ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஈழமும் பாலஸ்தீனமும் – சில படிப்பினைகள் - கி.வெங்கட்ராமன்

நீண்ட நெடிய தமிழின வரலாற்றில் இதுவரை கண்டிராத பேரழிவை ஈழத்தில் கடந்த ஆண்டு சந்தித்தோம். முள்ளிவாய்க்கால் இந்த பேரவலத்தின் உச்சத்தைக் குறிக்கிறது. அதே நேரம் தமிழினம் புதிய திசைவழியில் தனது வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை எழுத வேண்டிய தேவையையும் குறித்து நிற்கிறது முள்ளிவாய்க்கால். இது நினைக்க நினைக்க தமிழர்களை உலுக்கி எடுக்கும் பெரும் சோகம் என்றாலும், இன்னொரு பக்கத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழர் களிடத்தில் தமிழ்த் தேசியம் குறித்த புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

உலகெங்கும் பரந்து வாழும் புலம் பெயர் தமிழர்கள் ஓர் அரசியல் சக்தியாக எழுந்திருப்பது இந்தப் பேரழிவிற்குப் பிறகுதான். இப்போது தான் தமிழ்நாட்டு இளைஞர்களிடையேயும் தமிழ்த் தேசிய உணர்வு பரவி வருகிறது. ஆயினும், இந்த எழுச்சியும் புத்துணர்வும் சரியான அரசியல் திசைவழியில் செலுத்தப்படாது போனால் தமிழினம் வரலாறு வழங்கியிருக்கிற இன்னொரு வாய்ப்பையும் இழக்க நேரிடும்.

ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள், புலம் பெயர் தமிழர்கள் அனைவரும் இந்தியாவை - இந்தியத் தேசியத்தைத் தமது பகை சக்தி என புரிந்து கொள்வதே புதிய திசைவழிப் பயணத்தின் மையப்புள்ளியாகும். தமிழின உரிமை குறித்த சிக்கலில் இந்தியா நட்பு நாடோ நடுநிலை நாடோ அல்ல என்ற தெளிவு தமிழின உணர்வாளர்களிடையே உரிய அளவு இன்னும் உருவாகவில்லை.

தமிழீழ சிக்கலில் இந்தியாவின் பாத்திரம் குறித்து இந்திராவுக்கு முன் - இந்திராவுக்குப் பின் என்று பார்ப்பதோ, ராஜீவ்காந்திக்கு முன் - ராஜீவ்காந்திக்குப் பின் என்று பார்ப்பதோ, சோனியா காந்தியின் பழிவாங்கும் வெறியாக மட்டுமே குறுக்கிப் பார்ப்பதோ, காங்கிரஸ் கட்சியின் அல்லது தி.மு.க. தலைமையின் அணுகுமுறையோடு மட்டுமே இணைத்துப் பார்ப்பதோ உண்மையை உணர உதவாது என்று பலமுறை தெளிவுபடுத்தியிருக்கிறோம். மேற்கண்ட காரணிகள் தமிழீழச் சிக்கலில் ஏற்படுத்திய தாக்கங்களை அங்கீகரித்துக் கொண்டு தான் இதனைக் கூறுகிறோம்.

இன்றைய உலகில் எந்த தேசிய இனப் புரட்சியும், மக்கள் திரள் புரட்சியும் உலக நாடுகளின் புவிசார் அரசியல் நகர்வுகளை கணக்கில் எடுக்காமல் வெற்றிகரமாக நடத்தப்பட முடியாது. புவிசார் அரசியல் நகர்வுகளுக்கு வல்லரசுகளின் பொருளியல் - அரசியல் - வர்க்கத் தேவைகள் மட்டுமே காரணியாக அமைந்துவிடுவதில்லை. இன ஆதிக்க நலன்களும் புவிசார் அரசியலில் முக்கியப் பங்காற்றுகின்றன. பல நேரங்களில் இன அரசியலே புவி அரசியலின் முதன்மைக் காரணியாக அமைவதும் உண்டு. தமிழீழச் சிக்கலில் இந்தியாவின் தலையீட்டை இந்தப் பின்புலத்தில் புரிந்து கொள்வது அவசியம். உண்மை நிலையிலும், உத்தி என்ற வகையிலும் இதில் தெளிவு ஏற்படுவது இன்றியமையாதது.

