ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

அறிவாளிகளும் அப்பாவிகளும் - நியுட்ரினோ ஆய்வகம் ஓர் அலசல் - சு.தளபதி

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2010 மே இதழில் வெளியான கட்டுரை)
இந்தியாவின் அழகுத்தொட்டில் என்றால் காஷ்மீர். இந்தியாவின் குப்பைத் தொட்டி என்றால் தமிழ்நாடு தான் என்பது இப்போது உறுதியாகி விட்டது. தமிழ்நாடு எப்போது இந்தியாவுக்குள் அடைக்கப் பட்டதோ அப்போதிருந்தே தமிழரின் துயரங்களின் வரிசை தொடங்கி விட்டது.

இந்த வரிசையில் புதிய வரவாக வந்து சேர்ந்திருக்கிறது நியூட்ரினோ ஆய்வகம்.

ஒருபுறம் அறிவாளிகள் இந்த ஆய்வகத்தால் எந்தத் துன்பமும் ஏற்படாது என்று கூவிக்கொண்டிருக்க மறுபுறம் அப்பாவிகளான ஏழை விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த ஆய்வகத்தை வர விட மாட்டோம் என்று கொடி உயர்த்த, கடைசியாக எதிர்ப்புப் போராட்டம் நடத்திய 12 பேர் மீது அரசை எதிர்த்து பொய் பிரச்சாரம் செய்ததாக வழக்குப் போட்டிருக்கிறது காவல் துறை.

என்ன நடக்கிறது தேவாரத்தில்.? நியூட்ரினோ ஆய்வகம் அமைவதில் என்ன பிரச்சினை?

தேவாரம் ... மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரத்தில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ள சிறிய ஊர். வனப்பகுதிகள், சுருளியாறு மற்றும் சுருளி அருவி ஆகியவை இவ்வூரைச் சுற்றி உள்ளன. போடி நாயக்கனூர், கம்பம் அருகில் முற்றிலும் விவசாயத்தை சார்ந்து வாழும் மலைப்பாங்கான , ஏலம், கிராம்பு, தேயிலை, காப்பி முதலான பயிர்களின் உற்பத்தியில் முக்கிய பங்கை வகிக்கக் கூடிய பகுதி.

இந்தப் பகுதியில் ஒரு மலையின் அடிவாரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கலாம் என்று அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவுறுத்தலின் பேரில் அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் அரசும் முடிவு செய்ததிலிருந்து இந்தப் பிரச்சினை தொடங்குகிறது.

இந்த ஆய்வகம் தேவாரம் பகுதியின் சுற்றுச் சூழலைத் தலை கீழாகப் புரட்டிப் போட்டு விடும் என அப்பகுதி வாழ் மக்களும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் குற்றம் சாட்ட, இல்லவே இல்லை, அப்படி யெல்லாம் ஒன்றும் நடக்காது என்று ஆராய்ச்சியாளர்களும், அறிவியல் கழகத்தின் விஞ்ஞானிகளும் கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்யாத குறையாக மறுத்துக் கொண்டி ருக்கிறார்கள்.

உண்மையில் நியூட்ரினோ என்றால் என்ன?

இதற்கு விளக்கம் சொல்ல அறிவியல் தெரியாதோர்க்கும் புரியும் வண்ணம் அடிப்படை யிலிருந்தே வருவோம்.

இந்த உலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் அணுக்கள் எனப்படும் மிகச் சிறிய துகள்களால் ஆனவை.

ஒரு பொருளை சிறியதாக பகுத்துக் கொண்டே போனால் அதற்கு மேல் (உடைத்து) பகுக்க முடியாததே அணுவாகும். இது 19 ம் நூற்றாண்டு விஞ்ஞானிகளின் அணுக்கொள்கை. ஆனால் அதற்குப் பின் ரூதர் போர்டு போன்ற அறிவியலாளர்கள் அணுவையும் பகுக்க முடியும் என்றும், அந்த அணு வெளிப்புறம் எலக்ட்ரான்(-) என்ற துகள்களாலும் உட்கருவில் புரோட்டான்(+) மற்றும் நியூட்ரான் என்ற துகளாலும் ஆனது எனக் கண்டறிந்தனர்.

