ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஓடினான்.. ஓடினான்.. வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினான், தமிழன் - பொன்னுசாமி

ஓடினான்.. ஓடினான்.. வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினான், தமிழன்  -  பொன்னுசாமி

தன் வாழ்க்கையை தமிழ் மக்களுக்காக அர்ப்பணித்துக் கொண்ட கலைஞர் கருணாநிதியை நடிகைகள் ரம்பாவும், குஷ்புவும் நினைத்த மாத்திரத்தில் சந்தித்துப் பூங்கொத்துக் கொடுக்க முடிகிறது. ஆனால், வேலை கேட்டு மனுக் கொடுக்கச் செல்லும் பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர்களோ, கல்விக் கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்களோ கருணாநிதியால் அடித்து விரட்டப்படுவார்கள்.

திரைப்பட விழாக்களில் அரைகுறை ஆடைகளுடன் நடிகைகளை ஆடவிட்டு முதுகுவலி வரும் வரை பலமணிநேரம் அமர்ந்து ரசிப்பார். சிறந்த நடிகர் விருதை ரஜினிக்குக் கொடுத்தும், பெண் வேடத்தில் தன் வீட்டுக்கு வந்த கமலஹாசனுக்கு முத்தம் கொடுத்தும் மகிழ்வார். பின்னர் இவர்கள் இருவரை விட்டே தனக்கே ஓர் அரசு விருதைக் கொடுத்துக் கொள்வார்.

ஒரு முதல்வருக்கே (‘உளியின் ஓசை’க்கு) சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான மாநில அரசின் விருது! இது இந்திய, தமிழக அரசியல், திரைப்பட வரலாறு கண்டறியாதது. அரசு விருது வழங்கும் விழாவை தொகுத்து வழங்கிய நடிகை குஷ்பு வள்ளுவரை, “வலுவர்” என்றார். பெரியாரின் கொள்கைகளை, “பெரியாரின் கொள்ளைகள்” என்றார். (இந்த விழாவில்தான், ‘பெரியார்’ படத்துக்கு நான்கு விருதுகள் வழங்கப்பட்டன). உளியின் ஓசையை “ஒலியின் ஓசை” என்றார், குஷ்பு. அப்போது குஷ்புவின் தமிழால் அரங்கில் ஏற்பட்ட சலசலப்பை தன்னுடைய பேச்சுத் துடுக்கால் திசைமாற்றி, “குஷ்பு இப்படியெல்லாம் பேசினாலும் தமிழை யாரும் அழிக்க முடியாது” என்று, சப்பைக் கட்டுக் கட்டினார், கருணாநிதி. (முன்னதாக பேசிய கமல், குஷ்புவின் தமிழை கலைஞர் ரசித்தார். குஷ்புவுக்கு என் வாழ்த்துகள் என்று சிலாகித்தார்).

குஷ்பு நல்ல நடிகையாக இருக்கலாம். ஆனால், அரசு விழாவைத் தொகுத்து வழங்க, குஷ்வுவைவிட நன்றாகத் தமிழ்ப் பேசும் நடிகை ஒருவர் கூடவா கிடைக்க வில்லை?

இதில் கவனக்குறைவாக இருந்துவிட்ட விழா ஏற்பாட்டாளர்களை கலைஞர் மருந்துக்குக்கூட கடிந்து கொள்ளவில்லையே ஏன்? இந்த விருது வழங்கும் விழாவுக்குப் பின்தான் திரைப்படத் துறையினருக்கான நல வாரிய உறுப்பினராக குஷ்புவை கருணாநிதி நியமித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவை, ‘கவர்ச்சி உடைகளில் திரைப்படங்களில் ஆடியவர்தானே’ என்று எழுதும் போக்கு முரசொலியில் இன்றுவரை தொடர்கிறதே! கலைஞர் தொலைக்காட்சியின் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் குஷ்பு உள்ளிட்ட நடிகைகளின் கவர்ச்சியை நாடறியும். “அந்த நிகழ்ச்சியின் தீவிர ரசிகன் நான்’’ என்று திருவாய் மலர்ந்தவர்தானே, கலைஞர். இவர் சிலாகிக்கும் குஷ்புவுக்கு இருக்கும் எல்லா நியாயங்களும் ஜெயலலிதாவுக்கும் உண்டுதானே?