சிங்களத்திற்கு ஆதரவாக சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் களம் இறங்குவதால் தான் இந்தியா தமிழர்களுக்கு எதிராக தானும் செயல்பட வேண்டிய புவி அரசியல் நெருக்குதல் ஏற்பட்டுவிட்டது என்று கூறுவோர் உண்டு. இது உள்ள நிலையை தலைகீழாகப் புரிந்து கொள்வதாகும். செஞ்சீனம் உருவாவதற்கு முன்னாலேயே, இந்திய சுதந்திரத்திற்கு முன்னாலேயே காங்கிரசின் அணுகுமுறை இலங்கைத் தீவை இந்தியாவின் ஒரு பகுதியாக இணைத்துக் கொள்ளும் நோக்கம் கொண்டது தான். 1945இல் இலங்கை சென்ற நேருவும், பட்டாபி சீத்தாராமையாவும் இலங்கை சுதந்திர இந்தியாவின் ஒரு மாநிலமாக இருக்கலாம் என்று பேசினார்கள்.

இலங்கையை இந்தியாவின் ஒருபகுதியாக இணைத்துக் கொள்ள முடியாத போதும் அதனை தங்கள் செல்வாக்கு மண்டலத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அணுகுமுறையே இந்திய ஆட்சியாளர்களுக்கு இருந்தது. சிங்கள ஆளும் வர்க்கத்தை நட்பாக்கிக் கொண்டு தமிழர்களுக்கு எதிரான சிங்கள அரசின் நடவடிக்கைகளுக்கு துணை செய்வதே இந்திய அரசின் தொடர் அணுகுமுறையாகும். இந்திய அரசின் இந்த அணுகுமுறை தான் சீனாவின் சிங்கள ஆதரவுப் போக்கை விரைவு படுத்தியது.

இந்திய அரசின் அணுகுமுறை தமிழருக்கு எதிரானதாக இருந்தாலும், ஈழத்தமிழர்களின் அணுகுமுறை தந்தை செல்வா காலத்திலிருந்து தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் காலம் வரையிலும் இந்தியாவிற்கு ஆதரவாகவே இருக்கிறது. அதனால், எந்த நல்ல பயனும் விளையவில்லை என்பதே இனக்கொலை வரலாறு காட்டுகின்ற உண்மையாகும். மூர்க்கமான தமிழின எதிரியாகவே இந்தியா நடந்து கொள்கிறது. இது சீன அரசின் போக்கிற்கு எதிர்வினை அல்ல. இந்திய அரசின் தலையீட்டிற்கு எதிர்வினையே சீனத்தலையீடு என்பது உற்று நோக்கினால் புலனாகும்.

இந்தியாவின் அணுகுமுறைக்கு வர்க்க நோக்கங்கள் இருப்பது உண்மையே ஆயினும் அது முதன்மைக் காரணி அல்ல. ஏனெனில், தமிழீழ விடுதலைக்கு துணை செய்வதன் மூலம் தனது புவிசார் வர்க்க நலன்களை நிறைவேற்றிக் கொள்ள இந்திய ஆளும் வர்க்கத்திற்கு பெரிய தடை ஏதும் இருக்கவில்லை. அதற்கான வாய்ப்பான சூழலையே விடுதலைப்புலிகளின் நட்பான அணுகுமுறை ஏற்படுத்தியிருந்தது.

