தில்லை நடராசர் கோயில் நிர்வாகம் தமிழக அரசிடமே தொடர வேண்டும் ! தமிழகப் பெருவிழாவில் சிதம்பரம் தமிழ்க் காப்பணி கோரிக்கை.
தில்லை நடராசர் கோயில் நிர்வாகம் தமிழக அரசிடமே தொடர வேண்டும் ! தமிழகப் பெருவிழாவில் சிதம்பரம் தமிழ்க் காப்பணி கோரிக்கை.
1956 நவம்பர் 1-ல் மொழிவழி மாநிலமாக தமிழ்நாடு உருவானதை நினைவுக்கூர்ந்து ஆண்டுதோறும் சிதம்பரம் தமிழ்க் காப்பணி அமைப்பு தமிழகப் பெருவிழாவை கொண்டாடி வருகிறது. இதன்படி இந்த ஆண்டும் தமிழ்க்காப்பணி சார்பில் தமிழகப் பெருவிழா 30.11.2013 சனி மாலை 5 மணிக்கு சிதம்பரத்தில் நடைப்பெற்றது.
சிதம்பரம் ஆறுமுக நாவலர் அரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு தமிழ்க் காப்பணி தலைவர் பேரா.அழ.பழ நியப்பன் அவ்ர்கள் தலைமையேற்றார். துணைச் செயலாளர் கு.சிவப்பிரகாசம் வரவேற்றுப் பேசினார்.
தமிழ்க் காப்பணி அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் இணையாசிரியருமான தோழர் .கி.வெங்கட்ராமன் அவர்கள் நிகழ்வினை தொடக்கி வைத்து உரையாற்றினார்.
தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் சிலம்பாட்டமும், தில்லை மெட்ரிக் பள்ளி குழுவினரின் நாட்டுப்புறக்கலையும் நகராட்சிப் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவி ச.ஹர்ஷினி தமிழிசைப் பாடலும் காண்போர் மனதை கவரும் வகையில் அமைந்தன.
தமிழ்க் காப்பணி சார்பில் சிதம்பரம் வட்ட பள்ளி மாணவர்களுக்கிடையே 24.11.2013 அன்று நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மயிலாடுதுறை ஏ.வி.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் வரலாற்றுத் துறை தலைவர் முனைவர் பேரா த.செயராமன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
தமிழ்க் காப்பணி பொதுச் செயலாளர் பா.பழநி, துணைத் தலைவர் இராம.ஆதிமூலம் ஆகியோர் வெற்றிப் பெற்ற மாணவர்களை வாழ்த்திப் பேசினார்.
கீழ்வரும் தீர்மானங்கள் இவ் விழாவில் நிறைவேற்றப்பட்டன.
1) தில்லை நடராசர் கோயில் நிர்வாகம் தமிழக அரசிடமே தொடர வேண்டும்.
வரலாற்றுப் புகழ் வாய்ந்த தில்லை நடராசர் ஆலய நிர்வாகத்தை தீட்சிதர்களிடமிருந்து தமிழக அரசின் இந்து சமய அற நிலையத் துறை எடுத்து நடத்தி வருகிறது. இதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் ‘ ஆலய நிர்வாகத்தை மீண்டும் சிதம்பரம் தீட்சிதர்களிடமே ஒப்படைத்துவிடலாமா?’ என தமிழக அரசைக் கேட்டு அறிவிக்கை அனுப்பியுள்ளது. இது தமிழின உணர்வாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு தனது நிலையில் பின் வாங்காமல் தில்லை நடராசர் ஆலயத்தின் நிர்வாகத்தை தாமே தொடர்ந்து நடத்த வேண்டும். அனைத்து பக்த்தர்களும் தில்லை அம்பலத்தில் தமிழ் வழிபாடு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
இதற்கு ஏற்ப உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்து நடராசர் ஆலயம் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் தொடர்ந்து செயல்பட வழிவகை செய்ய வேண்டும் எனவும், தில்லை கோவிந்தராசர் ஆலயத்திலும், வேறு சில ஆலயங்களிலும் இருப்பது போல வழிபாடுகளை நெறிப்படுத்துவதற்கு மட்டும் பக்தர்களைக் கொண்ட ஓர் குழுவை அரசின் மேற்பார்வையில் நிறுவிக் கொள்ளலாம் என்றும் தமிழ்க் காப்பணி வலியுறுத்துகிறது.
