பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் – பெ.மணியரசன்
பன்னிரண்டு அகவைக்கான பால் வடியும் முகம்; சிங்களப் படையினரின் பதுங்கு குழியில் பதற்றமில்லாமல் உட்கார்ந்திருக்கும் பாங்கு; பகைவர்கள் கொடுத்த தின்பண்டத்தை மெல்லும் மென்மை; அடுத்து, சுட்டுக்கொல்லப்பட்டுக் கிடக்கும் கொடூரம்!
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் – மதிவதனி ஆகியோரின் இளைய மகன் பாலச்சந்திரன் 2009 மே மாதம் சிங்களப் படையாட்களால் கடத்தப்பட்டு, காவலில் வைக்கப்பட்டு, கொல்லப்பட்ட முறை இராசபட்சே – பொன்சேகா கும்பல் நடத்திய தமிழின அழிப்பின் கொடூரத்தை வெளிக்காட்டுகிறது. சேனல்4 என்ற இலண்டன் தொலைக்காட்சி. இலங்கை அரசு 2009 இல் ஈழத்தில் நடத்திய தமிழின அழிப்புப் போரின் படுகொலைகளை, பிணக்குவியல்களை, கொல்லப்பட்டுக் கிடக்கும் தமிழ்ப் பெண்கள் மீது வல்லுறவு நடத்திய சிங்களப் படையாட்களின் வக்கிரத்தை உலகுக்கு ஏற்கெனவே அம்பலப்படுத்தியது.
இப்போது, “போரில்லா மணடலத்தில் – இலங்கையின் கொலைக்களம்” என்ற தலைப்பில் ஆன இரண்டாவது ஆவணப்படத்தை அத்தொலைக்காட்சி வெளியிட்டு ள்ளது. அப்படத்தின் இயக்குநர் கல்லம் மக்கரே பாலச்சந்திரன் கொல்லப்பட்ட முறை பற்றி ஒரு கட்டுரையும் எழுதியுள்ளார். (இந்து 19.2.2013) அதில் அவர் கூறுகிறார்:
பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனை சிங்கள இனவெறிப் படையாட்கள் கடத்திக் கொண்டு வந்து தங்களின் பதுங்கு குழியில் வைத்திருக்கிறார்கள். திருவிழாக் கூட்டத்தில் தவறிப் போன சிறுவன் பெற்றோர் வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்பது போல் தேடும் விழிகளோடு உட்கார்ந்திருக்கிறான்.
அவன் கண்கள் கட்டப்படவில்லை; அவன் பார்க்கும் வகையில் அவன் கண்முன்பாக அவனுக்குப் பாதுகாப்பாக இருந்த விடுதலைப்புலிகள் சிலர் சுட்டுக் கொல்லப்படு கிறார்கள். அடுத்து பாலச்சந்திரனைக் கைதொட்டு விடும் தொலைவில் துப்பாக்கியை நீட்டி மார்பில் சுடுகிறார்கள். மல்லாந்து விழுகிறான் சிறுவன். மறுபடியும் மறுபடியும் நான்கு முறை மார்புப் பகுதியில் சுடுகிறார்கள்.
இந்தக் காட்சிகள் அடங்கிய ஒளிப்படங்கள் உலகப் புகழ்பெற்ற தடவியல் அறிஞர் மற்றும் நோய்க்குறி ஆய்வு வல்லுநர் பேராசிரியர் மெட்ரிக் பவுண்டர் அவர்களால் சோதனைக்குட்படுத்தப்பட்டன. இவை உண்மையான படங்கள்; புனையப்பட்ட பட்டவை அல்ல என்பதை அவர் உறுதி செய்தார்.
“மதிப்பு மிகுந்த பன்னாட்டு மனித உரிமை வழக்கறிஞர் பேராசிரியர் வில்லியம், ஏ. சாப்பஸ் எங்கள் ஆவணப்படத்தில் கூறுகிறார்:
“கைது செய்யப்பட்டவர்கள் கூட்டம் கூட்டமாக அம்மணமாக்கப்பட்டுள்ளதை கவனிக்கும் போது இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சித்திரவதைகள் என்பது விளங்கும்.”