பின்னர் வந்த அறிவிய லாளர்கள் இந்த அணுக்களைப் பிளப்பதன் மூலமோ அல்லது இணைப்பதின் மூலமோ மாபெரும் சக்தி உண்டாகிறது எனக் கண்டறிந் தனர். அந்த சக்தி எக்ஸ்ரே, புற்று நோயை குணப்படுத்த உதவும் கதிர்கள், அணு மின் தயாரிப்பு முதலிய ஆக்க வேலைகளுக்கும், அணு குண்டு, நியூட்ரான் குண்டு தயாரிப்பு முதலிய அழிவு வேலைகளுக்கும் பயன்படுத்தப் பட்டன.

1930ஆம் ஆண்டு உல்ப் கேங் என்ற அறிவியலாளர் அணுவில் புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் என்ற துகள்கள் மட்டுமல்ல இது தவிர வேறு சில துகள்களும் இருக்கலாம் என ஊகித்தறிந்தார்.

இத்தகைய துகள்களுக்கு நியூட்ரினோ எனப் பெயரி டப்பட்டது. பெயரிடப்பட்ட 26 ஆண்டுகள் கழித்து 1956 ல் நியூட்ரினோ துகள் உண்மையில் இருப்பதாகக் கண்டறியப் பட்டது. அதன் பின் நியூட்ரினோ அறிவியல் குறித்தும் புதிய ஆராய்ச்சி முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன.

இந்த நியூட்ரினோ துகளின் வேகம் ஒளியின் வேகத்தை ஒத்திருப்பதாலும் இதன் எடை மிகக் குறைவாகவும், இதன் வினையாற்றல் திறன் மிகவும் குறைவாக இருப்பதாலும், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மிக வேகமாக ஊடுருவிச் செல்லும் என்று கண்டறியப்பட்டது. இன்னும் சொல்லப் போனால் பூமியின் ஒருபுறம் ஊடுருவும் இந்த நியூட்ரினோ துகள் எந்தப் பாதிப்புமின்றி மறுபுறம் வெளிவரத் தக்கது என்பதுவும் கண்டறியப் பட்டது.

இத்தகைய சிறப்புத் தன்மைகள் கொண்ட நியூட்ரினோ துகளை மனித சக்திக்குள் வசப்படுத்த முடியுமா? என்ற நோக்கத்தில் குறைந்தபட்சம் அவற்றைக் கண்டுணர்ந்து, அவற்றின் பண்பு களை ஆராய முடியுமா என்ற ஆய்வுகளே தற்போது உலகெங்கும் நடந்து வருகின்றன. இந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றி இதுவரை மனித குலத்திற்கு கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

இத்தகைய ஒரு ஆய்வுக் கூடம் தான் தேவாரம் பகுதியில் அமைப்பதற்கான ஏற்பாட்டில் இருக்கிறது அரசு. அங்கு சூரிய ஒளியிலிருந்து வரும் காஸ்மிக் கதிர்களின் அணுக்களைப் பிளந்து அவற்றிலிருந்து வரக் கூடிய நியூட்ரினோ துகள்களை பூமிக்கடியில் உள்ள மின் காந்த ஏற்பிகள் மூலம் கண்டறிவதே இந்த ஆய்வகத்தின் செயல்பாடு.

சரி அதிலென்ன பிரச்சினை? அறிவியல் வளர்வதிலோ, ஆய்வகம் அமைப்பதிலோ, ஆராய்சிகள் நடப்பதிலோ நமக்கு எதிர்க்கருத்து இல்லை. ஆனால் அந்த ஆராய்ச்சிக் கூடம் பூமியின் மேற்பகுதியிலிருந்து 2 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட வேண்டும் என்பதில் தான் பிரச்சினை உருவாகிறது. இந்த நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க தேவாரம் பகுதியில் உள்ள மலையைப் பக்கவாட்டில் கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தொலைவிற்குக் குடைந்து ஒரு சுரங்கம் ஏற்படுத்தி அதற்குள் இதற்கான கருவிகளை அமைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.