தமிழினத்திற்கு எதிரான இனப்பகையே இந்தியாவை நகர்த்திய முதன்மைக் காரணியாகும். அதனால் தான் நட்புக்கரம் நீட்டிய ஈழத்தமிழர்களை அழித்து ஒழிப்பதில் இந்தியா முதன்மைப்பாத்திரம் வகித்தது. இந்தியாவின் இந்த இனப்பகையானது வரலாற்றின் ஒரு கட்டத்தில் உருவாகி மறைகிற தற்காலிகப் பகையன்று. இது அடிப்படையானது; நீடித்து நிலைப்பது. ஏனெனில், இந்தியா என்பது ஆரியத்தின் நவீன வடிவம். ஆரியர் - தமிழர் பகை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி, தொடர்ந்து, தீவிரம் பெற்று வருவதாகும். சிங்களமும், ஆரிய மரபினத்தின் வழித் தோன்றல் தான். தமிழினப் பகை என்பது அதன் அடிப்படை இயல்பு.

ரிக் வேதம் தொடங்கி, இன்று ஆட்சியாளர்கள் யாராய் இருந்தாலும் தவறாமல் பங்கேற்கும் தில்லி இராம் லீலா விழா வரை அனைத்து பண்பாட்டு நடவடிக்கைகளிலும், கருத்தாடல்களிலும் இந்தப் பகை மக்கள் சமூகத்தில் ஆழமாக மீண்டும் மீண்டும் விதைக்கப்படுகிறது. தமிழ் மொழி சமஸ்கிருதத்திற்கு எதிரானது, தமிழர்கள் ஆரிய இந்தியாவின் பகைவர்கள், தமிழ் இனம் ஆரிய அதாவது இந்திய இருப்புக்கு அச்சுறுத்தலான இனம் என்பது இந்தியாவில் வேரூன்ற வைக்கப் பட்டிருக்கிற அடிப்படைக் கருத்தாகும்.

மக்கள் சமூகத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த பொதுக் கருத்து அளிக்கிற வலுவில் நின்று தான் ‘சனநாயக’ இந்தியா எந்த சிக்கலும் இன்றி இந்த இனக்கொலைப் போரை வழிநடத்தியது. இதனை எதிர்ப்பவர்கள் யாராய் இருந்தாலும் - இந்திய ஒற்றுமைக்கு துணை நிற்போம் என்று சூடமேற்றி சத்தியம் செய்பவரே ஆயினும் - இந்தியாவின் பகைவர்கள், இறையாண்மைக்கு எதிரானவர்கள் என பட்டம் சூட்டுவது எளிதாக நடக்கிறது.

“பாரத வர்ஷே, பரத கண்டே” என்ற ஆரிய புராணப் புனைவு இந்த நாட்டுக்கு பாரதம் என பெயர் சூட்ட அடிப்படையாகக் கொள்ளப் பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் அது உறுதி செய்யப்படுகிறது. “வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம்” என்ற அறிவியல் ஆதாரங்களுடன் கூடிய தமிழர் தாயக இருப்பை மேற்கண்ட புராணப் புனைவு சட்டவழியிலேயே புறக்கணிக்கிறது. எனவே, தமிழர் தாயக உரிமை பேசுவோர் பிரிவினைவாதிகளாக சட்டத்தினால் அடையாளப்படுத்தப் படுகின்றனர்.

சிங்கள ஆரியமும் இதே போன்று மகா வம்ச புனைவை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தீவின் அரசமைப்பை உருவாக்கியது. தமிழினப் பகை என்பது இதன் அசைக்க முடியாத ஆதார அச்சு. ஆரியத்தின் இன்றைய வடிவங்களான இந்தியத் தேசியமும், சிங்களத் தேசியமும் தமிழின பகை கொண்டு இயங்குவது இயற்கை யானது. இந்த இயற்கையான தன்மையை புரிந்து கொள்ளாது போனால் தமிழினம் உரிமைப் போராட்டத்தில் வெல்ல முடியாது. இவற்றுள் சிங்களத்தை மட்டும் எதிர்ப்பது இந்தியாவை நட்பாகப் பார்ப்பது அல்லது நடுநிலையாக்க முயல்வது மீண்டும் மீண்டும் பேரழிவையே ஏற்படுத்தும்.

