தாயகப்பறிப்புக்கு எதிராக சீனாவில் மக்கள் எழுச்சி போராட்டம்! - க. அருணபாரதி
தாயகப்பறிப்புக்கு எதிராக சீனாவில் மக்கள் எழுச்சி போராட்டம்! - க. அருணபாரதி.
உலகெங்குமுள்ள உழைக்கும் மக்களின் உரிமைகளையும், உடைமைகளையும் பறித்து வெறியாட்டம் நிகழ்த்தும் முதலாளிகளுக்கும், அரசுகளுக்கும் மக்கள் காலத்திற்கேற்ப பதிலடி கொடுத்து தான் வருகின்றனர்.
எகிப்து, துனிசியா போன்ற நாடுகளில் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக நடந்த மக்கள் திரள் போராட்டங்கள உலகெங்கும் சர்வாதி காரத்திற்கு எதிராக மட்டுமின்றி, தாயகப் பறிப்புக்கு எதிராகப் போராடி வரும் உழைக்கும் மக்களின் போராட்டங்களுக்கும் ஊக்கமளித்தன. இப்போராட்டங்களின் வீச்சு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற பெயரில் முதலாளியப் பாசிசம் கோலோச்சும் சீனாவிலும் எதிரொலித்தது.
சீனாவின் தென்கிழக்குக் கடற்கரையிலுள்ள கூங்டாங் மாகாணத்தில்(Guangdong) உள்ள வூகான் (Wukan) என்னும் சிற்றூரில் சற்றொப்ப 20,000 பேர் வசித்து வருகின்றனர். இம்மக்கள் தாம் தமது போர்க்குணமிக்கப் போராட்டத்தால், இதுவரை யாருக்கும் அடிபணியாத சீன அரசை தமது போர்க்குணத்தால் அடிபணிய வைத்தனர்.
மீன்பிடித் தொழிலையும், வேளாண்மையையும் தமது முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்ட வூகான் மக்களின் நிலங்களை, லுபெங் பெங்டியன்(Lufeng Fengtian Livestock) மற்றும் கன்ட்ரி கார்டென்(Country Garden) ஆகிய இரு தனியார் நிறுவனங்களிடம் சீன அரசு விற்றது. கன்ட்ரி கார்டன் நிறுவனத்தை நடத்துவது, சீனாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் 11வது இடத்தி லிருக்கும் யங் குவாங் குடும்பத்தினர். இந்நிறுவனங்கள் வூகான் மக்களின் நிலங்களை அரசிடமிருந்து பெற்று அங்கு மனை வணிகத் தொழில் புரியத் திட்டமிட்டன.
சீன அரசு மக்களிடமிருந்து நிலங்களை பிடுங்கி தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது புதிதான நடவடிக்கையல்ல. பெய்ஜிங்கில் இயங்கும், சமூக அறிவியல் மன்றம்(Academy of Social Sciences) என்ற அமைப்பின் கூற்றுப்படி, கடந்த 30 ஆண்டுகளில் சற்றொப்ப 5 கோடி உழவர்கள் தங்களது வீடுகளையும், நிலங்களையும் சீன அரசிடம் இழந்திருக்கிறார்கள் என்றும், அடுத்த 20 ஆண்டுகளில் 6 கோடி உழவர்கள் தங்களது நிலங்களை இழப்பார்கள் என்றும் கணக்கிட்டிருந்தது. இவ்வாறு நடக்கும் தாயகப் பறிப்புக்கு எதிராக நடைபெறும் போரா ட்டங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு (2010) மட்டும், 1,80,000 ஆக இருக்கலாம் என்றும் அந்நிறுவனம் கணித்தது. சீன அரசு தனது பொதுவு டைமைப் பொருளியல் கொள்கை களிலிருந்து விலகி, தாராள மயத்திற்கு மாறி விட்டதையே இக்கணக்கெடுப்பு உணர்த்துகின்றது.
இவ்வாறு, பணக்கார நிறுவனங்களை மேலும் கொழிக்க வைக்கும் திட்டங்களை ‘வளர்ச்சி’ என்றது சீன ‘பொதுவுடைமை’ அரசு. ‘அநியாயம்’ என ஒற்றைக் குரலில் முழங்கினர் மக்கள். தங்களது வாழ்வா தாரமான நிலங்கள் பறிக்கப் பட்டதை எதிர்த்து வூகான் மக்கள் வீதிகளில் திரண்டனர்.
