ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தலையங்கம் : எதிர்த்தால் மட்டும் போதாது மாற்றுத் திட்டம் வேண்டும்


இந்தியாவின் காலனியாகத்தான் தமிழ்நாடு உள்ளது என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கூறுவது, நமது அகநிலை சார்ந்த, சொந்தக் கருத்தன்று. அது புறநிலை உண்மை என்பதைத் தமிழக முதல்வர் செயலலிதாவின் அண்மைக்கால அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

இந்த உண்மைகளை இந்த அளவிற்காவது அம்பலப்படுத்தியதற்காகத் தமிழக முதல்வரைப் பாராட்டலாம்.

தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் 22.10.2011 அன்று நடந்த “தேசிய வளர்ச்சி மன்றக்”கூட்டத்தில் தமிழக முதல்வர் இந்திய ஏகாதிபத்தியம் மேலும் மேலும் “நடுவத்தில் அதிகாரங்களைக் குவித்துக் கொள்வதையும்”, “மாநிலங்களைக் கவர்ச்சிமிக்க மாநகராட்சிகளாக மட்டுமே வைத்திருப்பதையும்” அதிகாரமுறையிலான உரையில் தெரிவித்துள்ளார்.

அவர் அம்மாநாட்டிற்குப் போகாததால், அவரது உரையை, தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் படித்துள்ளார்.

""முதலமைச்சர்களைக் கொண்ட இந்தத் தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டம் வெறும் சடங்காகத்தான் நடக்கிறது. இந்தக் கூட்டம் நல்ல பலனைத் தருவதில்லை என்ற எனது வலுவான கருத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்”, என்று தொடங்கி, பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார் செயலலிதா.

""கடந்த சில மாதங்களாக நடுவணரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகள் பாசிசத்தன்மை வாய்ந்ததாகவும் சனநாயகத்திற்கு எதிரானதாகவும் அமைந்துள்ளன”, என்றார்(தினத்தந்தி, 23.10.2011).

""வகுப்புவாத மற்றும் இலக்கு நோக்கிய வன்முறை(நீதித்துறைக்கான அணுகுமுறை மற்றும் சீர் செய்தல்)” என்ற பெயரில் புதிய சட்டம் கொண்டு வர சட்டமூலம்(மசோதா) அணியம் செய்துள்ளது இந்திய அரசு. இதனைக் கடுமையாக எதிர்த்து அப்போது பிரதமருக்கு மடல் எழுதினார் செயலலிதா. இப்போது தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் இந்திய அரசின் பாசிச மற்றும் சனநாயகத்திற்கெதிரான நடவடிக்கைக்கு எடுத்துக்காட்டாக மேற்படி சட்ட மூலத்தை சுட்டிக் காட்டியுள்ளார்.

“மாநில அரசுகளை மீறி, நடுவணரசிடம் அதிகாரத்தைக் குவிக்கும் நோக்கில் இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது சட்டமானால் மாநில அரசுகள் முற்றிலும் அதிகாரமில்லாதவையாகவும், முழுமையாக நடுவணரசின் தயவை நாடி நிற்பவையாகவும் மாற்றப்படும்” என்று கூறியுள்ளார்.

மாநில அரசுகளின் எதிர்ப்புகளைச் சட்டை செய்யாமலும் அந்தந்த மாநிலத்தின் உள்ளூர் நிலைமைகளைக் கருத்தில் கொள்ளாமலும், தொழிலியல் கல்வியில் ‘மூர்க்கத்தனமாக’(ளிதீstவீனீணீtமீ) அனைத்திந்திய பொது நுழைவுத் தேர்வை நடுவணரசு கொண்டு வருகிறது என்று சாடியுள்ளார்.(தி இந்து, 23.10.2011).