இந்தியா போன்ற ஒரு வல்லரசை எதிர்த்து தமிழீழம் அல்லது தமிழ்த்தேசம் போன்ற சிறிய தேசம் தனது இறையாண்மையை நிலைநிறுத்திக் கொள்ள முடியுமா என்ற கேள்வி சிலரால் எழுப்பப் படுகிறது. அதிலும், சின்னஞ்சிறிய தமிழீழம் இந்தியாவை பகைத்துக் கொண்டு விடுதலைப் போராட்டத்தை நடத்துவது சரியான உத்திதானா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

உண்மை நிலையின் அடிப்படையில் தான் புரட்சியின் உத்திகள் வகுக்கப்பட முடியும். இந்தியா தமிழினத்தின் பகை என்பது உறுதியான உண்மை நிலை.

உத்தி என்ற வகையிலும் சின்னஞ்சிறிய தேசம் உலக அணி சேர்க்கையில் தனக்கான அணுகு முறையைக் கைக்கொள்வது வெற்றிக்கு இன்றியமையாத ஒன்றாகும். எல்லா நாடுகளுக்கும் நண்பனாக இருக்க முயலும் ஒரு விடுதலை இயக்கம் நடைமுறையில் எல்லா நாடுகளின் பகையை பெறுவதில் தான் முடியும் என்பதற்கு தமிழீழ நான்காம் போர் தெளிவான எடுத்துக் காட்டாகும்.

தமிழீழ விடுதலைக்கு இந்தியா பகை சக்தி என்ற தெளிவோடு உத்தி வகுத்தால் தான் உலக புவி அரசியலில் இந்தியாவிற்கு எதிரான நாடுகளை நட்பாக்கிக் கொள்ள வாய்ப்பு திறந்து விடப்படும். உண்மை நிலையை உணர்ந்து வகுக்கப்படும் உத்தியாகவும் இது அமையும். உலக அரங்கில் இதற்கான எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. பாலஸ்தீனம், கொசோவா இரண்டையும் எடுத்துக் கொள்ளலாம்.

பைபிள் பழைய ஏற்பாட்டு கதையின் அடிப்படையில் உருவான யூத இனவெறிக் கோட்பாடு தான் ஜியோனியம். இந்த ஜியோனிசத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டது தான் இசுரேல் நாடு. பாலஸ்தீன தேசத்தை ஆக்கிரமித்தே அந்நாடு உருவாக்கப்பட்டது. கடந்த 60 ஆண்டுகளாக ஜியோனிய யூதவெறி இசுரேல் பாலஸ்தீனத்தை குருதிக் காடாக்கி வருகிறது. கேள்விமுறையற்ற இனக்கொலை அங்கு அன்றாடம் அரங்கேறி வருகிறது.

பல்வேறு அரபு தேசங்களின் இன உறவோடு இருக்கும் பாலஸ் தீனத்தை, புடம் போட்ட போராட்ட மரபுள்ள பாலஸ்தீனர்களை இசுரேல் என்ற சிறிய நாடு தொடர்ந்து அடிமைப்படுத்த முடிகிறது என்றால் அது இசுரேலின் தனித்த வலுவினால் அல்ல. மாறாக, அமெரிக்க வல்லரசின் உறுதியான பின்பலம் இருப்பதால் தான் கேள்விமுறை யின்றி இன அழிப்பை இசுரேல் நடத்திக் கொண்டிருக்கிறது. அங்குள்ள எண்ணெய் வளம் என்ற பொருளியல் சுரண்டல் நோக்கு அமெரிக்க வல்லரசின் அணுகுமுறைக்கு ஒரு முக்கியக் காரணம் என்றாலும், அது முதன்மைக் காரணி அல்ல.

