காவிரியில் புதிய அணைகள் கட்ட கர்நாடகம் அடிக்கல் நாட்டினால் அங்கே போய் மறிப்போம்! - பெ. மணியரசன்
காவிரியில் புதிய அணைகள் கட்ட கர்நாடகம் அடிக்கல் நாட்டினால் அங்கே
போய் மறிப்போம்! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
கர்நாடகம்
காவிரியின் குறுக்கே நமது தமிழக எல்லைக்கு அருகில் மேகேதாட்டுப் பகுதியில் புதிதாக மூன்று அணைகள் கட்டத் திட்டமிட்டுள்ளதாகக் கடந்த ஆண்டே அறிவித்தது. இப்போது அந்நீர்த் தேக்கங்கள் கட்டுவதற்கான பன்னாட்டு ஏலம் (Global
Tender) கோரப்படும் என்று 11.11.2014 அன்று பெங்களூரில் கர்நாடகப் பாசனத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறினார்.
2013
ஆகஸ்ட்டில் கர்நாடகத்தில் பெருமழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போது கர்நாடக அணைகள் நிரம்பி மிச்ச நீர் தமிழகம் வந்து மேட்டூர் நிரம்பிவிட்டது. மேட்டூரிலிருந்தும் மிச்ச நீர் திறந்து விடப்பட்டது.
இதைப் பார்த்த கன்னட ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் அனைவர்க்கும் வயிறு எரிந்தது; பொறாமைத் தீ நெஞ்சைப் பொசுக்கியது. மேகேதாட்டுப் பகுதியில் புதிதாக மூன்று அணை கட்டும் திட்டத்தை அறிவித்தார்கள்.
பெங்களூரில் இப்போது எம்.பி.பாட்டீல் மேகேதாட்டுப் பகுதியில் இரண்டு அணை கட்டப்படும் என்றும் – அவற்றின் மொத்தக் கொள்ளளவு 48 ஆ.மி.க (T.M.C.) என்றும் கூறியுள்ளார். இவ்விரு அணைகளும் குடிநீர்க்காகவும், மின்சாரம் உற்பத்தி செய்வதற்காகவும்தான்
என்று கூறியுள்ளார்.
அத்தோடு
நில்லாமல் “தமிழ்நாடு எதிர்த்தாலும், உச்ச நீதிமன்றத்திற்குப் போனாலும் புதிய அணைகள் கட்டும் திட்டத்தைக் கைவிட மாட்டோம். மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமனே அணை கட்டச் சொல்லி விட்டார். எங்களை யாரும் தடுக்க முடியாது” என்று கூறித் தமிழ்நாட்டை அறை கூவலுக்கு (சவாலுக்கு) அழைத்துள்ளார்.
“ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் தமிழ்நாட்டிற்குத் தர முடியாது” என்று கூறும் கர்நாடகத்தின் தமிழினப் பகைத் தண்ணீர்க் கோட்பாட்டை செயல்படுத்தத்தான் புதிய அணைகள் கட்டப் போகிறார்கள்.
நடுவண் நீர்வளத் துறை ஒப்புதலைப் பெற்றுச் செய்வோம் என்கிறார் கன்னட அமைச்சர். அதிகாரப்படியான ஒப்புதல் கொடுக்காமல் பாராமுகமாக வேலையை முடித்துக் கொள்ளுங்கள் என்று இந்திய அரசு கூறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
செயலலிதா
ஆட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும். ஆண்டுக் கணக்கில் வழக்கு இழுத்துக் கொண்டு போகும். அதற்குள் அணைகளைக் கட்டி முடித்துவிடும் கர்நாடகம்!
கர்நாடகம்
புதிய அணைகள் கட்டியதில் யார் குற்றவாளி என்று செயலலிதாவும் கருணாநிதியும் குடுமிபிடிச் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். ஏமாளித் தமிழினம் இரண்டாகப் பிரிந்து வேடிக்கைப் பார்த்து இரசித்துக் கொண்டிருக்கும்.
இந்தியத்
தேசியம் பேசும் இனத் துரோகக் கட்சிகளும் திராவிடம் பேசும் இரண்டுங்கெட்டான் கட்சிகளும் ஆளுக்கொரு அறிக்கை விட்டு, அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தி அடங்கிப் போய்விடும்.
இந்தியா
முழுதும் ஓடும் ஆறுகளை இணைக்கப் போகிறோம் என்று ஆகாது என்று தெரிந்தே ஆரவாரம் செய்து கொண்டிருக்கும் பா.ச.க. நடுவண் ஆட்சி. ஏடறியாக் காலத்திலிருந்து ஓடி வந்த ஒற்றைக் காவிரியாறு இன அடிப்படையில் இரண்டு துண்டாக வெட்டுண்டு போனதை வேடிக்கை பார்க்கும்! அடுத்த தடவை எங்களை ஆட்சியில் அமர்த்துங்கள் வெட்டுண்டதை இணைத்துக் காட்டுகிறோம் என்று மோடி வித்தை சொல்லும்!
ஏ, ஏமாந்த தமிழினமே,
இந்தியத்தையும் திராவிடத்தையும் நம்பி இழந்தது போதாதா?
இடுப்பு வேட்டியையும் அவிழ்த்துக் கொண்டு உன்னை அம்மணமாக்கும் வரை நீ ஏமாந்து கொண்டுதான்
இருப்பாயா?
இதோ உனக்கான அசல் கொள்கை தமிழ்த் தேசியம்! தமிழர்
உரிமைகளுக்காக, தமிழர் தாயகத்திற்காக எழுந்து வருகிறது!
இனத்தாரின் அடிவருடியாக – அடுத்த இனத்தார்க்கு ஆலவட்டம்
சுழற்றுவதாக இருக்காது தமிழ்த் தேசியம்!
“மனிதர் அனைவரும் சமம்” என்ற அச்சாணியில் சுழலும்
தமிழ்த் தேசியம் – ஆதிக்கம் செய்யும் அயல் இனத்தாரிடம் அண்டிக் கெடுக்கும் அயல் இனத்தாரிடம்
“இந்தியன்” என்றும் “திராவிடன்” என்றும் ஏமாறாது!
தமிழர்களிடம் இனப்பகை காட்டுவோரிடம் தமிழர்களும்
இனப்பகையோடுதான் நடந்து கொள்ள வேண்டும். இல்லையேல் தமிழினம் அடிமை இனம் ஆகிவிடும்!
பாசனத்திற்கல்ல, குடிநீருக்கு, மின்சாரம் தயாரிக்க
என்று போக்குக் காட்டிக் கர்நாடகம் புதிய அணைகள் கட்ட முனைகிறது; அனுமதிக்கக் கூடாது.
புதிய அணைகள் கட்ட கால்கோள் நடத்தும் போது அதே இடத்தில்
சென்று தடுக்க வேண்டும்; நாம் மறியல் நடத்த வேண்டும்; களம் காண வேண்டும்.
அணைகளுக்கான அடிக்கல் நாட்டுவிழாவைக் கர்நாடகம்
அறிவித்தால், அங்கே செல்ல நாம் அணியமாக இருக்க வேண்டும். தமிழ்த் தேசியப் பேரியக்கம்
அனைவரையும் அழைக்கிறது.
இவ்வாறு தமது அறிக்கையில் தோழர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.
Leave a Comment