ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

அறிவை விடுதலை செய்வோம் - கி. வெங்கட்ராமன்


அறிவுடையார் எல்லாம் உடையார்’’ என்றார் திருவள்ளுவப் பேராசான்! தனிஆள் வகையிலும் சரி, சமூகச் செயல்பாட்டிலும் சரி அறிவை ஆள்பவர்கள் மேல் நிலையில் நிற்கின்றனர். அவர்களில் சிலர் ஆதிக்க வாய்ப்பையும் பெறுகிறார்கள். அறிவு விடுதலையே சமூக விடுதலையின் முன் நிபந்தனை ஆகிறது.

அதுவும் இன்றுள்ள தகவல் யுகத்தில் அறிவுசார் மேலாண்மை என்பது சமூக மேலாதிக்கத்திற்கு உற்ற வழியாகத் திகழ்கிறது.

அறிவு என்றால் என்ன என்று வரையறுப்பது, அவ்வாறு வரையறுக்கப்பட்ட அறிவை உற்பத்தி செய்வது, அதனை மேலாண்மை செய்வது ஆகியவை ஆதிக்க ஆற்றல்கள் தன் ஆதிக்கத்தை உறுதி செய்வதற்கு மேற்கொள்ளும் வழிமுறைகள் ஆகும்.

இது இரண்டு வழிகளில் நடைபெறுகிறது. ஒன்று, அறிவை வரையறுத்து தமதாக்கிக் கொள்வது, இரண்டு அறிவுசார் மொழியை நசுக்குவது. வரலாறு நெடுகிலும் நடைபெற்ற இந்த மேலாதிக்க முறை இன்றும் தொடர்கிறது.

தமிழ் இனத்தின் மீது ஆரியப் பார்ப்பன மேலாதிக்கம்  நிறுவப்படுவதில் மேற்சொன்ன வழி முறைகள் முதன்மைப் பங்காற்றின. இன்று உலகமய முதலாளிய மேலாதிக்கத்திலும் இது தொடர்கிறது.

பன்னெடுங்காலமாக நிலவிய தமிழர்களின் திணை வாழ்க்கை பெரிதும் அறிவியலுக்கு இசைவான, இயற்கையோடு இணைந்த அழகிய வாழ்க்கை நெறியாகும். தமிழ் உழவர்கள் பருவநிலை, நீரியல், மண்ணியல், நுண்ணுயிரியல் ஆகியவற்றில் ஆழ்ந்த அறிவு பெற்றிருந்தார்கள். மருத்துவம், உலோகவியல், கட்டடவியல், உள்ளிட்ட  பலவற்றிலும் முதல்நிலைச் சமூகமாக விளங்கினார்கள்.

ஆயினும் கடந்த 5000 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த நடைமுறை அறிவை பிற மனிதர்களிடத்திலும், அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்கும், வாய்மொழியாகவே பரப்பிவந்தனர். அதன் பிறகே இவர்களுடைய பல்துறை அறிவு எழுதப்பட்ட இலக்கிய வடிவங்கள் பெற்றது.

இந்தப் படைப்பாற்றல் மிக்க அறிவை இவ்வகைப் படைப்பாற்றல்களில் பின் தங்கியிருந்த ஆரியர்கள் எழுத்து வடிவில் பதிவு செய்வதில் கவனம் செலுத்தினர். அரசர்களின் ஆதரவு இருந்ததால் இவ்வாறு பதிவு செய்வது எளிதாகவும் அமைந்தது. இவ்வாறான பதிவுகள் பெரும்பாலும் சமற்கிருதத்தில் செய்யப்பட்டன.

வடமொழி சார்ந்த இந்த ஏட்டறிவைத் தான் அறிவு (knowledge) என்பதாக வரையறை செய்தார்கள்.

உண்மையான படைப்பாளிகளாக இருந்த தமிழர்கள் உடல் உழைப்பாளர்களாகவும், ஏட்டறிவு மட்டுமே பெற்றிருந்த ஆரியப் பார்ப்பனர்கள் மேலாண்மை செய்வோர்களாகவும் காலப்போக்கில் மாறினார்கள். வடமொழி ஆதிக்கம் அவர்களது இந்த அறிவு மேலாதிக்கத்திற்கு அரண் செய்தது.

எடுத்துக்காட்டாக, வானளாவிய கோபுரங்கள், நுணுக்கமான சிற்பங்கள் ஆகியவற்றைத் தமிழர்கள் படைத்தார்கள். இன்றளவிலும் வடஇந்தியாவில் இவ்வாறான சிறப்பு வாய்ந்த பழங்காலக் கட்டடங்களைக் காண்பது அரிது.