“நடுவணரசு புதிதாகக் கொண்டு வரவுள்ள சரக்குகள் மற்றும் சேவை வரி(நிஷிஜி) மாநில அரசின் நிதித் தன்னாட்சியின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும். இதை ஏற்பது கடினம். மாநில அரசிடம் தற்போதுள்ள மதிப்புக் கூட்டு வரி விதிக்கும் அதிகாரத்தைப் பறிக்க முயல்கிறது” என்று அவ்வுரையில் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து சுண்டைக்காய் சிங்களக் கடற்படையினராலும், சிங்களப் போக்கிலிகளாலும் கொல்லப்படுவதையும் தாக்கப்படுவதையும் தடுக்காத இந்திய அரசின் மாறுபட்ட மனநிலையை ஏற்கெனவே பிரதமருக்கு எழுதிய மடலில் வலுவாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

“ஒவ்வொரு தடவையும் மீனவர்கள் உயிர்பறிக்கப்படுவதைத் தமிழ்நாட்டுச் சிக்கலாக மட்டுமே பார்த்து, ஒதுங்கிக் கொள்கிறது இந்திய அரசு; அதை அனைத்திந்திய சிக்கலாக நடுவணரசு பார்ப்பதில்லை. எல்லைப் பகுதியில் பாகிஸ்தானோ, சீனாவோ துப்பாக்கிச் சூடு நடத்தினால் இந்திய அரசு எப்படி எதிர்வினை புரிகிறதோ அப்படி இந்தியாவின் தெற்கு எல்லையில் இலங்கை துப்பாக்கிச் சூடு நடத்தி மீனவர்களைக் கொல்லும் போது எதிர்வினை புரிய வேண்டும்” என்று பிரதமருக்கு எழுதிய மடலில் செயலலிதா குறிப்பிட்டிருந்தார். (தினத்தந்தி, தி இந்து, 12.10.2011).

இதே கருத்துகளை தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்திற்கான உரையிலும், அவர் தெரிவித்துள்ளார்.

“தமிழக மீனவர்களின் உயிர்கள் பொருட்படுத்தத் தேவையில்லாதவை என்று கருதுவதால் இந்தச் சிக்கலில் நடுவணரசு வலுவான எதிர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை” என்று வளர்ச்சி மன்ற உரையில் கூறியுள்ளார்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில், பாதுகாப்பு ஆய்வுக்குழு பரிந்துரை வழங்கும் வரை கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படும் என்று தூதுக்குழுவிடம் உறுதியளித்து விட்டு, பாதுகாப்புக்குழு அமைக்காமல் பணிகளைத் தொடர்ந்த பிரதமரின் நயவஞ்சகத்தை அம்பலப்படுத்தும் வகையில் முதல்வர் செயலலிதா காட்டமாக ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார்(19.10.2011).

தமிழகத்திற்குச் சிறப்பு நிதி தருமாறு முதல்வர் செயலலிதா பிரதமரிடம் கேட்டிருந்தார். தமிழகத்திற்குத் தர மறுத்த பிரதமர், கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜியின் மேற்கு வங்கத்திற்கு சிறப்பு நிதி அளித்த ஒருதலைச் சார்பு அணுகுமுறையையும் தமது உரையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

2004லிருந்து 2011 அக்டோபர் வரை 13 தடவை டீசல் விலையை உயர்த்தியதையும்(ரூ. 29.30 லிருந்து ரூ. 43.80), 19 தடவை பெட்ரோல் விலையை உயர்த்தியதையும்(ரூ. 41.25லிருந்து ரூ. 67.22), சமையல் எரிவளி விலையை ரூ. 249.02லிருந்து ரூ. 404.40 ஆக உயர்த்தியதையும் சுட்டிக் காட்டி சாடியுள்ளார் வளர்ச்சி மன்ற உரையில்.

