ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“தமிழக அரசு மூவர் தூக்கை இரத்து செய்ய வேண்டும்” உயிர்வலி ஆவணப்படவிழாவில் தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு!

இராசீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புபடுத்தப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் குறித்தும், மரண தண்டனை ஒழிப்பு குறித்தும் பேசுகின்ற ‘உயிர்வலி’ ஆவணப்படத்தின் வெளியீட்டு நிகழ்வு மற்றும், நீதிபதி வீ.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களின் 99ஆவது பிறந்தநாள் விழாவும் விருதுகள் வழங்கும் விழாவும் நேற்று(24.11.2013) சென்னையில் நடைபெற்றது.

சென்னை பிட்டி.தியாகராயர் அரங்கில், மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாம் தமிழர் கட்சித் தலைவர் இயக்குநர் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி.வேல்முருகன், திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் – சட்டமன்ற உறுப்பினர் திரு. உ.தனியரசு, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, சி.பி.எம். கட்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. பீமாராவ், இனப்படுகொலைக்கு எதிரான இசுலாமியர் இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் உமர்கயான், இயக்குநர்கள் கவுதமன், புகழேந்தி தங்கராஜ் , வெற்றிமாறன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பேரறிவாளினின் தந்தை திரு. குயில்தாசன், தாய் திருமதி. அற்புதம் அம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் கலந்து கொண்டு ஆவணப்படம் குறித்து பேசினார்.

அவர் பேசும் போது, “வழக்கமான ஆவணப்படங்களில் தென்படுகின்ற வறட்சியான தகவல் குவிப்பு இல்லாமல், விறுவிறுப்பான படமாக உருவாக்கப்பட்டுள்ள ‘உயிர்வலி’ ஆவணப்படக் கலைஞர்களுக்கு முதலில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் தலைப்பு ‘உயிர்வலி’யாக இருந்தாலும், இங்கு பேசப்படுவது நீதியின் வலி, ஞாயத்தின் வலி.

கடந்த மாதம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களது தலைமையில், கர்நாடகாவின் பெல்காம் சிறையில், சந்தன வீரப்பனுடன் தொடர்புபடுத்தப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு தமிழர்களையும், கர்நாடக தூக்குத் தண்டனை சிறைவாசிகளையும் ஒரு குழுவாக சந்தித்துவிட்டு வந்தோம். பேரறிவாளனின் தாயார் திருமதி. அற்புதம் அம்மையார் அவர்களும் எங்களுடன் வந்திருந்தார்கள்.

தமிழகச் சிறைகளில் காணப்படுகின்ற கெடுபிடித்தன்மை போல, கர்நாடகச் சிறைகளில் எவ்விதக் கெடுபிடிகளும் கிடையாது.

நாம் இங்கு பேரறிவாளன் பற்றி பேசிக் கொண்டுள்ளோமே, அவரைப் போல அங்கு ஞானப்பிரகாசம் என்பவர் தூக்குத் தண்டனைப் பெற்றுள்ளார். நமது பேரறிவாளனாவது ஓரளவு அரசியல் புரிதல் உள்ளவர், ஆனால், ஞானப்பிரகாசம் எந்தவித அரசியலும் தெரியாத அப்பாவி மனிதர்.

கர்நாடகச் சிறையில் வாடும் இந்த நான்கு தமிழர்களுக்கும் முதலில் வாழ்நாள் தண்டனை தான் தரப்பட்டது. ஆனால், உலகில் எங்குமே நடக்காத கொடுமை இவர்களுக்கு நிகழ்த்தப்பட்டது. வாழ்நாள் சிறைத் தண்டனையை எதிர்த்து, மேல்முறையீடு செய்திருந்த இவர்களது வழக்கில், இந்திய அரசின் உச்சநீதிமன்றம் மரண தண்டனையாக்கி உறுதிப்படுத்தியது.

மேல்முறையீட்டுக்காக ஒரு வழக்கு வந்தால், அதிலுள்ள தண்டனையை உறுதிப்படுத்த வேண்டும் அல்லது அத்தண்டனையைக் குறைக்க வேண்டும் என்பது தான் உலகெங்கும் உள்ள நடைமுறை. ஆனால், இந்திய அரசின் உச்சநீதிமன்றம் இதற்கு நேர்மாறாக, தண்டனை அதிகரித்து, அவர்களைத் தூக்கிலிட தீர்ப்பளித்தது. இந்தியாவில் தமிழ் இனத்தைத் தவிர வேறு எந்த இனத்திற்கும் இப்படிப்பட்ட அநீதி இழைக்கப்படவில்லை.