திரைப்படங்கள் மீதான கருணாநிதியின் எல்லை கடந்த பேராசைக்கு மற்றொரும் சாட்சி, தமிழை வளர்க்க தமிழ்த் திரைப்படங்களுக்கு வழங்கப்படுவதாகச் சொல்லப்படும் கேளிக்கை வரி விலக்கு என்ற கேலிக்கூத்து. ரஜினியின் ‘சிவாஜி’ கருணாநிதியால் வரிவிலக்குப் பெற்ற தூயத் தமிழ்ப் பெயர் கொண்ட திரைப்படம் என்பதை மனதில் கொள்க. கலைஞரின் காலைப் பிடித்து, முதுகைச் சொறிந்து வரி விலக்குப் பெற்று அந்தப் பணத்தில் நடிகைகளுடன் வெளிநாட்டில் கூத்தாடி அதைப் படம் பிடித்து பணம் பார்ப்பவர்களால் இந்தச் சமூகத்துக்கு என்ன ஆதாயம்?

சென்னையை அடுத்த பையனூரரில் 75 ஏக்கர் நிலத்தை இலவசமாக சினிமாக்காரர்களுக்கு கருணாநிதி வழங்கியுள்ளார். அந்த இடத்தில் நடிகர், நடிகைகள் மற்றும் ஃபெப்சி உறுப்பினர்கள் (தொழிலாளிகளாம்!) 50 ஏக்கரில் வீடு கட்டிக் கொள்வார்களாம். கூடுதலாக 15 ஏக்கர் திரைப்படத் துறையினரின் பொதுவான பயன்பாட்டிற்காம். இந்த நிலத்துக்கு குத்தகையாக ஆண்டுக்கு ரூ.1.000 மட்டும் செலுத்தினால் போதும் (இது எப்படி இருக்கு?).

இந்தச் சலுகைகள் எல்லாம் நூறு ரூபாய் தினக் கூலிக்கு லைட் மேன்களாக வேலை பார்க்கும் திரைப்படத் தொழிலாளர்களுக்குப் போய் சேருமா என்பதை உங்களின் யூகத்திற்கு விட்டு விடுகிறேன். இதைவிட கொடுமை, திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் 10 ஏக்கர் நிலம் ஒதுக்கியிருக்கிறார், கருணாநிதி. நிலத்தின் வழிகாட்டு மதிப்பில் 3.5 சதவிகிதம் மட்டும் இதற்கு ஆண்டு குத்தகையாம்.

பட பூஜைக்கே சில கோடி ரூபாய்களை செலவு செய்யும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு இலவசமாக வீட்டுமனையாம். பண்ணை வீடுகளில் ஓய்வெடுக்கும் நடிகர்களும், நடிகைகளை நட்சத்திர விடுதிகளில் தங்கவைத்து அழகு பார்க்கும் திரைப்படத் தயாரிப்பாளர்களும் மனது வைத்தால் திரைப்படத் தொழிலாளர்களுக்கு எத்தனை ஆயிரம் வீடுகள் வேண்டுமானாலும் இலவசமாகக் கட்டித் தரமுடியும்.

தமிழ்நாட்டில் முதல் முதலாக உருவான கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம், நரிக்குறவர் நலவாரியம், பனைத் தொழிலாளர் நலவாரியம், விவசாயத் தொழிலாளர் நலவாரியம் என இருக்கும் நலவாரியங்கள் எல்லாம் நலிந்து, நசிந்து போய்க் கொண்டிருக்க, நேற்று உருவான திரைப்படத் துறை நலவாரியத்திற்கு மட்டும் பணத்தை வாரி இரைக்க என்னக் காரணம்?

இனப்படுகொலையைக் கண்டும் காணாமல் இருந்த கருணாநிதியை உணர்ச்சி உள்ள ஒருசில திரைப்படக் கலைஞர்கள் எதிர்த்தனர்; நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராகத் தேர்தல் பிரசாரம் செய்தனர். இனிமேலும் திரைப்படத் துறையிலிருந்து தனக்கும், தன் வாரிசுகளுக்கும் எவ்வித எதிர்ப்பும் வந்துவிடக் கூடாது என்ற தொலை நோக்கோடு(!) திரைப்படத் துறையினருக்கு இப்படி வாரி இரைக்கிறார்.

உழைக்கும் மக்கள் செலுத்திய வரிப் பணத்தில் கோடி, கோடியாய் செலவு செய்து நடத்தப்படும் திரைப்பட விழாக்களை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி காசு பார்க்கும் கருணாநிதி குடும்பத்தாரின் சதித் திட்டங்களைத் திரைப்படங்களில் மட்டும் அநியாயத்தைக் கண்டு பொங்கும் கதாநாயகர்கள் மௌனமே சாட்சியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள். “ஓடினான் ஓடினான் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினான், தமிழன்!”
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் சனவரி 2010
மாத இதழில் வெளியான கட்டுரை)


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.