பேராசிரியர் சப்பாஸ் கூற்றுக்குப் பின் இயக்குநர் கல்லம் மக்கரே இது இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகள் மட்டும் அல்ல, இலங்கை அரசின் உயர் பதவியில் உள்ள இராசபட்சே அவர் தம்பி இராணுவத் துறைச் செயலர் கோத்தபய இராசபட்சே ஆகியோரும் பதிலளிக்க வேண்டிய படுகொலைகள் என்று கூறுகிறார்.
சேனல் 4 காட்டிய மேற்படி இரண்டாம் பாக ஆவணப் படத்தில் விடுதலைப் புலிகளின் மதிப்புமிக்கத் தளபதி இரமேசு பிடித்து வைக்கப்பட்டு, சிங்களப்படை ஆட்களால் சித்திரவதை செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட உண்மைக் காட்சியும் இடம் பெற்றுள்ளது.
ஐ.நா. மன்றத்தின் வழியாக ஏற்பாடு செய்யப்பட்டு ஆயுதங்களின்றி, வெள்ளைக் கொடியுடன் அமைதிப் பேச்சு நடத்தப் போன விடுதலைப்புலிகள் அமைப்புத் தலைவர்கள் நடேசன், புலித்தேவன் போன்றவர்களையும் பிடித்து வைத்து சித்திரவதை செய்து இழிவுபடுத்தித்தான் கொன்றார்கள் என்ற ஒரு செய்தியும் இப்போது இணையதளங்களில் பேசப்படுகிறது.
பாலச்சந்திரன் ஆனாலும், இலட்சக்கணக்கில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் ஆனாலும் இரு தரப்பினர் போரிட்டுக் கொண்ட போது இடையில் சிக்கி கொல்லப்பட்டவர்கள் அல்லர். போரில்லா பாதுகாப்பு வளையத்திற்குள் வாருங்கள் என்று பொது மக்களை அழைத்து வந்து, அங்கு வைத்து கூட்டம் கூட்டமாக மக்கள் கொல்லப்பட்டார்கள். பாலகன் பாலச்சந்திரனைக் கடத்தி வந்து இராணுவப் பதுங்கு குழிக்குள் வைத்திருந்து விட்டுப் பின்னர் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.
இவையெல்லாம் இலங்கை அரசும் இலங்கை இராணுவமும் செய்த போர்க் குற்றங்கள் அல்ல; அவை நடத்திய திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகள். இவை அனைத்தும் இனப்படுகொலைக் குற்றங்கள்.
இந்தத் தமிழின அழிப்புக் கொலைக்களத்தில் ஓடிய குருதி வெள்ளத்தில் குளித்த வர்கள் இராசபட்சே கும்பல் மட்டுமல்ல, சோனியா- மன்மோகன் கும்பலும்தான்!
“இந்த (இன அழிப்பு)ப் போரை நான் இந்தியாவுக்காக நடத்தினேன்” என்று இலங்கை நாடாளுமன்றத்தில் 2009 ஆம் ஆண்டே இராசபட்சே தெரிவித்தான். அவனது அக்கூற்றை இன்று வரை இந்தியஅரசு மறுக்கவில்லை. 2011 இல் இராகுல் காந்தி, ஈழத்தில் இன்னும் என் கணக்குத் தீரவில்லை என்றார்.
சிங்கள இனவெறி அரசு நடத்திய தமிழ் இன அழிப்பில் பங்கெடுத்துக்கொண்டு ஆயுதங்கள், நிதி உதவி, பன்னாட்டு அரசியல் உதவி அனைத்தும் வழங்கியது இந்திய அரசு.
2013 மார்ச்சு 4 ஆம் நாள் ஜெனிவாவில் கூடவுள்ள ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், இராசபட்சே – கோத்தபய – பொன்சேகா கும்பலின் இன அழிப்புக் குற்றங்களை- மனித குலத்திற்கெதிரான குற்றங்களை விசாரிக்க தற்சார்புள்ள பன்னாட்டு விசாரணை மன்றம் அமைக்கப்படும் வாய்ப்புள்ளதா என்பதே இப்பொழுது நம் முன் உள்ள கேள்வி.
மார்ச்சு மாதம் ஜெனிவாவில் கூடுகின்ற மனித உரிமை மன்றத்தில் இலங்கை அரசுக் கெதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் தமிழின அமைப்புகளின் தலைவர்கள் சிலர் கோரிக்கை வைக்கின்றனர். அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதி கொடுத்துள்ளார் என்று நடுவண் இணைய மைச்சர் நாராயணசாமி கூறுகிறார்.