கடந்த செப்டம்பரில் தொடங்கிய இப்போராட்டத்தை, சீனப் ‘பொதுவுடைமை’ அரசின் காவல்துறை, வழக்கம் போலவே கொடூரமாக ஒடுக்கியது. ஈவிரக்கமின்றி ஒரு குழந்தையையும் இப்போராட்டத்தின் போது கொன்றது. அரசு அலுவலகத்தையும், காவல் நிலையத்தையும் தாக்கியதாக, கிராமத்தினர் 3 பேரை சீன அரசு சிறைபிடித்தது.
மக்கள் போராட்டத்தின் வீரியம் அதிகரிக்கவே, அரசு ஓர் பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்குமாறு கிராம மக்க ளிடம் வேண்டுகோள் வைத்தது. மறுபுறத்தில், போராட்டக் குழுத் தலைவராக கிராம மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 43 வயதான சூ ஜின்போ(Xue Jinbo) என்ற வழக்கறிஞரை சீனக் காவல்துறையினர் கடத்திக் கொலை செய்தனர். உடலெங்கும் எலும்புகள் முறிந்த நிலையிலுள்ள அவரது உடலைக் கூட தரமாட்டோம் என்றது சீன அரசு. அவர் மாரடைப்பால் தான் இறந்ததாக அப்பட்டமாகப் புளுகியது.
மக்களை கோபத்தின் உச்சத்தில் ஆழ்த்திய அரசின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, 16.12.2011 அன்று ஜின்போவிற்கு நடந்த இறுதி வணக்க நிகழ்வை மிகவும் எழுச்சியுடன் நடத்தினர் கிராம மக்கள். சீனக் கம்யூனிச அரசின் வரலாற்றில் முதன் முறையாக, காவல் நிலையமும், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமும் அப்பகுதியில் இயக்கமுடியாமல் அன்று பூட்டிக் கிடந்தன. வூகான் கிராமம் மக்களின் முழுக்கட்டுப் பாட்டில் வந்தது.
போராடும் மக்களைப் பணிய வைக்கும் விதமாக, அக்கிராமத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளையும் வழி மறித்து நின்றது காவல்துறை. உணவின்றி மக்கள் தவித்த போதும், தமது தாயகப் பறிப்புக்கு எதிராகப் போராடும் உணர்வை அம்மக்கள் இழக்கவில்லை. போர்க்குணத்துடன் அனைத்தையும் எதிர் கொண்டனர். பக்கத்து கிராம மக்கள் வூகான் மக்களுக்கு உணவளித்து உதவி செய்தனர்.
வூகான் மக்களின் போர்க் குணமிக்கப் போராட்டம் அப்பகுதியில் மட்டுமின்றி வூகான் கிராமத்தைச் சுற்றியிருந்த மக்களுக்கும் பெரும் ஊக்கமளித்தது. வூகான் கிராமத்திற்கு வடகிழக்கில் உள்ள ஹாய்மென் (Haimen) நகர மக்கள், அப்பகுதியில் சீன அரசால் அமைக்கப்படவிருந்த நிலக்கரி தொழிற் சாலையால் தமக்கு உடலியல் கோளாறுகள் ஏற்படும் என கருதி வந்த நிலையில், வூகான் மக்களின் போராட்டத்தை தொடர்ந்து தாங்களும் போராட்டத்தில் குதித்தனர்.
சற்றொப்ப 30,000 பேர் வீதிகளில் பேரணியாகத் திரண்டதைக் கண்டு சீன அரசு அதிர்ந்தது. வூகான் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. சீனக் காவல்துறை ஹாய் மென் மக்களையும் வெறி கொண்டுத் தாக்கியது. 15 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டான். நூற்றுக் கணக்கானவர்கள் காயம்பட்டார்கள். காயம் பட்ட மக்கள் சிதறி ஓட வில்லை. மறுபடியும் ஒன்று திரண்டு, அரசை அச்சத்திற் குள்ளாக்கினார்கள். மறுபுறம், வூகான் மக்கள் நீதிகேட்டு அருகில் உள்ள லூபெங் நகரத்திற்கு பேரணியாக செல்வோம் என அறிவித்தனர்.
