ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தேர்தல் பிசாசு


தங்கத்தின் மீது மக்களுக்குள்ள வெறியைப் பார்த்து மஞ்சள் பிசாசு படுத்தும் பாடு என்பர்பாலுணர்ச்சி வெறியைக் காமப்பிசாசு என்பர். இந்த வரிசையில் தேர்தல் பிசாசையும் சேர்த்துக் கொள்ளலாம். தமிழ்நாட்டை ஆட்டி அலைக்கழித்து விட்டது தேர்தல்; தமிழின உரிமைப் போராளிகள் பலரைப் புரட்டிப் போட்டு விட்டது.

கண்ணபிரான்கள் துரியோதனர்களுக்குத் தேரோட்டப் போனது போல”, இன உரிமைப் போராளிகள் இந்தத் தேர்தலில் இடம் மாறினர். போராளியான வைகோ, இரண்டு மாதங்களாக நரேந்திர மோடியின் நாமாவளி பாடிக் கொண்டிருந்தார். ஈழத் தமிழர் விடுதலைப் போரின் தமிழ்நாட்டு அடையாளச் சின்னமாக அறியப்பட்ட ஐயா பழ.நெடுமாறன், இராசபட்சேயின் இந்தியப் பாசறைகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்குக் கேட்டார்.

அணுஉலை எதிர்ப்பில் புதிய போர்முறை கண்டு இடிந்தகரையை இந்த உலகமே திரும்பிப்பார்க்கச் செய்த சுப. உதயகுமார் தோழர்கள் ஆம் ஆத்மியின் இந்திய வெறித் தொப்பிக்குள் அடைக்கலமாகி விட்டார்கள்.

கூட்டுப் போராட்டங்களில் கூடுதல் எண்ணிக்கையில் மக்களைத் திரட்டி வரும் திரு வேல்முருகன் அடுத்த தேர்தலை மனதில் வைத்து அம்மா அணிக்கு முந்திக் கொண்டார்.

கல்லெறிபட்டுக் கலைந்து போன தேன் கூடு போல, தேர்தல் எறிபட்டுத் தமிழின உரிமை அமைப்புகளின் சேர்க்கை சிதைந்து கிடக்கிறது. மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்பினால் அது நம் மார்பில்தான் விழும்.

அதேவேளை கண்ணியமான திறனாய்வுகள் இல்லாமல் தமிழ்த் தேசிய அரசியலை முன் நகர்த்த முடியாது. இந்திய ஏகாதிபத்தியம் நடத்தும் காலனியத் தேர்தல்களைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஏற்கவில்லை. தேர்தல் புறக்கணிப்பு என்றாலே அது தீவிரவாதம் என்று கருத வேண்டியதில்லை. மாண்டேகுசெம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை ஒட்டி 1920 களில் பிரித்தானிய ஏகாதிபத்தியம் இந்தியாவில் நடத்திய தேர்தல்களை காங்கிரசுக் கட்சி புறக்கணித்தது. காந்தியார் புறக்கணித்தார். “எங்களை அடிமைப்படுத்தியுள்ள பிரித்தானிய ஏகாதிபத்தியம் நடத்தும் தேர்தலில் பங்கேற்க முடியாது; நாட்டு விடுதலைதான் முதல் தேவைஎன்று அப்புறக் கணிப்புக்குக் காங்கிரசு காரணம் கூறியது.

ஆனால் காங்கிரசுக் கட்சிக்குள்ளேயே, தேர்தலில் பங்கெடுக்க வேண்டும் என்று மோதிலால்நேரு, சத்தியமூர்த்தி, பிற்காலத்தில் இராசாசி போன்றோர் வலியுறுத்தி வந்தனர். இந்த நெருக்குதலால் 1937-இல் காங்கிரசுக் கட்சி ஒரு நிபந்தனையுடன் தேர்தலில் பங்கெடுத்தது. கட்சி முடிவெடுத்தால் பதவி விலகுவேன் என்று உறுதி மொழியில் கையெழுத்துப் போடுபவர் தாம் வேட்பாளாராக நிற்கலாம் என்பதே அந்த நிபந்தனை. அவ்வாறே 1939 இல் காங்கிரசு அமைச்சரவைகள் பதவி விலகின.

தேர்தலில் பங்கு கொள்ளாததற்காகப் பிரித்தானிய ஏகாதிபத்திய அரசு, காங்கிரசுசைத் தடை செய்யவில்லை. தேர்தலில் பங்கு கொள்வதும் பங்கு கொள்ளாதததும் ஒருவரின், ஓர் அமைப்பின் அடிப்படை உரிமை.

ஆனால் இந்த மக்களவைத் தேர்தலில், இந்திய அரசு, தேர்தல் ஆணையம், ஊடகங்கள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் எல்லாம் சேர்ந்து கொண்டு, “ வாக்களிப்பது புனிதக் கடமைஎன்றும், ”வாக்களிக்காதது பொறுப்பற்ற செயல் என்றும் பரப்புரைப் போர் நடத்தின.

