ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஆம் ஆத்மி கட்சியும் தமிழினக் கட்சிகளும்


நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில் மூன்று மாநிலங்களில் காங்கிரசு படு தோல்வி அடைந்தது குறித்துத் தன்னாய்வு செய்து கொள்ளப்போவதாக சோனியா காந்தி அறிவித்துள்ளார். வட மொழியில் “ஆத்ம பரிசோதனை” என்று சொல்லப்படுகின்ற “தன்மன ஆய்வை” ( Introspection) உண்மையாகவே செய்துகொள்ள சோனியா காந்தி விரும்பினால் அவர்க்கு உதவி செய்யும் பொருட்டு நம் ஆசான் திருவள்ளுவர் அறிவுரையை அவர்க்கு அனுப்பி வைக்கலாம்.

எனைப் பகை உற்றாரும் உய்வர்; வினைப்பகை

வீயாது பின் சென்று அடும்
-குறள் 207


(எத்துணை பெரிய பகையிடமிருந்தும் தப்பிக்கலாம். ஆனால் பிறர்க்குக் தீங்கு செய்தால் அந்தத் தீவினையிலிருந்து தப்ப முடியாது. அவர் பின் சென்று அது தாக்கும்)

அனைத்திந்திய அமைப்பை நடத்தக் கூடிய எந்தத் திறமையும் இல்லாமல், புகுந்த வீட்டின் செல்வாக்கைக் கொண்டு பழம்பெரும் கட்டமைப்பைக் கொண்ட காங்கிரசின் மீது குந்திக் கொண்டு கோலோச்சுகிறார் சோனியாகாந்தி.

பெரும் மாநிலங்களான மத்தியப் பிரதேசத்திலும் இராசஸ்தானிலும் பா.ச.க. பெரும் வெற்றி பெற்றுள்ளது. சத்தீசுகட்டிலும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. தில்லியில் தனிப்பெரும் கட்சியாக (31) உருவெடுத்துள்ளது.

பா.ச.க.வினர் தாங்கள் ஏற்கெனவே திட்டமிட்டுப் பேசி வந்த “மோடி அலை” அடித்துள்ளதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். மோடியின் செல்வாக்கினால், பரப்புரையால் இராசஸ்தான் மட்டுமே பயனடைந்துள்ளது என்று பார்வையாளர்கள் கருதுகிறார்கள். மத்தியப் பிரதேசம், இராசஸ்தான் ஆகியவற்றில் மாநிலக் கட்சிகள் கிடையாது. உ.பி. பீகார், மகாராஷ்டிரா, போன்றவற்றில் மாநிலக் கட்சி இருக்கின்றன. மே.வங்கம், கேரளம் ஆகிவற்றில் சி.பி.எம். மாநிலக் கட்சிபோல் உள்ளது. மாநில கட்சிகள் வலுவாக உள்ள மாநிலங்களில் பா.ச.க., காங்கிரசு கட்சிகளுக்கு வாய்ப்பில்லை.

அனைத்திந்திய அளவில் மோடி அலை அடிக்கப்போவதில்லை.

ஒவ்வொரு மாநில முடிவுக்கும் அதனதன் உள்ளூர்க் காரணங்கள் முதன்மையாக இருக்கின்றன. இருந்த போதிலும் ஒரு பொதுக் காரணமும் இருக்கிறது. அது காங்கிரசுத் தலைவர்களின் இறுமாப்பு, குழுச்சண்டை, சொந்த ஆதாயத்தில் மட்டுமே நாட்டம் கொண்டு கட்சியின் நலனைப் புறக்கணிக்கும் மிகைத் தன்னலச் சார்பு, காங்கிரசு தலைமை தாங்கும் நடுவணரசின் உலகமயப் பொருளியல் கொள்கையால் ஏற்பட்ட ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, அடுக்கடுக்கான இமாலய ஊழல்கள் போன்றவை காங்கிரசின் மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தின.

புதிய கட்சியான ஆம் ஆத்மி கட்சி தில்லியில் 28 இடங்களைப் பெற்றது கவனிக்க வேண்டிய செய்தி. கட்சி தொடங்கி ஓர் ஆண்டிற்குள் இவ்வெற்றி கிடைத்துள்ளது. 70 லிட்டர் தண்ணீர் கொடுப்போம், மின் கட்டணத்தை பாதியாக அல்லது 40 விழுக்காடு அளவுக்குக் குறைப்போம் என்பன போன்ற வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கொடுத்தது. ஆனால் வாக்களர்களுக்குப் பணம் கொடுக்கவில்லை என்று பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

“ஊழல் ஒழிப்பு – மக்களுக்கு அதிகாரம்” என்பவைதாம் ஆம் ஆத்மியின் முதன்மை முழக்கங்கள். அரசாங்கத்தில் உள்ள பிரதமர் உள்ளிட்ட அனைவரையும் விசாரித்து தண்டிக்கும் அதிகாரம் உள்ள மக்கள் நீதி மன்றம் (லோக்பால்) வேண்டும் என்பது ஆம் ஆத்மியின் முதன்மையான கோரிக்கை.

