ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

வேலை இல்லை சாராயம் உண்டு... - நா.வைகறை

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)
“தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பகங்களில் 62 லட்சம் பேர் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருக்கிறார்கள். வெறும் 3.5 லட்சம் பேருக்கு மட்டும் உதவித்தொகை வழங்குவதாகச் சொல்வது என்ன நியாயம்?”

“ஈவு இரக்கம், மனிதாபிமானம் எனக்கு நிறைய உண்டு”.

மேற்சொன்ன கருத்துகள் எல்லாம் ஜெயலலிதா அண்மையில் உதிர்த்தவை. சாத்தான் வேதம் ஓதுவதைப்போல உள்ளது ஜெயலலிதா சொல்வது.

ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருக்கும்போது நிழல் முதலமைச்சராக இருந்து ஜெ வேலை நியமனத் தடைச் சட்டத்தை அறிவித்தார். புதிய வேலை வாய்ப்புகளை தடுத்தார். சாலைப்பணியாளர்கள் பத்தாயிரம் பேரை பணியிலிருந்து வெளியேற்றினார். கட்டாய விருப்ப ஓய்வு திட்டத்தைச் செயல்படுத்தினார்.

அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கான பண்டிகை முன் பணத்தை தர மறுத்தார். போனசும் தர மறுத்து வஞ்சித்தார்.

உரிமைக்குப் போராடிய தொழிலாளர்களை கடுமையாக ஒடுக்கினார். எஸ்மா, டெஸ்மா போன்ற கருப்புச் சட்டங்கள் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கடுமையாக ஒடுக்கினார். காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுத்த ஜெ இன்று ஈவு இரக்கம், மனிதாபிமானம் பற்றியெல்லாம் பேசுகிறார்.

ஆட்சியில் இல்லாதபோது உரிமைகள் பற்றி வாய் கிழிய பேசுவதும், ஆட்சியில் இருக்கும்போது உரிமைகளை அடகு வைப்பதும் கருணாநிதிக்கு மட்டும் கை வந்த கலையல்ல ஜெயலலிதாவுக்கும்;தான்.

ஜெயலலிதா திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியில்ல - கலைஞர் கருணாநிதியின் பரிணாம வளர்ச்சி என்று தோழர் பெ. மணியரசன் சொல்வது மிகச் சரியே.

முல்லைப்பெரியாறு வழக்கில் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு 2006- பிரப்ரவரி 27 அன்று உச்சநீதி மன்றம் அறிவித்தது. முதலமைச்சர் பொறுப்பில் இருந்த ஜெயலலிதா இத்தீர்ப்பை செயல்படுத்தவில்லை.

இன்று முல்லைப்பெரியாறு உரிமை குறித்து ஆவேசமாக பேசுகிறார்.

காவிரி, இட ஒதுக்கீடு, ஈழச்சிக்கல்களில் ஆட்சியில் இல்லாதபோது பேசியவற்றுக்கு எதிராக ஆட்சியில் இருந்த போது கலைஞர் செயல்பட்டார் என்பதை எல்லோரும் அறிவர்.

ஜெயலலிதாவின் வேலை நியமனத்தடைச் சட்டத்தை கடுமையாக எதிர்த்த கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு வேலை நியமனத் தடைச் சட்டத்தை திரும்பப்பெற்றாலும், இளைஞர்களுக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை மீண்டும் பணிக்கு அமர்த்தக்கூடிய நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சி நூலகர் பதவிக்கு ஓய்வு பெற்றவர்களை நியமித்தது. (அரசு ஆணை எண்.177, அக்டோபர் 25,2009)

தமிழகத்தில் உள்ள 67 கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பதவிக்கு ஓய்வு பெற்ற அரசு கல்லூரி பேராசிரியர்களையே பணி நியமனம் செய்ய ஆணையிட்டது (ஆணை எண்.274 -2008 சூன்)

தமிழ்நாடு தேர்வாணையத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு ஓய்வு பெற்ற ஊழியர்களை நியமிக்க 2009 மே 18 அன்று ஆணையிட்டது.

இறுதியாக 18.12.2009 அன்று அறிவித்துள்ள ஆணையின்படி ஓய்வு பெற்ற பணியாளர்களை அரசின் நிர்வாகப் பதவிகளிலும், தொழில்நுட்பப் பிரிவுகளிலும் நியமிக்க உள்ளது.

கல்வி வணிகமயமாக்கப்பட்டுள்ளதால் லட்சக் கணக்கில், செலவு செய்து படிக்க வேண்டியுள்ளது. லட்சக்கணக்கில் செலவு செய்து வந்தாலும் வேலையில்லை என்றால் இளைஞர்கள் வாழ்வு என்னாவது?

தமிழகத்தில் உள்ள குரூப் மிமி பணிகளுக்கு பட்டப்படிப்பு போதும். காலியாக உள்ள 1225 இடங்களுக்கு 4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு 2.5 லட்சம் பேர்தான் விண்ணப்பித்திருந்தனர். முதுகலை, ஆராய்ச்சி மாணவர்கள் கூட விண்ணப்பித்துள்ளனர். 2500 கிராமப் பணியாளர் பணியிடங்களுக்கு 9 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பல்வேறு பணிகளில் தொகுப்பூதியம் என்ற பெயரில் குறைந்த சம்பளம் தருகின்றனர்.

தமிழ்நாட்டில் நிலவும் வேலையின்மையானது வெளிப்படையான - முழுமையான வேலையின்மை அல்ல. குறை வேலைவாய்;ப்பில் வாழ்நாள் முழுவதும் காலம் தள்ளும் மறைமுக வேலையின்மையே இங்கு பெருமளவு உள்ளது. இதனால் தான் வேளாண்மை, சிறுதொழில், சில்லறை வணிகம் ஆகியவற்றில் பணியாற்ற ஆளின்மையும், நிரந்தரமான, கண்ணியமான ஊதியத்தில் வேலையின்மையும் ஒரு சேர நிகழ்கிறது.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு சலுகையுடன் கூடிய மாத வருவாய் ரூ. 30 ஆயிரம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாதம் ஒன்றுக்கு மருத்துவப்படி ரூ. 3,000 என்றும், ஓய்வூதியம் ரூ.8,000 என்றும் அரசு அறிவித்துள்ளது. ஒருவர் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்தால் போதும். அவருக்கு ஓய்வூதியமும், அவருக்கு பின் அவரது மனைவிக்கு ஓய்வு+தியமும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

மாணவர்கள் படித்து முடித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் வரை வேலை கிடைக்கவில்லையெனில் அவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு கல்வித் தகுதிக்கேற்ப ரூ. 150 முதல் ரூ.300 வரை உதவித்தொகை மூன்றாண்டுகளுக்கு மட்டும் வழங்கப்படும் என்பது என்ன நியாயம்?

வேலையில்லாத இளைஞர்களுக்கு கல்வித்தகுதிக்கேற்ப ரூ.1000 முதல் ரூ. 3,000 வரை வேலை வழங்கும்வரை வாழ்வூதியம் வழங்க வேண்டும் என்று நாம் கோருகிறோம். (இது தொடர்பான கூடுதல் செய்திக்கு பார்க்க - வேலை கொடு அல்லது வாழ்வூதியம் வழங்கு - கி. வெங்கட்ராமன் - த.இ.மு. வெளியீடு)

நாட்டில் வேலையில்லாத திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. இளைஞர்களை பணிக்கு அமர்த்தாமல் ஓய்வு பெற்றவர்களுக்கு பணி நீட்டிப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

தமிழிகத்தில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். தொடர் வண்டித்துறை, பாரத மிகுமின்கலம், வருமானவரி, அலுவலகங்கள் போன்றவற்றில் தொடர்ந்து தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டு பிற மொழியினர் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.

தமிழக அரசு உள்ளுர் தொழில்களை வளப்படுத்தாமல் பன்னாட்டு முதலாளிகளையும், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் என்னும் பெயரில் பெரும் பணக்காரர்களையும் தமிழகத்தில் தொழில் தொடங்க சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது. கலைஞர் கருணாநிதியும், செயலலிதாவும் ஒருவருக்கொருவர் எதிராக செயல்படுவதுபோல் தோன்றும். ஆனால் இருவரும் ஓரணியில் செயல்படுவதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

கலைஞர் கருணாநிதியும், செயலலிதாவும் பொய் கூறி, அறங்கொன்று மக்களை ஏய்த்து வாழ்கிறார்கள்.

தமிழக மக்கள் உரிமைகளை காவு கொடுப்பதில், அடக்கு முறைச்சட்டங்கள் மூலம் இன உணர்வாளர்களைத் தண்டிப்பதில் இருவருமாக கைகோத்து பயணிக்கிறார்கள்.

கலைஞர் கொண்டு வந்த திட்டங்களை ஜெயலலிதா மாற்றுவார். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை கலைஞர் மாற்றுவார். பகை அரசியல் போல் தோன்றும் இவர்களின் ஆட்சியில் கருப்புச் சட்டங்கள் மட்டுமல்ல. அடக்கு முறைகள் மட்டுமல்ல - டாஸ்மாக் விற்பனையும் கொடி கட்டி பறக்கிறது.

செயலலிதா காலத்தில் உருவாக்கப்பட்ட டாஸ்மாக் மதுவிற்பனை கலைஞர் ஆட்சியிலும் தொடர்கிறது. ஆங்கில புத்தாண்டு அன்று மட்டும் 47 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 6694 கடைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ள மது விற்பனை கடந்த ஆண்டைவிட பத்து விழுக்காடு இந்த ஆண்டு அதிகம்.

அகில இந்திய அளவில் மதுபான உற்பத்தி அளவு வேகமாக அதிகரிக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் 1997-98 -ஆம் ஆண்டில் 11 கோடி பல்க் லிட்டர் அளவு இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானம் தயாரிக்கப்பட்டது. 2007-08 இல் 27 கோடி பல்க் லிட்டராக அதிகரித்துள்ளது. இதே காலக்கட்டத்தில் பீர் வகைகளின் தயாரிப்பு அளவு 5 கோடி பல்க் லிட்டரில் இருந்து 16 கோடி பல்;க் லிட்டராக அதிகரித்துள்ளது.

மதுபான விற்பனை மூலமாக 1997-98-இல் தமிழ்நாடு அரசுக்கு கிடைத்த வருவாய் 1970 கோடி ரூபாய்தான். ஆனால் , 2007-08-ல் இதுவே 8817 கோடி. பத்தே ஆண்டுகளில் மது வருவாய் மூன்று மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. (நன்றி இரா. அருள், பசுமைத்தாயகம் - சுற்றுச்சூழல் ஆகஸ்ட்- 2008).

“குடி உயர கோன் உயரும்”; என்று அவ்வை சொன்னதை நம் ஆட்சியாளர்கள் இப்படியாக நிறைவேற்றுகிறார்களா?

கல்வி, மருத்துவம் இவற்றை வணிகமயமாக்கிவிட்டு தொலைக்காட்சி , எரிவாயு அடுப்பு இலவசம் என்கிற அரசின் ஏமாற்றுகளைப் புரிந்துகொள்வோம்.

இளைஞர்களின் வேலை வாய்ப்புகளைப் பறித்து , அவர்களது உடல்நலத்தையும் சீரழிக்கிற அரசின் நடவடிக்கைளுக்கு எதிராக போராடப் வேண்டும்.

கலைஞருக்கு மாற்று செயலலிதா அல்லர். செயலலிதாவுக்கு மாற்று கலைஞர் அல்லர். கலைஞர் தமிழினத்தின் தலைவராக இருப்பது சாபக்கேடு. செயலலிதா தமிழர்களுக்கு தலைவியாக இருப்பது மானக்கேடு. இரண்டு கேடுகளையும் ஒழிக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் போராட இளைஞர்கள் அணியமாகவேண்டும்.
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)

1 comment:

  1. இவர்கள் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை மற்ற கட்சிகளும் மக்களும் புரிந்து கொள்ளாதவரை தமிழ்நாட்டிற்கு விமோசனம் கிடையாது.

    ReplyDelete

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.