ஒரு கொள்கை அடிப்படையில் வாக்களிக்காமல் இருப்பது தான் உண்மையில்; போற்றுதலுக்குரிய செயல். ஏன்? அவரவரும் பதவி ஆசையில் ஆலாய்ப பறக்கும் போது பதவி ஆசை துறந்து, தமிழ்த் தேச உரிமை மீட்பில் கவனஞ் செலுத்தி, கடமையாற்றுவது, மெய்யான துறவியரின் தவம் போன்ற செயல் அல்லவா!
ஏதாவதொரு தேர்தல் கட்சி, அல்லது யாராவதொரு அரசியல் கதாநாயகன், அரசியல் கதாநாயகி தலைமையை நாடி தேர்தலுக்குத் தேர்தல் ஏமாந்தும், மீண்டும் ஏமாறப் போட்டி போட்டுக் கொண்டு ஓடும் மக்களைவிடத் தமிழ்த் தேசிய இலட்சியம் சார்ந்து, தமிழ்த் தேசியப் பெருமிதஞ் சார்ந்து நின்று, வாக்களிக்க மறுப்பது போற்றுதலுக் குரியதல்லவா! ”எனது அடிமைத் தனத்தைப் புதுப்பித்துக் கொள்ள நான் வாக்களிக்க மாட்டேன் என்று அறிவிப்பது, தன்னுரிமை சார்ந்த செயலல்லவா!

வடநாட்டை கஜினி முகமதுவும் கோரி முகமதுவும் திரும்பத்திரும்பக் கொள்ளையடித்தார்கள் என்று வரலாற்று நூலில் படித்துள்ளோம். ஆனால் அனைத்திந்தியக் கட்சித் தலைவர்களும் தமிழகக் கட்சிகளின் தலைவர்களும் அடித்து வரும் கொள்ளைக்கு முன் ஆயிரம் கோரிமுகமதுகள் கூட நிகராக மாட்டார்கள். ஆயிரம் கஜினி முகமதுகள் நின் நிகர் ஆவரோ தெரியின் அம்மா!.

அலைக்கற்றை ஊழல் 1,76,000 கோடி ரூபாய்; நிலக்கரி ஊழல் 1,86,000 கோடி ரூபாய்! விண்வெளி ஆய்வில் ஊழல், விளையாட்டு நடத்தியதில் ஊழல், வீடுகட்டியதில் ஊழல். இவையெல்லாம் அனைத்திந்திய ஊழல்கள்!

தமிழ்நாட்டு ஊழல்கள் வண்ணமயமானவை. ஆசிரியர் பணி இடமாற்றத்துக்குப் ஆயிரக்கணக்கில் கையூட்டு, பேராசிரியர் பணிக்கு இலட்சக்கணக்கில் கையூட்டு, துணைவேந்தர் பதவிக்குத் கோடிக் கணக்கில் கையூட்டு! ஒப்பந்தப் பணிகளுக்கு ஒதுக்கீட்டில் விழுக்காடு; நூலகங்களுக்கு நூல் வாங்க மொத்தவிலையில் இருபது விழுக்காடு, விலையில்லாப் பொருள்கள் வழங்கலிலும் விழுக்காடுகள்!

இந்தியப் பெருமுதலாளிகளும், பன்னாட்டுப் பெருமுதலாளிகளும் தமிழ்நாட்டைச் சூறையாடத் தமிழக ஆட்சியாளர்களுக்குத் தர வேண்டியது நூறு கோடியா, ஆயிரங்கோடியா என்று கூடிப்பேசி புரிதல் உண்டாக்கிக் கொள்வது தான் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

நெருக்குகின்ற வறுமையும் வேலையின்மையும் ஒரு பக்கம்அரசியல் வாதிகளும் பெரு முதலாளிகளும் அடிக்கின்ற கொள்ளையும், அவர்களின் அரண்மனை வாழ்வும் மறுபக்கம்! இவற்றை ஒப்பிட்டுப் பார்த்து மக்கள் புரட்சியில் இறங்கிவிடுவார்களோ என்ற அச்சம் பெருமுதலாளிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும்! மக்களின் கவனத்தை மடைமாற்றத் தான் தேர்தல் திருவிழா; ”வாக்களிப்பது கடமை என்ற அவர்களின் புனிதப் பேச்சுகள்.

ஊழலுக்குப் பழகிப் போன மக்களை உருவாக்க வேண்டும். ஊழலை ஏற்கும் மக்கள் ஊழல் வாதிகளுக்கு வாக்களித்து, ஊழல் வாதிகளிடம் ஆட்சியை ஒப்படைப்பதே சனநாயகம் என்பது அவர்கள் கோட்பாடு.

தமிழின உரிமைகளுக்காகவும், மக்களின் ஞாயமான கோரிக்கைகளுக்காவும் போராடி வந்த நம்முடைய தோழமைக் கட்சிகள்இயக்கங்கள் மாற்றுத் திட்டங்களை முன்வைத்து தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கிக் கொண்டு போட்டியிட்டிருக்கலாம். ஆனால் அதற்கு எந்த முயற்சியும் செய்யாமல், தமிழினப் பகைக் கட்சிகளுடனும், ஊழல் பெருச்சாளிகளுடனும் தனித்தனியே கூட்டணி சேர்ந்து தங்களின் தனிதன்மையை இழந்தன, இப்போக்கு அக்கட்சிகளை வளர்க்காது. நிரந்தரச் சிற்றமைப்புகளாகவே அவற்றை நீடிக்கச் செய்யும். ஊழல் பெருச்சாளிகளின்உரிமை மறுப்புக் கழுகுகளின் நிழல் தேடும் அமைப்புகளாகவே அவற்றை நீடிக்கச் செய்யும்.

இப்போக்கை மாற்ற அக்கட்சிகளும் தலைவர்களும் இனியாவது முயன்றால் நல்லது.

இக்கட்டுரை,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2014 மே 1-15 இதழில் தலையங்கமாக வெளிவந்தது.

1 comment:

  1. கண்ணியமான திறனாய்வுகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.