இணையதளங்களிலிருந்து, வூகான், ஹாய்மென் போராட்ட செய்திகளை சீன அரசு நீக்கியது. அது குறித்த செய்திகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. எனினும், மற்ற நாடுகளின் இணைய ஊடகங்கள் வழி வூகான் போராட்டம் குறித்த செய்தி உலகிற்கு தெரிந்தது.
கூங்டாங் மாநிலத்திற்கு போராட்டங்கள் புதிதல்ல. சீனாவின் ஏற்றுமதிகளில் மூன்றில் ஒரு பகுதி இங்கிருந்து தான் நடைபெறுகின்றன. இங்கு தான் அதிகத் தொழிற்சாலைகளும் உள்ளன. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் கோலோச்சும் சீன அரசு வூகான் போராட்டத்தைப் போல், இப்படியொரு மக்கள் திரள் போராட்டத்தை கண்டது கிடையாது. அதனால் தான், உடனடியாக சீன அரசு வூகான் போராட்டக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது.
பறிக்கப்பட்ட நிலங்களை ஒப்படைப்பது, ஜின் போ உடலை ஒப்படைப்பது, அவரது மரணம் குறித்து விசாரிப்பது, செப்டம்பர் போராட்டத்தின் போது சிறைபிடிக்கப்பட்ட 3கிராமத்தினரை விடுவிப்பது என வூகான் மக்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் அம்மாநில கம்யூனிஸ்ட் கட்சி முன்னணித் தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர். கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளர் மின்கோ சூ (Mingguo Zhu) அதை முறைப்படி தொலைக் காட்சியிலும் அறிவித்தார். அரசு தனது வாக்குறுதிகளில் இருந்து பின் வாங்கினால், நாம் திரும்பவும் போராட்டத்தை முன்னெடுப் போம் என்று போராட்டக் குழுவினர் அறிவித்தனர்.
சீன அரசு திட்டத்திலிருந்து பின்வாங்கியது. இது சீன அரசிற்கு கிடைத்த தோல்வி மட்டுமல்ல, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற கோட்பாடு நடைமுறையில் கண்டிருக்கும் தோல்வியும் கூட.
கட்சிக் கட்டமைப்புத் தவிர, கருத்துப் போராட்டத்திற்கு எந்த வெளியும் விட்டுவைக்கப்படாத ஒருகட்சி சர்வாதிகாரமே பாட்டாளி வர்க்க சர்வாதி காரம் ஆகும். கடைசியில், ஆளும் பொதுவுடைமைக் கட்சிக்குள்ளும் கருத்துப் போராட்டத்திற்கான இடம் மறுக்கப்பட்டுவிடும்.
இந்நிலையில், பொதுவுடைமைக் கட்சித் தலைமை தவறான முடிவெடுத்தால், அதைத் திருத்தும் வாய்ப்பு முற்றிலும் அற்றுவிடும். இச்சூழல் நிலவிய சீனாவில், பொதுவுடைமை ஆட்சியின் பெயராலேயே முதலாளிய மீட்சி ஏற்பட்டது. சனநாயக வழியில் மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி அரசின் தவறுகளைத் திருத்தும் வாய்ப்பும் இல்லை. ஓசையில்லாமல் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் முதலாளி வர்க்கப் பாசிசமாக மாறிவிட்டது. இந்த நிலை, சீனாவில் நீடித்ததால் ஒரு வெடிப்பு நிலை ஏற்பட்டு வருகிறது. இதன் வெளிப்பாடே வூகான் போராட்டம்.
‘மக்கள் வீதிகளில் திரண்டால், விமானங்களை கல்லெறிந்து வீழ்த்துவார்கள். டாங்கிகளை கைகளால் புரட்டுவார்கள்’ என கியுபப் புரட்சியாளர் பிடல்காஸ்த்ரோ கூறினார். அது உண்மையே! மக்கள் வீதிகளில் திரண்டால், வரலாற்றுப் பக்கம் அவர்களை அலங்கரிக்கும். மக்களை வீதிகளில் திரட்ட வேண்டியதே புரட்சியாளர்களின் கடமை!
இக்கட்டுரை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2012 சனவரி 1-15 இதழில் வெளிவந்தது.கட்டுரையாளர் க.அருணபாரதி இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர் மற்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/ Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment