கும்பகோணம் பள்ளித் தீவிபத்து வழக்கு: 11 பேர் விடுதலை; 10 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு
கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கில் 21 பேரில் 11 பேரை விடுதலை செய்து 10 பேர் குற்றவாளிகள் என தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முகமது அலி தீர்ப்பளித்துள்ளார்.
2004 சூலை 16 ஆம் தேதி கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் பள்ளி நிறுவனர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16ம் தேதி கும்பகோணம் காசிராமன் தெரு ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக பள்ளி நிறுவனர், தாளாளர், ஆசிரியர்கள் உள்ளிட்ட 24 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 3,126 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில், 469 பேர் சாட்சியாக சேர்க்கப்பட்டு, 60 முக்கிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2006ஆம் ஆண்டு தஞ்சை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு துரிதமாக நடைபெறவில்லை என்று குழந்தைகளை இழந்த பெற்றோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தீ விபத்து வழக்கு விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்றது. இதனிடையே இந்த வழக்கிலிருந்து முதன்மைக் கல்வி அலுவலர் முத்து பழனிச்சாமி, தாசில்தார் பரமசிவம், பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இதுவரை 232 பேரிடம் விசாரிக்கப்பட்டு, கடந்த 17ம் தேதியுடன் இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்றன. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு சூலை 30ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முகமது அலி தெரிவித்திருந்தார்.
இதன் படி பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமி, மனைவியும் தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பாலாஜி, பொறியாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாரம், கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நேரமுக உதவியாளர் துரைராஜ் ஆகியோர் இவ்வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முகமது அலி தீர்ப்பளித்தார்.
11 பேரை விடுதலை செய்யப்பட்டதற்கு உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு குறைந்த பட்ச தண்டனையாவது வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a Comment