தமிழின உணர்வாளர்களும் மனித உரிமையில் அக்கறை உள்ளோரும் இந்த இடத்தில் ஏமாந்து விடாமல் சிந்திக்க வேண்டிய செய்திகள் இருக்கின்றன.
முதலில் அமெரிக்கா என்ன தீர்மானம் கொண்டு வரப்போகிறது என்று அறிந்து கொள்ள வேண்டும். அல்லது அமெரிக்கா என்ன தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று நமக்கொரு கோரிக்கை இருக்க வேண்டும்.
கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் இராசபட்சே கும்பலை நீதிபதிகளாக்கும் தீர்மானம். ஆம், தமிழினப் படுகொலைகளை அரங்கேற்றிய இராசபட்சே கும்பல் அமைத்த “கற்றுக் கொண்ட படிப்பிணைகள் மற்றும் நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகள் ஆணையம் விசாரித்து, போர்க்குற்றங்கள் நடந்திருக்கிறதா என்று அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அத்தீர்மானம். அத்தீர்மானத்தில் அந்த எல்.எல். ஆர்.சி விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமை மன்றம் உதவி செய்ய வேண்டும் என்று அமெரிக்கா முன் மொழிந்திருந்த பகுதியை நீக்கி, “இலங்கை அழைத்தால் ஐ.நா. மனித உரிமை மன்றம் உதவும்” என்று திருத்தச் செய்து அதன் பிறகு அதனை ஆதரித்து வாக்களித்தது இந்தியா.
இதையே முதல் கட்ட வெற்றி என்று நம்மில் ஒரு பகுதியினர் வரவேற்றனர். த.தே. பொ.க.வும் மற்றும் சில அமைப்புகளும் “இது இராசபட்சே கும்பலை இனப் படுகொலையிலிருந்தும், போர்க்குற்றத்திலிருந்தும், விடுவிக்கும் தீர்மானம்” என்று கண்டித்தோம். கடந்த ஓராண்டாக அத்தீர்மானம் சாதித்தது என்ன? எதுவுமில்லை. கடந்த ஓராண்டுக்குள் இராசபட்சே இந்திய அரசின் சிறப்பு விருந்தினராக இரண்டு முறை வந்து அரசு மரியாதை பெற்றுத் திரும்பிப் போனான்.
அமெரிக்க அரசு, தனது மேலாதிக்க அரசியல் நோக்கத்தோடு அத்தீர்மானத்தைக் கொண்டு வந்ததே தவிர, மனித உரிமைக் காப்பு நோக்கில் கொண்டு வரவில்லை. அமெரிக்காவுடன் கூட்டுக் களவாணியாக இந்திய ஆட்சிக் கொலைகாரர்களும் சேர்ந்து கொண்டார்கள். இந்த உண்மைகள் தோண்டித் துருவிக் காணப்பட வேண்டிய அளவுக்குப் புதைகுழிக்குள் இல்லை. எல்.எல்.ஆர்.சி. விசாரிக்கட்டும் என்று அமெரிக்கத் தீர்மானம் கூறும் போதே பாமரர்களும் அதன் நயவஞ்சகத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
இலங்கை அரசைச் சிறிது மிரட்டி தன்பக்கம் இழுத்துக் கொள்வதுதான் ஏகாதிபத்திய வாதியான ஒபாமாவின் திட்டம். இவ்வாண்டும் அதே பாணியில்தான் ஒபாமா ஆட்சி நடந்து கொள்ளும் என்று இணைய தளங்களில் செய்திகள் கசிகின்றன.
இலங்கைக் கெதிரான அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கலைஞர் கருணாநிதியும் அவரது கையடக்கப்பிரதியான டெசோவும் கூறுவது பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலும் காட்டும் தந்திரம் என்பது ஊரறிந்த உண்மை!
தமிழக முதல்வர் செயலலிதா போர்க்குற்றங்கள் புரிந்த இலங்கைக்கு எதிராகப் பொருளியல் தடை விதிக்க வேண்டும் என்று அவ்வப்போது பேசித் தீர்மானம் நிறைவேற்றி விட்டு அடுத்த வேலைகளைப் பார்த்துக்கொண்டிருப்பார். சிங்களர்கள் கலந்து கொள்ளும் ஆசியத் தடகலப் போட்டிகளைத் தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது என்று அவர் எடுத்த நிலைபாடு பாராட்டத்தக்கது. இவர், அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கூறுவது ஒரு சடங்குத்தனம் தவிர வேறன்று.
உண்மையான தமிழின உணர்வாளர்களும் மனித உரிமைப் பற்றாளர்களும் மனித உரிமை மன்றத்தில் என்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை முன் மொழிந்து, உலகநாடுகளின் ஆதரவை அதற்குக் கோர வேண்டும். ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக் குற்றங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க, தற்சார்புள்ள பன்னாட்டு விசாரணை மன்றம் அமைக்க வேண்டும். அத்துடன் தமிழ் ஈழ மக்களிடம் “சிங்களர்களுடன் சேர்ந்திருக்கிறீர்களா அல்லது தனி நாடு அமைத்துக் கொள்கிறீர் களா” என்று கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
இவ்விரு தீர்மானங்களை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நிறைவேற்ற உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் அந்தந்த நாடுகளில் போராட்டங்கள் நடத்த வேண்டும். உலகு தழுவிய மனித உரிமை அமைப்புகளை, பல்வேறு அரசுகளைத் தமிழர்கள் அணுக வேண்டும்.
இனப்படுகொலை நடந்த கிழக்குத் திமோரில் பன்னாட்டு விசாரணை மன்றம் விசாரித்தது. அதன் தொடர்ச்சியாகத் கருத்து வாக்கெடுப்பு நடந்தது. கிழக்குத் திமோர் தனி நாடு ஆனது. அதே போல் தெற்குச் சூடானில் நடந்த இனப்படுகொலை களைப் பன்னாட்டு விசாரணை மன்றம் விசாரித்தது. கருத்து வாக்கெடுப்பு நடந்தது. தெற்கு சூடான் தனி நாடானது. அந்த வழிமுறையில் ஈழத்திலும் பன்னாட்டு விசாரணை மன்றமும் கருத்து வாக்கெடுப்பும் தேவை.
இலங்கையில் இரு தரப்பு மக்களும் சமத்துவமாக வாழவும், நல்லிணக்கம் காணவும் உலக நாடுகள் முயல வேண்டும் என்று யார் பேசினாலும் அவர்கள் தமிழின அழிப்புப் போரை நடத்தி முடித்து, எஞ்சியுள்ள தமிழர்களை சொந்த மண்ணில் பணயக் கைதிகள் போல் வைத்துள்ள சிங்கள இனவெறியர்களைத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ ஆதரிக்கிறார்கள் என்று பொருள். நண்பர்கள் என்று அடையாளம் காண வேண்டும்.
அண்மையில் தில்லியில் நடந்த நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சி “இலங்கையில் இருதரப்பு மக்களிடையே நல்லிணக்கம் மேம்படப் பாடுபடுவோம் என்று கூறினார். எஞ்சியிருக்கின்ற தமிழர் களை சிங்கள இனவெறியர்களின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டு, எதிர்த்துப் பேசாத கொத்தடிமைக் கும்பலாக மாற்றுவது தான் இன்றைக்கும் இந்திய அரசு வைத்துள்ள திட்டம் என்பதைத்தான் பிரணாப் முகர்சியின் உரை மறைமுகமாக “நல்லிணக்கம்” என்று சுட்டிக் காட்டுகிறது.
அண்மையில் திருப்பதிக்கு வருவதற்கு இருநாட்கள் முன், இராசபட்சே “தமிழர்களுக்குத்
தன்னாட்சி அதிகாரம் தர முடியாது” என்று கொக்கரித்துவிட்டுத் தான் இங்கு வந்தான். இராசபட்சேயின் இந்தக் கொக்கரிப்பைக் கேட்டு உள்ளூரப் பூரித்துப் போயிருக்கும் இந்திய ஏகாதிபத்தியம்.