இவை அனைத்திந்திய முழக்கங்கள்தான், ஆனால் இவை குறிப்பாக தில்லி மாநிலத்தில் சீலா தீட்சித் ஆட்சியுடன் பொருத்திப் பேசப்பட்டன. ஆம் ஆத்மிக் கட்சியின் வெற்றி தில்லியின் மாநிலத் தன்மையுடன் கூடிய வெற்றியே. அக்கட்சி அனைத்திந்திய அளவில் அமைக்கப்பட முயற்சி நடந்து வருகிறது.

ஊழல் ஒழிப்பு மக்களுக்கு அதிகாரம் என்பவை சரியான முழக்கங்கள். ஆம் ஆத்மியோ அன்னா அசாரேயோ அவற்றுடன் நிற்பதில்லை. மிதமிஞ்சிய போதையாக இந்தியத் தேசியத்தை ஊட்டுகின்றனர். இந்தியா முழுவதும் இந்திமொழி ஆட்சி மொழியாக வேண்டும் என்பது அவர்களது விருப்பம். தங்கள் போராட்டங்களின் ஈர்ப்புச் சின்னமாக இந்திய அரசுக் கொடியைப் பயன்படுத்துகின்றனர்.

தமிழ்நாட்டிலும் ஆம் ஆத்மி கட்சி செயல்படுகிறது. தமிழர் என்ற தேசிய இன அடையாளத்தை மறுத்து இந்தியர் என்ற அடையாளத்தைத் திணிப்பது அரவிந்த் கெஜ்வரிவால் – அன்னா அசாரே ஆகியோரின் திட்டம். இதே போல் மற்ற தேசிய இனங்களின் அடையாளங்களையும் அவர்கள் வெறுக்கின்றனர். தேசிய இனத் தாயகத்தை மண்டலம் / வட்டாரம் (region) என்று அழைக்கின்றனர்.

மேற்கண்டவற்றைக் கூட்டிப் பார்த்தால் இந்தியாவின் ஆரியத் தொன்மையில் அவர்கள் இயல்பாகக் கால் பதிக்கிறார்கள் என்பது தெரியும். எனவே தமிழர்கள் மேற்கண்ட சில நல்ல கோரிக்கைகளுக்காக ஆம் ஆத்மியை ஆதரிக்க முடியாது.

ஆனால் ஆம் ஆத்மியின் வெற்றியிலிருந்து தமிழகத்தில் செயல்படும் தமிழின உணர்வுள்ள தேர்தல் கட்சிகள் சில படிப்பினைகளைப் பெற வேண்டும். அந்த அமைப்பு தனக்கென தனித் தன்மையுள்ள சில உயரிய நோக்கங்களை – மாற்று அரசியல் திட்டங்களாக முன்வைத்து தற்சார்புடன் இயக்கம் நடத்தி தில்லியில் மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளது.

காங்கிரசும் – பா.ச.க.வும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்தாம் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. காங்கிரசு ஆதரவை ஏற்றிருந்தால் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் ஆகியிருப்பார். ஆனால் காங்கிரசு அல்லது பா.ச.க. ஆதரவுடன் அமைச்சரவை அமைக்க மாட்டோம் என்று அறிவித்துவிட்டார்.

தமிழ்நாட்டில் செல்லாத நாணயத்தின் இரண்டு பக்கங்களாகவும், சாக்கடை அரசியலின் இரண்டு கரைகளாகவும் தி.மு.க.வும் , அ.இ.அ.தி.மு.க.வும் உள்ளன. இவ்விரு கட்சிகளில் ஏதாவது ஒன்றுடன் கூட்டணி சேர்வது என்ற சந்தர்ப்பவாத அரசியலை கட்சி தொடங்கிய காலத்திலிருந்து கடைபிடித்து வருகின்றன தமிழகத்தில் உள்ள தமிழின உணர்வுக் கட்சிகள். அதேபோல் காங்கிரசுடனும், பா.ச.க.வுடனும் இவ்வினவுணர்வுக் கட்சிகள் கூட்டணி வைத்துக் கொள்கின்றன.

நாளை கிடைக்கும் பலாக்காயை விட இன்று கிடைக்கும் களாக்காயே மேல் என்று இக் கட்சிகள் கருதுகின்றன.

நாம் சுட்டுகின்ற இன உணர்வுக் கட்சிகள், அவை தொடங்கப்பட்ட காலத்திலேயே தமிழகத்திற்குரிய தனித் தன்மை வாய்ந்த அரசியல் – சமூகவியல் – பொருளியல் அறவியல் கொள்கைகளை முன் வைத்துத் தனித் தன்மையுடன் செயல்பட்டிருந்தால் இந்நேரம் அவை தி.மு.க.வுக்கும். அ.இ.அ.தி.மு.க விற்கும் மாற்று ஆற்றல்களாக வளர்ந்திருக்க முடியும். தொடக்கத்தில் தோல்விகளைச் சந்திக்கத் துணிந்திருக்க வேண்டும். அவ்வாறான கொள்கைத் துணிவில்லாததால் மாற்று ஆற்றலாக விசயகாந்த் கட்சியை ஒரு சாரார் அடையாளம் கண்டார்கள்.

