ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழரைக் கட்டிப் போட்டதா கருமவினைக் கொள்கை? – 2 பேராசிரியர் க.நெடுஞ்செழியன்


வினை மறுப்பு
எந்தக் கருமக் கோட்பாடு தமிழர்களைக் கட்டிப் போட்டதாகக் க.ப.அறவாணன் கூறு கிறாரோ அதே கருமக் கோட்பாட்டை எதிர்த் தவன் கோப்பெருஞ்சோழன் ஆவான். ‘நல்வினை செய்தால் நன்மை கிடைக்கும்;, அதனால் நன்மை செய்யுங்கள்; என்று கூறுபவர்களின் கூற்று ஐயத்தினின்று நீங்காதது, குற்றம் நிறைந்தது’ எனும் பொருளில் அமைந்த பாடலடிகள்.

செய்குவங் கொல்லோ நல்வினை எனவே
ஐய மறாஅர் கசடீண்டு காட்சி

என்பன. இங்குச் சொல்லப்படும் நல்வினை என்பது வைதிகத்திற்கு உரியதா அல்லது சைனத்திற்கு உரியதா என்பது ஆய்வுக்குரியது. எனினும் கருமக் கோட்பாட்டை எள்ளி நகை யாடும் சிந்தனைப் போக்கே இங்குக் குறிக்கத் தக்கதாகும்.

கருமக் கோட்பாட்டு எதிர்ப்புணர்வு என்பது தமிழர்களின் குருதியோட்டத்தில் கலந்த ஒன்று என்பதைப் பிற்கால பக்தி இலக்கியங்களும் பறை சாற்றுகின்றன. சைவத்திலும், வைணவத்திலும் அடியூற்றாய் ஓடும் ‘சரணடைதல்’ என்பது கருமக் கோட்பாட்டு எதிர்ப்பின் அடையாளம்.

சிட்ட னைச்சிவ னைச் செழுஞ் சோதியை
அட்ட மூர்த்தியை ஆல நிழலமர்
பட்ட னைத்திருப் பாண்டிக் கொடுமுடி
நட்ட னைத்தொழ நம்வினை நாசமே (4:104:1)
அட்ட மூர்த்தி யண்ணாமலை கைதொழ கெட்டுப் போம்வினை கேடில்லை காண்மினே (4:105:1:3-4)

ஆடிப் பாடிஅண் ணாமலை கைதொழ
ஓடிப் போகும்நம் மேலை வினைகளே (4:105:4:3-4) 

என வரும் திருநாவுக்கரசரின் பாடல்கள் அக்கருத்துக்கான அடையாளங்கள். திருநாவுக்கரசர் கபாலிகப் பிரிவினர். திருஞான சம்பந்தரோ காளாமுகப் பிரிவைச் சார்ந்தவர். கபாலிகச் சைவம் ஆகம முறைகளைப் பின்பற்றி யது. காளாமுகப் பிரிவோ வேதத்தை அடிப்படை யாய்க் கொண்டது. தமிழகச் சிவன் கோயில்களில் நடைமுறையில் இருந்த ஆகம முறைகளை மாற்றி வைதிக நடைமுறைகளைப் புகுத்திய கொடு மையை அரங்கேற்றியவர் திருஞானசம்பந்தரே ஆவார். கபாலிக- காளாமுக மோதல், ஆகம முறைகளுக்கும், வைதிக வேள்விப் பண்பாட் டிற்கும் இடையே நடந்த மோதலாகும். அதன் அடையாளமே திருமரைக்காட்டில் அடைக் கவும் திறக்கவுமாக அவ்விரு நாயன்மார்களும் பாடியதாகும். ஆகம முறைகளுக்கு மாற்றாக வேத நெறியைப் புகுத்தியதால் சைவம் வைதிக மயமானது.

ஆனால் வைணவம் அவ்வாறு வைதிக நெறிகளுக்கு அடிமை ஆகாததுடன் தமிழ் மரபை இன்றளவும் பேணிப் பாதுகாத்து வருகிறது. இத்தன்மைகளைப் பேராசிரியர் கே.கே.பிள்ளை,

வைணவக் கோயில்களில் மூர்த்தியின் அண்மை யில் அமர்ந்து நாலாயிரப் பிரபந்தப் பாடல்களைப் பாராயணம் செய்யும் வழக்கம் உண்டு. வைணவ மரபுக்குக் கிடைத்துள்ள உரிமையாகும் இது. இவ்வுரிமையை இன்றளவும் சைவக் கோயில்களில் திருமுறைகளை ஓதுவதற்குப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். மூர்த்திக்கு அண்மையில் வடமொழி மந்திரங்களை உச்சரிப்பதும், தொலை வில் குறிப்பிட்ட இடத்துக்கு அப்பால் நின்று ஓதுவார்கள் திருமுறைப் பாடல்களை இசைப்பதும் மரபாக இருந்து வருகின்றது. தமிழகத்தில் தென் னாடுடைய சிவன் கோயிலில் தமிழிசை முழங்கும் உரிமை யைச் சைவ வழிபாட்டினர் பெறவில்லையா, அல்லது பெற்றி ருந்த உரிமையை இழந்து விட் டார்களா? அப்படியாயின் இழந்த உரிமையை மீண்டும் பெறு வதற்கு அவர்கள் முயன் றார்களா என்பதற்கு வரலாற்றுச் சான்றான விளக்கம் கிடைக்க வில்லை.

என விளக்கக் காணலாம். வைணவத்தின் தென்கலைப் பிரிவை நிலைநாட்டிய இராமா னுசர் தமிழர்களால் நன்றி யோடு நினைக்கத்தக்க மாமனி தராவார்.

சைவக் கோயில்களில் முழங் கிய தமிழ் முழக்கம் என்று மறைந்ததோ, அக்கோயில்களில் என்று வேத மந்திரங்கள் ஒலிக்கத் தொடங்கினவோ அன்றுதான் தமிழனின் தலை தாழ்ந்தது. அப்படித் தாழச் செய்த கொடுமையைச் செய் தவர் “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தன்” என்பது ஒரு முரண்நகை (மிக்ஷீஷீஸீஹ்) யாகும்.

சைன சமயத்தின் கருமக் கோட்பாடு அறநெறியின் பாற் பட்டது. வைதிகத்தின் கருமக் கோட்பாடோ சமூகச் சுரண்ட லின் வடிவம்; மனித விழுமி யங்களைத் தீய்க்க வந்த காட்டுத் தீ. இவற்றுள் கண்டிக்க வேண்டி யதும், தமிழர்களால் வர லாற்றுக் காலந்தொட்டுக் கண் டிக்கப்பட்டு வருவதுமான வை திகக் கருமக் கோட்பாட்டைப் பற்றிக் க.ப.அறவாணன் எது வுமே கூறாதது வியப்பாக இருக்கின்றது. அப்படி அவர் அமைதி காப்பதற்கான காரண மும் நமக்குப் புரியவில்லை.

சைன சமயக் கடவுள் மறுப் பில் தொடங்கி, ‘அவ்விய நெஞ் சத்தான் ஆக்கமும்’; எனும் திருக்குறளில் முடிவடையும் இக்கட்டுரை, குழந்தைகள் சொல்லும் கதையைப் போலத் தொடர்பின்றி நிறைவடை கிறது. அத்திருக்குறளுக்கு அவர் தரும் விளக்கமும், அதனைப் பயன்படுத்தும் இடமும் கூட ஒன்றுக்கொன்று தொடர்பின்றி நிற்கின்றன.

சமூகத்தில் கெட்ட எண்ணம், கெட்ட பேச்சு, கெட்ட செயல் ஆகியவற்றை உடைய அவ் வியான், செல்வம், செல்வாக்கு, பதவி ஆகியவற்றில் மிக உய ரத்தில் இருக்கிறான். மறுதலை யாக நல்ல எண்ணம் நல்ல பேச்சு, நல்ல செயல் உள்ளவன் மிக நொடித்துப்போய் கடைத் தட்டில் நிற்கிறான். இவ் இரு நிலையும் அப்படியே ஏற்கத் தக்கவை அல்ல. சரியா என்று ஆராயத்தக்கது என்பது வள்ளு வர் கருத்தாக உள்ளது. அவர் தம் கருத்தையும் நாம் உச்சமாக நினைத்துக் கருத வேண்டும்

என வேண்டுகோளுடன் கட்டுரை முடிகிறது. அவர் விளக்கும் திருக்குறள்,

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்
என்பதாகும்.

ஐயம்
தமிழர் மெய்யியல் - அள வையியலில் ஐயத்திற்குத் தலை யாய இடம் உண்டு. காட்சி,- ஐயம், தெளிவு எனத் தருக்க வியல் அமையும். ஒரு பொரு ளைக் காண்பது முதல் நிலை; அது மரத்துண்டா, மனிதனா என முடிவு காண முடியாதத் தன்மை ஐயம். பல்வேறு சான்று களால், மனிதனல்லன் மரம் என்றோ, மரம் அல்ல மனிதன் என்றோ முடிவு செய்து ஒரு தெளிவிற்கு வருவது தெளிதல் என்பதாகும். இதே தருக்க முறையினால், மெய்யியல் முடிவுகளையும் எட்ட வேண் டும் என்பது இலக்கணம். வள்ளுவர்,

ஐயத்தின் நீங்கித் தெளிந் தார்க்கு வையத்தின்
வானம் நனிய துடைத்து
என்பார்.

அந்த வகையில் மெய்யியலில் ஐயம் தலையாய இடத்தை வகிக்கிறது. ஆனால் அதே நேரத்தில் தெளிய முடியாத ஐயங்களும் உண்டு. அத்தகைய ஐயத்திற்கு என்ன செய்ய வேண்டும்? இதற்கான விடை யை வழங்கியது எண்ணியம் (சாங்கியம்) ஆகும்.

விடை காணமுடியாத - உறுதி செய்ய முடியாத உண் மைகளைப் பற்றி எந்த ஒரு முடிவுக்கும் வரக்கூடாது என் பது அதன் கருத்து. எனவே தான், தீயமனம் படைத்த ஒருவன், தீய வழிகளில் பொரு ளீட்டிய ஒருவன் செல்வம், செல்வாக்கோடு வாழ்வதற்கும், நல்ல ஒழுக்கமும் நல்ல மனமும் நல்ல செயல்களையும் உடைய ஒரு மனிதன் துன்பங்களில் உழல்வதற்கும், ஊழ்தான் கார ணம் என்றோ அல்லது கரும வினைதான் காரணம் என்றோ கூறக் கூடாது. அவ்விரண்டு நிகழ்வுகளும் ஆராயத்தக்கது - அதாவது நினைக்கத் தக்கது அவ்வளவே என்பது அக் குறளின் கருத்தாகும். நினைக் கப்படும் என்பதற்கு ஆராயப் படும் என்பது பொருளாகும்.

தொல்காப்பியர் குறிப்பிடும், மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா எனும் நூற்பாவின் கருத்தும் இங்கே எண்ணத்தகும். ‘எல்லாச் சொல் லும் பொருள் குறித்தனவே’ எனக் கூறிய தொல் காப்பியர், சொல்லுக்கும் அதன் பொரு ளுக்கும் உள்ள உறவுக் -காரணம் யாது எனக் கேட்டால் அதற்கு விடை தர முடியாது எனக் கூறுவதைப் போன்றதுதான் ‘அவ்வியான் ஆக்கமும் செவ்வி யான் கேடும் ஆராயத் தக்க தேயன்றி விடை காணத்தக்க தன்று எனக் கூறுவதும்’ ஆகும்.

திருக்குறளின் மெய்யியல் எது? அதன் காலம் எது? எனும் கேள்விகளுக்கான விடையாக அமைந்த ஒருசில குறள்களில் இதுவும் ஒன்றாகும்.

கருமக் கோட்பாட்டை வைதிகம் உருவாக்கிச் செயல் படத் தொடங்கிய தொடக்க நாள்களிலேயே, அது தமிழ் அறிஞர்களின், - சமூகச் சிந்தனை யாளர்களின் - கடுமையான கண் டனத்திற்கு உள்ளானது என் பதே உண்மை. அது ஒரு போதும் தமிழர்களைக் கட்டிப் போடவில்லை. அதிலும் சைன சமயத்தின் கருமவினைக் கொள்கை சைன சமய ஏடுகளிலேயே நின்று விட்டது. அப்படி இருந்தும் இந்தியச் சமூகம், குறிப்பாகத் தமிழினம் எதனால் அடிமைப்பட்டது? எதனால் சீர் குலைந்தது? முதற்காரணம் அறிவுக்கான தடை. இரண்டாவது காரணம்,  பார்ப்பனியம்!

பார்ப்பனியம் என்பதற்கு நான் கொள்ளும் பொருள் பார்ப் பனர்கள் ஒரு சமூகம் என்ற வகையில் கொண்டிருக்கும் அதிகாரம், சிறப்புச் சலுகைகள், நலன்கள் என்பன அல்ல. நான் அந்தப் பொருளில் இச் சொல் லைப் பயன்படுத்துவதில்லை. பார்ப்பனியம் என்பதற்கு நான் கொள்ளும் பொருள் சுதந்திரம், சமத்துவம், சகோதரத் துவம் என்ற உணர்வின் மறுப்பு என்ப தாகும்... பார்ப்பனர்கள்தாம் அதன் மூலகர்த்தாக்கள் என்ற போதிலும் அவர்களோடு அது மட்டுப்பட்டு இருப்ப தில்லை. பார்ப்பனியத்தின் விளைவுகள் என்பன கலந்துண் ணல், கலப்புத் திருமணம் போன்ற சமூக உரிமைகளை மறுப்பதோடு மட்டும் நின்றுவிட வில்லை. அது குடிமை உரிமை களையும் (சிவீஸ்வீறீ ஸிவீரீலீts) மக்க ளுக்கு மறுத்தது. பொருளியல் வாழ்க்கையையும் கூட பாதிக்கும் அளவிற்குப் பார்ப்பனியம் அனைத்து வல்ல மையும் பொருந் தியதாக உள்ளது.

இவ்வாறு அம்பேத்கர் கூறுவதில் பொருளுள்ளது.

சங்க காலத்திலிருந்து தொடர்ந்த பகுத்தறிவுப் போராட்டம், வைதிக எதிர்ப்பு, கடவுள் மறுப்பு ஆகிய யாவும் இன்றும் பெரியாரியலாக - மார்க்சியமாகத் தொடர்ந்தபடிதான் உள்ளன.

மனுநீதி அறமான தொருநாள் - அதை
மாற்றும் நாளே தமிழர் திருநாள் 
என்ற புரட்சிக் கவிஞரின் வேண்டுகோள் செயல்படும் நாளில் நாம் மீண்டெழுவோம்.          


                  தொடர்புக்கு : 9894967911

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. திருஞானசம்பந்தர் ஒரு சைவ பார்ப்பனர் என்பதாலேயே க.நெடுச்செழியன் ஒருவித காழ்ப்புணர்வுடன் எழுதியிருப்பதாக படுகிறது.
    திருஞானசம்பந்தர் தனது பதிகங்கள் அனைத்தையும் தமிழிலேயே படி தன்னை தமிழ்ஞானசம்பந்தன் என்று கூறுயித்தற்கு அவரது பதிகங்கள் ஆதாரம்.
    ராமானுஜர் தமிழ்நாட்டில் பிறந்தும் தமிழில் எழுதாமல் தனது நூல்கள் அனைத்தையும் சமஸ்க்ரிதத்திதில் எழுதியதோடு மட்டும் அல்லாமல் வைணவத்தின் நால் வருண கோட்பாட்டை ஆதரித்து தனது கீதா பாஷ்யவில் எழுதியதை வசதிதியாக மறைத்துவிட்டு தமிழர்களால் நன்றி யோடு நினைக்கத்தக்க மாமனிதர் என்று கூறுவது க நெடுஞ்செழியனின் வைணவ சார்பையும் சைவ காழ்ப்பையும் வெளிப்படுத்துகிறது. தமிழ் மண்ணில் பக்தி இயக்க நூல்களை முற்றும் சமஸ்க்ரிதத்தில் எழுதியது வைணவமே. அதற்க்கு ராமானுஜரின் நூல்களே சாட்சி.

    \\\\சைவக் கோயில்களில் முழங் கிய தமிழ் முழக்கம் என்று மறைந்ததோ, அக்கோயில்களில் என்று வேத மந்திரங்கள் ஒலிக்கத் தொடங்கினவோ அன்றுதான் தமிழனின் தலை தாழ்ந்தது. அப்படித் தாழச் செய்த கொடுமையைச் செய் தவர் “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தன்” என்பது ஒரு முரண்நகை\\\\ என்று க.நெடுஞ்செழியன் திருஞானசம்பந்தர் மீது குற்றம் சுமத்துகிறார். க.நெடுஞ்செழியன் பேராசிரியரா அல்லது பெயருக்கு ஆசிரியரா என்று தெரியவில்லை. ஏனென்றால் திருஞானசம்பந்தர் காலத்தில் பெரும்பாலானா சைவ கோயில்கள் சமண ஆதரவு மன்னர்களால் மூடப்பட்டும்,வழிபாடு இல்லாமையும், சமஸ்க்ரிதம் மற்றும் பாலி மொழிகளின் தாக்கங்கள் அதிகமாக இருந்ததே வரலாறு. இதை மாற்றி தமிழகம் முழுவதும் பயணம் செய்து மூடிக்கிடந்த சைவ கோவில்களை திறந்தும் பதிகங்களை தமிழில் இயற்றி இறைவனுக்கு முன்னம் பாடி தமிழை பரவச்செய்தது அப்பரும், திருஞானசம்பந்தரும். இதற்க்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. இது க.நெடுஞ்செழியனுக்கு தெரிந்திருந்தும் திருஞானசம்பந்தரால் தமிழ் முழக்கம் இல்லாமல் போனது என்று கூறுவது க.நெடுஞ்செழியனுக்கு ஞானசம்பந்தர் மற்றும் சைவத்தின் மீதான அதீத வெறுப்புணர்வை காட்டுகிறது.

    ReplyDelete

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.