2) இந்தியைத் திணிக்கும் மாதிரிப் பள்ளிகள் திட்டத்தைத் தமிழ் நாட்டில் அனுமதிக்கக்கூடாது.
ராஷ்ட்டிரிய ஆதர்ஷ் வித்யாலயா என்ற பெயரில் இந்திய அரசு தனியார் ஒத்துழைப்புடன் ஒன்றியத்திற்கு ஒரு பள்ளி என்ற கணக்கிற்குக் குறையாமல் மாதிரிப் பள்ளிகள் நிறுவத் திட்டமிட்டுள்ளது.
இப் பள்ளிகளில் இந்தி அல்லது ஆங்கில வழி வகுப்புகள் மட்டுமே இருக்கும், மொழிப்பாடமாக இந்தி கட்டாயமாக்கப்படும், சி.பி.எஸ்.சி பாடத்திட்டங்கள் மட்டுமே நடத்தப்படும். தமிழக அரசின் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இது இயங்காது. இப்பள்ளிகளுக்கு நீண்ட கால குத்தகைக்கு இடம் ஒதுக்கி தருவது மட்டுமே தமிழக அரசின் பணியாகக் குறிக்கப்படுகிறது.
கல்வித்துறையில் மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கிற, இந்தித் திணிப்பை செயல்படுத்தி தமிழ் வழிக் கல்வியை முற்றிலும் புறக்கணிக்கிற, தனியார் மயத்தை விரிவுபடுத்துகிற, மிகை எண்ணிக்கையில் தமிழகத்தில் நுழைந்துள்ள வெளி மாநிலத்தவரை இங்கேயே நிலைப்படுத்த உதவுகிற இத் திட்டத்தை தமிழ்க் காப்பணி முற்றிலும் எதிர்க்கிறது.
இதே போன்ற ஒரு மாதிரிப் பள்ளித்திட்டத்தை இராசீவ் காந்தி பிரதமராக இருந்தபொது முன் வைத்தார். அன்றைய முதலைமைச்சர் எம்.ஜி.ஆர் தமிழகத்தில் அப்பள்ளிகளை உறுதியாக அனுமதிக்க மறுத்தார்.
இதனை முன் எடுத்துக்காட்டாகக் கொண்டாவது இந்திய அரசின் ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா திட்டத்தை தமிழ் நாட்டில் அனுமதிக்கக்கூடாது என தமிழக அரசை தமிழ்க் காப்பணி கேட்டுக் கொள்கிறது.
3) எல்லைப் போராட்டம், மொழிப் போராட்டம் குறித்த வரலாறுகளை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ் மொழிக் காக்க 1938 லும் 1965 லும் தமிழ் நாட்டில் நடைபெற்ற மொழிப் போராட்டம் மாபெரும் தமிழின எழுச்சியாகும். அதே போல் தமிழ் நாட்டின் வடக்கெல்லையையும் தெற்கு எல்லையையும் மீட்பதற்காக சான்றோர்கள் தலைமையில் பெரும் ஈகம் செய்து நடைபெற்றப் போராட்டம் தமிழர் வரலாற்றுத் தாயகத்தை பாதுகாப்பதற்காக நடைபெற்றப் போராட்டமாகும்.
மேற்கண்ட இப் போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்ற, தமிழக அரசியல் வரலாற்றில் திருப்பு முனையை நிகழ்த்திய போராட்டங்கள் ஆகும். எனவே எல்லை மீட்புப் போராட்டங்கள், மொழிப் போராட்டங்கள் ஆகியவை குறித்த வரலாற்றை பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் பாடப் புத்தகங்களில் இடம் பெறச் செய்ய வேண்டும் என தமிழக அரசை தமிழ்க் காப்பணி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
நிறைவாக பொருளாளர் சி.ஆறுமுகம் நன்றி தெரிவித்தார்.
விழாவில் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும், பெற்றோர்களும், பல்வேறு அமைப்புத் தோழர்களும் உணர்வாளர்களும் திரளாக பங்கேற்றனர்.
(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)
Leave a Comment