தில் நிகர்நிலை முதலாளிகள் வழக்கு 25.1.2010 அன்று விசாரணைக்கு வந்தது. வரும் 8.3.2010இல் மறுபடியும் விசாரணை வரும். அது வரை 44 நிகர் நிலை நிறுவனங்களையும் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்று நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, ஏ.கே. பட்நாயக் ஆகியோர் ஆணையிட்டுள்ளனர். அவ்வாணை வழங்கும்போது நீதிபதிகள் வெளியிட்ட கருத்துகள் முகம் சுளிக்க வைக்கின்றன.

“இப்போது எங்கள் கவலை, அந்த மாணவர்கள் என்ன ஆவார்கள் என்பதுதான். பொது மக்கள் நலன்தான் தலையாயது. இந்தக் காரியம் எங்கள் முன் இருக்கும்போது அரசு எதுவும் செய்ய முடியாது. நாங்கள் இது பற்றிய செய்திகளைப் பார்க்க இருக்கிறோம். இயற்கை நீதிக் கோட்பாடு மீறப்பட்டிருந்தால் நாங்கள் அதைக் கவனிப்போம். பரிந்துரை அறிக்கைகளைப் பார்க்க இருக்கிறோம். உங்கள் (நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்) கருத்துகளைக் கேட்காமல் உங்கள் நிறுவனங்களுக்கோ ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கோ எதுவும் நடக்காது”

நீதிபதிகள் இந்த அளவு பதற்றப்பட வேண்டிய தேவையே இல்லை. கபில் சிபல் செய்தியாளர்களிடம் சொல்லியதையே நடுவண் அரசுத் தலைமை வழக்குரைஞர் ஜி.இ. வாகன்வதி நீதிமன்றத்தில் அரசின் உறுதி மொழியாக எடுத்துரைத்தார்.

இத்தகுதி நீக்கத்தால் தற்போதுள்ள மாணவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் படிப்பை அங்கேயே தொடரலாம். தன்நிதிக் கல்லூரிகளாக அவை செயல்படும். ஏற்கெனவே எந்தப் பல்கலைக் கழகத்துடன் அவை இணைக்கப் பட்டிருந்தனவோ அவற்றுடன் மறுபடியும் இணைக்கப்படும் என்றார்.

இதன் பிறகும் நீதிபதிகள் மிகையாகக் கவலைப்படுவது உவக்கும்படி இல்லை.

நிகர் நிலைப் பல்கலைக் கழகம் என்ற ஒரு வகையினத்தையே நீக்க வேண்டும். முழுத் தகுதியுடன் அரசு தன் பொறுப்பிலும் கட்டணக் கொள்ளையில்லாத வகையில் தனியார் துறையிலும் பல்கலைக் கழகங்களைப் புதிது புதிதாகத் திறக்க வேண்டும். இதுதான் நிகர் நிலை நோய்க்கு மருந்தாகும்
(இக்கட்டுரை தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2010 பிப்ரவரி மாத இதழின் தலையங்கமாகும்)

Related

தலையங்கம் 4510215502158793861

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

emo-but-icon

அனைத்து இதழ்களையும் படிக்க

புத்தக வடிவில் படிக்க

புத்தக வடிவில் படிக்க
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்

தினம் ஒரு குறள்

தமிழகம்

தமிழீழம்

அதிகம் பார்த்தவை

தேடுக

செய்தித் தொகுப்பு

item