இதற்காக அமைக்கப்பட்ட ஒரு குழு INO (India based neutrino observatory) தயாரித்துள்ள வரைபடம் இங்கு கொடுக்கப் பட்டுள்ளது. (ஆதாரம்: Indian based neutrino observatory, FAQ MINO, w w w . i m s c . v e s . i n / i n o / F a q /ino.info.pdf)

இவ்வாறு மலையைக் குடைந்து சுரங்கம் உருவாக்கி அதில் ஆய்வுக்கூடம் அமைக்க வடக்கே இமயமலையில் டார் ஜிலிங், மணாலி, ரோத்தால் ஆகிய இடங்களில் திட்ட மிடப்பட்டு பின் நீலகிரிக்கு தள்ளப்பட்டு அங்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் கடுமையான எதிர்ப்புக்குப் பின் சுருளிக்கு விரட்டப்பட்டு அங்கும் வனத்துறை எதிர்ப்புக்குப் பின் தேவாரம் பகுதிக்கு தள்ளப்பட்டுள்ளது.

1965ல் இம்மாதிரியான ஆய்வுகள் கோலார் தங்கவயலில் ஏற்கனவே தோண்டப்பட்ட சுரங் கத்தில் வைத்து நடத்தப்பட்டன. பின் சுரங்கம் மூடப்பட்ட பின் அப்படியே நின்று போய் விட்டன. (Project report - www.imsc.ves.in/inoOpen report - interim report.pdf) உலகில் இது போன்ற ஆய்வுக்கூடங்கள் இந்தியா தவிர கனடா, அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி முதலிய இடங்களில் அமைந்துள்ளன. இவற்றில் கனடா, அமெரிக்காவில் ஏற்கெனவே தோண்டப்பட்ட சுரங்கங்களைப் பயன்படுத்தினர். ஜப்பான், இத்தாலியில் பாலை மற்றும் மனித நடமாட்டமற்ற வனப்பகுதிகளைப் பயன்படுத்தினர்.

இவ்வாறு பூமிக்கடியில் குறைந்த பட்சம் 2 கிலோ மீட்டர் ஆழத்தில் ஆய்வுக்கூடம் அமைக்கப் பட்டால் தான் இந்த நியூட்ரினோ துகளை ஓரளவிற்காவது கண்டறிய முடியும் என்பதே அறிவியல் உண்மை.

இந்த ஆய்வரங்கம் அமை வதில் மக்களுக்கு என்ன இடர்பாடு ஏற்படும் என்பதை அறிய, அதன் கட்டுமானத் திட்டத்தை ஒருமுறை நாம் உற்று நோக்கினால் போது மானது.

சுரங்கத்தின் விட்டம் - 20 அடி முதல் 100 அடி வரை.

சுரங்கத்தின் நீளம் - 2 கிலோ மீட்டர்.

அறிவியல் கருவிகள் எடை - 50,000 டன் இரும்பு, மின் காந்தம்.

(உலகில் உள்ள மின்காந்த ஏற்பிகளில் இதுவே மிகப் பெரியதும் எடை அதிகமானதும் ஆகும் )

வெட்டி எடுக்கப்படும் பாறைகளின் அளவு - 2,25,000 கன மீட்டர் அதாவது 7,50,000 கன அடி

தேவைப்படும் நீர் -

ஒரு நாளைக்கு 3,50,000 காலன்கள்

மின்சாரத் தேவை - அறிவிக்கப்படவில்லை.

இக் கட்டுமானத்திற்குத் தேவையான சிமிண்ட், மணல்

சுமார் - 37,000 டன்.

இந்த ஆய்வகத்திற்கான நீர்த் தேவை 30 கி.மீ தள்ளியுள்ள சுருளி ஆற்றிலிருந்து எடுத்து நிறைவு செய்யப்படும்.

இவை போக இந்தக் கட்டுமானப் பொருள்களை ஏற்றிச் செல்வதற்காக சுமார் 160 கனரக வாகனங்கள் அருகில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து தேவாரம் நகருக்குள் வந்து போக வேண்டும். வெட்டி எடுக்கப்பட்ட பாறைகள் நீண்ட நாள் அடிப்படையில் இந்தப் பகுதியை விட்டு வெளியேற்றப்படும். அதுவரை இப்பகுதியிலேயே அவை இருக்கும்.

