தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வீரவணக்கம்!
சமத்துவம், மனித உரிமை காக்கும் போராட்டங்களின் உலக தழுவியக் குறியீடாக வாழ்ந்த மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா, தனது 95 ஆவது வயதில் நேற்று (05.12.2013) இரவு காலமானார் என்ற செய்தியை தென்னாப்பிரிக்கக் குடியரசுத் தலைவர் சுமா அறிவித்த போது, தமிழர்கள் உள்ளிட்ட மனித நேய உலகமே சோகத்தில் ஆழ்ந்தது.
மாமனிதர் – தலைசிறந்த மகத்துவப் போராளி மண்டேலா அவர்களுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வீரவணக்கம் செலுத்துகிறது.
கற்பனையிலும் கருதிப்பார்க்க முடியாத நிறவெறி ஒடுக்குமுறையின் கீழ், தென்னாப்பிரிக்கக் கருப்பின மக்கள் சிக்கி நசுக்குண்டு இருந்த போது, இளம் வயதிலேயே மண்டேலா நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் குதித்தார்.
வால்டர் சிசிலு, ஆலிவர் டேம்போ ஆகியோரோடு இணைந்து, ஆப்ரிக்க தேசியக் காங்கிரசின் இளைஞரணியின் தலைமைக்குழுவுக்கு வந்ததிலிருந்து, அவரது போராட்ட வாழ்வு தீவிரம் பெற்றது.
வெள்ளை நிறவெறிக்கு எதிரான, கருப்பின மக்களின் சம உரிமைப் போராட்டத்தை அமைதி வழியில் நடத்தி வந்த மண்டேலா, வெள்ளை நிறவெறி ஆட்சியின் அடக்குமுறைகள், கண்மண் தெரியாத கைதுகள், சித்திரவதைகள் ஆகியவற்றை எதிர் கொண்டு, ஆயுதப் போராட்டத்திற்குத் தள்ளப்பட்டது.
1961இல், ”தேசத்தின் ஈட்டி” என்ற பெயரில் மண்டேலா தலைமையிலான தோழர்கள், சிசுலு, தென்னாப்பிரிக்கக் கம்யுனிஸ்ட் கட்சித் தோழர் ஜோஸ் லோவா ஆகியோர் உருவாக்கிய விடுதலைப்படை வீரஞ்செறிந்த கருப்பின மக்களின் போராட்டத்தை வழிநடத்தியது.
இன சமத்துவத்திற்கானப் போராட்டத்தில், தொழிலாளிகளை ஈடுபடுத்தி, வேலை நிறுத்தப் போராட்டத்தை வழிநடத்தியதால், 1961-இல் ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நெல்சன் மண்டேலா, சிறையிலிருந்தபடியே 1963இல் ரிவோனியா சதி வழக்கில் விசாரிக்கப்பட்டு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.
அச்சதி வழக்கு விசாரணையையே கருப்பின மக்களின் சமத்துவத்திற்கான விவாதக் களமாக மண்டேலா மாற்றினார். ஜவனர்பெர்த் நீதிமன்றத்தில் நெல்சன் மண்டேலா ஆற்றிய உரை, தென்னாப்பிரிக்க நிறவெறி அரசின் தணிக்கைக் கெடுபிடியைத் தாண்டி தென்னாப்பிரிக்கா எங்கும் பரவியது. உலகம் முழுவதும் செய்தித்தாள்களில் அவருடைய உரை இடம்பெற்றது. அது, மேற்குலகம் உள்ளிட்ட உலக நாடுகள் எங்குமுள்ள மனித நேயர்களை வீதிக்கு அழைத்தது. ”மண்டெலாவை விடுதலை செய்! நிறவெறி அரசு ஒழிக!” என்ற முழக்கம் உலக நாடுகள் எங்கும் எதிரொலித்தது.
ரோபன் தீவு தனிமைச் சிறையில் கொடுமையான சூழலில் அடைபட்டிருந்த போதும், கருப்பின மக்களின் விடியலுக்கானப் போராட்டத்திற்கு சிறையிலிருந்தபடியே தலைமை தாங்கினார் மண்டேலா.
நெடிய போராட்டத்தின் விளைவாகவும், உலகம் முழுவதும் அப்போராட்டத்திற்கு ஏற்பட்ட வலுவான ஆதரவினாலும் 1993 – இறுதியில் தென்னாப்பிரிக்காவில் நிறவெறி முடிவுக்கு வந்தது.
தென்னாப்பிரிக்க கருப்பின மக்களுக்கு முதல் முறையாக வாக்குரிமை அளிக்கப்பட்டு நடைபெற்றத் தேர்தலில், ஆப்ரிக்க தேசியக் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது. 1994 தொடங்கி 1999 வரை, நெல்சன் மண்டெலா தென்னாப்பிரிக்காவின் குடியரசுத் தலைவராகச் செயல்பட்டார்.
மிக நீண்ட காலம் ஒடுக்குண்டு இருந்த கருப்பின மக்களிடம் பொங்கி வந்த பழிவாங்கும் உணர்ச்சி, தென்னாப்பிரிக்க வெள்ளையர்களுக்கு எதிராக திரும்பி விடாமல் பாதுகாக்கும் அரணாகவும் மண்டேலா திகழ்ந்தார். நிறவெறி ஆட்சியில் கொடுங்கோன்மை புரிந்த அதிகாரிகள் மற்றும் உயர்மட்டத் தலைவர்களை தண்டித்து, அதே நேரம் வெள்ளையின மக்களுடன் கருப்பின மக்களுக்கு நல்லிணக்கம் ஏற்படுத்திய செயலிலும் மண்டேலா வெற்றி பெற்றார்.
1999க்குப் பிறகு, அரசு மற்றும் கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகி, எய்ட்ஸ் ஒழிப்புப் பணியி்ல் முழுக்கவனம் செலுத்தினார்.
அமைதிக்கான நோபல் பரிசு, ஆர்தர் ஆப் லெனின், பாரத ரத்னா உள்ளிட்ட 205க்கும் மேற்பட்ட உயர் விருதுகளை மண்டேலா பெற்றார்.
கடந்த ஓராண்டாக மூச்சுத் திணறல் நோயில் பாதிக்கப்பட்ட நெல்சன் மண்டேலா, 05.12.2013 இரவு தனது கடைசி மூச்சை நிறுத்தினார்.
உலகில் எங்கு இன சமத்துவத்திற்கு, ஒடுக்குண்ட இனங்களின் விடுதலைக்கு போராட்டங்கள் நடைபெற்றாலும், அவற்றுக்கு ஒரு மாபெரும் உந்து விசையாக நெல்சன் மண்டேலா திகழ்வார்.
தலைவர் நெல்சன் மண்டேலா அவர்களுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வீரவணக்கம் செலுத்துகிறது. அவருடைய பிரிவால் துயரமடைந்திருக்கும், ஆப்ரிக்க மக்களோடும், உலகெங்குமுள்ள ஒடுக்குண்ட மக்களோடும் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறது.
(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)
Leave a Comment