இலங்கையில் தமிழ்முஸ்லீம்களுக்கு எதிராக இனவெறித் தாக்குதல் இந்திய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வலியுறுத்தி - தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
இலங்கையில் தமிழ்முஸ்லீம்களுக்கு எதிராக இனவெறித் தாக்குதல் இந்திய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஈழத்தமிழர்கள் இன அழிப்பைத் தொடர்ந்து, இப்போது தமிழ் முஸ்லீம்களை குறிவைத்து இனவெறித் தாக்குதல்களை தீவிரப் படுத்தியுள்ளது சிங்கள – பவுத்தப் பேரினவாதம்.
அண்மைக்காலமாக இலங்கைத் தீவில் தெற்கில் வாழும் கிருத்துவர்களையும், முஸ்லீம்களையும் சிங்கள புத்த வெறியர்கள் திட்டமிட்ட வகையில் தாக்கி வருகின்றனர். இச் சிறுபான்மை மக்களுடைய வீடுகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டு இடங்கள் ஆகியவை தொடர்த் தாக்குதலுக்கும், சூறையாடலுக்கும் உள்ளாகி வருகின்றன.
குறிப்பாக சூன் 15 தொடங்கி அலுத்துகமா, பெருவலா, தர்காடவுன் போன்ற இடங்களில் இசுலாமியருக்கு எதிரான தாக்குதல்கள் ஓர் இனத் துடைப்பு நடவடிக்கையாக உச்சம் பெற்றுள்ளது “பொத்து பல சேனா” என்ற சிங்கள – புத்த வெறி அமைப்பு காவல்துறையின் துணையோடே இத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
சிங்கள புத்த பிக்குகள் தலைமையில் செயல்படும் இந்த காடையர் அமைப்புக்கு மகிந்த இராசபட்சேயும், கோத்தபய இராசபட்சேயும் வெளிப்படையாக ஆதரவு அளித்ததைத் தொடந்தே இவர்களது இன வெறியாட்டம் தீவிரம் பெற்றுள்ளது.
இலங்கையில் அரசு வழிப்பட்டு வேகமாக வளர்ந்து வரும் சிங்கள – பவுத்த பாசிசத்தின் உடன்பிறந்த விளைவு இது.
தமிழ் முஸ்லீம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப் பட்டுள்ள இந்த இன வெறித் தாக்குதலை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
சிங்கள – பவுத்த பாசிச இராசபட்சே கும்பலை இனப் படுகொலை தொடர்பாக பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தாமல் சர்வ தேச சமூகம் காலம் கடத்துவதால் ஊக்கம் பெற்றுள்ள இன வெறி கும்பல் அடுத்தடுத்து இன அழிப்பு நடவடிக்கைகளில் முனைப்புடன் இறங்குகிறது.
சிங்கள – பவுத்த பேரினவாத அடாவடிகள் அனைத்துக்கும் இந்திய அரசு பக்க பலமாக திகழ்வதால் எந்த கேள்விமுறையும் அற்று இந்த அநீதி தொடர்கிறது.
இலங்கை அரசின் துணையோடு சிங்கள் புத்த வெறியர்கள் தமிழ் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தும் இன வெறித் தாக்குதல்களை இப்போதாவது இந்திய அரசு வெளிப்படையாகக் கண்டிப்பதுடன், இந்த வெறியாட்டம் மேலும் தொடராமல் தடுத்து நிறுத்த முன் வரவேண்டும் என த.தே.பொ.க. சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/ Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment