ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த போராளி சங்கரலிங்கனார் அவர்களுக்கு வீரவணக்கம்! - சிறப்புக் கட்டுரை!


தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த போரளி ஈகி சங்கரலிங்கனார் அவர்களுக்கு வீரவணக்கம்!

இன்று 13.10.2016 - தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த போராளி .பெ.சங்கரலிங்கனார் அவர்களின் நினைவு நாள் (13.10.1956) ஆகும்!

1953ஆம் ஆண்டு 'விசாலா ஆந்திரா' கேட்டு உண்ணாப் போராட்டத்தில் உயிர் நீத்தவர் பொட்டி சிறிராமுலு. அது போலவே  சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரியும், மொழிவழித் தமிழ் மாகாணம் கோரியும் உண்ணாப் போராட்டம் நடத்தி  வீரச்சாவடைந்தவர் ஈகி  சங்கரலிங்கனார் ஆவார்.

1955ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தை மொழிவழியில் பிரிக்க  வேண்டும் எனும் கோரிக்கை வலுவாக எழுந்ததுஅதனோடு இணைந்து  சென்னை மாகாணத்திற்குதமிழ்நாடு” என்று பெயர் சூட்டும் கோரிக்கையும் அப்போதே எழுந்தது.

29.11.1955இல் தமிழரசுக் கழகக் செயற்குழு கூட்டத்தில் முதன் முதலில் .பொ. சிவஞானம் அவர்களால், “தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தை மெட்ராஸ் ஸ்டேட் என்றழைக்கப்படுவதை எதிர்க்கின்றது, மத்திய மாநில அரசுகள் ராஜ்ஜியத்தின் பெயரைத் தமிழ்நாடு என்று பெயரிடப்பட வேண்டும்என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்பே தமிழ்நாடு பெயர் மாற்றம் குறித்து 1953இல் .பொ.சி.யார் சட்டமன்ற மேலவையில் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு 19.1.1956இல் ஜி.உமாபதி இல்லத்தில்  நடந்த அனைத்துக் கட்சிக்  கூட்டத்தில் தேவிகுளம் - பீர்மேடு தாலுக்காக்களை தமிழ்நாட்டுக்கே வழங்கக்  கோரியும், தட்சிணா ராஜ்ஜியத் திட்டத்தை எதிர்த்தும், சென்னை ராஜ்ஜியத்திற்குதமிழ்நாடுஎனப் பெயரிடக் கோரியும் 20.2.1956இல் முழு கடையடைப்பு நடத்தப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் .பொ.சி. மட்டுமின்றி, தி.மு.க. தலைவர் திரு. சி.என். அண்ணாதுரை, பாரதிதாசன், கா. அப்பாத்துரையார், இந்தியப் பொதுவடைமைக் கட்சித் தலைவர் தோழர் ப. சீவானந்தம், சி.பா. ஆதித்தனார் ஆகியோர் பங்கேற்றனர். அதன்படி பிப்ரவரி 20ஆம் நாளன்று தமிழகமெங்கும் கடையடைப்பு வெற்றிகரமாக நடந்தேறியது.

28.3.1956இல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் மாநில புனரமைப்பு சட்ட முன் வரைவு கொண்டு வரப்பட்டது. அதன் விவாதத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் ப. சீவானந்தம் பங்கேற்று, “தமிழ்நாடுபெயர் மாற்றக் கோரிக்கையின் தேவையை வலியுறுத்திப் பேசினார். அன்றைய காமராசர் தலைமையிலான காங்கிரசு அரசோ சென்னை என்றால் தான் வெளியுலகத்திற்கு தெரியும் என்று கூறி பெயர் மாற்றக் கோரிக்கையைப் புறக்கணித்தது.

இந்நிலையிலே தான், காங்கிரசுக்காரரான சங்கரலிங்கனார்  அவர்கள் 27.7.1956 அன்று விருதுநகரில், ஒரு ஓலைக்குடிசையில் பேராயக் கட்சி கொடி பறந்திட உண்ணாநிலையைத் தொடங்கினார்.

அவர் நடத்திய உண்ணாப்போரைபச்சைத்தமிழன்காமராசரின் ஆட்சி அலட்சியப்படுத்தியது. பிரதமர் நேருவோடு பேசி சங்கரலிங்கனாரின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய காமராசர் செய்தியாளர்களிடம், ”இப்படியான பெயர் மாற்றங்களால் ஒரு பயனும் இல்லை. இது மக்களின் உணர்ச்சியை தூண்டி விடுகிற சமாச்சாரம். அவர் முன்வைத்த 12 கோரிக்கைகளில் 10 கோரிக்கைகள் மத்திய அரசோடு தொடர்புடையதுஎன்று நழுவலாகப் பதிலளித்தார்.