தமிழக முதல்வரின் மேற்கண்ட நிலைபாடுகள், இந்திய அரசுக்கெதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஞாயமானவை. அதற்கு மேலும் முதல்வர் தமிழக மக்களுக்காக சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல், எரிவளி விலை அடிக்கடி உயர்த்தப்படுவதைக் கண்டித்தால் மட்டும் போதாது. தமிழகத்தில் நரிமணம், அடியக்கமங்கலம், கமலாபுரம், கோயில் களப்பாள், புவனகிரி ஆகிய இடங்களில் உள்ள பெட்ரோலிய உற்பத்தி நிலையங்களையும் நரிமணம், பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையையும், குத்தாலம் எரிவளி ஆலையையும் தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு இந்திய அரசைக் கேட்க வேண்டும். இவை கிடைத்தால் மலிவு விலையில் பெட்ரோலியப் பொருள்களைத் தமிழக மக்களுக்கு வழங்க முடியும்.

பற்றாக்குறையை ஈடுகட்ட வெளிநாடுகளிலிருந்து பெட்ரோலியம் இறக்குமதி செய்து கொள்ளும் உரிமையை வழங்குமாறும் இந்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

தமிழகத்தில் புதிதாதப் பெட்ரோலியம் எடுக்கும் உரிமையை குசராத்தி சேட்டு நிறுவனமான ரிலையன்சுக்கு இந்திய அரசு வழங்கியுள்ளது. தனியாருக்கு உரிமை வழங்கும்போது தமிழக அரசிடம் நரிமணம் பெட்ரோலியத்தை ஏன் ஒப்படைக்கக் கூடாது?

தமிழகத்தின் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் ஒரு நாளைக்கு 11 கோடி யூனிட் கர்நாடகத்திற்கும், 9 கோடி யூனிட் கேரளத்திற்கும், 6 கோடி யூனிட் ஆந்திரப்பிரதேசத்திற்கும் போகிறது. தமிழ்நாட்டின் தற்போதைய மின்பற்றாக்குறை 1 நாளைக்கு 22 கோடி யூனிட். வெளி மாநிலங்களுக்குப் போகும் நெய்வேலி மின்சாரம் 1 நாளைக்கு 26 கோடி யூனிட்.

எனவே, நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்குத் தருமாறு முதல்வர் செயலலிதா நடுவணரசைக் கேட்க வேண்டும். நெய்வேலி அனல் மின்நிலையம், நிலக்கரிச் சுரங்கம் அனைத்தையும் தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறும் இந்திய அரசை அவர் கேட்க வேண்டும்.

கூடங்குளம் அணு மின்திட்டத்தை முற்றாகக் கைவிடுமாறு நடுவணரசைத் தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும்.

தமிழக மீனவர்களைப் பாதுகாக்க, இந்திய அரசு முன்வராத நிலையில், அது இனியும் முன்வராது என்று தெரிந்து கொண்ட நிலையில், இந்திய அரசிடம் கோரிக்கை வைத்துக் கொண்டிருப்பதை விட, தமிழக அரசு தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி செயலில் இறங்க வேண்டும்.

ஊரகப்படை(பிஷீனீமீ நிuணீக்ஷீபீ) போல் 'தமிழக மீனவர் தற்காப்புப்படை' ஒன்றை கடலோர மீனவர்களிலிருந்து உருவாக்க வேண்டும். ஊரகப்படைக்கு ஆயுதம் ஏந்தும் உரிமை இருக்கிறது. மீனவர் தற்காப்புப் படைக்கும் தமிழக அரசு துப்பாக்கி வழங்க வேண்டும். இந்த ஏற்பாடே தமிழக மீனவர்களைப் பாதுகாக்கும்.

இந்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கும் செயல்களை எடுத்துச் சொல்லி கண்டித்தால் மட்டும் போதாது. மாற்றுத் திட்டங்களையும் தமிழக முதல்வர் முன்வைத்து மக்கள் வலிவைத் திரட்டிக் கொள்ள வேண்டும். அவ்வாறு மாற்றுத் திட்டங்களை முதல்வர்  வைக்கும் போது, தமிழக மக்கள் இனத்தற்காப்பு உணர்ச்சியோடு ஒருங்கு திரண்டு அத்திட்டங்களை செயல்படுத்த அணிதிரள வேண்டும்.  

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.