இத்தனைக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஞானப்பிரகாசம் ஒருமுறை கூட வீரப்பனை பார்த்ததில்லை. சிறைக்குள் வந்தபிறகு தான் அவர் வீரப்பன் புகைப்படத்தையே பார்த்திருக்கிறார். காவல்துறையினர், உண்மையில் வீரப்பனுடன் இருந்த ஒரு ஞானப்பிரகாசத்தைப் பிடித்து, போலி மோதலில் கொன்றுவிட்டனர். ஆனால், அதைச் சொன்னால் தங்கள் மீது குற்றம் வந்துவிடுமே என அஞ்சி, அப்பாவியான இந்த ஞானப்பிரகாசத்தின் மீது வழக்கு நடத்தி, அவருக்கு தூக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளனர் காவல்துறையினர்.

காவல்துறை இப்படி செய்தது இருக்கட்டும், பொய்யாக ஒருவருக்கு தூக்குத் தண்டனை அளிக்கப்படும் வரை நீதித்துறை என்ன செய்து கொண்டிருந்தது?

இராஜீவ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த இரகோத்தமன், தியாகராஜன், நீதிபதி கே.டி.தாமஸ் போன்றோர், இப்போது பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கும் தூக்குத் தண்டனை தேவையில்லை என கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இப்பொழுதாவது இவர்கள் பேசுகிறார்களே என்பதும், இவர்களது கூற்றுகள் நம் ஞாயத்திற்கு வலுசேர்ப்பதாக இருக்கும் என்பதும் நமக்கு ஆறுதல் அளித்தாலும் கூட, பதவியில் இருக்கும் போது முதுகெலும்பே இல்லாதவர்ளாய் செயல்பட்ட இவர்கள், இப்பொழுது இதனைக் கூறி என்ன பயன்? 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் சிறையில் வாடுகிறார்களே? தூக்குக் கயிற்றின் முன் நிற்கிறார்களே?

இராஜீவ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான தியாகராஜன், இந்த ஆவணப்படத்தில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும்போது, நாங்கள் அதை அப்படியே பதிவு செய்வதில்லை எனச் சொல்கிறார். இதைச் சொல்வதற்கு இவர்களுக்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்?

இப்படிப்பட்ட அதிகாரிகளின் பொய்யான வாக்கமூலங்களால் தானே, ஞானப்பிரகாசம் என்ற அப்பாவி, தூக்குக் கயிற்றின் முன் நிற்கிறார். இரகோத்தமன்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது.

இன்னொருபுறம், ஊடகங்கள் என்ன செய்து கொண்டிருந்தன? வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் போதே, ஊடகங்கள் தீர்ப்பை வழங்கி விடுகின்ற அவலம் இங்கு நடைபெற்றுக் கொண்டுள்ளது. ஆங்கில ஊடகங்களின் செய்திகளைப் பார்த்தால்தான், தாங்கள் அறிவாளிகள் என்பது போல பலர் காட்டிக் கொள்கிறார்கள்.

உச்சநீதிமன்றம், 13 வழக்குகளில் சட்ட அறியாமை காரணமாக தவறான தீர்ப்புகள் வழங்கப்பட்டு விட்டன என சொல்லியிருக்கிறது. மனசாட்சியைக் கொன்று வழங்கப்பட்ட பலத் தீர்ப்புகை, இப்பொழுது திருத்தி எழுதிவிட முடியுமா?

இந்திய அரசின் இனப்பகையின் காரணமாக தமிழர்கள் எப்படியெல்லாம் வதை படுகிறார்கள் என்பதை சாட்சியமாகப் பேசுகின்ற இந்த ஆவணப்படத்தை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரம் நகரமாக, கிராமம் கிராமமாக போட்டுக் காட்டும். தமிழ்நாட்டு மக்கள் சக்தியை நம் ஞாயத்திற்காகத் திரட்ட இது பயன்படும்.

1998இல், இராசீவ் கொலை வழக்கில் 26 பேருக்குத் தூக்கு வழங்கியவுடன், அப்பொழுதிருந்த மவுனத்தை உடைத்து, அய்யா பழ.நெடுமாறன் அவர்களது தலைமையில் பல்வேறு அமைப்புகள் இணைந்து நிதி திரட்டி, இயக்கம் நடத்தி ஞாயத்தைச் சொன்னோமே, அதைப்போல மக்கள் மன்றத்தில் நம் ஞாயத்தை எடுத்துச் செல்வோம்.

ஒரு முக்கிய சாட்சியமாக வந்துள்ள இந்த ஆவணப்படத்தை முன்வைத்தாவது, தமிழக அரசு, இந்திய அரசியலமைப்புச் சட்டவிதி -161இன்படி தமிழக ஆளுநருக்கு அறிவுறுத்தி, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்து, அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்!” எனத் தெரிவித்தார்.

திரளான தமிழின உணர்வாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்வின் முன்னதாக ஆவணப்படம் திரையிடப்பட்டு, படத்தை உருவாக்கிய கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.
P1130148
P1130151
P1130153
P1130160
(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.