ஆனால் இவைகுறித்து சில்ப சாஸ்திரம்’’ என்று வடமொழியில் நூல் எழுதியதின் மூலம் பார்ப்பனர்கள் இத்துறையில் அறிவு மேலாதிக்கம் பெற்றார்கள். பரதம் தமிழ் மண்ணைச் சார்ந்த உடல் மொழிக் (மெய்ப்பாட்டு) கலையாகும். ஆனால் பரதசாஸ்திரம்’’ சமற்கிருதத்தில் பதிவானதன் வழி ஆரியர்கள் அதன் மீது உரிமை கொண்டாடினார்கள்.

இவ்வாறு படைப்பாற்றல் மிக்க அறிவை அறிவு’’ என்ற வரையறுப்புக்கு வெளியே வைப்பது, அப்படைப்பாற்றல் மிக்க மொழியை அறிவுத்துறைக்கு வெளியில் வைப்பது, படைப்பாற்றல் உள்ள மக்களை அறிவுத் துறைக்கு வெளியில் வைப்பது ஆகியவற்றின் மூலம் தங்கள் மேலாதிக்கத்தை ஆரியப் பார்ப்பனர்கள் உறுதி செய்து கொண்டார்கள்.

அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இதனை மீண்டும் மீண்டும் அரசு ஆதரவோடு சொல்லிக் கொடுக்கும் போது உரிமையைப் பறிகொடுத்த சமூகமே அதனை இயல்பான நிலையாக ஏற்றுக் கொள்ளத் தொடங்கியது. இவ்வகைக் கருத்தியல் மேலாண்மையே மேல்நிலை வர்ணமாக பார்ப்பனர்கள் நிலை பெறுவதற்கு பெரும் பங்காற்றியது.

முதலாளியத்திற்கும் இந்தத் தன்மை உண்டு. வெறும் அரசு அடக்கு முறையின் மூலமாக மட்டுமே முதலாளியம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியாது. எந்த ஆதிக்கமும் வெறும் அடக்கு முறையின் துணைக் கொண்டு மட்டுமே நீடித்து நிற்பதில்லை. அறிவை ஆள்வது, கருத்தியல் மேலாண்மை செலுத்துவது ஆகியவற்றின் வழியாகத்தான் முதலாளியமானது சுரண்டப்படும் வர்க்கங்களைத் தமது ஆதிக்கத்தை ஏற்கும்படிச் செய்கிறது. அந்த ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளும் அடிமை நிலையே ஒழுங்கு’’ என்பதாக பெயர்பெற்று விடுகிறது. இந்த ஒழுங்கு’’ மீறப்படும் போது மட்டுமே அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது.

சமற்கிருதம் செய்த வேலையை இன்று ஆங்கிலமும் செய்கிறது. இந்தியத்தோடு சமற்கிருத - இந்தி ஆதிக்கம் இணைந்து வருவது போலவே உலகமயத்தோடு ஆங்கில ஆதிக்கம் கைக்கோத்து வருகிறது.

ஆன்மிகத்தில் சமற்கிருதமும், ஆட்சியில் இந்தியும், பொருளியலில் ஆங்கிலமும் இணைந்து தமிழ் இனத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. அந்தந்தத் துறையில், அந்தந்த மொழியின் மேலாண்மையை இயல்பான ஒன்றாக ஏற்கச் செய்வதன் மூலம் தமிழினம் தமது அடிமை நிலையை ஏற்கச் செய்யுமாறு வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் அறிவியல் மொழியல்ல, தமிழினம் அறிவியல் அறிவற்றது என்ற கருத்தைத் தமிழர்களே ஏற்கும் படிச் செய்வதில்தான் ஆதிக்க சக்திகளின் வெற்றியே இருக்கிறது.

இவ்வாறு நாம் தாழ்ந்தவர்கள், அறிவற்றவர்கள், நமது மொழியில் ஒன்றுமில்லை என்ற கருத்து ஒன்றிரண்டு தலைமுறைகளின் மீது நிலை நிறுத்தப்பட்ட பிறகு தமிழர்களின் பண்டைய அறிவே மொழிமாற்றம் அடைந்து சில வடிவ மாற்றங்களும் பெற்று நவீன அறிவியல் போல் கொண்டுவரப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, பல் துலக்கும் வேப்பங்குச்சி, ஆலம் விழுது ஆகியவை பத்தாம்பசலித்தனமானவை என்ற கருத்து நிலைநாட்டப்பட்டது. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதிஎன்ற அறிவியல் மொழி மூடநம்பிக்கை வரிசையில் வைக்கப்பட்டு அறிவு என்ற வலையத்திற்கு வெளியில் நிறுத்தப்பட்டது.

ஆனால் அதுவே நீம் டூத் பேஸ்ட்’, ‘ஹெர்பல் டூத் பேஸ்ட்என்ற பெயர்களில் பன்னாட்டுப் பெருமுதலாளி நிறுவனங்களின் பற்பசையாக வடிவம் பெற்று வருகிறபோது அது நவீன அறிவியல் என்பதாகக் கேள்வி முறையின்றி ஏற்கப்படுகிறது. பூண்டுத் துவையல், பூண்டு இரசம் என்ற உணவே மருந்தாக இருந்த தமிழர் முறை பத்தாம்பசலித்தனமானது என்று ஒதுக்கப்பட்டு, அதுவே கார்லிக் பெர்ல்ஸ்என்ற ஆங்கிலப் பெயரில் உறை மாத்திரை என்ற மருந்து வடிவம் பெற்ற பிறகு நவீன அறிவியல் கண்டுபிடிப்பாக ஏற்கப் படுகிறது.