ஆய்வுக் கூடத்தின் உள்ளே கதிரியக்கம் உருவாக்கக் கூடிய தனிமங்கள் ஏதும் இல்லை என்று சொல்லப்பட்டாலும் ஹீலியம், ஆர்கான் போன்ற எளிதில் தீப்பற்றக் கூடிய அபாயமான வளிகள் பயன்படுத்தப்படும்.

இவை தான் அந்த ஆய்வகத்தின் கட்டுமானத் திட்டம்.

பக்கத்து வீட்டில் 6 அங்குல(அரை அடி) விட்ட போர் போடப்படும் போது ஏற்படும் அதிர்வால் நம்மால் தூங்க முடிவதில்லை என்பது நடைமுறை. ஆனால் இத்தகைய பெரிய கட்டு மானத்தால் எந்தவித சுற்றுச்சூழல் மாசுபடுதலோ, இடர்ப்பாடுகளோ அப்பகுதி மக்களுக்கு ஏற்படாது என்று அடித்துச் சொல்கிறார்கள் அறிவியலாளர்கள்.

சரி. இந்த ஆய்வகம் அந்தப் பகுதியில் அமைவதால் மக்களுக்ககு ஏதேனும் பயன் கிடைக்குமா என்ற கேள்விக்கும் அவர்களே பதில் தருகிறார்கள்.

இதனால் மொத்தமே 20 முதல் 200 வரையிலான பேர்க ள் அங்கு வேலை செய்வார்கள். அதிகமான வேலைவாய்ப்பு கிடைக்காது. வேண்டுமானால் கட்டுமானப் பணிக்கான கூலிகளாக முதல் நான்கு ஆண்டுகளுக்கு சிலருக்கு வேலை கிடைக்கலாம்.

நூற்றுப் பத்து ஆண்டுகளாக இருக்கும் முலைப்பெரியாறு அணை நிலநடுக்கம் வந்து இடியும் என்று கேரளம் வாதாடிக் கொண்டிருக்க இச் சுரங்கம் அமையும் பகுதியில் நிலநடுக்கம் ஏற்படாது என்று ஐ.என்.ஒ. குழு அடித்துச் சொல்கிறது. இவ்வளவு பெரிய சுரங்கத் துளை அமைப்பதால் என்னென்ன இடர்கள் ஏற்படும் என்ற கேள்வி நமக்கும் எழுகிறது.

ஏற்கனவே நீலகிரிப் பகுதியில் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் ஆய்வுக் கூடம் அமைப்பதை எதிர்த்ததின் காரணங்கள் அப்படியே தேவாரம் பகுதிக்கும் பொருந்தும்.

நீலகிரியைப் போலவே தேவாரம் பகுதியும் வனச்செறிவான பகுதியாகும். வன விலங்குகளான யானை, சிறுத்தை, மான், வரையாடு, காட்டுப் பன்றிகள் ஆகியவற்றின் உயிர்ச் சுழற்சி இதனால் பாதிக்கப்படும்.

காட்டு வளங்கள், மூலிகை வளங்கள், ஏல விவசாயம், அவற்றிற்கான நீராதாரங்கள் ஆகியவை பாதிப்பிற்குள்ளாகும்.

ஆய்வுக்கூடம் அணு ஆய்வகமாக இருப்பதால் பாதுகாப்பிற்காக இராணுவ மயமாக்கப்படுவதால், மக்களின் சுதந்திர நடமாட்டம் முடக்கப்பட்டு அவர்கள் வாழ்க்கை முறை முடமாக்கப்படும்.

இந்த ஆய்வுப்பணி வெற்றி பெற்றால் எதிர்காலத்தில் மேலும் 4 முதல் 5 கி. மீ இந்தச் சுரங்கம் ஆழப்படுத்தப்படலாம். அதனால் ஏற்படும் இடர்ப்பாடுகளை மக்கள் எதிர்நோக்க வேண்டி வரும்.