இலங்கையில் சிங்களர்களும் தமிழர்களும் “ சம அதிகாரத்துடன் நல்லிணக்கம் காண வேண்டும்” என்ற உண்மையான பேராவல் இந்திய அரசுக்கு இருந்திருக்குமேயானால், இராசபட்சேயின் “தன்னாட்சி மறுப்புக்” கூற்றுக்கு மறுமொழி, கூறியிருக்க வேண்டும். ஆனால் பிரதமர் மன்மோகன் சிங் 22.2.2013 அன்று புது தில்லியில் தம்மைச் சந்தித்த தமிழகக் காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் “இராசபட்சே 13 வது திருத்தத்தை மட்டுமல்ல அதைவிடவும் கூடுதலான (13+) அதிகாரங்கள் தமிழர் களுக்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளார்” என்று கூறினார்.( இந்து 23.2.2013) எவ்வளவு ஏமாற்று வேலை!
எனவே இந்திய அரசிடம் கோரிக்கை வைக்கக்கூடாது; அதனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்.
சேனல்4 தொலைக் காட்சி சார்பில் “போரில்லா மண்டலத்தில் இலங்கையின் கொலைக்களம்” என்ற ஆவணப்படம் எடுத்த இயக்குநர் கல்லம் மக்கரே தமது கட்டுரையிலும் 22.2.2013 அன்று அப்படம் தில்லியில் திரையிட்டபோது அவர் இலண்டனிலிருந்தவாறு ஆற்றிய உரையிலும் திரும்பத் திரும்ப இந்திய அரசு, பன்னாட்டு விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இதன் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும். பன்னாட்டு விசாரணையை இந்தியாதான் இது வரை தடுத்து வைத்துள்ளது, இனிமேலும் அவ்வாறு தடுக்கக் கூடாது என்பதே இதன் பொருள்.
அதே வேளை, கல்லம் மக்கரேயும் இலங்கையில் சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படவேண்டும் என்றார். அவர் வெளிநாட்டுக்காரர். ஆவணப்படக்காரர். ஆய்வாளர். அந்த அளவுதான் அவர் கூறமுடியும். நாம் இந்தியா அந்த வரம்புடன் நிற்கக் கூடாது. நாம் இன அழிப்புக்கு உள்ளா னவர்கள். இன்றும் இந்தியா ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் தமிழகத் தமிழர்களுக்கு எதிராகவும் செய்யும் நயவஞ்சக வேலைகளை நேரடியாக அனுபவிப்பவர்கள். நாம் இந்தியாவிடம் கோரிக்கை வைக்கக் கூடாது. இந்தியாவைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்.
இந்தியா தனது மண்டல மேலாதிக்கக் காரணங்களுக்காக இராசபட்சேயைக் கூட எதிர்க்கலாம். எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரம சிங்கேயை ஆதரிக்கலாம். கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் ரணிலை ஆதரிக்கும்படி சம்பந்தன் குழுவிடம் இந்தியா கூறியது. இதெல்லாம், இந்தியா ஈழத் தமிழர்களை ஆதரித்து, சிங்கள இனவெறியை எதிர்க்கிறது என்பதற்கான செயல்கள் என்று தமிழின உணர்வாளர்கள் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.
பாலகன் பாலச்சந்திரன் படுகொலைப் படங்களைப் பார்த்த பின் கூட இந்தியாவின் மனம் இரங்கவில்லை. அப்படங்கள் ஒட்டு வேலை செய்து தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று இந்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் சிண்டே கூறினார். இதையேதான் இந்தியாவின் சிங்களத் தூதர் காரியவம்சம் கூறினார்.
ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இராசபட்சே கும்பலைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த தற்சார்புள்ள பன்னாட்டு விசாரணை மன்றம் கேட்போம்! ஈழத்தமிழர்களிடம் ஐ.நா. மேற்பார்வையில் கருத்து வாக்கெடுப்பு நடத்தக் கோருவோம். இவற்றுக் குறைவாக பிச்சை கேட்பது போல் எதையும் இந்தியாவிடமும் வேறு யாரிடமும் கேட்க வேண்டாம். நம் கோரிக்கை ஏற்கப்படும் நாள் வரும் அது வரை போராடுவோம்!
இக்கட்டுரை,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2013 மார்ச் 1-15 இதழில் வெளிவந்தது. கட்டுரையாளர் பெ.மணியரசன் இதழின் ஆசிரியர் மற்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்.
Leave a Comment