அவரின் உண்ணாநிலைப் போரை நிறுத்தும்படி .பொ.சி, அண்ணாதுரை, சீவானந்தம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர். அண்ணா அவர்கள் சங்கரலிங்கனாரை நேரில் சந்தித்தார். அப்போது, ”எல்லையை வாங்க முடியாதா? இதில் என்ன கஷ்டம்? இதய சுத்தியோடு ஆந்திரா சர்க்காருடன் பேசினால் காரியம் நடக்காதா?” என்று கண்ணீர் சிந்தியபடி கேட்டதாக அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சங்கரலிங்கனார் எழுதிய இறுதிக் கடிதம்
ஐயா சங்கரலிங்கனார், உண்ணாப் போர் 60 நாட்களைத் தாண்டியும் காமராசரின் கல்மனம் கரையவில்லை. அப்போதுஜனசக்திதுணையாசிரியர் தியாகி . மாயாண்டி பாரதிக்கு கடிதம் எழுதினார்


"காங்கிரஸ் ஆட்சியின் கொடுமை கடுமையாகி விட்டது. காந்தியம் மடிந்து கொண்டு வருகிறது. துரோகிகள் ஆட்சியில் உயிரோடு வாழ மனமில்லை. காங்கிரஸ் - காந்தியத்திற்காக உழைத்தும், அவர்கள் என் உண்ணாவிரதத்தில் கூட உதவி செய்யத் தவறிவிட்டார்கள். கம்யூனிஸ்டு கட்சி உதவி செய்கிறது . வெற்றி கிடைத்தால் வாழ்கிறேன் அல்லது சாகிறேன்".செப்.29ஆம் நாள் "கம்யூனிஸ்டு இயக்க சகோதரர்களுக்கு" எனத் தலைப்பிட்டு இறுதிக் கடிதம் பின்வருமாறு எழுதினார் :

"பட்டினியாலும் பல்வேறு பசியாலும் வாடும் ஏழை மக்கள் என் மனக்கண் தோன்றி கண்ணீர் வடிக்கின்றனர். இது வீண் போகாது. இன்று முதல் அசதி அதிகம், பேச சக்தி குறைவு, கூடிய சீக்கிரம் சாவு ஏற்படும், பூ வேண்டாம், பூ மாலை வேண்டாம், கெளபீனம் கட்டுவது போதும், பாடையில் குளிர்ந்த நேரம் எடுத்துச் செல்லுங்கள், காந்தி தங்கிய ஆத்துக்கரை மண் மெட்டில், நான் தங்கியிருந்த இடத்துக்கு முன்னால் இரண்டு வேப்ப மரத்துக்கு அடியில் குழியில் போடுங்கள். அந்த இடத்தில் என் சடலத்தை அடக்கம் செய்ய சர்க்கார் மறுத்தால் திரு.வெ.நா.பு.ராமசாமி நாடார் அவர்கள் நந்தவனத்துக்கு முன்பு குண்டும் குழியுமாக உள்ள இடத்தின் மத்தியில் மேடையில் அடக்கம் செய்யுங்கள். எல்லோரும் வணக்கம், வந்தே மாதரம்!
ஆண்டவன் ஆத்மன்,
க.பெ.சங்கரலிங்க நாடார்”

மேலும். தம் இறப்பிற்குப் பின் உடலை கம்யூனிஸ்டு கட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சங்கரலிங்கனார் கேட்டுக் கொண்டார்.

காமராசர் தலைமை வகித்த ஆளும் காங்கிரசுக் கட்சி இவரின் கோரிக்கையை ஏற்க மறுத்தது. அவரின் உடல் நிலை மோசமடைந்தால் மதுரை எர்ஸ்டன் (இன்றைய இராசாசி மருத்துவமனை) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கும் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்த காரணத்தால், 62 வயது நிரம்பிய சங்கரலிங்கனார் 79-வது நாளில் (10.10.1956) உயிர் துறந்தார். நான் இறந்த பிறகு அக்கட்சியினரிடமே உடலை ஒப்படைக்கும்படி சங்கரலிங்கனார் இறுதியாக வேண்டிக் கொண்டார்மதுரையில் உயிர் துறந்ததால் அவரின் இறுதி விருப்பம் நிறைவேறவில்லை. அங்குள்ள தத்தனேரி சுடுகாட்டில் ௧ம்யூனிஸ்டு கட்சியினரால் எரியூட்டப்பட்டார். சங்கரலிங்கனாரை அடக்கம் செய்த கம்யூனிஸ்டு கட்சி அப்போது ஒன்றுபட்ட கட்சியாகும். தமிழ்நாடு பெயர் மாற்றத்தை அக்கட்சி ஆதரித்தது.