எண்ணெய் ஆதிக்கம் தான் முதன்மை நோக்கு என்றால், அரபு தேசிய இனத்தை நட்பாக்கிக் கொண்டு சாதிப்பதை அமெரிக்கா முதன்மை உத்தியாக வகுத்திருக்க முடியும். ஏனெனில் அரபு தேசிய இன நாடுகளில் தான் எண்ணெய் வளம் அதிகம். மாறாக, இசுரேலை சார்ந்திருப்பதற்கு இனக் காரணமே முதன்மையானது.

யூத இனம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வலுவான செல்வாக்குப் பெற்ற இனமாகும்.

பொருளியல், கருத்தியல் மற்றும் அதிகார வர்க்கத் தளங்களில் யூத இனத்தின் பிடி அமெரிக்காவில் வலுவானது. ‘அமெரிக்க இசுரேல் பொதுமக்கள் துறைக் குழு’ என்ற அமைப்பு அமெரிக்க அரசியலாளர் களுக்கு பணம் அள்ளித்தரும் முதன்மையான ஊற்றாகும். யூத முதலாளிகள் படைவகை உற்பத்தியிலும் வங்கித் துறையிலும் வலுவானவர்கள்.

அமெரிக்காவில் சனநாயகக் கட்சியோ குடியரசுக் கட்சியோ யார் ஆட்சி நடந்தாலும், யூத இன செல்வாக்கு என்பது மையமானது. “பாலஸ்தீனம் மட்டுமல்ல அமெரிக்க நாடாளுமன்றமும் இசுரேல் ஆக்கிரமிப்புக்கு உள்ளான பிரதேசம் தான்” என்று குடியரசுத் தலைவர் வேட்பாளர் பேட்ரிக் புக்கனான் ஒருமுறை கூறினார்.

டைமஸ் வார்னர், வால்ட் டிஸ்னி, பாக்ஸ் நியூஸ், ஏ.பி.சி., என்.பி.சி., அசோசியேட்டட் பிரஸ், நியூஸ் வீக், வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட வலுவான ஊடகங்கள் அனைத்தும் யூதர்களுடையவை. அங்கு பணி யாற்றும் முதன்மைச் செய்தியாளர் கள், ஆசிரியர் குழுவினர் பெரும்பாலோர் யூதர்கள் தான். ஹாலிவுட் திரைத்துறை யூத ஆதிக்கத்திற்கு உட்பட்டது. எனவே, அமெரிக்கக் குடிமக்களின் கருத்தை ஆள்பவர்கள் யூதர்களே. இந்த யூத இணைப்பு தான் அமெரிக்க - இசுரேல் அச்சின் அடிப்படையாகும்.

எனவே, பாலஸ்தீனர்கள் இசுரேலையும் அமெரிக்க வல்லரசையும் ஒரு சேர எதிர்த்தார்கள். பாலஸ்தீன குழந்தைகள் கூட அமெரிக்கா தனது எதிரி என்று தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். பாலஸ்தீன விடுதலை இயக்கம் தொடக்கத்திலிருந்தே அமெரிக்க எதிர்ப்பு நிலை எடுத்ததால், உலக அரங்கில் அதற்கு வலுவான ஆதரவு கிடைத்தது.

இந்தத் தெளிவிலிருந்து மாறி, குழம்பியபோது தான் பாலஸ்தீனப் போராட்டம் பெரும் பின்னடைவை சந்தித்தது. அதுவரை அமெரிக்க எதிர்ப்பில் உறுதியாக இருந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத் 1991 சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு, தடுமாறத் தொடங்கினார். எதிரியான அமெரிக்காவிடம் பஞ்சாயத்துக் கோரினார். 1993 ஆஸ்லோ உடன்பாடு பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை மிகப்பெரிய வீழ்ச்சியில் தள்ளியது. அதன் விளைவாக இன்று பாலஸ்தீனம் பிளவுபட்டுக் கிடக்கிறது.

