ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தஞ்சை பெரிய கோயில் வாயில் அருகில் கலைப்பொருள் கடைகள் அகற்றப்பட்டதைக் கண்டித்து சிறு வணிகர்கள் குடும்பத்துடன் பட்டினிப் போராட்டம்!


தஞ்சை பெரிய கோவில் அருகில், கடந்த 35 ஆண்டுகளாக தமிழர்களின் பாரம்பரியக் கலைப் பொருட்களை வணிகம் செய்து வந்த கடைகளை, மாநகராட்சி நிர்வாகத்தினர் அப்புறப்படுத்தியுள்ளனர்.

பொது மக்களிடம் வணிகம் செய்து வந்த இக்கடையினரை, “பொது மக்களுக்கு இடையூறு” என நகைப்புக்குரியக் காரணத்தை முன்வைத்து நடைபெற்ற அநீதிக்கு எதிராக, இதன் காரணமாக பாதிக்கப்பட்ட 33 சிறு வணிகர்களும், அவர்தம் குடும்பத்தினரும் தஞ்சையில் இன்று (21.05.2015), ஒருநாள் அடையாள் உண்ணாப் போராட்டம் நடத்தினர்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு, பெரிய கோவில் வியாபாரிகள் சங்கத் தலைவர் திரு. இரா. ஜெயக்குமார், சி.ஐ.டி.யு. மாவட்டக் குழுத் தோழர் அன்பு ஆகியோர் தலைமையேற்றனர். மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலச் செயலாளர் தோழர் து. கோவிந்தராஜ் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டன உரையாற்றிய இந்நிகழ்வில், 

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தலைவர் தோழர் பெ.மணியரசன், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கண்டன உரையாற்றினார்.

நிகழ்வில், இந்திய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் சிமியோன் சேவியராஜ், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அயனாவரம் சி. முருகேசன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ. இராசேந்திரன், தோழர் நா. வைகறை, பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா.சு.முனியாண்டி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துப் பேசினர்.

நிறைவில், சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் தோழர் சி. ஜெயபால் போராட்டத்தை முடித்து வைத்துப் பேசினார்.

சிறு வணிகர்களின் ஞாயமான கோரிக்கை வெல்லட்டும்! அகற்றப்பட்டக் கடைகளை மாநகராட்சியினர், அதே இடத்தில் நிறுவ வேண்டும்!

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.