1964இல் அக்கட்சி இரண்டாகப் பிளவுபட்டு மார்க்சிஸ்ட் கட்சி உருவானது. அக்கட்சி இன்று வரை மார்க்சிஸ்ட் கட்சி "தமிழ் மாநிலக் குழு" என்று அழைக்கப்படுகிறதே தவிர மார்க்சிஸ்ட் "தமிழ்நாடு குழு" என்று அழைக்கப்படுவதில்லை. இது சங்கரலிங்கனாருக்கு செய்திடும் மாபெரும் துரோகமாகும். சங்கரலிங்கனாரை "நாங்கள் தான் எரியூட்டினோம்" என்று மார்தட்டிக் கொள்வதை மார்க்சிஸ்டுகள் இனியாவது நிறுத்திக் கொள்வார்களா? (நன்றி; அ.பெரியார் எழுதிய "தமிழ்நாடு எல்லைப் போராட்டமும் பெயர் மாற்றமும்").

1952இல் பொட்டி சிறிராமுலுவின் மரணம் தெலுங்கர்களை விழிக்க வைத்துஆந்திராபெயரில் தனி மாகாணம் கண்டது. ஆனால் சங்கரலிங்கனாரின் மரணமோ காங்கிரசின் துரோகத்தாலும் திராவிட கட்சிகளின்திராவிட நாடுகுழப்பத்தாலும் தமிழர்களை தூங்க வைத்தது.

1956இல் ஐதராபாத் இதர பகுதிகள் ஆந்திராவானது. திருவிதாங்கூர் இதர பகுதிகள் கேரளாவானது. சென்னை மாகாணமோ இதர பகுதிகளோ தமிழ்நாடாக மாறவில்லை. சரியாக 11 ஆண்டுகள் கழித்து அண்ணா முதல்வரான பிறகே சென்னை மாகாணம்தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் பெற்றது.

தமிழர்கள்  தமிழ் நிலத்திற்கு  பெயர் சூட்டும் முன்னே தெலுங்கர்கள் தம் நிலத்திற்கு பெயர் சூட்டிய கையோடு சும்மா நிற்கவில்லை. அதற்காகவே உழைத்து மடிந்த பொட்டி சிறிராமுலுவை போற்றிடவும் முன் வந்தனர். ஆந்திர அரசு  ஹைதரபாத்தில் 'பொட்டி சிறிராமுலு தெலுங்குக் கழகம்' நிறுவியும், அவர் நினைவாக நெல்லூர் மாவட்டத்தை 'பொட்டி சிறிராமுலு' மாவட்டம் என்றும் பெயர் மாற்றம் செய்துள்ளது. இந்திய அரசு பொட்டி சிறிராமுலுவிற்கு அஞ்சல் தலையையே வெளியிட்டு விட்டது.

இதைவிடப் பெரிய கொடுமை என்னவெனில், "சென்னை இல்லாத ஆந்திரம் தலையில்லாத முண்டம்" என்று பேசிய பொட்டி சிறிராமுலுவிற்கு சென்னையிலேயே நினைவுச் சின்னத்தை எழுப்பியும் விட்டனர். பொட்டி சிறிராமுலுவின் ஈகத்திற்கு எந்த விதத்திலும் சங்ரலிங்கனாரின் ஈகம் குறைந்ததல்ல. ஆனால் அவரை தமிழர்களாகிய நாம் என்றாவது கொண்டாடி இருக்கிறோமா? இல்லையே?

அவர் மறைந்து 57 ஆண்டுகள் கழித்து விருதுநகரில் ஓராண்டுக்கு முன்னர்தான் (18.06.2015), அதுவும் ஒப்புக்காக காணொளி மூலம் செயலலிதா அரசு நினைவுச் சின்னம் திறந்துள்ளது.

தமிழ்நாடு பெயர் சூட்டவும், தமிழ்மண் மீட்கவும் போராடிய சங்கரலிங்கனாரை தமிழர்களாகிய நம்மைத் தவிர வேறு யாராலும் நினைக்க முடியாது என்பதே வரலாறு உணர்த்தும் பாடமாகும்!

ஈகி சங்கரலிங்கனார் அவர்களுக்கு வீரவணக்கம்!

(கட்டுரையாளர் கதிர்நிலவன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர். மின்னஞ்சல்: nilavan69@gmail.com)


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.