சின்னஞ்சிறிய கொசோவா செர்பிய கொடுங்கோல் ஆட்சியில் சிக்கிச் சீரழிந்தது. செர்பியா நடத்திய இனக்கொலைக்கு எல்லாம் வலுவான பின்னணியாக ரசியா இருந்தது. ரசியாவின் இந்த அணுகுமுறைக்குக் காரணம் இன உறவு தான். செர்பியர்களும், ரசியர்களும் சுலோவானிய மரபினத்தைச் சேர்ந்தவர்கள். கொசோவா விடுதலை இயக்கம் செர்பியாவை எதிர்த்தது போலவே ரசிய வல்லரசையும் எதிர்த்தது. இதனால், புவி அரசியலில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவை பெற முடிந்தது.

இன்று, கொசோவா புதிதாகப் பிறந்த தேசமாக உலகப் படத்தில் இடம் பெற்றுவிட்டது. இந்தப் படிப்பினைகளை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்காவிலாவது யூத செல்வாக்கு மட்டுமே உண்டு. ஆனால், இந்தியா என்பதே ஆரியக் கட்டமைப்பு. இது தமிழின எதிர்ப்பு என்ற அடிப்படைத் தன்மையுடையது.

இந்தியக் கட்டமைப்பில் சட்டப்படி சமத்தன்மையுள்ள மாநிலங்களாக தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகியவை இருந்த போதும் தில்லி அரசு இத்தேசிய இனங்களை சமமான வகையில் அணுகவில்லை. கன்னடர், மலையாளிகள், தெலுங்கர் ஆகியோருக்கு ஆதரவாகவும் தமிழினத்திற்கு எதிராகவும் இந்தியா நடந்து கொள்கிறது. ஆரிய - தமிழர் பகை இந்தியா என்ற கட்டமைப்பின் ஊடாக தொடர்வதின் வெளிப்பாடே இது. கச்சத்தீவு, மீனவர் சிக்கலிலும் இந்தப் பகை தெளிவாகப் புலனாகும்.

இந்த உண்மையின் அடிப்படையில் ஈழத்தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு இந்தியாவை எதிர்த்துப் போராடுவது, தவிர்க்க முடியாத தேவையாகும். எனவே தான் இரண்டின் வடிவங்கள் வெவ்வேறாக இருந்த போதிலும் தமிழீழ விடுதலையும், தமிழ்த் தேசப் புரட்சியும் இணையாக நடைபெற வேண்டிய போராட்டங்கள் என்கிறோம்.

தமிழர்க்குத் தேவை இரண்டு நாடுகள் என்கிறோம்.

ஒன்றே முடியாத போது, இரண்டு தமிழ்த் தேச விடுதலை சாத்தியமா என்று கேள்வி எழுப்புவது உலக நிலைமையை உணராததின் வெளிப்பாடு. அதனதன் தன்மையிலேயே தமிழீழ விடுதலையும், தமிழ்த் தேச விடுதலையும் தவிர்க்க முடியாத தேவை. அதுமட்டுமின்றி இரண்டு முனைகளில் ஓரு இனம் போராடுவது வெற்றியை எளிதாக்கும் உத்தியாகும். இவ்வாறான தெளிவோடு நமது அடுத்தக் கட்ட பயணத்தின் திசைவழி தீர்மானிக்கப்பட்டால் தான் தமிழினம் அடிமைத் தளையிலிருந்து விடுதலையாக முடியும்.

எனவே, ‘தமிழீழம் வெல்லட்டும், தமிழ்த்தேசம் மலரட்டும்’ என்ற இரட்டை முழக்கத்தின் கீழ் உலகத்தமிழினம் ஒன்று திரளட்டும்!
(மயிலாடுதுறையில் 18.05.2010 அன்று தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் சார்பில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால வீரவணக்கக் கூட்டத்தில் ஆற்றிய உரையைத் தழுவியது.)

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் சூன் 2010 மாத இதழில் வெளியான கட்டுரை)


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.