இவ்வாறான ஏற்பை சமூகம் நிரந்தரமாக நீடித்து வைத்துக் கொள்வதற்கு  உறுதியான நிறுவன ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

உயராய்வு மையங்கள் என்பதை உலகமயப் பெருமுதலாளி நிறுவனங்களின் மேலாண்மையை உறுதி செய்வதற்கு இந்த வகையில் பணியாற்றுகின்றன. அந்த ஆய்வு நிறுவனங்களில் பயின்று வெளியே வரும் இளையதலைமுறை அறிவாளர்கள். பரந்துபட்ட மக்களிடமும், அடுத்தத் தலைமுறையிடமும் இக் கருத்தைக் கொண்டு செல்லும் ஏந்திகளாக (Conveyers) செயல்படுகின்றனர்.
இதனால் அறிவு விடுதலை, மொழி விடுதலை, இன விடுதலை, பொருளியல் விடுதலை ஆகியவை ஒரு புள்ளியில் நிலைக்கொண்டுள்ளன.

இந்த விடுதலைகள் தனித்தனி யாக நிகழ்பவை அல்ல.

எனவே முதலாளியத்தை எதிர்ப்பவர்கள் அறிவு விடுதலை, மொழி விடுதலை, இன விடுதலை ஆகியவற்றோடு இணையாமல் தனியாக வர்க்க விடுதலையைப் பெறமுடியாது. அதே போல் மொழி விடுதலை என்பது அதற்கான பின்னணி ஆதிக்க ஆற்றல்களை எதிர்கொள்ளாமல் தனியே சாதிக்க முடியாது.

தமிழ்ச் சமூகம் அறிவுச்சமூகம்தான் என்ற உண்மையை உணர வரலாற்று அறிவு முகாமையானது. வரலாற்று அறிவு அற்ற சமூகம் தன்னம்பிக்கை அற்ற உதிரிகளாகச் சிதைந்து போகும். இவ்வாறான சிதைவே ஆதிக்கவாதிகளின் வேட்டைக்கு உவப்பானது. மொழிதான் இந்த வரலாற்று அறிவைப் பொதிந்து வைத்துள்ள பெட்டகமாகும். மொழி அறிவோ, தம் மொழி குறித்த பெருமிதமோ அற்ற சமூகம் ஒரு சமூகமாகவே நிலைத்திருக்க முடியாது. உதிரிகளாகச் சிதைந்து விடும்.

தொடக்கக் கல்வியிலிருந்தே தமிழ் மொழியை நீக்கி விடுவது என்ற ஆட்சியாளர்களின் முயற்சிக்குப் பின்னால் இவ்வாறான சதித்திட்டம் இருக்கிறது.

ஏற்கெனவே தமிழ் மொழி குறித்த அறிவும், பெருமிதமும் குறைந்த சமூகமாகத் தமிழ்ச் சமூகம் மாற்றப்பட்டிருப்பதால் குறிப்பாக ஆங்கிலத்தை ஒப்பிட தமிழ் தாழ்ந்தது என்ற தவறான மனப்பான்மை உள்ள சமூகமாகத் தமிழ்ச் சமூகம் மாற்றப் பட்டிருப்பதால் அயல் ஆதிக்கம் இங்கு எளிதில் ஏற்கப்படுகிறது.

இடத்தையும், காலத்தையும் இணைக்கிற மொழி என்ற கண்ணியானது இவ்வாறு அறுக்கப்பட்டால் தமிழினம் உதிரிகளாகச் சிதைந்து திசை தெரியாப் பயணத்தில் தடுமாறும்.

தமிழினத்தின் அறிவு வரலாறு நிலைநாட்டப்படாது போனால் தமிழினம் தன்னம்பிக்கை அற்ற இனமாகக் கைபிசைந்து நிற்கும்; தனது அறமரபு குறித்து விழிப்புணர்வு இல்லாது போனால் தமிழினம் தனக்குள்ளாகவே மேல் - கீழ் எனப் பிரிந்து சண்டையிட்டு உருக் குலைந்து போகும்.

இந்த வரலாற்று அறிவே தன்னம்பிக்கை அளித்து அறிவு விடுதலைக்கும் அறவாழ்வுக்கும் வழிவகுக்கும். அறிவு விடுதலை மொழி விடுதலையோடு பிணைந்து இருக்கிறது.

இனம் விடுதலை அடைய அறிவு விடுதலை முன் தேவையாகிறது.
எனவே அறிவை விடுதலை செய்வோம்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095

முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.