மனித குலத்திற்கு இதுவரை எந்தப் பயனும் தராத, இந்த ஆய்வுப்பணி, தற்போது இந்தியா எதிர் நோக்கியுள்ள பொருளாதாரப் பின்னடைவுகளின் மத்தியில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடை பெறுவதாக அறிகிறோம். 65 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரு வேளை உணவுடன் வறுமைக் கோட்டிற்குக் கீழே துன்புறும் ஒரு நாட்டில் இத்தகைய தெரியாத ஊருக்குப் போகாத பாதை அவசியமா என்பது சிந்திக்கத்தக்கது.

மேலும் உள்ளூர்வாசிகளுக்கு எந்தப் பயனும் அளிக்காத ஒரு திட்டத்திற்காக இவ்வளவு இடர்ப்பாடுகளை மக்கள் ஏன் தாங்க வேண்டும் என்ற கேள்வியும் நம் முன் எழுகிறது.

மக்களின் எதிர்ப்புக் குரலுக்கும் சந்தேகங்களுக்கும் உரிய விளக்கம் சொல்லாமல் அரசு அவ்வப்போது கல்லூரிப் பேராசிரியர்களையும், அறிவியல் கழக உறுப்பினர்களையும் கொண்டு மடைமாற்றச் சமாளிப்புக் கூட்டங் களையும் செய்தித்தாள் பிரச்சாரங்களையும் முடுக்கி விட்டிருக்கிறது.

காவிரிப் பிரச்சனையைக் கண்டு கொள்ளாத, சேதுசமுத்திரத் திட்டத்தை கிடப்பில் போட்ட, ஈழத்தமிழரை எதிரியாய் நடத்திய மலட்டுக் கத்திரிக்காயை விவசாயிகள் தலையில் கட்ட துடிக்கிற, விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்கத் துணியாத, முல்லைபெரியாற்றில் துரோகத்திற்கு துணை போகிற, மீன் வளத்தை முதலாளிகளுக்கு விற்கத் துடிக்கின்ற, நாட்டையே சுரண்டல் முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பங்கு போடத் துடிக்கின்ற, ஒர் அரசு இந்த நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தில் காட்டும் ஆர்வத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த ஆராய்ச்சியை டாட்டா அடிப்படை ஆய்வகம், பாபா அணு ஆராய்ச்சி நிலையம், IIMSC சென்னை, ஐ.ஐ.டி. மும்பை, இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி நிலையம், கல்பாக்கம் உட்பட 7 முதல்நிலை நிறுவனங்கள் மற்றும் 13 பங்கு நிறுவனங்கள் நடத்த உள்ளன. குளிரூட்டப்பட்ட அறையில் கணிணி முன் அமர்ந்து நுனி நாக்கு ஆங்கிலத்தில் விவாதம் செய்யும் அந்த அறிவாளிகளுக்கு தேவாரம் மலையில் ஆடு, மாடு மேய்த்து வயிற்றைக் கழுவிக் கொண்டிருக்கும் வறிய படிக்காத அப்பாவிகளின் வாழ்க்கையின் வலி எப்படிப் புரியும்?

மக்களுக்குத் துன்பங்களை மட்டுமே திட்டமிடும் ஒர் அரசு எப்படி அல்லது இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த மக்களின் அரசாக இருக்க முடியும்.

அறிவியலின் எதிர் வினைகளை ஏற்கெனவே இரஷ்யாவின் செர்னோபில் அணு உலையிலும், போபாலில் விஷவாயு விபத்திலும் ஜப்பான் இரோசிமா, நாகசாகியிலும் நாம் போதுமான அளவு பார்த்தாகி விட்டது.

அறிவாளிகள் ஆயிரம் சமாதானம் சொன்னாலும் துயர்களை வாழ்வில் எதிர்கொள்ளப் போவது அப்பாவிகள் தான்.

நம் கடமை அந்த அறிவாளிகளின் பிடியிலிருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றுவது மட்டுமே.

ஏனெனில் அறிவாளிகளுக்கோ இது இன்னுமொரு ஆராய்ச்சி.

ஆனால் அப்பாவி மக்களுக்கோ இது தான் வாழ்க்கை.

இங்கு தான் வாழ்க்கை.
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2010 மே இதழில் வெளியான கட்டுரை)

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.