பெரிய வளை தேடி வந்த பதவிப் பெருச்சாளிகள் பிரிந்து சென்றால் செல்லட்டும் என்று துணிந்து செயல் பட்டிருக்க வேண்டும். கொள்கை உரம் கொண்ட, இனவுணர்வு கொண்ட, ஈழவிடுதலையில் உண்மையான அக்கறை கொண்ட, இளைஞர்களை தொண்டர்களை அடித்தளமாக்கிக் கட்சியைக் கட்டியிருக்க வேண்டும். தலைவர் என்பவர் பதவி வாங்கித் தரும் ஆற்றல் பெற்றவராக இருக்க வேண்டும் என்பது பதவி தேடிகள் வைத்துள்ள இலக்கணம்.

ஆம் ஆத்மி கட்சியின் கட்டமைப்பு அப்படிப்பட்ட தொண்டர்களைக் கொண்டதாக இல்லை.

இப்பொழுது, இனவுணர்வு அமைப்புகள் சிலவற்றை மோடி மோகம் அலைக் கழிக்கிறது. ஆர். எஸ். எஸ். கண்டறிந்த மாய மனிதர் மோடி! மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டதே தவறு என்று திருச்சியில் முழங்கினார் மோடி! பார்ப்பனியத்தின் பார்ப்பனரல்லாத தலைவர் மோடி! வல்லரசிய முதலாளியத்தின் தூசிப் படைத் தளபதி மோடி! தமிழகத் தமிழர்களுக்கும் தமிழீழத் தமிழர்களுக்கும் பகை ஆற்றல் மோடி!

பங்காளிச் சண்டையில் காங்கிரசைவிட்டு வெளியேறிய தமிழருவிமணியன் போன்றவர்களுக்கு பா.ச.க.பகை ஆற்றல் அன்று; இன்னொரு பாரத மாதா பாசறை! ஈழ விடுதலை, தமிழின உணர்வு என்ற அடிப்படையில் செயல்படும் கட்சிகள் காங்கிரசும், பாசகவும் இனப்பகை முகாம்கள் என்பதை அறிய வேண்டும்.

ஈழவிடுதலை, தமிழின உணர்வு என்ற தளத்தில் தமிழ்நாட்டில் செயல்படும் அரசியல் கட்சிகள் – தங்களுக்குள் இணக்கம் காணமல் ஆளுக்கொரு திசையில் உள்ளன. இக்கட்சிகள் தமிழகத்தை மையப்படுத்தி இன அடிப்படையில், குறைந்த அளவு வேலைத்திட்டத்தைக் கூட வைத்துக் கொள்ளவில்லை. அவ்வபோது எதிர்வினைப் போராட்டங்களை மட்டுமே நடத்துகின்றன.
இனியும் பழைய பாதையில் சென்று, பெரிய கட்சிகளின் நிழல் தேடினால் இன்னும் இருபதாண்டுகள் ஆனாலும் பெரிய கட்சிகளின் இடுப்பளவிற்குக் கூட இந்த இன உணர்வு கட்சிகளால் வளர முடியாது.

சந்தர்ப்பவாதக் கூட்டணிவாத நோயினால் முடமாகிப் போன சி.பி.எம்., சி.பி. ஐ. கட்சிகளின் கதியை இன உணர்வுக் கட்சிகள் பார்க்க வேண்டும். நடந்த முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியான பட்டியலில் கூட சி.பி.எம், சி.பி.ஐ. கட்சிகள் இடம் பெறவில்லை.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி விடுதலை இயக்கம் என்பதால் அது தேர்தலில் போட்டியிடாது. அதேவேளை தேர்தலில் போட்டியிடும் இனவுணர்வுள்ள தோழமைக் கட்சிகளின் செயல்பாட்டை ஆக்கவழியில் திறனாய்வு செய்கிறது.

இன உரிமைகளைக் காத்திட, தமிழில் கல்விமொழி ஆட்சி மொழி ஆக்கிட, அரசியலில் அறம் காத்திட, பன்னாட்டு முதலாளிகளின் பொருளியல் வேட்டையை தடுத்திட,அணு உலைகளை மூடிட, மரணதண்டனையை ஒழித்திட, ஈழத் தமிழர் களைக் காத்திட தற்சார்புக் கொள்கைகளுடன் தமிழின அமைப்புகள் செயல்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

இக்கட்டுரை,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2013 டிசம்பர் 16-31 இதழில் தலையங்கமாக வெளிவந்தது.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.